சமூக நலனும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவதன் அவசியமும்

  • 372

நாம் வாழும் இப்பூலோகமானது பல மக்கட் கூட்டங்களை சுமந்து கொண்டிருக்கின்றது. அவர்களுள் எண்ணிலடங்காத ஜாதி, இன, மத, மொழி பேசும் மக்கள் அடங்குகின்றனர்.

எப்படி வாழ்ந்தாலும் இன்றைய உலக அரங்கிலே தனி மனிதனாக எவரும் வாழ்ந்திட முடியாது. மனிதனோ தன் தேவைகளைப் பெற ஒருவரையொருவர் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. இதனையே

“ஒன்று கூடி வாழ்வதே உயர்ந்த வாழ்வாகும்”

எனும் முதுமொழி தெளிவுபடுத்துகின்றது.

இவ்வுலகிலே படைப்பினங்களிலெல்லாம் சிறந்த படைப்பினமாக திகழும் மனித இனமே பலருடனும் ஒருங்கு கூடி தம் பொருளிலும் உழைப்பிலும் பங்கேற்று தம்மை உயர்த்திக் கொள்ளவே தாம் வாழும் சமுதாயத்திற்கு நன்மை செய்யக் கருவியாகத் திகழும் தலைமைத்துவம் பெற்ற சமூக அமைப்புக்களைத் தேடி அலைகின்றனர் எனலாம்.

இக்கால கட்டத்திலே மதங்களுக்கு மத்தியில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய மதம். இவ் இஸ்லாம் மதம் சமயமாக அறிமுகமாகி சமூகமாக வளர்ச்சி கண்டு ஓர் அரசாக மலர்ச்சியடைந்து முழுமை பெற்றுள்ளது.

இவ்வாறு முழுமையடைந்த இச் சமூகத்திற்கு ஏன் தலைமைத்துவம் அவசியம்? சமூகத்திற்கும் தலைமைத்துவத்திற்கும் இடையிலான உறவு என்ன? ஏன் இப்படிப்பட்ட தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட வேண்டும்? இஸ்லாம் ஏன் சமூகத்திலே தலைமைத்துவத்துவத்திற்கு இவ்வளவு கௌரவமும் கண்ணியமும் வழங்கியுள்ளது?

என்ற வினாக்களை எழுப்பினால் இதற்கான விடையைத்தான் அல்லாஹ் தன் திருமறையில்,

“(விசுவாசிகளே!) அவ்வாறே (ஏற்றத் தாழ்வற்ற) நடுநிலையான சமுதாயத்தினராகவும் நாம் உங்களை ஆக்கினோம். ஆகவே நீங்கள் மனிதர்களுக்கு வழிகாட்டக்கூடிய சாட்சிகளாக இருங்கள். (நம்முடைய) தூதர் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய சாட்சியாக இருப்பார்.”

என சமூகத்திற்கும் தலைமைத்துவத்திற்குமான உறவை அல்லாஹ் 2 ஆம் அத்தியாயத்தில் 143 ஆம் வசனத்தில் சுட்டிக்காட்டியுள்ளான். இதனாலேயே அல்குர்ஆன் தலைமைத்துவத்தோடு ஒட்டிப்பிறந்த இஸ்லாமிய சமூகத்தை “உம்மா” என்ற பதத்தைக் கொண்டு அழைக்கின்றது.

இஸ்லாம் வெறுமனே சில எண்ணக்கருக்கள், நம்பிக்கைகள், சடங்குகள் என்பவற்றை மட்டும் கொண்ட மார்க்கமல்ல. அது சமூக அமைப்பொன்றின் ஊடாக செயல்படக்கூடிய ஒரு வாழ்க்கைத் திட்டம். இவ்வாழ்கைத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவும் அதன் பயனை சமூகம் அனுபவிக்கவும் அதன் சுமூகமான செயற்பாட்டைத் துரிதமாக்கி செயற்படுத்துவதற்கு அவசியமான அடிப்படை பண்புகள் பலவற்றை தன்னுள்ளே கொண்டுள்ள தலைவர்களின் கீழ் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயமும் இயங்க வேண்டுமென இஸ்லாம் தீர்மானிக்கின்றது.

இஸ்லாமிய நாகரிகம் வாழ்க்கையைக் குறுகியதாக பார்ப்பதில்லை. மாறாக வாழ்வு கருத்துடையதாக மாற்றமடைவதையே விரும்புகின்றது. ஏனெனில் மனித வாழ்வு வெறுமனே பௌதீக வாழ்வுடன் மட்டும் தொடர்புபடுவதில்லை. மனிதன் தான் வாழும் சமூகத்தைத் தெரிந்து கொண்டு அவன் வாழும் பிரபஞ்சத்திலே சமூகத்திற்கும் அவனுக்குமிடையிலான தொடர்பு மற்றும் வாழ்வின் இலட்சியம் குறிக்கோள் என்பவற்றையும் புரிந்து வாழவே கடமைப்பட்டுள்ளான். இவ்வாறு நேரான வழியைப் பெற்று புரிய வேண்டிய நற்செயல்களையும் விலக்க வேண்டிய தீச்செயல்களையும் பிரித்தறிந்து சமூகத்திற்கு சொல்லக் கூடிய மார்க்கப்பற்றுள்ள அறிஞர் தலைவரின் கீழ் செயல்பட நிர்பந்திக்கப்பட்டுள்ளான். சிறந்த தலைவருள்ள சமூகமே சிறந்த இடத்தை நோக்கிப் பயணிக்கும் என்பதில் ஐயமில்லை. இதனைத்தான்

“(நபியே) இது வேத நூல் இதனை உம்மீது நாம் இறக்கியுள்ளோம். இதன் மூலம் மனிதர்களை அவர்களுடைய இறைவனின் கட்டளைப் பிரகாரம் இருளிலிருந்து பிரகாசத்தின் பக்கம் நீர் கொண்டு வருவீராக. அப்பிரகாசமே மிக்க புகழுக்குரியதும் யாவரையும் மிகைத்தவனின் நேரான வழியாகும்.”

என ஸூறா இப்றாஹிமின் முதலாம் வசனத்திலே தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவதன் அவசியத்தை இறைவன் வலியுறுத்திக்காட்டியுள்ளான்.

இதனாலேயே நபி (ஸல்) அவர்கள் தன் சமூகத்திற்கு தலைவராக இருந்து சகல விடயங்களிலும் பொறுமையாக செயற்பட்டு மேலான குணங்களினாலேயே மனித குல நாகரிகத்தின் சிற்பிகளாக அமைந்த சத்திய சீலர்கள் பலரை அவர்கள் உருவாக்கினார்கள். இவை நாகரிகமும் பண்பாடும் நல்லெண்ணமும் கொண்ட நற்செயல் புரியக்கூடிய சமூகத் தலைவர்களிடமிருந்தே தோற்றம் பெறுகின்றன. இவ்வாறு இஸ்லாம் முன்வைத்த மகத்தான மனித மாண்புகள் மனிதப் பண்புகளைக் குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருந்தவர்களது உள்ளங்களைத் தொட்டு விட்டன.

இழிவான வாழ்க்கையினால் உள அமைதியை இழந்திருந்த அம்மக்கள் ஆன்மீக சுகத்தை அனுபவிக்கத் தொடங்கினர். பின்னர் படிப்படியாக நாகரிகமிக்கவர்களாகவும் உலகின் கடிவாளத்தைக் கையிலெடுத்தவர்களாகவும் மாற்றமடைந்தது மட்டமல்லாமல் சமூகத்தின் மத்தியிலே நல்லவர்களாக உருவெடுத்து தலைமைப் பதவியை பெற்று நல்லாட்சி புரிய முன்வந்தனர்.

இவ்வாறு கோரிக்கை விடுபவர்களைக் கூட இஸ்லாம் மறுத்தொதுக்கவில்லை. ஏனெனில் தலைமைப் பதவிகளை வழங்கி வரவேற்றது இஸ்லாம். மேலைத்தேய வாதத்தைக் கடைபிடிக்கும் ஐரோப்பியர் மனிதர்களை அடிமைப்படுத்துவதைப் போல் இஸ்லாம் மனிதர்களை அடிமைப்படுத்தவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களின் காலம் முதல் முஸ்லிம்கள் நன்மையை நாடி அடிமைகளை விடுதலை செய்த நிகழ்வுகளைக் காணலாம்.

இவ்வாறு மனிதர்கள் சமத்துவமுடையவர்களாக மனிதர்களாலேயே கருதப்படாத காலகட்டத்தில் கூட தலைத்துவத்தின் கீழ் அனைவரும் சமமான அந்தஸ்துடையவர்கள். அவர்கள் வாழும் சமூகத்தில் உயந்தவர் தாழ்ந்தவர் எனும் பாகுபாடின்றி அனைவரும் சமமாக மதிக்கத்தக்கவர்கள். அவர்களை கண் பார்வை விழும் தூர அளவிலிருந்து எடைபோடக்கூடாது. ஏனெனில் மனித சமூகத்தைக் குலம், கோத்திரம், செல்வம், அதிகார அடிப்படையில் மதிப்பிடக்கூடாது என எடுத்துக்காட்டி தக்வாவின் வழி அல்லாத ஏனைய அனைத்து அம்சங்களிலும் மனிதன் சமமானவனே என்ற கருத்தை அல்லாஹ் திருமறையில் கூறும் போது,

“தமது நபியாகிய அவர் கடுகடுத்தார் மேலும் முகத்தைத் திருப்பிக் கொண்டார். பார்வையற்றவர் அவரிடம் வந்ததற்காக. நபியே உம்மிடம் வந்த அவர் பரிசுத்தமானவராக ஆகிவிடக்கூடும் என்பதை நீர் அறிவீரா”

80 அத்தியாயம் 1-3 ஆம் வசனத்தின் மூலம் வலியுறுத்தி தலைமைத்துவம் பெற்ற சமூக கட்டமைப்பினுள் மக்களனைவரையும் தங்களிடையே ஏற்றத்தாழ்வின்றி ஒரே மாதிரியானவர்களென அனைவரிடத்திலும் சமத்துவச் சிந்தனையை உயிர்ப்பித்துள்ளமையை எடுத்துக் காட்டுகின்றது.

இந்த வகையில் இஸ்லாமியக் குடும்பம் தனித்து வாழ முடியாததும் சமூகத்திலிருந்து பிரிக்க முடியாததுமானதாகும். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ஒரு கட்டுக் கோப்பான சமூக உருவாக்கம் இஸ்லாத்தில் எந்தளவு தூரம் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறித்து சுருக்கமாக நோக்குவோமாயின் பொதுவாக மதம் தனி மனிதனுக்கும் இறைவனுக்குமிடையிலான உறவு பற்றியே பேசுகிறது. அதற்கு அப்பால் செல்வதில்லை. ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை அது தனி மனிதன் குடும்பம் சமூகம் என அழைக்கலாகாது.

இஸ்லாத்தின் அடிப்படை மார்க்கக் கடமைகள் மற்றும் இபாதத்துக்களை ஆராய்கின்ற போது இந்த உண்மையை தெளிவாகவே புரிந்து கொள்ள முடியும். கூட்டுத் தொழுகை, நோன்பு, கூட்டாக சேர்ந்து நிறைவேற்றப்படும் ஸகாத், கூட்டாக இணைந்து நிறைவேற்றும் ஹஜ் போன்ற கடமைகளைக் குறிப்பிடலாம்.

இதனாலேயே வீட்டில் தனிமையாக இருந்து தொழுவதை விட இமாமை (தலைவரைப்) பின்பற்றி ஜமாஅத்தாக தொழுவது இருபத்து ஏழு மடங்கு நன்மையைப் பெற்றுத் தருமென இஸ்லாம் போதிக்கின்றது. அல்குர்ஆன் பெரும்பாலும் பன்மையில் விளித்துப் பேசுவதையும் சமூகத்தை விளித்துப் பேசுவதையும் பார்க்கலாம். தொழுகையை நிலைநாட்டுங்கள். ஸகாத்தை நிறைவேற்றுங்கள் எனும் முதலான கட்டளைகள் முழு சமூகத்தையும் நோக்கி விளிக்கின்றமையை பார்க்கிறோம். அந்த வகையில் இஸ்லாம் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் சமூகத்தை உருவாக்க வந்த மார்க்கம் ஒரு கட்டுக்கோப்பான சமூகத்தை இலக்காகக் கொண்ட மார்க்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளைப் பொருத்தவரையில் எமது முதலாவது இலக்கு தனி மனித உருவாக்கம் இரண்டாவது குடும்ப உருவாக்கம் மூன்றாவதாக அமைவது ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒரு கட்டுக்கோப்பான சமுதாயத்தை உருவாக்குவதாகும்.

இஸ்லாம் சமூக உருவாக்கம் பற்றி பேசுகின்ற போது அது கட்டுப்பாடான ஒழுங்குடன் கூடிய சமூகமாக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றது. இஸ்லாமிய அடிப்படை மார்க்கக் கடமைகள் வணக்க வழிபாடுகள் அனைத்திலும் ஓர் ஒழுங்கு இருப்பதை எம்மால் பார்க்க முடியும்.
தொழுகைக்கென ஓர் ஒழுங்கு முறை காணப்படும் அதேவேளை தம் விருப்பத்திற்கேற்ப நிறைவேற்றலாகாது. குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும். கூட்டாக இமாமைப் பின்பற்றித் தொழ வேண்டும். நோன்பை நோக்கினால் குறிப்பிட்ட காலம் ஸஹர், இப்தார் என அனைத்தும் திட்டமிட்ட அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன.

ஸகாத்தை எடுத்துக்கொண்டால் “ஸகாத் கொடுங்கள்” என்று மாத்திரம் கூறி விடவில்லை. மாறாக ஸகாத்தை யார்?யாருக்குக் கொடுக்க வேண்டும், எந்தளவு கொடுக்க வேண்டும், அதனுடைய வருடப்பூர்த்தி எவ்வாறிருக்க வேண்டுமென அனைத்து விடயங்களும் தெளிவாக கூறப்பட்டுள்ளன.

இவ்வாறு வணக்க வழிபாடுகளில் பேணப்படுகின்ற இந்த ஒழுங்குகள் எந்தளவு தூரம் எமது நாளாந்த வாழ்க்கையில் கடைபிடிக்கப்படுகின்றன என்பதும் கேள்விக்குறியே! ஏனெனில் இன்று சமூகத்தில் ஓர் ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் தான் இஸ்லாம் எதிர்பார்க்கும் ஒழுங்கான சமூகத்தை உருவாக்க முடியாதிருக்கின்றது. இஸ்லாத்தின் போதனைகள் பயிற்சிகளுக்கு ஊடாக தனிமனிதனும் குடும்பமும் சமூகமும் தமது செயற்பாடுகளை தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு அமைத்துக் கொள்ள வேண்டுமென்பதே இஸ்லாத்தின் எதிர்பார்ப்பு.

இதனடிப்படையில் தலைமைத்துவக் கட்டுப்பாடு பற்றி நோக்குகையில் ஒரு சமூகத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. தலைமைத்துவ ஒழுங்கும் கட்டுப்பாடுமில்லாத நிலையில் கட்டுக்கோப்பான ஒரு சமூகம் உருவாக முடியாது. தலைமைத்துவம் ஒழுங்கானதாகவும் கட்டுப்பாடானதாகவும் அமையுமேயானால் அவ்விடத்தில் கட்டுக்கோப்பான சமூகம் அமையும் என்பதில் ஐயமில்லை.

இறைவனால் உலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் தத்தம் சமூகத்திற்குப் போதித்த இரண்டு விடயங்கள் முக்கியமானவை. அதில் முதலாவது “தக்வா” அல்லாஹ்வுக்கு அஞ்சி வழிப்படுவது. இரண்டாவது “தாஅத்” நபிக்கு கட்டுப்பட்டு நடப்பது அதாவது அல்லாஹ்வுக்கு வழிபடுவது போலவே நபிமார்களின் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு கட்டுப்பாடான சமூகமாக தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைந்து வாழ வேண்டுமென்பதை உலகில் தோன்றிய எல்லா நபிமார்களும் வலிறுத்துவதை அல்குர்ஆன் பறைசாற்றுகின்றது.

அல்குர்ஆன் மற்றும் ஹதீஸிற்கும் அவனது தூதரிற்கும் கட்டுப்படுமாறு ஓரிரு இடங்களில் அல்ல ஏராளமான இடங்களில் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அல்குர்ஆனிலே

“(நபியே) நீர் கூறும்! அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்றும் ( 3: 32) ,

“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள் இன்னும் அல்லாஹ்வின் தூதருக்கும் உங்களில் அதிகாரம் வகிப்பர்களுக்கும் கட்டுப்படுங்கள்” (4: 59)

இப்படி எல்லா வசனங்களிலும் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் தலைவர்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு சிறந்த தலைமைத்துவக் கட்டுப்பாடும் ஒழுங்கும் இணையும் புள்ளியிலானதொரு கட்டுக்கோப்பான சமூகம் உருவாகும் என்பதற்கு எமது அரேபிய வரலாற்று ஆட்சியாளரான 2 ஆம் கலீபா உமர் (ரழி) அவர்களது பின்வரும் கூற்று தகுந்த சான்றாக அமைகின்றது. “சமூகம் இல்லாத நிலையில் இஸ்லாம் இல்லை. தலைமைத்தும் இல்லாத இடத்தில் சமூகம் இல்லை”

எனவே ஒரு தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்ட சமூகம் இருக்குமிடத்தில் தான் இஸ்லாம் வாழும். ஏனென்றால் இஸ்லாத்தின் பெரும்பாலான பகுதிகளை கடைபிடிப்பதற்கு ஒரு சமூகம் இன்றியமையாதது.

ஒழுங்கு, தலைமைத்துவம், கட்டுப்பாடு என்பவற்றுடன் கலந்தாலோசனையும் சேர வேண்டும். அப்போது தான் கட்டுக்கோப்பான சமூகம் உருவாகும். வெறுமனே தலைமைத்தவத்திற்கு கட்டுப்படுதல் என்பதற்காக கலந்தாலோசனை இல்லாமல் தலைமைத்துவத்தினால் முடிவுகள் பெறலாகாது.

இஸ்லாம் சமூக அமைப்பை பல்வேறு வடிவங்களாக எடுத்தியம்புகின்றது. உதாரணமாக சமூக அமைப்பு- ஜமாத் என்றும் , ஒழுங்கை – நிழாம் என்றும் தலைமைத்துவத்தை- இமாரா என்றும் வலியுறுத்துவது போன்று கலந்தாலோசனையயும் வலியுருத்திக் காட்டப்படுகின்றது.

இதனால் தான் ஷூரா இல்லாத இடத்தில் கட்டுக்கோப்பானதொரு சமூகம் உருவாக முடியாது என்ற விடயத்தை கவனத்திற் கொண்டதனாலேயே ஷூராவின் அடிப்படையில் வெற்றிகரமான தலைமைத்துவத்தை உருவாக்கி ஒழுங்கமைந்த சமூகம் உருவெடுத்து வந்துள்ளது.

இப்படிப்பட்ட தலைமைத்துவத்தின் கீழான சமூக அமைப்பு இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற ஒரு நாட்டில் தேவைப்படுவதன் அவசியம் குறித்து பார்த்தால் இலங்கை போன்ற நாட்டில் கட்டுக்கோப்பானவொரு முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவது காலம் வேண்டி நிற்கும் ஓர் கடமை என்றால் பொய்யாகாது.

ஒரு தலைமைத்துவத்தின் கீழ் கட்டுக்கோப்புடன் வாழுகின்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதென்பது இன்றைய காலத்தின் தேவை. ஒரு சிறுபான்மை சமூகம் பெரும்பான்மை சமூகத்தின் முன்னால் பலவீனமானதே. அது ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கியப்பட்டு கட்டுக்கோப்பான ஒரு சமூகமாக மாறுமோ அப்போது தான் அந்த சமூகம் எல்லா வகையிலும் பலம் பொருந்திய சமூகமாக சவால்களுக்கும் அறைகூவல்களிற்கும் முகம் கொடுக்க வல்லமையுள்ளதாக மாறும். உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு சென்ற பின் உருவாக்கிய மாண்புமிகு சமுதாய அமைப்பைக் குறிப்பிடலாம்.

உலகிலுள்ளோர் அனைவரும் முஸ்லிம்களல்லர். வேற்று மதக்காரர்களாகவும் சிறு தொகுதியினரே முஸ்லிம்களாகவும் இருக்கின்றனர். இந்த வகையில் அல்லாஹ்வின் உதவியால் ஒரு கட்டுக்கோப்பான சமூகமொன்றை உருவாக்கும் முயற்சியில் பல இஸ்லாமிய அமைப்புக்கள் நீண்ட காலமாக முனைப்புடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவற்றோடு சிவில் சமூக அமைப்புக்களும் தேசிய மட்டத்தில் பங்களிப்புக்களை நல்கி வருகின்றன. ஓர் ஊரின் தலைவாசல் தான் பள்ளிவாசல். அந்த ஊரின் தலைமைத்துவம் பள்ளிவாசலை மையமாகக் கொண்டு அதன் தலைமைத்துவத்தை மைய்யப்படுத்தியே ஒவ்வோர் ஊரையும் ஒரு கட்டுக்கோப்பான ஊராக உருவாக்க முடியும். அதற்கு மிக சிறந்த வேளைத் திட்டமாக சமூக, பொருளாதார, கல்வி, ஆன்மீக தார்மீக பண்பாட்டில் மேம்பட்ட சமூகமாகத்திகழ முடியும்.

இவ்வாறு திகழ்ந்தால் தான் பிற்பட்ட காலங்களில் சிறுபாண்மையினரான எம்மை கட்டுக்கோப்பான தலைமைத்துவமொன்றின் கீழ் கொண்டு செல்ல முடியும். இதனைக் கருத்திற் கொண்டே “மீட்ஸ்” போன்ற பலதரப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் அறிமுகமாக்கப்பட்டுள்ளன.

இஸ்லாம் எதிர்பார்க்கும் கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்குவதில் ஆலிம்களிற்கு பாரிய பொறுப்பு உண்டு. மக்களை விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளில் ஆலிம்களினதும் புத்திஜீவிகளினதும் துறை சார்ந்தோரினதும் பங்களிப்பு இன்றியமையாதது. இப்படிப்பட்ட ஓர் தலைமைத்துவத்தின் கீழ் நாம் பார்வையாளர்களாகவன்றி பங்காளிகளாக மாற முயற்சித்தல் எம் கடமையாகும்.

ஒவ்வோர் சமூகத்தின் தலைவர்களும் அதன் ஜீவநாடிகள். அந்த ஜீவநாடிகளே கடிகாரத்தின் உருப்புகளாக சமூகத்தின் மத்தியில் மிக நுட்பமாக செயற்பட வேண்டும். இதனாலேயே அப்துல்கலாம் “எந்த இருதயத்தில் அறிவொழுக்கம் இருக்கிறதோ அந்த செயற்பாட்டில் அழகிருக்கும். எங்கு செயற்பாட்டில் அழகிருக்கிறதோ அங்கே தலைமைத்துவ ஒத்திசைவு இருக்கும். எங்கே தலைமைத்துவ ஒத்திசைவு இருக்கிறதோ அங்கே தேச ஒழுங்கு இருக்குமென” தலைமைத்துவத்தின் மகிமையை குறிப்பிடுகின்றார்.

இறுதியாக கூறுமிடத்து ஒரு தேசம் எழுச்சி அடைய வேண்டுமாயின் சமூகமும் தலைமைத்துவமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக தொழிற்பட வேண்டும். அவ்வாறு தொழிற்படுவதன் மூலமே இஸ்லாமிய வாழ்க்கைத் திட்டம் வாக்களித்துள்ள ஒழுங்கான கட்டுக் கோப்புடன் கூடிய தலைமைத்துவத்தை சமூக நலனில் காண முடியுமென அடிக்கோடிட்டு காட்ட முடியும். இதனைப் பின்பற்றும் சமூகமும் சிறந்த சமதாயமாக நாலா திசைகளிலும் கிளைகள் பரப்பி விருட்சமாக வளரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

S.M SAHEER

நாம் வாழும் இப்பூலோகமானது பல மக்கட் கூட்டங்களை சுமந்து கொண்டிருக்கின்றது. அவர்களுள் எண்ணிலடங்காத ஜாதி, இன, மத, மொழி பேசும் மக்கள் அடங்குகின்றனர். எப்படி வாழ்ந்தாலும் இன்றைய உலக அரங்கிலே தனி மனிதனாக எவரும்…

நாம் வாழும் இப்பூலோகமானது பல மக்கட் கூட்டங்களை சுமந்து கொண்டிருக்கின்றது. அவர்களுள் எண்ணிலடங்காத ஜாதி, இன, மத, மொழி பேசும் மக்கள் அடங்குகின்றனர். எப்படி வாழ்ந்தாலும் இன்றைய உலக அரங்கிலே தனி மனிதனாக எவரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *