ஊழல் மோசடி

  • 8
  •  ஊழல் மோசடியின் விபரீதம்.
  • ஊழல்மோசடி செய்தவர்களின் மறுமை நிலை.
  • அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்புகளும் தடுக்கப்பட்டவையே.
  • பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் பணிக்கு மட்டுமே உரியது.

இஸ்லாம் தனிமனிதனும் அவன் சார்ந்த சமூகமும் நலமாகவும் வளமாகவும் வாழவேண்டுமென வலியுறுத்தும் இறை மார்க்கம். அதற்காக பல விடயங்களை ஏவியுள்ளதைப் போல் தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் அநீதியிழைக்கும் பல விடயங்களை தடைசெய்துமுள்ளது. அவ்வாறு தடுக்கப்பட்ட விடயங்களுல் ஊழல் மோசடி முக்கிய இடத்தை வகிக்கின்றது.

ஊழல் மோசடியின் விபரீதம்

ஊழல் மோசடி இன்று உலகத்துக்கே மிகப்பெரும் சவாலாக அமைந்துள்ள விடயம். பல நாடுகளின் பொருளாதார சரிவுக்கும் வேறு சில நாடுகளின் முன்னேற்றம் தடைப்பட்டதற்கும் பல துறைகளில் வீழ்ச்சி ஏற்பட்டதற்குமுரிய முக்கிய காரணிகளுல் இதுவும் ஒன்று.

ஊழல் மோசடியானது மிகப்பெரும் நம்பிக்கை துரோகம். குறிப்பாக அமானிதமாக வழங்கப்பட்ட பொறுப்புகள், பதவிகள், அபிவிருத்திப் பணிகள், ஒதுக்கீடுகள், கொடுப்பனவுகள் போன்றவற்றினூடாக மக்களுக்கு சேர வேண்டியவற்றில் துஷ்பிரயோகம் செய்தல் அல்லது பொதுச் சொத்துக்களில் கையாடல் செய்தல் போன்ற மோசடிகளை மாபெரும் பாதகச் செயலாகவே இஸ்லாமிய கண்ணோட்டத்தில் நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அவ்வளவு கடுமையான தண்டனை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊழல் மோசடி செய்தவரின் மறுமை நிலை

ஹைபர் போரிலிருந்து திரும்புகையில் நபியவர்களுக்காக ஒருவர் கொடுத்த அடிமையொருவர் மரணித்தார். அப்போது மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு இறைவழியில் உயிர்த் தியாகம் செய்யும் பேறு கிடைத்துவிட்டது. வாழ்த்துகள்!” என்று கூறினோம். அப்போது நபியவர்கள் “இல்லை, என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கைபர் போரில் கிடைத்த போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அவர் எடுத்துக்கொண்ட போர்வை அவருக்கு நரக நெருப்பாக எரிந்துகொண்டிருக்கிறது” என்று கூறினார்கள்.

(இதைக் கேட்ட) மக்கள் திடுக்குற்றனர். அப்போது ஒரு மனிதர் “ஒரு செருப்பு வாரை” அல்லது “இரண்டு செருப்பு வார்களை”க் கொண்டு வந்து “(இதை) நான் கைபர் போரின்போது எடுத்துக் கொண்டேன்” என்று கூறினார். அப்போது நபியவர்கள் “(இது சாதாரண செருப்பு வார் அன்று; இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இதுவே) “நரகத்தின் செருப்பு வார்” அல்லது “நரகத்தின் இரு செருப்பு வார்கள்” ஆகும்” என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம்)

இந்த ஹதீஸின் மூலம் கிடைக்கப்பெறும் இரு விடயங்கள்:

  1. பெறுமதியற்ற சிறிய பொருளாயினும் ஊழல் மோசடி செய்வது தடுக்கப்பட்ட பெரும் பாவமாகும்.
  2. நரகிலிருந்து தன்னை காத்துக் கொள்ள வேண்டுமாயின் ஊழல் மோசடி செய்து சேகரித்த சொத்துக்களை திருப்பி ஒப்படைத்தல் வேண்டும்.

அனைவரும் ஒன்று திரட்டப்படும் மறுமை நாளில் சிலர் கௌரவிக்கப்படுவர். வேறு சிலர் கேவலத்தை சந்திப்பர். அப்படி கேவலத்தை சந்திப்பவர்களுல் ஊழல் மோசடி செய்தவர்களும் அடங்குவர்.

“மோசடி செய்தவனுக்கு மறுமை நாளில் (அவன் செய்த மோசடிக்கு அடையாளமாகக்) கொடி ஒன்று நடப்பட்டு “இன்ன மனிதரின் மகன் இன்னார் செய்த மோசடி (யைக் குறிக்கும் கொடி)”என்று கூறப்படும்” ( நூல்: புகாரி)

அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்புகளும் தடுக்கப்பட்டவையே.

நபியவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் ஸதகாக்களை வசூலிக்கும் அதிகாரியாக இப்னுல் லுத்பிய்யா என்றழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்துக் கொண்டு) வந்தபோது அவரிடம் நபியவர்கள் கணக்குக் கேட்டார்கள். அவர், ‘இது உங்களுக்குரியது; இது (எனக்கு) அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறினார். அப்போது நபியவர்கள், ‘நீர் சொல்வது உண்மையானால் உம் தந்தை வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்து உம்மிடம் அன்பளிப்புகள் வருகின்றனவா என்று பார்’ என்று கூறினார்கள். பிறகு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக்கிய ஒரு பணிக்காக உங்களில் ஒருவரை நான் அதிகாரியாக்க, அவர் சென்றுவிட்டு வந்து இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று சொல்கிறார். அவர் தம் தகப்பன் வீட்டில் அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திருந்தால் அவருக்கு அந்த அன்பளிப்புகள் வந்து சேருமா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் எவரும் உரிமையின்றி (முறைகேடாக) எந்த ஒன்றை அடைந்து கொண்டாலும் மறுமை நாளில் அதை (தம் தோளில்) சுமந்த வண்ணமே அல்லாஹ்வை அவர் சந்திப்பார். (முஸ்லிம்)

இந்த ஹதீஸை நோக்குமிடத்து அதிகாரிகள், பணியாளர்களுக்கு தமது தேவைகளை உடனடியாகவோ அல்லது எதிர்காலத்திலோ நிறைவேற்றிக் கொள்ள மக்களால் வழங்கப்படும் அன்பளிப்புகள் அனைத்தும் தடுக்கப்பட்டவையாகும்.

பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் பணிக்கு மட்டுமே உரியது.

நிறுவனங்கள், திணைக்களங்களில் பணிபுரியும் அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கான நேரம் வரையறை செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக ஒருவர் ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரங்கள் பணிபுரிய வேண்டுமென்றால் அந்த எட்டு மணி நேரமும் சம்பளம் கொடுத்து அவரிடமிருந்து வாங்கப்பட்ட காலப்பகுதியாகும். எனவே அவ்வளவு நேரமும் அவர் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். குறித்த அந்த நேரத்தை தனக்குரிய கடமையை செய்யாது வீணாகக் கழிப்பதோ அல்லது அந்த நேரத்தில் தன் சொந்தத் தேவைகளுக்காக வெளியில் செல்வதோ தடுக்கப்பட்டதாகும்.

எமது செயல்கள் அனைத்தும் ஒன்று விடாமல் குறிக்கப்படுகின்றன. அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாப்பானாக.

பாஹிர் சுபைர்

 ஊழல் மோசடியின் விபரீதம். ஊழல்மோசடி செய்தவர்களின் மறுமை நிலை. அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்புகளும் தடுக்கப்பட்டவையே. பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் பணிக்கு மட்டுமே உரியது. இஸ்லாம் தனிமனிதனும் அவன் சார்ந்த சமூகமும் நலமாகவும் வளமாகவும்…

 ஊழல் மோசடியின் விபரீதம். ஊழல்மோசடி செய்தவர்களின் மறுமை நிலை. அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்புகளும் தடுக்கப்பட்டவையே. பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் பணிக்கு மட்டுமே உரியது. இஸ்லாம் தனிமனிதனும் அவன் சார்ந்த சமூகமும் நலமாகவும் வளமாகவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *