போதையால் மாறிய பாதை (தொடர் 3)

  • 22

‘இவங்ககிட்ட கேட்டால் சரி வராது செயலில் இறங்க வேண்டியது தான்’

என‌ நினைத்துக் கொண்டே‌ சகுனம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மறுநாள் பகல், வீட்டுப் பெண்கள் எல்லோரும் சமயலறையில் பிசி. உடனே உம்மாவின் அலுமாரியைத் திறந்து, தங்கச் சவடியை‌ எடுத்துக் கொண்டு சத்தமில்லாமல் கிளம்பி விட்டேன்.

நேரடியாக அவனிடம் சென்று, நகையைக் கொடுத்து “ஐஸ்” எனும் போதைப்பொருளை‌ அதிகமாக வாங்கினேன். அந்தச் சவடி மூன்று நான்கு லட்சம் பெறுமதியிருக்கும். அது மூன்று நான்கு ஐஸ் பக்கெட்டுக்கு முன்னே பெரிதாகத் தெரியவில்லை.

ஐஸ் வாங்கிக் கொண்டு கடலோரத்துக்குச் சென்றேன். தனியே இருந்து யாருக்கும் தெரியாமல், இரண்டு மாத வெறி தீர அனைத்தையும் சுவைத்தேன்.

உலகை மறந்தேன். வானத்தில் மிதந்தேன். என்னையறியாமல் உளறினேன். கடையில் மயக்கம் போட்டு விழுந்தேன். மூக்கால் இரத்தம் வழிந்தோடியது.

நான் இருக்கும் நிலையைக் கண்ட யாரோ ஒரு‌ நல்லவர், அம்பியூலன்ஸிற்கு அழைப்பு விடுக்க அவசர அவசரமாக அம்பியூலன்ஸ் வந்து என்னை அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றது.

வீட்டாருக்கு விசயம் கேள்விப்பட, அனைவரும் ஓடோடி‌ வந்தனர். நான் மயக்கமுற்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்பது தெரியாமல் நான் சுவர்க்கலோகத்தில் மிதந்து கொண்டிருந்தேன்.

அதிக போதைப் பொருள் உடலில் செலுத்தப்பட்டு இருப்பதால், கோமா நிலைக்குச் சென்று கொண்டிருந்தேன். வைத்தியர்கள் அரும்பாடுபட்டு, என்னவோ சிகிச்சையெல்லாம் செய்து உயிரைக் காப்பாற்றி விட்டார்கள்.

அடுத்த நாள் காலையில் கண்விழித்துப் பார்க்கிறேன். உடம்பில் சேலேன் (Saline) ஏற்றப்பட்டிருந்தது. மூக்கெல்லாம் ஏதோ கட்டுப் போட்டிருந்தனர். உடம்பெல்லாம் வலி.

“ஏன்ட மகனே! ஏன்ட ராஜாவே”

பெரும் சத்தத்துடன் உம்மா ஓடி‌வந்து கட்டிப் பிடித்தார்.

“ஏன்டா‌ மகன் இப்படி செஞ்ஜாய்? எங்கள‌‌ விட்டுட்டு ஒரேயடியாக போக பார்த்தியே’டா!”

உம்மா அழ அழ எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது.

இவ்வளவு நேரமாக உம்மா அழுதும், அவரின் வாயில் இருந்து நகை பற்றி ஒரு‌ வார்த்தை வரவில்லை. நகையை‌ விட என் உயிர் தான் அவருக்குப் பெரிதாக இருந்தது. தாய்ப்பாசம் விலைமதிப்பற்றதென்பதை உணர்ந்தேன். இவ்வளவு நாட்களாக நான் செய்து கொண்டிருந்த தவறை உணர்ந்தேன். உம்மாவை முழுமையாகக் கட்டிப்பிடித்து அழ‌ வேண்டும் போல இருந்தது. ஆனால், சேலேன் தடையாக இருந்தது.

மாலையாகி பொலீஸார் என்னை விசாரணை செய்ய வந்தனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தேன். என்னை இந்நிலைக்கு ஆளாக்கியவனைப் பற்றியும் கூறினேன். அவனைக் கைது செய்து, அவனிடம் இருந்து உம்மாவின் நகையை மீட்டனர். என்னை ஓர் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பினர்.

ஆரம்பத்தில் போதையின்றி‌ என்னால் இருக்க முடியவில்லை. உம்மாவிற்காக என்னை‌ நானே மாற்ற முனைந்தேன். மருந்து மாத்திரைகள், உளவியல் பயிற்சிகள், சுகாதாரமான உணவுகள் என என்னைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டனர்.

வாழ்க்கை என்றால் என்னவென்று புரிந்தது!
கல்வியின் மகத்துவம் புரிந்தது. இவ்வளவு காலமாக என்னை நானே அழித்திருக்கிறேன் என அறிய முடிந்தது. முக்கியமாக தாய்ப்பாசம் என்றால் என்னவென்று புரிந்தது.

நான் கெட்டுப் போனால், அதனால் என் முழுக்குடும்பமுமே பாதிப்படையும் என்பதை உணர்ந்தேன். இனிமேல் நான் நல்ல மனிதனாக வாழ‌‌ வேண்டும் ‌என‌ உறுதியோடு, ஆறு‌ மாதங்களின் பின்னர் வீட்டையடைந்தேன்.

என் வீடு எனக்குப் புதிதாகத் தோன்றியது. உறவினர்களுடன் சகஜமாக பழக ஆரம்பித்தேன். மனதுக்கு ரிலாக்ஸ் தேவைப்பட்டது. மீண்டும் உதைபந்தாட்டம் ஆட‌ நினைத்தேன். முன்பு போல் அதிக நேரம் விளையாட‌ முடியவில்லை. அதிகம் ஓட முடியவில்லை, விரைவில் களைப்படைந்தேன். ஷொட்களும் சொதப்பியது. பந்தைக் கட்டுப்படுத்தத் திணறினேன்.

கொஞ்சம் கொஞ்சமாக என்னை‌ நானே மாற்றிக் கொண்டேன். முன்பெல்லாம் “அமான்” என்றால் எதிரணிக்கு ஒரு பயம் இருந்தது. இப்போது என்னை யாரும் மதிப்பதே இல்லை.

மாலை வேளைகளில் ஒரு மனச் சந்தோசத்திற்காக விளையாட ஆரம்பித்தேன். அதே மைதானம் அதே கூட்டம் அதே நான் ஆனாலும், நான் எங்கோ புதிய இடத்தில் புதிய சனத்துக்கு முன்னால் விளையாடும் உணர்வு.

கைதட்டலோ! எனக்கான ரசிகர்களோ யாருமின்றி தனியாளாக நின்றேன். மாதமொருமுறை உளவியல் நிபுணரொருவரிடம் உளவியல் சிகிச்சை பெற்றேன். மூச்சு வாங்க கடினமாக இருந்ததால், தொடர்ந்து மருந்துகளும் எடுத்தேன்.

கையில் செலவுக்குப் பணம் வேண்டும். எனக்கு யார் தான் தொழில் தருவார்கள். நாட்கூலிக்காக சிறு சிறு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன்.

பார்த்தீர்களா! என் நிலைமையை உலகையே ஆளப்பிறந்த ஒருவன், வாழத் தொழிலின்றி கஷ்டப்படும் நிலைமையை. அடிக்கடி அழுவேன். அழுது என்ன பிரயோஜனம்.

எமது பிரதேசத்தில் மீண்டும் கஞ்சாவும், ஐஸும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. பாடசாலை மாணவர்களையும், இளைஞர்களையும் குறிவைத்து ஒரு போதை மாஃபியாவொன்றே களமிறங்கி இருக்கிறது.

ஹாஜியார்கள் என சொல்லிக் கொள்ளும் சிலரும் அல்லாஹ்வுக்குப் பயப்படாமல், போதைவஸ்த்து முகவர்களாகிக் கொண்டிருக்கின்றனர்.

அவனும் பெரிய போதை வியாபாரியாகி விட்டான். அவன் தான் அந்த அவன் தான். அவனைத் தான் குறிப்பிடுகிறேன். அந்தப் படுபாதகனை, அவனது பெயரைக் கூறவும் அருவருப்பாக இருக்கிறது. அவனுக்குப் பின்னால் ஒரு நெட்வேர்க்கே இயங்கிக்கொண்டிருக்கிறது.

மாணவர்களும் இளைஞர்களும் அவனது வலையில் மாட்டிக் கொண்டிருக்கின்றனர். ஊரின் நலன்விரும்பிகள் அதைத் தடுக்க அரும்பாடுபட்டனர். எத்தனையோ தடவைகள் அந்த நெட்வொர்க்கில் இருப்பவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

கைது செய்யப்பட்டு என்ன பயன். மறுநாள் காலையில் கண்விழித்துப் பார்த்தால் கண்முன்னே சுதந்திரமாக மீண்டும் நடமாடித் திரிவார்களே.

இவர்களுக்குப் பின்னால் ஏதோ சில அரசியல்வாதிகளும், செல்வந்தர்களும் இருப்பதாக எல்லோரும் கதைத்துக் கொள்கின்றனர். ஒரேயொரு ஃபோன் கோலில் அனைவரும் வெளியே வந்துவிடுவார்கள்.

வழிகெடும் இந்த மாணவர்களை பெற்றோர்கள் கவனிக்கத் தவறுகின்றனர். என்னை எனது பெற்றோர் ஒழுங்காக கவனித்திருந்தால் நானும் உயர் பதவிகள் வகித்திருப்பேன்.

நான் செய்த தவறை வேறு யாரும் செய்திடக்கூடாது என முடிவெடுத்தேன். என்னால் முயன்றவரை சிறார்களுக்கு ஆலோசனை வழங்கினேன். கெட்டுப் போகாமல் இருப்பதற்கு, பிள்ளைகளுக்கு உதாரணம் காட்ட நானே பயன்பட்டேன்.

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ஒருநாள் கொழும்பில் ஒரு உதைப்பந்தாட்டப் போட்டியொன்றைப் பார்வையிடப் போயிருந்தேன். போட்டி ஆரம்பிக்க நேரமிருந்தது. அங்கு பெவிலியன் இருந்து மைதானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்த‌போது, நேர் எதிரே இருந்த கோல் போஸ்ட்டில் ஒருசிலர் ஒருவர் பின் ஃப்ரீ கிக் அடித்துப் பயிற்சி ‌பெற்றுக் கொண்டு இருந்தனர்.

அது பிரபல அணியொன்றின் வீரர்கள். அனைத்து ஷொட்களையும் அந்த கோல்கீப்பர் தடுத்துக் கொண்டிருந்தான். எங்கேயோ கண்ட முகம் போல உணர்ந்தேன். அருகில் சென்று பார்க்க எண்ணினேன்.

அருகே நெருங்க நெருங்க பழைய நினைவுகள் கண்முன்னே வருவது போல‌ உணர்ந்தேன். இடது கால் வீரனொருவன் ஓங்கி அடித்த ஓர் பந்து, இடது மேல் மூலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

கோல் உறுதி. Wait. ஒரு நிமிஷம்.

அங்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. கோல்கீப்பர் தனது வலப்பக்கம் இரண்டு தாவுத் தாவுகிறார். அப்படியே மேலே ஒரு ஜம்ப் (Jump). கோல் கீப்பரின் வலது கை விரல்களில் பந்து படுகிறது. பட்டு கோல் போஸ்ட்டுக்கு வெளியே சென்று விட்டது.

“யார்ரா இவன்! இந்தப் பாய்ச்சல் பாய்கிறானே. ஒரு கோலையும் விடவில்லையே. மிகப்பெரிய கோல்கீப்பர் ஆக இருக்கிறானே. இவன் யாரென்று பார்த்தே ஆகவேண்டும்”

என எண்ணிக்கொண்டே அவனின் அருகில் போனேன்.

இந்த முகம் அடிக்கடி பார்த்த முகம். என் வாழ்க்கையின் கஷ்ட காலத்தின் போது, “என்னைக் காப்பாற்ற வருவான்” என நான் தேடிய முகம். ஆனால் அவனது பாதை கொழும்பை மையமாக மாறிவிட்டிருந்தது.

என்னுடன் பழகியதால், இவன் எத்தனையோ தடவை அவனது வீட்டாரிடம் அடிவாங்கியிருக்கிறான். ஆனால், அவன் ஒருபோதும் என்னைப்போல் கெட்ட வழியில் அவனது பாதையை தெரிவு செய்யவில்லை.
அவனுக்குப் பகுத்தறியும் புத்தி அப்போதே இருந்திருந்தது. என்னையும் அவனையும் இணைத்திருந்தது, புட்போல் தான் புட்போல் மட்டும் தான்.

அவன் வழியைப் பின்பற்றியிருந்தால், நானும் அவனைப் போல உயர் நிலையில் இருந்திருப்பேன். சமூகம் அங்கீகரிக்கும் ஒரு மனிதனாக இருந்திருப்பேன்.

சிமாஸ்! எனது பால்ய காலத்து நண்பன். ஆம். அவன் தான் அது. அவனே தான்.

“சிமாஸ்ஸ்ஸ்ஸ்”

சத்தமாக கத்தி விட்டேன். என்னை அவன் உற்றுப் பார்த்து,

“அமான்ன்ன்”

என்று கூறிக்கொண்டே அருகில் வந்தான். அவனைக் கடைசியாக ஒரு ஏழு வருடங்களுக்கு முன்னால் கண்டிருந்தேன். அதன் பின்னர் தற்போது தான் பார்க்கிறேன்.
அவனுக்கு என் கதையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

அவன் ஊருக்கு வருவது குறைவு தான். இருப்பினும் யாராவது என்னைப்பற்றி அவனிடம் கூறியிருக்க வாய்ப்புண்டு.

எனக்கு அவனது முகத்தைப் பார்த்து கதைக்க சங்கடமாக இருந்தது. ஆனால் அவன் எதையும் காட்டிக் கொள்ளாது வழக்கம் போலக் கதைத்தான்.

சுகநலம் விசாரித்து விட்டு, அவனது நண்பர்களிடம் என்னை அறிமுகம் செய்தான்

“இவன் அமான்! நான் இன்று சிறந்த கோல் கீப்பராக இருப்பதற்கு இவனும் ஒரு முக்கிய காரணம். நான் கண்ட Best Forward. இவன் Europe இல் பிறந்திருந்தால் இன்று world famous Forwards’ல ஒருத்தனாக இருந்திருப்பான். இவன் மலேசியாவுக்கு எல்லாம் போய் இருக்கான்.”

சினாஸின் வார்த்தைகளைக் கேட்டதும் கண்கலங்கி விட்டேன். நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு ஆறுதலான வார்த்தைகளை கேட்கிறேன்.

“நான் வழிதவறும் போது இவன் எனதருகில் இருந்திருந்தால், என்னைக் காப்பாற்றி இருப்பானே. பரவாயில்லை, அவன் எனதருகில் இருந்தால் அவனும் என்னுடன் சேர்த்து குட்டிச் சுவராகியிருப்பான்”

என எண்ணிக்கொண்டேன். சினாஸ் விளையாட்டில் எவ்வளவுக்கு எவ்வளவு ஈடுபாடு காட்டுவானோ, அதேபோல் தான் படிப்பிலும் அதிக ஈடுபாடு. நன்றாகப் படிப்பான். முதல் ஐந்து இடங்களுக்குள் எப்போதும் அவன் இருப்பான்.

அவன் சாதாரண தரத்தில் சித்தியடைந்து, உயர்தரம் படித்து, முதலாம் அமர்விலேயே பல்கலைக்கழகத்திற்கு தெரிவானான். அங்கு உதைப்பந்தாட்டத்திலும் கலக்கி பல விருதுகளையும் சாம்பியன் பட்டங்களையும்‌ பெற்று இப்போது இலங்கையின் ஒரு முன்னணி அணிக்காக விளையாட‌ இருக்கிறான். நானோ‌ வழி மாறிப்போனதால் இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கிறேன்.

“அமான். ஓன்ட ஃபேவரைட் ஷொட்‌ ஒண்ட அடி மச்சான்! மிச்சம் நாளாகிட்டு அதைப் பார்த்து”

சினாஸ் மேலும் பேச ஆரம்பித்தான்,

“இவன் ஒரு பனானா கிக் அடிப்பான், இதுவரைல யாரும் அந்த ஷொட்ட தட்டி இல்ல, அடியென்றால் நெருப்பு அடி! இவன் தனியாக நின்று கோலடிப்பான்”

என்று என்னைப் பற்றி அவனது நண்பர்களிடம் கூறவும் எனக்குள் ஏதோ மின்னல் பாய்ந்த உணர்வு. நேர்மறையாக நீண்ட நாட்களுக்குப் பின்னர் சில வார்த்தைகளைக் கேட்கிறேன். அவனது நண்பர்கள் பந்தை என்னிடம் தந்தார்கள்.

என்னால் மீண்டும் பழையபடி விளையாட முடியாது தான். ஆனாலும், எனது ஃபேவரைட் ஷொட்டை, கடும் முயற்சிகள் செய்து கைவந்த கலையான அந்த கிக்கை அடித்தே ஆகவேண்டும் என்ற மனநிலையில் உந்தப்பட்டவனாக, பந்தைக் கையில் எடுக்கிறேன்.

பெனால்டி பொக்ஸுக்கு சற்று வெளியே பந்தை வைக்கிறேன். சுற்றும் முற்றும் பார்க்கிறேன். கோல் போஸ்ட்டுக்கு முன்னால் மூவர் தடுப்புச்சுவராக நிறுத்தப் படுகின்றனர். என் மனது ஆழ்ந்த அமைதியில் இருந்தது.

நீயா நானா போட்டி. நீண்ட நாட்களுக்குப் பிறகு. ஆனால், எமது பலப்பரீட்சையை ரசிக்க அவனது நண்பர்களும் நான்கைந்து நாய்க்குட்டிகளுமே அங்கிருந்தனர்.

பழைய மைதானம் இல்லை. பழைய ரசிகர்கள் இல்லை. பழைய ஆரவாரம் இல்லை. ஆனால், பழைய தெம்பு மட்டும் உள்ளிருந்து பீறிட்டு வெளிக்கிளம்ப ஆரம்பித்தது.

கோல் போஸ்ட்டில் சினாஸ். சிறந்த கீப்பர் அவனைத் தாண்டி கோல் அடிக்க வேண்டும். ஒரே ஒரு ஷொட் தான். இவ்வளவு நாட்களாக இழந்த சக்தியை மீண்டும் பெற்று அடிக்க வேண்டிய ஒரே ஒரு ஷொட் சாதிக்க வேண்டும் எனும் ஓர் உணர்வு

கண்கள் கோல் போஸ்ட்டை ஸ்கேன் செய்ய, மூளை கம்பியூட்டராய் வேலை செய்து இடது பக்க மேல் மூலையை குறிவைக்குமாறு கால்களுக்கு கட்டளை இட, பந்தை நோக்கி ஐந்தடி முன்னால் ஓடி வந்து பந்துக்கு வலிக்காமல் ஒரு புல்லட் ஷொட்.

தடுப்புச்சுவரில் இருந்தவர்களின் தலைக்கு மேலால் பந்து சென்று, இடது பக்க கம்பத்துக்கு வெளியே செல்வது போல சென்று, இடது பக்க மேல் மூலையினூடு “டக்” என்று உள்நுழைய எத்தனிக்கும் போதே, சினாஸின் வலது கை விரல்கள் பந்தின் பாதையை மறைக்க வருகிறது. எனக்கே ஆச்சரியம். இவ்வளவு வலிமையை அவன் எப்படி பெற்றான். எல்லாம் அவனது விடாமுயற்சியும், பயிற்சியும் தான். அவன் ஒரு நொடியில் எனக்கு இன்ஸ்பிரேஷன் ஆனான்.

கையா? பந்தா? சினாஸா? அமானா?

மேலே ஏறி வந்த அவனது கைவிரல்களின் மேல் நுனிகள் பந்தில் படுகின்றன.

“சரி. அவ்வளவு தான்”

என்று நினைக்கும் போதே தலைக்கு மேலே இருக்கும் கிடைக் கம்பத்தில் பந்து படுகிறது. கிடைக் கம்பத்தில் பந்து படுவதற்கும், ஸினாஸ் கீழே விழுவதற்கும் ஒரு செக்கனுக்கு முன்னாடி ஸினாஸைப் பார்க்கிறேன். அதே சிரிப்பு அவனது பழைய புன்னகை தான். ஆம் அவன் என்னை ரசித்துக் கொண்டிருந்தான். என் ரசிகன் அவன், ஆனால் இப்போது திடீரென்று அவன் முகம் வாடியது. ஏன் அந்த பந்து கோலாக மாற்றப்பட்டால் அவன் முகம் வாடியதில் நியாயம் உண்டு. ஆனால், அப்பந்து கோல் கம்பத்தைத் தாண்டி வெளியே சென்று கொண்டிருந்தது.

ஒரு வீரனாக அவன் வெற்றி பெற்றாலும், ஒரு ரசிகனாக அவன் தோற்றுப்போனான். அது தான் அந்த சோகத்துக்கான காரணம். அவனை நான் ஏமாற்றி விட்டேன். என் ரசிகனை நான் ஏமாற்றி விட்டேன். அத்துடன் அவர்களின் பயிற்சியும் நிறைவுற்றது.

இந்த ஷொட் கோலாகாவிட்டால் என்ன? எனது ஃபேவரைட் ஷொட்டை பழைய படி அடிக்கும் தெம்பு எனக்கு இப்போது வந்துவிட்டது. அந்த தைரியம் வந்துவிட்டது. சாதிக்கும் வெறி வந்துவிட்டது.

மீண்டெழுந்து வந்து போராடும் எண்ணம் உதித்துவிட்ட்து. அப்போது நான் இன்னொன்றை உணர்ந்தேன். ஒழுங்காக கல்வி கற்றிருந்தால் ஸினாஸ் போல ஒரு பட்டதாரி ஆகிருக்கலாம். போதைவஸ்த்தை தொடாதிருந்திருந்தால் நல்ல உதைப்பந்தாட்ட வீரனாகிருக்கலாம். ஆனால், இன்னும் காலம் இருக்கிறது. மீண்டும் வருவேன் மீண்டு வருவேன்.

“ஸினாஸ், ஊருக்கு வரும் போது ground’கு வா? கடனொன்று பாக்கியிருக்கிறது. நீயா? நானா? என்று அங்கு பார்ப்போம்.”

“கட்டாயம் அமான். நீ பெரிய பிளேயரா? என்னைத் தாண்டி எப்படி கோல் அடிப்பாய் என நானும் பாக்குறேன்.”

சிரித்துக் கொண்டே கலாய்த்தான் அவன்.

“அதையும் பார்க்கத்தானே போறன் மச்சான்.”

முற்றும்.
Ifham Aslam
Visiting Lecturer (OUSL)
BSc. MSc(R)

பி.கு: பல உண்மைச் சம்பவங்களின் தழுவலுடன் போட்டியொன்றுக்காக எழுதப்பட்ட சிறுகதை. தொடர்ந்து வாசித்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள்.

‘இவங்ககிட்ட கேட்டால் சரி வராது செயலில் இறங்க வேண்டியது தான்’ என‌ நினைத்துக் கொண்டே‌ சகுனம் பார்த்துக் கொண்டிருந்தேன். மறுநாள் பகல், வீட்டுப் பெண்கள் எல்லோரும் சமயலறையில் பிசி. உடனே உம்மாவின் அலுமாரியைத் திறந்து,…

‘இவங்ககிட்ட கேட்டால் சரி வராது செயலில் இறங்க வேண்டியது தான்’ என‌ நினைத்துக் கொண்டே‌ சகுனம் பார்த்துக் கொண்டிருந்தேன். மறுநாள் பகல், வீட்டுப் பெண்கள் எல்லோரும் சமயலறையில் பிசி. உடனே உம்மாவின் அலுமாரியைத் திறந்து,…

3 thoughts on “போதையால் மாறிய பாதை (தொடர் 3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *