அதிகரித்து வரும் இளவயது மன(ண) முறிவுகள்

  • 7

இன்றைய திகதியில் திருமணங்கள் நடைபெறுகிற விகிதாசாரத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் விவாகரத்துக்களும், பிரிந்து வாழும் சூழ்நிலைகளும் அதிகரித்து வருவதை நேரடியாகவே காண்கிறோம். உண்மையில் இத்தகைய ம(ன)ண முறிவுகள் காதல் திருமணங்களிலேயே அதிகரித்துவருவதும் கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாகும். அண்மைக்காலமாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு பிரச்சினைகளை அணுகியபோது பல விடயங்கள் நெருடலாக இருந்தன. எல்லாமே சமூக விழிப்புணர்வுக்காக எழுதவும், பேசவும் அவசியமானவை. பலரும் அவற்றைச் செய்தும் வருகிறார்கள். பல சம்பவங்களை ஆராய்ந்தபோது பத்தில் ஆறு சம்பவங்களின் சாரம் இதுதான்.

ஒரு பெண் பதின்ம வயதில் கண்மூடித்தனமாக ஒருவனைக் காதலிக்கிறாள். பெற்றோரின் விருப்பமின்றி அவனையே திருமணம் செய்கிறாள். ஓரிரு ஆண்டுகளுக்குள் குழந்தை பிறக்கிறது. அவளுக்கு இருபது வயதாகிற போது உலகம், வாழ்க்கை, யதார்த்தம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்படுகிறது. இருபத்து இரண்டாவது வயதில் தான் காதலித்துக் கரம் பற்றிய கணவன் தனக்குப் பொருத்தமில்லை என்பதை மெல்ல மெல்ல உணர்கிறாள். அவனும் பக்குவமில்லாமல் மனைவியையும், குழந்தை/குழந்தைகளையும் கடிகிறான். சண்டை இடுகிறான். சமயத்தில் குடி, போதைப்பழக்கங்களுக்கும் ஆட்படுகிறான். சில ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடி மிகக்கடுமையாகிறது. திருமண வாழ்வு நான்கு – ஐந்து வருடங்களில் கசந்து போக விவாகரத்துக்குப் போகிறாள். அப்பாவியாகச் சிரித்தபடி அந்தக் குழந்தை(கள்) தவழ்ந்து திரிகின்றது(ன).

இது ஒரு வகையான பிரச்சினைதான். இன்னும் பல பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை. மேற்சொன்ன சாரத்தில்,

“காதலிக்கும்போது வாழ்க்கை பற்றி அவள் கண்ட கற்பனைகள், திருமணத்தின் பின் கிடைக்காமல் போகிற ஏமாற்றமும், குழந்தை, பொருளாதாரம், குடும்பம் என்று வயதை மீறிய அவளது சுமைகளும், அனுசரித்துப் போகாத அவள் கணவனும், மிக இளம் வயதிலேயே வாழ்க்கை மீதான ஈரத்தைக் காயச்செய்கிறது.

இதில் யாரைக் குற்றம் சொல்வது?

பதின்ம வயதில் கண்டித்து வளர்க்காத பெற்றோர்களையா?

பருவக்கோளாறினால் வழிமாறிச் சென்ற குறித்த பெண்ணையா ?

அவளது வாழ்வை சீரழித்த கணவனையா?

குடும்பத்தையா? சமூகத்தையா? அல்லது வேறு யாரையேனுமா?

விவாதங்களுக்கு அப்பால் இதுபற்றி அதிகம் சிந்திக்கக் காரணம் அந்தக் குழந்தை/குழந்தைகள் தான். அவர்களது எதிர்காலம் சிதைந்து, சின்னாபின்னமாவதில் இந்த மன(ண) முறிவு பெரும்பங்கையல்லவா வகிக்கிறது?

இவற்றுக்கான தீர்வை எவ்வாறு கண்டடைவது ?

இது உனக்குப் பொருத்தமான வாழ்க்கை இல்லை என்று காதலிக்கும்போது பெற்றோர்கள் சொல்வதை குறித்த பெண்ணோ, ஆணோ புரிந்துகொள்ளும் தறுவாயில் வாழ்க்கை அவர்களை விட்டும் மிக மிகத் தூரத்தில் பயணித்துவிடுகிறது என்பது வருத்தமான ஒரு உண்மையே.

எப்.எச்.ஏ. ஷிப்லி

இன்றைய திகதியில் திருமணங்கள் நடைபெறுகிற விகிதாசாரத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் விவாகரத்துக்களும், பிரிந்து வாழும் சூழ்நிலைகளும் அதிகரித்து வருவதை நேரடியாகவே காண்கிறோம். உண்மையில் இத்தகைய ம(ன)ண முறிவுகள் காதல் திருமணங்களிலேயே அதிகரித்துவருவதும் கவனிக்க வேண்டிய முக்கிய…

இன்றைய திகதியில் திருமணங்கள் நடைபெறுகிற விகிதாசாரத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் விவாகரத்துக்களும், பிரிந்து வாழும் சூழ்நிலைகளும் அதிகரித்து வருவதை நேரடியாகவே காண்கிறோம். உண்மையில் இத்தகைய ம(ன)ண முறிவுகள் காதல் திருமணங்களிலேயே அதிகரித்துவருவதும் கவனிக்க வேண்டிய முக்கிய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *