இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை

  • 123

உயிர் மனிதனுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் அமானிதம். அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இஸ்லாமிய சட்டத்தினால் அடையாளம் செய்யப்பட்டுள்ள மிக முக்கிய ஐந்து விடயங்களுல் உயிரும் ஒன்று.

ஒவ்வொரு மனிதனும் தனது உயிரையும் பிறர் உயிரையும் பாதுகாக்க கடமைப்பட்டிருக்கின்றான். உயிர்களை எக்காரணத்துக்காகவும் சேதப்படுத்தவோ மாய்த்துக்கொள்ளவோ மனிதனுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. அவ்வாறு தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் தற்கொலையானது மிகப்பெரும் பாவமாகவே மார்க்கத்தில் கருதப்படுகின்றது.

“நீங்கள் உங்களை அழிவின் பக்கம் இட்டுச் செல்ல வேண்டாம்” (அல்குர்ஆன்- 2:195)

“உங்களை நீங்களே கொன்று விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கின்றான்” (அல்குர்ஆன்- 4:29)

இதனால்தான் தற்கொலைக்கு இறைவன் மிகக் கடுமையான தண்டனையை வழங்குகின்றான். எதன் மூலம் ஒருவர் தற்கொலை செய்கின்றாரோ அந்த விடயத்தின் மூலமே அவரது தண்டனையும் மறுமையில் அமையும்.

“யார் ஓர் (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் தமது கையில் அந்த கூராயுதத்தை வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக்கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் (விஷத்தை கையில் வைத்துக்கொண்டு) நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக்கொண்டேயிருப்பார். யார் மலையின் மீதிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டேயிருப்பார்” (முஸ்லிம்)

உலக வாழ்வில் கஷ்டங்களும் சோதனைகளும் வருவது இயல்பு. பொதுவாக மனிதனை துன்பத்தினுள் ஆழ்த்தி அவனது ஈமானை ஆட்டம் காணச் செய்யும் விடயங்கள் மூன்று:

  1. தோல்விகள்
  2. இழப்புகள்
  3. ஏமாற்றங்கள்

இவற்றின் போது இறைவனின் ஏற்பாட்டின் படியே அனைத்தும் நடக்கின்றன என்ற அல்லாஹ்வின் விதியின் மீதான நம்பிக்கை வரவேண்டும். பொறுமை காக்க வேண்டும். அதுதான் ஒரு முஃமினின் உயர்ந்த பண்பு.

“பூமியிலோ, உங்களிலோ எந்தவொரு துன்பம் நேர்ந்தாலும் அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்பூள்) பதிவேட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும். (அல் குர்ஆன் 57:22)

எனவே இந்த சோதனைகளின் போது ஈமானைப் பறிகொடுக்காமல் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் பக்கம் மீண்டு அவனை நினைவு கூர்வதன் மூலம் மட்டும்தான் இவற்றிலிருந்து விடுபட முடியும்; உள்ளங்களுக்கான அமைதியும் கிடைக்கும்.

“அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் உள்ளங்கள் அமைதியுறுகின்றன” (அல்குர்ஆன்- 13:28)

மாறாக வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், சோதனைகளில் இருந்து மீள்வதற்காக புகைத்தல், மது, போதை, இசை போன்ற விடயங்களின் பக்கம் செல்வதானது வாழ்வில் நிம்மதியை இழக்கச் செய்து கஷ்டங்களையே அதிகரிக்கச் செய்யும். உள்ளத்தில் நிம்மதி ஏற்படுவதற்குப் பகரமாக மன அழுத்தம் ஏற்பட்டு பிரச்சினையில் இருந்து விடுபட ஒரே வழி தற்கொலைதான் என்ற முடிவுக்கே மனிதனை கொண்டு சென்று விடும். அல்லாஹ்தான் அனைத்துக்கும் போதுமானவன் என்ற நம்பிக்கையே மிகச்சிறந்த உள மருந்தாகும்.

இதனால்தான் துன்பங்கள் ஏற்படும் நேரங்களில் மரணத்தை ஆசை வைக்க வேண்டாமென மார்க்கம் கூறுகின்றது.

“உங்களில் யாரும் தமக்கு நேர்ந்துவிட்ட ஒரு துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித் தான் ஆகவேண்டும் என்றிருந்தால், “இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!” என்று கேட்கட்டும்”. ( முஸ்லிம்)

வருகின்ற கஷ்டங்களுக்காகவே மரணத்தை விரும்ப வேண்டாம் என்று நபிகளார் தடைசெய்திருந்தால் அதே கஷ்டங்களுக்காக தற்கொலை செய்வது எவ்வளவு பெரிய பாவம்.

கஷ்டங்கள், சோதனைகளுக்கான முடிவு தற்கொலையும் மரணமும்தான் என்பதாக பலர் நினைக்கிறனர். உண்மையில் மரணம் என்பது முடிவல்ல; மாறாக நிரந்தர மறுமை வாழ்வுக்கான ஆரம்பம் என்பதை மறந்து விடுகின்றனர். தற்கொலை கடும் வெயிலில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள நெருப்புக்குள் நுழைவது போன்றுதான்.

அல்லாஹ்வைப் பயந்து கொள்வோம். பிள்ளைகளுக்கு சிறு வயது முதல் மார்க்கத்தையும் ஆன்மீகத்தையும் புகட்டுவோம்.

வீட்டுச் சூழலை ஆரோக்கியமான இஸ்லாமிய சூழலாக மாற்றுவோம். அதுதான் தீர்வு. அதுதான் வெற்றி. இவை எமது கடமை. பொறுப்பு

பாஹிர் சுபைர்

உயிர் மனிதனுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் அமானிதம். அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இஸ்லாமிய சட்டத்தினால் அடையாளம் செய்யப்பட்டுள்ள மிக முக்கிய ஐந்து விடயங்களுல் உயிரும் ஒன்று. ஒவ்வொரு மனிதனும் தனது உயிரையும் பிறர் உயிரையும்…

உயிர் மனிதனுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் அமானிதம். அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இஸ்லாமிய சட்டத்தினால் அடையாளம் செய்யப்பட்டுள்ள மிக முக்கிய ஐந்து விடயங்களுல் உயிரும் ஒன்று. ஒவ்வொரு மனிதனும் தனது உயிரையும் பிறர் உயிரையும்…

One thought on “இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *