மனித பண்புகளை வளர்க்கும் வகையில் கவிதைகள் அமைய வேண்டும் – இஸ்மத் பாத்திமா

 

நேர்காணல் தொகுப்பு

பேட்டி அளித்தவர்:
எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா,

அதிபர் SLPS – 2
மே.மா/மினு/எல்லலமுல்ல ஸஹிரா
முஸ்லிம் வித்தியாலயம்
பஸ்யால.

பேட்டி கண்டவர்:
வெலிகம
றிம்ஸா முகம்மத்.

பஸ்யால கவியரசி எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா ஒரு அதிபர், கவிஞர் , எழுத்தாளர். இலக்கிய கலை கற்றல் பிரதேச மட்ட போட்டி நிகழ்வில் ஒரே தடவையில் தமிழ், ஆங்கில மொழிகளில் 09 போட்டிகளில் முதலாமிடம் பெற்று சாதனை படைத்தவர். அத்தோடு ‘இரண்டும் ஒன்று’, ‘புதையல் தேடி’ ஆகிய கவி நூல்களை வெளியிட்டு பிரபல்யமானவர். மும்மொழித் தேர்ச்சியும் சிறந்த நிருவாகத் திறனும் கொண்டவர். அவருடனான நேர்காணலை வியூகம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

“நம்மவர்களின் இலக்கிய இரசனை பெரிதாக செறிவை அடைந்துள்ளதாக எண்ணத் தோன்றவில்லை”

கேள்வி:- உங்களுடைய குடும்பப் பின்னணி, பாடசாலை வாழ்க்கை, தொழில் அநுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பதில் :- குருணாகல், பானகமுவயைப் பிறப்பிடமாகக் கொண்டு திருமணத்தின் பின் பஸ்யாலையை வசிப்பிடமாகக் கொண்டு ஆங்கில ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக அதன் பின் தற்போது பஸ்யாலை மே.மா/மினு/எல்லலமுல்ல ஸஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றுகின்றேன்.

நான் ஓய்வு பெற்ற அதிபரும் சமாதான நீதிவானுமான அல்ஹாஜ் ஏ.சீ. செய்யது அஹமது அவர்களதும் மர்ஹூமா ரஹ்மா உம்மா அவர்களதும் ஏழு பிள்ளைகளில் நான் 6 ஆவது புதல்வியாகவும் இருக்கின்றேன். எனது அன்புக் கணவர் என்னைப் போலவே களுத்துறை பஸ்துன்ரட்ட கல்விக் கல்லூரியில் கல்வி பயின்று விஷேட சித்தி எய்தி ஆங்கில ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, அதிபராக கடமையாற்றியவர். தற்போது தர்கா நகர் ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி நிலையத்தில் முகாமையாளராகக் கடமையாற்றுகின்றார். எங்களுக்கு ஒரே மகன் எம்.ஆர்.அகீல் அஹமத், தரம் 6 இல் மே.மா/மினு/பாபுஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றார்.

பாடசாலை வாழ்க்கை எனும் போது நான் பல பாடசாலைகளில் பல மாவட்டங்களில் கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிட்டியது. தரம் 01 தொடக்கம் 04 வரை எனது பிறப்பிடமான பானகமுவையில் வ.மே.மா/கு/இப்/அந்நூர் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கல்வி பயின்றேன். தரம் நான்கு வரை ஊர்ப் பாடசாலையிலேயே கல்வி கற்று விட்டு தரம் ஐந்தில் பஸ்யாலை மே.மா/மினு/நாம்புளுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் (தற்போது பாபுஸ்ஸலாம்
முஸ்லிம் மகா வித்தியாலயம் என அழைக்கப்படுகிறது) கல்வி பயின்றேன். இங்கு அல்லி கம்பனியின் உரிமையாளரும் ஆசிரியர் அல் ஹாஜ் மர்ஹூம் எம்.ஆர்.எம்.ரில்வான் அவர்களது தனியார் பாடசாலையில் சேர்ந்து ஆங்கிலத்தை கற்றுக் கொண்டேன். இங்கு தான் ஆங்கிலக் கல்வியின் அத்திவாரம் சரியாக கற்க வாய்ப்புக் கிடைத்தது எனலாம். இங்கு தரம் ஏழு வரையே கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பின்னர் க.பொ.த.(சா/த) பரீட்சை எழுதும் வரை எனது ஊர்ப் பாடசாலையான வ.மே.மா/கு/இப்/அந்நூர் முஸ்லிம் மஹா வித்தியாலயத்திலேயே கற்றேன். அப்போது க.பொ.த.(சா/த) பரீட்சையில் 08 பாடங்களே இருந்தன. ஆங்கிலத்தில் விசேட சித்தியும் மற்றைய 07 பாடங்களில் திறமைச் சித்தியும் பெற்றேன். உயர் தரக் கல்வியை வணிகத் துறையில் கல்வியைத் தொடர ம.மா/க/மடவளை மதீனா தேசிய பாடசாலைக்குச் சென்றேன். உயர் தரத்தில் ஒரு Aச் சித்தியும் 3C சித்தியும் பெற்றேன்.

அதனைத் தொடர்ந்து களுத்துறை பஸ்துன்ரட்ட கல்விக் கல்லூரியில் அனுமதி பெற்று அங்கே ஆங்கிலக் கல்வி கற்று அதில் விசேட சித்தி பெற்று ஆங்கில ஆசிரியராக குருணாகல் பரகஹதெனிய தேசியப் பாடசாலையில் முதல் நியமனத்தைப் பெற்றேன். அதற்குப் பிறகு திருமணத்தின் பின்னர் மே.மா/ கம்/நாம்புளுவ பாபுஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தேன். அதன் பின்னர் ஆசிரிய ஆலோசகர் போட்டிப் பரீட்சையில் தெரிவாகி  கம்பஹா மினுவாங்கொட வலயங்களில் ஆசிரிய ஆலோசகராக  சேவையாற்றினேன்.

அதனைத் தொடர்ந்து அதிபர் போட்டிப் பரீட்சையையும் எழுதி அதில்  தெரிவாகி திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் சிறந்த ஒரு பிரதி அதிபராகக் கடமையாற்றினேன்.  அதனைத் தொடர்ந்து 1000 பாடசாலைகள் திட்டத்தின் கீழ் திஹாரிய அல்  அஸ்ஹர் மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவு புதியதொரு பாடசாலையாக தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலை என ஆரம்பிக்க கடும் போட்டிக்கு மத்தியில் அதிபர் எனும் தலைமைத்துவத்தை ஏற்று நடாத்தும் பாக்கியம் எனக்குத் தான் கிடைத்தது. அதன் பின்னர் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் உள்வாரியாகச் சென்று 3 வருடங்கள் ஆங்கில மொழி மூலம் கற்று பட்டதாரியாகும் பாக்கியம் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து சேவையின் மற்றும் தேவையின் நிமித்தம் அப்போது பெண் அதிபர்கள் இல்லாததனால் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்திற்கு அதிபராக செல்ல வேண்டி ஏற்பட்டது. அந்தப் பாடசாலையில் மிகவும் விருப்புடன் சகலரதும் ஒத்துழைப்புடன் பணி புரிந்ததில் குறுகிய காலத்திலேயே சிறந்த பெறுபேறு பெற்று சாதாரண தரத்தோடு இருந்த பாடசாலையை உயர் தரத்திற்கு மாற்றும் பாக்கியம் கிட்டியது. இந்த விடயத்தில் நிறையவே பல போராட்டங்கள் மேற்கொண்டு வெற்றி வாகை சூடியதில் மகிழ்ச்சி இருப்பினும் பல கண்களுக்கும், உள்ளங்களுக்கும் வருத்தம் ஆதலால் மனக் கசப்புக்களுடன் அப்பாடசாலையில் இருந்தும் வெளியேறி எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் பாடசாலையில் பிரதி அதிபராகக் கடமையாற்ற இணைந்து கொண்டேன். இங்கு எனது ‘இரண்டும் ஒன்று’ எனும் முதல் கவிதை நூலினை வெளியிட்டேன். இங்கு சேவை செய்யும் காலகட்டத்தில் எனக்கு அதிபர் தர உயர்வு (SLPS-2) பெற்றேன். இங்கு கடமை புரியும் காலப் பகுதியில் தான் இ.ஒ.கூ.தா.முஸ்லிம் சேவை செய்தி மஞ்சரியில் பல உரைகளை ஆற்றும் சந்தர்ப்பம் கிட்டியது.

இங்கிருந்து எனது சொந்த விருப்பிலேயே களுத்துறை மாவட்டம் சீனன் கோட்டை ஆரம்பப் பிரிவு பாடசாலையின் அதிபராக இணைந்து குறுகிய காலப்பகுதியில் சிறந்த சேவையாற்றி பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி அலிகார் மகா வித்தியாலயத்தில் சேவை செய்ய இணைந்து கொண்டேன். இங்கு தான் எனது இரண்டாவது கவிதை நூல் “புதையல் தேடி” யை வெளியிட்டேன்.

அதன் பின் சேவையின் தேவையின் நிமித்தம் எல்லலமுல்ல ஸாஹிரா  முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபராக 20.02.2020 முதல் எனக்குப் பதவி உயர்வு கிடைத்து சேவையாற்றி வருகிறேன்.

கேள்வி :- பாடசாலை அதிபராகக் கடமையாற்றும் நீங்கள், கவிதைத் துறைக்குள் எவ்வாறான சூழ்நிலையில் பிரவேசித்தீர்கள்?

பதில் :- பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றும் நான் கவிதைத் துறைக்குள் திடீரென பிரவேசிக்கவில்லை. நான் படிக்கும் காலங்களிலும் கவிதை இரசிப்பதிலும் லயிப்பதிலும் படைப்பதிலும் பெருத்த ஈடுபாடு இருந்தது. ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் என்னைத் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தி கவிதைகளை பத்திரிகைக்கு அனுப்ப பிரசுரிக்க அதற்கான வழிகாட்டுதல்கள் தூண்டுதல்கள் எனக்கு கிடைக்கவில்லை.

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்ற சந்தர்ப்பம் கிடைத்த பொழுது மாணவர்களின் அடைவுகளை நவமணியின் பிரதம செய்தியாசிரியர் சகோதரர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம் ஸாஜஹான் அவர்கள் உடனுக்குடன் பிரசுரித்து தருவார்கள். இதில் எம் எல்லோருக்கும் பெரிய உற்சாகம். ஒரு நாள் எனது ஊரைச் சேர்ந்த வேறு பாடசாலை மாணவி ஒருவரின் வெற்றியினை பத்திரிகையில் பிரசுரித்து தருமாறு எழுதிய வரிகளே எனது முதல் கவிதை ‘இடங்கொடுங்கள் இலை மறை காய்களுக்கு” இக் கவிதையில் அந்த மாணவியின் வெற்றியைப் பிரசுரித்து தருமாறு தான் எழுதிக் கேட்டிருந்தேன். இதனை படித்த பின் நவமணியின் பிரதம ஆசிரியரான சகோதரர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம் ஸாஜஹான் அவர்கள் “இது அழகான கவிதை ஒன்று பத்திரிகையில் பிரசுரிக்கவா” என்று கேட்டார்கள். நானும் சரி என்றதும் அடுத்த நாளே 27.03.2017 புதன் கிழமை நவமணி பத்திரிகையில் அந்தக் கவிதை பிரசுரமானது. எனக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி. ஒரு அதிபரின் உள் உறங்கியிருந்த திறமையை இனங்கண்டவர் ஒரு பத்திரிகையின் செய்தியாசிரியர். பிறகு வாராந்தம் எனது கவிதைகள் பாடசாலை, இயற்கை பற்றி அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் அனர்த்தங்கள் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்தேன். அத்தோடு படிப்படியாக தினகரன், விடிவெள்ளி, சுடர் ஒளி, மெட்ரோ நியூஸ் போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளான பூங்காவனம், அல்ஹஸனாத், ஞானம், அகரம், இந்திய சஞ்சிகை, உதயம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை, முகநூல், இணையதளம் போன்ற பல ஊடகங்களிலும் எனது கவிதை விரிவாக்கம் பெற்றது. எனது கவிதைகள் கனதியான யதார்த்தமானதாகவும் பேசப்படுபவையாகவும் திகழ்ந்தன. இன்னும் திகழ்ந்து கொண்டு இருக்கின்றது.

கேள்வி :- உங்கள் நூல் வெளியீடுகள் பற்றி என்ன கூறுவீர்கள்?

பதில் :- நான் எனது முதலாவது கவிதையை வெளியிட்ட நாளில் இருந்தே கவிதைகள் பிரசுரமான பிரதிகளை அழகாகக் கோவைப்படுத்தி சேகரித்து வைத்து வந்திருந்தேன். ஒரு தடவை அதிபர்களின் விருதிற்காக விண்ணப்பப்படிவம் நிரப்பும் போது ஒரு விடயம் என்னை விளிப்படையச் செய்தது. ‘நீங்கள் வெளியிட்ட நூல்கள்?” எனவே அதனை நிரப்பும் போது நூல்கள் எதுவும் நான் வெளியிட்டிருக்கவில்லை. இதுவே எனக்கு நூல் வெளியிடும் ஆவலைத் தூண்டியது. அத்தோடு 27.09.2017 இல் திடீரென எனது தாயார் இவ்வுலகை விட்டும் விடை பெற்றதையடுத்து தந்தையின் முன் எனது நூலை வெளியிட்டு அவர்களை மகிழ்விக்க வேணடும், இலக்கியத்திற்கு வளம் சேர்க்க வேண்டும் என தீராத அவாவில் மிகவும் வேகமாக விவேகமாக எனது முதலாவது படைப்பாக ‘இரணடும் ஒன்று” என்ற நூலை 84 சிறியதும் பெரியதுமான கவிதைகளாக 132 பக்கங்களைக் கொண்ட கொண்ட புத்தகமாக அதனை வெளியிட்டேன். இறைவனின் அருளால் நான் செய்த முயற்சியின் படியே தந்தைக்கு அந்தப் புத்தக வெளியீட்டு சந்தோஷத்தைக் கொடுத்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தேன். இறைவனுக்கே எல்லாப் புகழும்.

எனக்கு ஏற்கனவே புத்தகம் வெளியிட்ட அனுபவங்கள் ஏதும் இல்லாததனால் ISBN இலக்கம் எடுத்தல் மற்றும் இன்னோரன்ன வேலைகளைச் செய்ய எனக்கு வழிகாட்டியவர் கிண்ணியா-07 ஐச் சேரந்த கலாபூஷணம் பி.ரி.அஸீஸ் அவர்கள். எனது இந்த முதலாவது நூல் முதலாவது கவிதையை பத்திரிகையில் வெளியிட்டு எட்டே மாதங்களில் வெளியிட்ட நூலாகும். எட்டு மாதக் குழந்தை என்பது குறை மாதமாக இருந்தாலும் ‘இரணடும் ஒன்று’ பிரசவத்தில் எந்தக் குறையுமில்லாமல் அங்க சம்பூரணமாகவே இருந்தது.

இரண்டாவது நூல் ‘புதையல் தேடி’ என்பது தேடிப் பெற்ற புதையலாகவே எனக்குத் தெரிகிறது. அறிவையும் நிறைய மனித உறவுகளையும் இந்த நூல் மூலம் புதையலாகப் பெற்றுக் கொண்டேன். நான் பெற்ற அறிவு அநுபவம் ஆளுமையை ‘புதையல் தேடி’ எனும் வடிவத்தில் நூலாக சமூகத்தின் கரங்களில் சேர்த்தமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது. நூல் வெளியீடு என்பது மிகவும் கஷ்டமான ஒன்று. அந்தக் கஷ்டத்தையும் முழுமையாகப் போராடியே அந்த வெற்றியையும் பெற்றுக்  கொண்டேன்.

பல ஆண்டுகள் கவிதை எழுதுவோர்களுக்கு மத்தியில் குறுகிய ஒரு காலப்பகுதியில் இரண்டு கவிதைப் புத்தகங்களை வெளியிடக் கிடைத்தமை பெரிய பாக்கியமாகும். இது எனது முயற்சிக்குக் கிடைத்த தக்க பலன் எனக் கருதுகிறேன். இதில் எனக்கு அளவில்லா ஆனந்தம். எல்லாப்புகழும் இறைவனுக்கே! ஒரு அதிபராக கடமையாற்றிக் கொண்டு இவ்வாறு கலையோடு தொடர்புபட்டிருப்பதானது எதிர்கால சந்ததியினரும் இலக்கியத் துறையில் பயணிக்க ஒரு சிறந்த வழியாகக் கருதுகிறேன்.

கேள்வி :- ‘இரண்டும் ஒன்று’ கவிதைத் தொகுதி குறித்தும் இந்தப் பெயரைத் தெரிவு செய்வதற்கான காரணத்தையும் குறிப்பிட முடியுமா?

பதில் :- ‘இரண்டும் ஒன்று’ என்பது இந்த நூலில் வரும் ஒரு கவிதையின் தலைப்பே.  இந்தத் தலைப்பு மிகவும் சுருக்கமாகவும் மிகவும் வித்தியாசமாகவும் இருந்தது. இது எனக்குப் பிடித்திருந்தது. இந்தத் தலைப்பைச் சொல்லும் போதே மனதில் பதிவதாகவும் மிகவும் குறுகியதாகவும் தோன்றியது. ‘இரண்டும் ஒன்று’ என்றால் என்ன எதைப் பற்றி அந்தப் புத்தகம் உள்ளது அதில் உள்ள கவிதைகள் என்ன சொல்கின்றன என்ற வகையில் பல கேள்விகள் வாசகர்கள் மனதில் எழும்புகின்றன. அதனால் தான் இந்தத் தலைப்பினைத் தெரிவு செய்தேன்.

கேள்வி :- ‘புதையல் தேடி’ கவிதை நூலின் கருப்பொருட்கள் பற்றி என்ன சொல்வீர்கள்?

பதில் :- புதையல் தேடி கவிதை நூலின் கருப்பொருட்களாக சமூகப் பிரச்சினைகள், இயற்கை, பெண்ணியம், யதார்த்த நிகழ்வுகள், அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், மனதை உறுத்தும் சமூக நிகழ்வுகள், உண்மைச் சம்பவங்கள், இழப்புக்கள், பாசம், பிரிவினைகள் போன்ற இன்னோரனன் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கேள்வி :- உங்கள் கவிதை நூலின் ஊடாக வாசகர்களுககுச் சொல்ல விரும்பும் செய்திகள் என்ன?

பதில் :- கவிதைகளினூடாக நல்ல மனித பண்புகளை மக்கள் மனதில் விதைக்கலாம். இயற்கையோடு ஒன்றித்து வாழும் இரசனையை சமூக மாற்ற சீர்திருத்தங்களை மாத்திரமன்றி எதை எல்லாம் மாற்ற வேண்டுமோ அந்த விடயங்களை யெல்லாம் ஒரு சிறந்த கவிதையூடாக மாற்றலாம். நல்ல மனித பண்புகளை மனித மனங்களில் அன்பாக பண்பாக விதைக்கலாம். ஆதலால் தான் அன்பும் பண்பும் குறைந்து செல்லும் கால ஓட்டத்தில் அதிகளவு மனித பண்புகளை நாகரிகத்தை வளர்க்கும் வகையில் எனது கவிதைகள் அமைந்துள்ளன.

கேள்வி :- உங்களது கவிதை நூலின் ஊடாக வாசகர்களுக்குச் சொல்ல விரும்பும் செய்திகள் என்ன?

பதில் :- கவிதை நூலில் உள்ள கவிதைகளை வாசித்து அதன் கருத்துக்களை தலைமேற்கொண்டு ஒழுகினால் சிறந்ததொரு சமூகம் உருவாகும். சிறந்த தேசத்தை அதன் ஊடாக கட்டியெழுப்பலாம். வாசிப்பானது எப்போதும் மனித நேசிப்பை உண்டு பண்ணும். இதனால் ஐக்கியமான சூழலும் சமூகமும் உருவாகும் என்பதனையே சமூகத்திற்கும் வாசகர்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்.

கேள்வி :- கவிதைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனக் கருதுகின்றீர்கள்?

பதில் :- கவிதைகள் கவிதைகளாக இருக்க வேணடும். அவை எப்போதும் சுருக்கமாகவும் ஆழமான கருத்துக்களைக் கொண்டதாகவும் முக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். நல்ல கவிதை எனும் போது உணர்ந்து அனுபவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். கவிதையானது மனிதனின் உணர்வலை. எனவே அதனை வாசிக்கும் போது அபூர்வமான சிந்தனையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். கவிதைக்கே உரிய உயரிய சோடிக்கும் தன்மை கொண்ட உவமை, உருவகம், படிமம், குறியீடு என்பன தேவைக்கு ஏற்ப இடம் பொருள் ஏவல் அறிந்து பயன்படுத்தப்படுவதாக வாழ்வின் உலகின் இயற்கையின் மறைந்திருக்கும் புதிர்களை அவிழ்த்து விடுவிப்பதாகவும் உள்ளதை உள்ளபடி சொல்வதாயும் கவிதை என்பது கருத்துச் செரிந்ததாக இருக்க வேண்டும். மொத்தத்தில் கவிதைகள் கவிதைகளாக இருக்க வேண்டும்.

கேள்வி :- ஒரு படைப்பாளன் என்பவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று  நினைக்கிறீர்கள்?

பதில் :- ஒரு படைப்பாளன் தனது எழுத்துக்கள், கருத்துக்கள், செயல்கள் யாவும் ஒன்றித்த மனிதனாக இருக்க வேண்டும். ஒரு படைப்பாளன் என்பவன் நல்லவனாக திறந்த மனதுடன் பழகுபவனாக பலருக்கும் பல விதத்திலும் உதவக் கூடிய பரந்த மனம் கொண்டவனாக இருக்க வேண்டும். தனக்கு அருளாக வழங்கப்பட்டிருக்கும் அறிவு ஆற்றல் என்பவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடியவனாகவும் மற்றவர்களுடைய படைப்புக்களைப் பாராட்டத்தக்க பெருந்தன்மை கொண்டவனாகவும் இலக்கியப் படைப்புக்களை எந்தப் பாகுபாடுமின்றி வளர்க்கக் கூடியவனாகவும் இருக்க வேண்டும். சகல விதத்திலும் திறமைசாலியாகவும் இருத்தல் வரவேற்கத்தக்கது.

கேள்வி :- சமகால இலக்கியவுலகு, இலக்கிய ஆர்வலர்கள், இலக்கிய ஆளுமைகள், இலக்கியங்களின் வருகை பற்றி தங்களுடைய பார்வை எப்படி?

பதில் :- சமகால இலக்கியவுலகில் இலக்கிய ஆர்வலர்கள், இலக்கிய ஆளுமைகள், இலக்கியங்களின் வருகை என்பன அன்றாடம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஒவ்வொருவரும் அவரவர்களது திறமைகளுக்கு ஏற்றாற் போல் இலக்கியம் படைக்கின்றனர். இலக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் இலக்கியம் பேசப்பட வேண்டும். பலராலும் வாசிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டு கருத்துக்கள் பயன்பட வேண்டும். ஆதலால் இலக்கியத்திற்கு வளம் சேரப்பவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். அதே நேரம் இலக்கியப் படைப்பாளிகள் சமூகத்தில் நின்று நிலைக்க அர்ப்பணிப்புடனான சேவையின் தேவை முக்கியமாகும்.

கேள்வி :- தமிழில் கவிதை நூல் வெளியிட்ட நீங்கள் உங்களது ஆங்கில மொழிப்புலமை காரணமாக வேறு என்ன செய்ய உத்தேசித்துள்ளீர்கள்?

பதில் :- தமிழில் கவிதை நூல் வெளியிட்ட நான் எனது ஆங்கில மொழிப் புலமையை வைத்து சமூகத்திற்கு கற்பித்தல் பணியினைச் செய்தாலும் ஆங்கில சிறுவர் கதைகள், ஆங்கில கவிதைத் தொகுப்பு, நூல்கள் மொழிபெயர்ப்பு, பாடசாலைக் கல்விப் புலத்துடன் தொடர்புபட்ட பயிற்சிப் புத்தகங்கள் போன்றன அச்சிட்டு மாணவர் சமூகத்திடம் கரம் சேர்க்க வேண்டும் என்பது எனது அவா.

கேள்வி :- தாங்கள் அதிபராகக் கடமையேற்றதும் கல்லூரியில் நடந்த முன்னேற்றங்கள் அபிவிருத்திகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பதில் :- நான் பல பாடசாலைகளில் அதிபராகக் கடமையேற்று சேவை செய்துள்ளேன். அந்த வகையில் எனது சேவையில் முதற் தடவையாக அதிபராகவும், திஹாரிய மே.மா/கம்/தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் முதலாவது அதிபராகவும் பொறுப்பேற்று நடாத்தினேன். ஒரு சிறிய காலப்பகுதிக்குள்ளேயே முதற் தடவையாக 18 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தார்கள். அந்தப் பதிவு இன்னும் முறியடிக்கப்படவில்லை. அடுத்து கஹட்டோவிட்ட மே.மா/கம்/கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் அதிபராகப் பொறுப்பேற்று உயர் தர வகுப்புக்களை பெறும் இலக்கோடு உயரிய எண்ணத்தோடு செயல்பட்டேன். எனது இலட்சியம் போன்றே கணித பாடத்தோடு 74% மாணவர்கள் சித்தி எய்தி உயர் தரம் செய்ய தகுதி பெற்றனர். எனவே அதே வருடம் க.பொ.த உயர் தரத்தை (கலை) பெற்றுக் கொடுத்த திருப்தியும் மகிழ்ச்சியும் எனக்கு நிறையவே உண்டு.

அடுத்ததாக மே.மா/களு/சீனங்கோட்டை ஆரம்ப பாடசாலையில் மிகவும் குறுகிய காலமாக 10 மாதங்கள் சேவை செய்ததில் புலமைப் பரிசில் பரீட்சையில் ஒரு மாணவி சித்தி எய்தினார். அத்தோடு, பாடசாலை கல்வி, கலை, இணைப்பாட விதான செயற்பாடுகள் மற்றும் ஒழுக்க விழுமியங்கள் மாணவர்கள் பாடசாலைக்கு நேர காலத்தோடு வருதல், பெற்றார்கள்  பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகளது ஒழுத்துழைப்பு என்பன மிகைத்துக் காணப்பட்டது. ஒரு குறுகிய காலப்பகுதியில் பாடசாலை அனைத்து விடயங்களிலும் அழகு பெற்றது. உயர் நிலையை அடைந்தது. அந்தத் திருப்தியும் மனமகிழ்ச்சியும் நெஞ்சில் எப்போதும் நிறைந்திருக்கிறது.

அதே நேரம் பிரதி அதிபராக :  திஹாரிய மே.மா/கம்/அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி மற்றும் கல்எளிய மே.மா/மினு/அலிகார் மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளிலும் மாணவர்களது கல்வி கலை இணைப்பாடவிதான செயற்பாடுகளின் வளர்ச்சி ஒழுக்கம் போன்றவற்றிற்காகவும் பெரிதும் சேவையாற்றியுள்ளேன். தற்போது அதிபர் சேவையின் தேவை கருதி மே.மா/மினு/எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகக் கடந்த 20.02.2020 அன்று கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டேன்.

தற்போது சேவையாற்றும் இந்தப் பாடசாலைக்கும் உயர் தரத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அவாவுடன சேவை செய்கிறேன். இத்தகைய வெற்றிகளுக்கு என்னோடு ஒன்றித்து நின்று கடமை புரிந்த ஆசிரிய ஆசிரியைகளுக்கும், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைவருக்கும் எனது நன்றியினைத் தெரியப்படுத்துகின்றேன். அதேவேளை கலைத்துறையில் எனக்கு நிறையவே ஈடுபாடு இருப்பதனால் எனது ஆசிரியர் குழாம், மாணவர்கள் யாவரும் கவிதை ரசனையில் ஈர்க்கப்பட்டார்கள். மாணவர்களுக்கு குறிப்பாக கவிதைத் துறையில் ஊக்குவிப்பை நிறையவே கொடுத்து மாணவர் மன்றங்களில், காலைக் கூட்ட நிகழ்வுகளில் கவிபாட களமமைத்துக் கொடுத்ததுண்டு. பல போட்டி நிகழ்வுகளில் பங்குகொள்ள வழி அமைத்துக் கொடுத்ததுமுண்டு. அதே நேரம் பாடசாலை காட்சிப் பலகையிலும் மாணவர்களது ஆக்கங்களான கவிதை, கதை, கட்டுரை, சித்திரங்களை காட்சிப்படுத்தி ஊக்குவிப்பதுண்டு. இதனால் மாணவர்கள் எனக்கு நிறையவே அன்பையும், மதிப்பையும், மரியாதையையும் தருவார்கள். இதனால் எனக்கு எப்போதுமே சந்தோஷம் தான்.

கேள்வி :- உங்களது கலைப் பயணத்தில் ஊக்குவிப்பவர்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

பதில் :- எனது கலைப் பயணத்தில் ஊக்குவிப்பவர்கள் எனும் பட்டியலில் பலரை நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். முதலில் எனது கவிதையை நவமணியின் பக்கங்களில் நவமணியின் பிரதம செய்தியாசிரியர் சகோதரர் அல்ஹாஜ் ஆ.ளு.ஆ. ஸாஜஹான் அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். அவர் எனது கவித் திறமையை இனங்கண்டு பத்திரிகையில் பிரசுரித்ததனால் தான் இன்று இலக்கியத்திற்கு இரண்டு படைப்புக்களைச் சேர்க்க முடிந்தது.

அடுத்ததாக எனது அன்புக் கணவரும் தர்கா நகர் ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளருமான எம்.ஏ.எம். றிப்தி அவர்கள் .

எனது கவிதை பிரசுரமாகும் பிரதிகளை மிகவும் விருப்போடு வாங்கிக் கொடுப்பவர். அடுத்து எனது அன்பு மகன் எம்.ஆர். அகீல் அஹமத் எனது கவிதைகள் தாங்கி வரும் பிரதிகளை பத்திரமாக எடுத்து வைப்பவர். மேலும் குடும்ப அங்கத்தவர்கள் மேலும் எனது இரண்டு நூல்களும் நூலுருப் பெறுவதற்கு மிகவும் ஒத்துழைப்பு நல்கியவர் கிண்ணியா – 07 ஐச் சேர்ந்த கலாபூஷணம் பீ.ரீ.அஸீஸ் அவர்கள். மேலும் சகல பத்திரிகை செய்தியாசிரியர்கள் கலாபூஷணம் நூருல் ஐன் நஜ்முல் ஹுஸைன், கொழும்பு வகவம் அங்கத்துவ கலைஞர்கள், தர்கா நகர் ஓய்வு பெற்ற அதிபர் அரும்பு ஆசிரியர் ஹாபிஸ் இஸ்ஸதீன் மற்றும் எனது வாசகர்கள், ரசிகர்கள், ஆசிரியர்கள், எனக்கு ஊக்கம் தருபவர்களே எனது கலைப் பயணத்தில் ஊக்குவிப்பவர்கள். இவர்கள் யாவருக்கும் எனது அன்பு கலந்த நன்றியினைத் தெரியப்படுத்துகின்றேன்.

கேள்வி :- ஆரம்ப காலக் கவிதைகளுக்கும் தற்காலக் கவிதைகளுக்குமிடையே எவ்வகையான வேறுபாட்டை உணர்கிறீர்கள்?

பதில் :- ஆரம்ப காலக் கவிதை “கவிதை என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும்” எனும் வரையறை இருந்தது. ஆனால் தற்காலக் கவிதை ‘புதுக் கவிதை’ என புது வடிவம் பெற்றுள்ளது. ஆரம்ப காலத்தில் இலக்கியப் படைப்பாளிகள் குறைவாகவே இருந்தார்கள். ஆனால் தற்போது புதுக் கவிதை எனும் அங்கீகாரம் இருப்பதனால் கவிதை நவீன யுகத்தில் உயிரோட்டம் பெற்றுள்ளது. பெறுகிறது. அதேவேளை ஒவ்வொரு கலைஞரும் அவரவருக்கே உரிய இரசனையில் பாணியில் கவிதைகளை யாத்து வருகிறார்கள். இது இலக்கியத்தை மெருகூட்டுவதனால் வரவேற்கத்தக்க விடயமாகக் கருதலாம்.

கேள்வி :- நம்மவர்களின் இலக்கிய இரசனை எந்த அளவு செறிவை அடைந்துள்ளது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

பதில் :- நம்மவர்களின் இலக்கிய இரசனை பெரிதாக செறிவை அடைந்துள்ளதாக எண்ணத் தோன்றவில்லை. ஏனென்றால் நம் மக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தின் தன்மை மிகவும் குறைந்து கொண்டே போகின்றது. அதே நேரம் யாரைப் பாரத்தாலும் அவசர உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதாக ஓர் உணர்வு எனக்குள் எழுகிறது. ஏனென்றால் இருக்கும் இலக்கியத்தை படித்துச் சுவைத்து அதன் செறிவை அனுபவிக்க அதன் அழகைக்கண்டு மகிழ்வதற்கோ நேரகாலம் இல்லாமல் அனைவரும் திண்டாடுவதாக உணரக் கூடியதாகவும் பாரக்கக் கூடியதாகவும் உள்ளது.

கேள்வி :- இன்டர்நெட், பேஸ்புக், டுவிட்டர் என்பவற்றில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய இளம் சமுதாயத்தினர் மத்தியில் இலக்கிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நினைக்கின்றீர்களா?

பதில் :- மாணவப் பருவத்தில் புத்தகங்களை இலக்கிய ரசனைக்காக வாசிக்காதவர்கள் புரட்டாதவர்கள் நவீன ரக வாசிப்புக்கள் மூலம் இலக்கிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நவீன ரக வாசிப்புக்களைப் பயன்படுத்தி நீண்ட நேரம் வாசிக்க முடியாது. அத்தோடு ஏதாவது ஒரு காரணத்தால் இன்டர்நெட், பேஸ்புக், டுவிட்டர் என்பன செயல் இழந்தால் இலக்கியம் என்று பக்கங்களையே புரட்ட முடியாமல் போய் விடும்.

ஏனென்றால் இவற்றைப் பார்த்து வாசிக்கும் பொழுது கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் புத்தகத்தில் வாசிப்பதானது மிகுந்த உற்சாகத்தையும் மனதில் பதியும் தன்மையையும் ஆறுதலையும் இரசனைப் பெருக்கெடுப்பையும் தருகிறது. புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் வாசித்து இலக்கிய மாற்றம் கொண்டு வர முடியுமளவிற்கு நவீன உத்திகளால் இலக்கிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்பது எனது எண்ணம்.

கேள்வி :- விருதுகள் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில் :- வெற்றிகளும் பாராட்டுக்களும் யாவரும் விரும்பும் ஒன்று. இதில் பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடு கிடையாது. எனவே விருதுகள் வழங்குவதனால் எழுத்தாளன் அல்லது கவிஞன் ஊக்குவிக்கப்படுகின்றான். அவ்வாறு ஊக்குவிக்கப்படும் போது மேலும் நல்ல பல இலக்கிய படைப்புகள் வெளிவரும் என்பது உறுதி. எனவே விருதுகள் உண்மையாகவே சேர
வேண்டியவர்களுக்கு கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியே.

கேள்வி :- இன்று நிறையப் பெண்கள் எழுதுகிறார்கள். ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் இவர்கள் கவனிக்கப்படுகிறார்களா?

பதில் :- எழுத்துப் பணியில் இயங்கும் பெண்கள் உண்மையில் பாரிய பணியாற்றுபவர்கள். அவர்கள் தமது வீட்டையும் நிர்வகித்துக் கொண்டு சிலர் தனது கணவனுக்கு சமனான தொழிலையும் செய்து கொண்டு எழுத்துப் பணியிலும் ஈடுபடுவது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விடயம். அப்படியான பெண்களைப் பாராட்டி, வாழ்த்தி கௌரவிக்க வேண்டும். உற்சாகம் வழங்க வேண்டும்.

ஆனால் சில கணவன்மார்கள் தம் மனைவியர் எழுத்துத் துறையில் பயணிக்க அனுமதிப்பதில்லை. இதனால் அவர்கள் இருந்த இடம் தெரியாலே மறைந்து போய் விடுகிறார்கள். அதே நேரம் எழுத்துலகில் ஆண் வர்க்கத்தினரோடு சமமாக போராடுவதில் சிக்கல்கள் நிறைய உள்ளன. மற்றும் பெண்களுக்கு சம வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை. இவ்வாறான இன்னோரன்ன காரணங்கள் பெண்களை முன்னேறவிடாமல் தடுக்கின்றது. இது போன்ற பல்வேறு காரணங்களால் பெண் எழுத்தாளர்கள்  ஆணாதிக்க சமுதாயத்தில் கவனிக்கப்படாமலேயே போவது கவலைக்குரிய விடயமாகும்.

‘ஒருவருக்கு தாரமும் குருவும் அமைவது தலைவிதிப்படி” என்பார்கள் சிலருக்கு தலைவிதி நன்றாக அமைந்ததாயில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது. சிலருக்கு உண்மையிலேயே உரிய கவனிப்பும் உற்சாகமும் பாராட்டும் வீட்டுக்குள்ளேயே கிடைப்பதானது சமூகத்திலும் கவனிப்பு கிடைக்கிறது.

கேள்வி :தாங்கள் அடுத்ததாக எதனை வெளியிடப் போகிறீர்கள்?

பதில் :- அடுத்த வெளியீடு சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இரண்டு கவிதை நூல்களை வெளியிட்ட நான் மூன்றாவதாக இளைய தலைமுறையினரை இலக்காகக் கொண்டு அவர்களது உள்ளத்தில் நல்ல விதைகளை, எண்ணங்களைக் கொண்ட சிந்தனைகளை சிறுவர் கதைகளாக ஆங்கிலத்திலோ தமிழிலோ அல்லது இரண்டிலும் சேர்த்து வெளியிடலாம் என உத்தேசித்துள்ளேன்.

கேள்வி :- இறுதியாக என்ன சொல்லப் போகிறீர்கள்?

பதில் :- “இயற்கையை நேசியுங்கள். இயற்கையோடு கலந்து வாழும் அனைத்து  உயிரினங்களையும் நேசியுங்கள். கவிதைகளை வாசியுங்கள். அவற்றில் வரும் கருத்துக்களை யோசியுங்கள் என்று சொல்வதோடு அடுத்த மனிதர்களுக்கு உதவுங்கள். உடலால் பணத்தால் பொருளால் எண்ணத்தால் உதவப் பெரும் இன்பம் அளப்பரியது. எனவே ஒருவருக்கொருவர் உதவி உலகை உயிர்ப்பிப்போம்” என்று கூறவே விரும்புகிறேன்.

Leave a Reply