வெற்றிகரமான ஆசிரியர் பயிற்சி

0 Comments

பாடசாலைக் கல்வியை தொடர்ந்துவிட்டு தமது உயர் கல்வி மற்றும் தொழிலுக்காக காத்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு தமது கல்விப் பயணத்திற்கான இலக்கை தீர்மானித்து செயற்படுவது பற்றி சில ஆலோசனைகளை,

இலக்குகளை திட்டமிட்டு கல்விப் பாதைகளை அமைப்போம்.

என்ற பதிவில் வழங்கினோம்.

இப் பதிவுகள் இளைஞர், யுவதிகள் தமக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை முன்வைத்த போது அவற்றுக்கு ஆலோசனை வழங்கும் விதமாக எழுதுகின்றோம். எனவே வாசகர்களாகிய உமக்கு ஏதும் கல்விசார் பிரச்சினைகள் ஏற்பட்டு எமக்கு தெரியப்படுத்தினால் கலந்தாலோசித்து தீர்வுகளை வழங்குவோம் என்று கூறிக் கொண்டு இன்றைய பகுதிக்குள் நுழைகிறோம்.

மாணவர் கலந்துரையாடலில் இன்றைய தினம் இனங்காணப்பட்ட பிரச்சினை ஆசிரியர் பயிற்சி சார்ந்த பிரச்சினையாகும். அதாவது இன்றைய பதிவானது தமது தொழில்துறையாக ஆசிரியத்துறையை தெரிவு செய்து கொள்வொருக்கு ஆலோசனை வழங்கும் பகுதியாகவே அமைத்துக் கொள்கிறோம்.

ஆசிரியர் பயிற்சி

கல்விச் செயற்பாட்டின் அத்தியாவசிய வளமான ஆசிரியர்களின் வெற்றியின் பிரதான காரணி ஆசிரியர் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சியாகும்.

கல்வி, பயிற்சி முறைகளானது கற்பித்தலின் தொடர்ச்சியான செயல்முறைகளாகும். கற்பித்தலும், பயிற்சியும் ஒன்றிணையும் போதே கல்வி மட்டமும் உயர் நிலையை அடைகின்றது எனலாம். இதற்கமையவே ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளைப் பலப்படுத்தல் மூலம் சிறந்த சிந்தனைகள் கொண்ட அறிவு ஞானமிக்க எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கும் ஆசிரியரின் அறிவு மற்றும் பண்புசார் தரம் விருத்தி செய்யப்பட வேண்டும்.

இதற்குத் தேவையான வசதிகளை வகுத்து அறிவு, திறமை மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை உருவாக்குவதே கல்லூரிகளின் பிரதான இலக்காகும்.

அவ்வகையில் இலங்கையில் அமையப் பெற்றுள்ள ஆசிரியக் கல்லூரிகளை தேசிய கல்வியற் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் என்று இரண்டு வகையாக பிரித்து அவதானிக்கலாம்.

தேசிய கல்வியற் கல்லூரிகளானது சேவைக்கு முந்திய பயிற்சியையும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் சேவைக்குப் பிந்திய பயிற்சியையும் வழங்குகிறது.

தேசிய கல்வியற் கல்லூரிகள்

தேசிய கல்வியற் கல்லூரிகளானது பயிற்சியுடன் கூடிய 3 வருட கால ‘டிப்ளோமா’ கற்கைநெறியை உள்ளடக்கிய கல்வி நிறுவனங்களாகும். இதற்கு க.பொ.த(உ/த) பரீட்சை எழுதிய மாணவர்கள் தங்கள் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கல்வியாண்டில் கோரப்படும் விண்ணப்பங்களினூடாக விண்ணப்பிக்க முடியும். மேலும் க.பொ.த. (சா/த) பரீட்சையில் குறிப்பிட்ட பாடங்களில் திறமைச் சித்திகளும், க.பொ.த.(உ/த) பரீட்சையில் ஒரே அமர்வில் 3 பாடங்களிலும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

இலங்கையில் 19 தேசிய கல்வியற் கல்லூரிகள் காணப்படுகின்றன.

 1. நில்வளா தேசிய கல்வியற் கல்லூரி
 2. தர்கா நகர் தேசிய கல்வியற் கல்லூரி
 3. அட்டாளச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி
 4. மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி
 5. பேராதனை தேசிய கல்வியற் கல்லூரி
 6. யாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரி
 7. மகாவலி தேசிய கல்வியற் கல்லூரி
 8. பஸ்துன்ரட்ட தேசிய கல்வியற் கல்லூரி
 9. மஹரகம தேசிய கல்வியற் கல்லூரி
 10. ருஹுனு தேசிய கல்வியற் கல்லூரி
 11. ருவன்புர தேசிய கல்வியற் கல்லூரி
 12. ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி
 13. ஊவா தேசிய கல்வியற் கல்லூரி
 14. வயம்ப தேசிய கல்வியற் கல்லூரி
 15. வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி
 16. புலஸ்திபுர தேசிய கல்வியற் கல்லூரி
 17. ஹபிடகம தேசிய கல்வியற் கல்லூரி
 18. சாரிபுத்ரா தேசிய கல்வியற் கல்லூரி
 19. சியனே தேசிய கல்வியற் கல்லூரி

இங்கு ஆரம்பக் கல்வி, சமூகவியல், மனையியல், மொழிப்பாடங்கள், வணிகம், தகவல் தொழினுட்பம், உடற்கல்வி என 20 இற்கும் மேற்பட்ட கற்கைநெறிகள் காணப்படுகின்றன.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள்

இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பிற்கமைய பாடசாலை முறைமையில் சகல பயிற்றப்படாத ஆசிரியர்களையும் பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக மாற்றியமைக்கும் செயற்பாடுகள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளினால் முன்னெடுக்கப்படுகின்றன. இது 2 வருட வதிவிடப் பயிற்சியினை வழங்கும் கல்வி நிறுவனங்களாகும். இதன்போது இரு வருடங்களும் முழுமையான சம்பளத்துடன் கற்கை விடுமுறையும் கிடைக்கின்றது.

கல்வி அமைச்சின் 28/2016 சுற்று நிருபத்திற்கமைய இப்பயிற்சிக்காக பின்வரும் தகைமைகளைக் கொண்ட ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

 • அரச ஆணைக்குழு சபை செயலாளர் அல்லது கல்வி சேவைக் குழுவின் செயலாளர் அல்லது மாகாண அரச சேவை ஆணைக்குழுச் செயலாளரின் ஒப்பந்தத்துடன் முறையான நியமனக் கடிதம் கிடைக்கப்பெற்ற அரச பாடசாலைகளில் சேவையாற்றும் நிரந்தர பயிற்றப்படாத ஆசிரியர்கள்.
 • கல்வி அமைச்சின் தனியார் பாடசாலைக் கல்விப் பணிப்பாளரினால் உறுதிப்படுத்தபட்டுள்ள தனியார் பாடசாலை பெயர் பட்டியலில் உள்ளடங்கும் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் அங்கீகரிக்கப்பட்டு நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்கள்.
 • கல்வி அமைச்சின் பிரிவெனாக் கல்விப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவெனாக்களில் கற்பிக்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நியமனத்தைக் கொண்ட பயிற்றப்படாத பிரிவெனா ஆசிரியர்கள்.
 • மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தால் அமுல்படுத்தப்படும் தொலைக்கல்வி, பிரின்சட், ஆசிரியர் கல்லூரியின் பழைய பாடத்திட்டம், பட்டம் அல்லாத பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் ஆசிரியர் பயிற்சிப் பாடநெறியைத் தொடர்ந்து சித்தியடையவில்லை என்பது பற்றி ஆசிரியர் பயிற்சிப் பொறுப்பாளர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள்.

இலங்கையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள்:

 • தமிழ்மொழி மூலம்
 1. அட்டாளச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
 2. கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
 3. மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
 4. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
 • சிங்கள மொழி மூலம்
 1. பலபிட்டிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
 2. அமரசூரிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
 3. கிராகம (அழகியல்) ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
 4. கம்பொல ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி

இங்கும் சமயப் பாடங்கள், ஆரம்பக் கல்வி, சமூக விஞ்ஞானம், மொழிப் பாடங்கள், தகவல் தொழினுட்பம், நூலக விஞ்ஞானம் என பல பாடநெறிகள் காணப்படுகின்றன.

ஆசிரியர் கல்லூரியின் பயிற்சிக் கால எல்லைக்குள் ஏனைய பாடநெறிகளையோ அல்லது வேறு பரீட்சைளுக்கோ தோற்ற முடியாது. மேலும் இக் கல்லூரிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டதன் பின்னர் தமது விருப்பத்திற்கமைய பாடநெறியிலிருந்து விலக முடியாது.

இதற்கு கோரப்படும் விண்ணங்களுக்கமைவாகவும் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளுக்கமைய,

 • க.பொ.த.(சா/த) பரீட்சையில் தாய்மொழி மற்றும் கணிதப் பாடத்தில் 3 திறமைச் சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்
 • க.பொ.த.(உ/த) பரீட்சையில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல்

ஆகியன கல்வித் தகைமைகளாக எதிர்பார்க்கப்படுகின்றன.

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் கற்றல், பயிற்சி, கற்பித்தல் எனும் செயன்முறைகள் வலுப்பெறும் போதே உன்னதமான மாணவர் சமூகமும் உருவாக்கப்படுகிறது.

Ibnuasad

Leave a Reply

%d bloggers like this: