பல்லின சமூகத்தில் மாடறுப்பு விவகாரம்

  • 66

பல்லின சமூகம் பல வகையான உணர்வுகளையும், பல வகையான கலாச்சார பண்புகளையும் பெற்றிருக்கும் என்பது யதார்த்தம். உடையமைப்பு, உணவுப் பழக்கம், குடும்ப கட்டமைப்பு, விழாக்கள் போன்றன வித்தயாசமான வகைகளைக் கொண்டியங்கும் சமூகம் அது. இங்கு ஒருவரை ஒருவர் மதிப்பதென்பது, ஒரு சமூகத்தை இன்னொரு சமூகம் மதிப்பதென்பது மேற்கூறிய வித்தியாசங்களுடன் ஏற்றுக் கொள்வதாகும். அதேநேரம், ஒரு சமூகத்தின் மேற்கூறிய ஏதாவதொரு பகுதி இன்னோர் சமூகத்துடன் முரண்படுமாக இருப்பின் அதனை மிகக் கவனமாக ஒழுங்குபடுத்திக் கொள்வதும் அவசியமானது. உதாரணமாக மாட்டிறைச்சி சாப்பிடுதல் எனும் உணவுப் பழக்க வழக்கத்தை குறிப்பிடலாம்.

பொதுவாக இலங்கை முஸ்லிம்கள் மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள். சகோதர சமூகத்தவர்களிலும் அதனை சாப்பிடக்கூடியவர்கள் இல்லாமலில்லை. எம்மோடு வாழும் சகோதர மதத்தவர்களில் சிலர் மாட்டை கடவுளாகக் கொள்பவர்கள். இன்னும் சிலர் அதனை பூஜிப்பவர்கள். சிலர் பிராணிகளை அறுப்பதை பெரும்பாவமாகக் கருதுபவர்கள். ஒரு சமூகம் கடவுள் அந்தஸ்த்து கொடுக்கும் ஒன்றை இன்னொரு சமூகம் உணவாகக் கொள்கிறது. இக்கட்டத்தில் முஸ்லிம்கள் ஒட்டுமொத்த சமூகமாக தம்மை ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும். சகோதர சமூகத்தவர்களது உணர்வுகளை மதித்து, மாட்டிறைச்சி நுகர்வை குறைத்திருக்க வேண்டும். குறைந்த நுகர்வையும் பொதுத்தளங்களில் கடைகள் அமைத்து விநியோகிக்காமல் மிகக் கவனமான ஒழுங்குகளை பின்பற்றியிருக்க வேண்டும். குறிப்பாக, சகோதர சமூகத்தவர்களோடு இரண்டரக் கலந்து வாழ்பவர்கள். சகோதரர்களை மதிக்கும் மனோநிலை இது. ‘மனித கண்ணியம்’ எனும் இஸ்லாம் வலியுறுத்திய விழுமியத்திலிருந்து தோற்றம்பெறும் மனோநிலை இது. பன்மைத்துவ சமூக ஒழுங்கில் ஒருசாரார் ஒன்னொரு சாராரை மதிப்பது இவ்வாறுதான் இருந்திருக்க வேண்டும்.

அடுத்த பகுதி மாட்டிறைச்சி சாப்பிடுவது பற்றிய இஸ்லாத்தின் பார்வை. இஸ்லாம் உணவு விடயங்களில் சிலதை தடுத்திருக்கிறது. எனினும், மாட்டிறைச்சி உண்பதற்கு தடுக்கப்பட்ட ஒன்றல்ல என்பது தெளிவு. அதேநேரம், மாட்டிறைச்சியை கட்டாய உணவாகக் கொள்ளும்படி அது ஏவவும் இல்லை. இதனை இஸ்லாமிய பரிபாஷையில் ‘ஆகுமாக்கப்பட்டது’ அல்லது ‘அனுமதிக்கப்பட்டது’ எனலாம். அனுமதிக்கப்பட்ட விடயமொன்றை ஒரு நாடு நியாயமான காரணங்களுக்காக தடைசெய்யுமாக இருப்பின் அது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. அத்தோடு, மாட்டிறைச்சி உண்பது எமது நாட்டில் தடைசெய்யப்படவில்லை. மாற்றமாக அறுப்பதே தடைசெய்யப்படலாம். இறக்குமதி தொடரும். எனவே ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை இது பாரதூரமானதொரு விடயமல்ல.

மாடறுத்தல் விவாகாரத்தில் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளும் கருத்திற் கொள்ளப்பட்டிருத்தலே பன்மைத்துவ சமூக கட்டமைப்பிற்கு பொருத்தமானது. முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, உடன்பாடான முடிவுகளுடன் சுமூகமாக தீர்வுகளுக்கு வந்திருக்க முடியுமாக இருந்தால் சிறந்தது. ஒவ்வொரு சமூகமும் அடுத்த சமூகத்தை மதித்தலுக்கான முன்னுதாரணமாக இவ்வகையான போக்கே அமையும்.

இலங்கை முஸ்லிம் சமூகம் புதிய இஜ்திஹாத்களை நோக்கி நகர வேண்டியிருக்கிறது. எம்மை நாம் மீளொழுங்குபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. உதாரணமாக உழ்ஹிய்யா விடயத்தில் பிராணிகளை அறுத்தலோடு தொடர்பான இஜ்திஹாதைக் குறிப்பிடலாம். கிட்டத்தட்ட ஓரிரு வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் தோற்றம்பெற்ற உரையாடல் வரவேற்கப்படுகிறது. இது ஓர் உதாரணம் மாத்திரமே. இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன. ஐரோப்பிய முஸ்லிம் அறிஞர்கள் “ஐரோப்பிய முஸ்லிம்” , “ஐரோப்பிய முஸ்லிமாக வாழல்” என்ற உரையாடலில் நீண்ட தூரம் சென்றுவிட்டனர். இது இலங்கை முஸ்லிம்களுக்கானதொரு சிறந்ததோர் உதாரணம். இலங்கை சட்டங்களை மதித்து வாழும் அதேநேரம் நல்லதொரு முஸ்லிமாகவும் வாழும் கலை கட்டியெழுப்பப்பட வேண்டும். “இலங்கை முஸ்லிம்” எனும் அடையாளம் உரையாடப்பட வேண்டும்.

மாடறுத்தல் தடை விவகாரம் ஏற்றுமதி, இறக்குமதியோடும் உள்நாட்டு பொருளாதாரத்தோடும் தொடர்புபடுகின்றது. புதிய மாபியாக்கள் தோற்றம்பெற வாய்ப்பிருக்கின்றன. இவற்றை தடுத்து நிறுத்தும் பொறுப்பு இனம், மதம் தாண்டி எல்லா இலங்கையரையும் சாரும். பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் முஸ்லிம்கள் ஈடுபாட்டுடன் பங்கேற்பதுடன் பொருளாதாரத்தை வீழ்ச்சிநோக்கி நகர்த்தும் வேலைத்திட்டங்களை அறிவுபூர்வமாக கேள்விக்குட்படுத்துவதும் அவசியமாகும்.

M.RISHAD NAJMUDEEN
(NALEEMI)

பல்லின சமூகம் பல வகையான உணர்வுகளையும், பல வகையான கலாச்சார பண்புகளையும் பெற்றிருக்கும் என்பது யதார்த்தம். உடையமைப்பு, உணவுப் பழக்கம், குடும்ப கட்டமைப்பு, விழாக்கள் போன்றன வித்தயாசமான வகைகளைக் கொண்டியங்கும் சமூகம் அது. இங்கு…

பல்லின சமூகம் பல வகையான உணர்வுகளையும், பல வகையான கலாச்சார பண்புகளையும் பெற்றிருக்கும் என்பது யதார்த்தம். உடையமைப்பு, உணவுப் பழக்கம், குடும்ப கட்டமைப்பு, விழாக்கள் போன்றன வித்தயாசமான வகைகளைக் கொண்டியங்கும் சமூகம் அது. இங்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *