ஒலிப்பதிவு விசாரணை முடியும் வரை பதவியை ராஜினாமா செய்தார் – முர்ஷித் முளப்பர்

 

ஆணைக்குழுவில் இடம்பெற்றது என்ன?

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆனைக்குழுவில் பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவரிடம் குறுக்குகேள்விகள் கேட்க வேண்டுமென உலமா சபை உள்ளிட்ட சில அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க நேற்றைய (09.09.2020) தினம் ஆணைக்குழுவுக்கு ஞானசார தேரர் அழைக்கப்பட்டிருந்தார்.

ஞானசார தேரரிடம் குறுக்கு கேள்வி கேட்பதற்காக உலமா சபை சார்பில் வருகை தந்திருந்த உலமா சபையின் பிரதிச் செயலாளர் மவ்லவி முர்ஷித் முளப்பர் ஆணைக்குழு விசாரனைகளை ரகசியமாக தனது கையடக்கதொலைபேசியில் பதிவு செய்தமை கண்டறியப்பட்டதினால் அங்கு சார்ச்சை ஏற்பட்டது.

ஆணைக்குழுவின் விசாரணைகள் எதனையும் ஊடகங்களோ, தனி மனிதர்களோ பதிவு செய்வதற்க்கு எவ்விதஅனுமதியும் கிடையாது.

இந்த நிலையில் உலமா சபையின் பிரதி செயலாளர் ரகசியமாக விசாரனைகளை பதிவு செய்தமை சர்ச்சையைஉண்டாக்கியது.

இதன் போது உலமா சபையின் பிரதிச் செயலாளர் மவ்லவி முர்ஷித் முளப்பருக்கு ஆணக்குழு அதிகாரிகள் சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் குறித்த மவ்லவியிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுமாறும் ஆணைக்குழுவின் தலைவர் மூலம் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுவின் அவசரக் கூட்டம்

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்நிகழ்வு தொடர்பாக 2020.09.09ம் திகதி புதன்கிழமை அதாவது நேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவுக்கு ஜம்இய்யா சார்பில் ஆஜராகிய அதன் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் அவர்கள் தொடர்பாக ஊடகங்களில் வந்துள்ள செய்திகள் தொடர்பில் உரிய தெளிவை அவரிடமிருந்து பெறுவதற்காக ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுவின் அவசரக் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் தலைமையகத்தில் நடைபெற்றது.

மேற்படிக் கூட்டத்தில் ஜம்இய்யாவின் யாப்பின் பிரகாரம் குறித்த விடயத்தை விசாரித்தறிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் அவர்கள் விசாரணை முடியும் வரை ஜம்இய்யாவின் உதவிப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் நீங்கிக் கொள்வதாக எழுத்து மூலம் ஜம்இய்யாவின் தலைமையகத்துக்கு அறியத் தந்துள்ளார். என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் இராஜினாமாவை ஜம்இய்யாவும் ஏற்றுக் கொண்டுள்ளது.

Leave a Reply