அல் ஷேக் அஹ்மத் ஷபீஃ பின் பரகத் அலி அல் பன்காலி

  • 7

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரும் ஹதீஸ் கலை அறிஞர். கடந்த 18-9-2020 வெள்ளிக்கிழமை தனது 104 வயதில் தலைநகர் டாக்காவில் இறையடிசேர்ந்தார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

1916 ஆம் ஆண்டு பங்களாதேஷ் கிராமமொன்றில் பிறந்தார். தன் ஆரம்பக் கல்வியை தனது கிராமத்தின் அருகிலுள்ள பாடசாலைகளில் பயின்றார். சிறு வயது முதல் மார்க்கக் கல்வியில் ஈடுபாடு கொண்டவராக இருந்ததால் வேகமாகவே கற்றுக்கொண்டார். பின் பங்களாதேஷின் சிட்டகோங் நகரில் உள்ள பிரபலமான மிகப்பெரும் தனியார் பல்கலைக் கழகமான தாருல் உலூம் முயீனுல் இஸ்லாம் எனும் பல்கலைக் கழகத்தில் இணைந்து தன் கல்வியைத் தொடர்ந்தார். பின் இந்தியாவின் தேவ்பந்த் கலாசாலையில் நான்கு வருடங்கள் கற்று ஹதீஸ் துறையில் மிகவும் தேர்ச்சி பெற்றார்.

அதன் பிறகு நாட்டுக்குத் திரும்பியவர் மேற்குறிப்பிட்ட சிட்டகோங் பல்கலைக் கழகத்தில் கற்பித்தல் சேவையை ஆரம்பித்தார். 1986 ம் ஆண்டு அப் பல்கலைக் கழகத்தின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு மரணிக்கும் வரை இந்த மார்க்கத்துக்காகவும் ஹதீஸ் துறை வளர்ச்சிக்காகவும் அயராது பாடுபட்டார். தனது அநேகமான நேரங்களை கற்பித்தலிலும் புத்தகங்கள் தொகுப்பதிலும் மார்க்கத்தை போதிப்பதிலுமே கழித்தார்.

2013 ஆம் ஆண்டு தலைநகர் டாக்காவில் சிலர் நபிகளாரையும் சஹாபா பெருமக்களையும் இஸ்லாத்தின் கடமைகளையும் தூற்றி விமர்சித்தனர். அந்த நேரத்தில் மக்களுக்கு மிகச் சிறந்த விளக்கத்தையும் வழிகாட்டல்களையும் வழங்கி அப்படியான கருத்துக்கள் வேரூன்றுவதை தடைசெய்ததில் மிகப்பெரும் பங்கு இவருக்கு உண்டு.

மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டார். அவரது ஜனாஸாவில் கலந்து கொண்ட பிரமாண்ட மக்கள் வெள்ளமே அதற்குப் போதிய சான்றாகும்.

எவ்வளவு உயர்ந்தாலும் பணிவும் பண்பாடும் படித்தவர்களின் பண்புகளாக இருக்க வேண்டும். இந்த அறிஞரும் கூட மரணிக்கும் வரை இவைகளே அவரது அணிகலன்களாக இருந்ததாக அவரது மாணவர்களும் நெருங்கியவர்களும் சாட்சி கூறுகின்றனர்.

சுமார் 40 ஆயிரம் மாணவர்களின் ஆசிரியராக திகழ்கின்றார். ஆனால் எவ்வித பெருமையுமில்லை புகழுமில்லை ஆரவாரமுமில்லை.

சன்மார்க்கத்தை அதிலும் குறிப்பாக ஹதீஸ் கலையை இவ்வளவு எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு கற்பித்தமை உண்மையில் மிகப்பெரும் சேவைதான். இதுவல்லவா நமக்கு மத்தியில் பேசப்பட வேண்டும். நமது இளம் தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.

இவ்வளவு பெரும் சாதனைக்காக எத்தனை தடைகளைத் தாண்டியிருப்பார். எத்தனை தியாகங்கள் செய்திருப்பார். இதுதான் உண்மையான சாதனை. அல்லாஹ் அன்னாரின் சேவைகளைப் பொருந்திக் கொண்டு உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக.

இவ்வுலக வாழ்வில் எவ்வளவு உயர்ந்தாலும் மறுமையில் உயர்வதற்காக சில புண்ணியங்களையாவது சேர்க்க வேண்டும்.மறுமைக்காக வாழ்வோரும் இவ்வுலகுக்காக ஆசைகளில் மூழ்கி வாழ்வோரும் சமமாக மாட்டார்கள்.

தேவையற்ற விடயங்களை பேசுவதையும் பகிர்வதையும் தவிர்த்து மார்க்கம் சமபந்தப்பட்ட அல்லது பிரயோசனமானவற்றை மட்டும் பிறருடன் பகிருவோம். மறுமை வாழ்வு உண்டு. அதில் வெற்றி பெறவேண்டும்.

ஆகக் குறைந்தது உங்கள் பிள்ளைகளுக்காவது மார்க்கத்தையும் பண்பாட்டையும் கொடுத்து வளருங்கள். நீங்கள் மரணிக்கும் போது உங்களுக்காக ஜனாஸா தொழுகையையாவது முன்னின்று நடாத்துவார்கள்.

பாஹிர் சுபைர்

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரும் ஹதீஸ் கலை அறிஞர். கடந்த 18-9-2020 வெள்ளிக்கிழமை தனது 104 வயதில் தலைநகர் டாக்காவில் இறையடிசேர்ந்தார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். 1916 ஆம் ஆண்டு பங்களாதேஷ்…

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரும் ஹதீஸ் கலை அறிஞர். கடந்த 18-9-2020 வெள்ளிக்கிழமை தனது 104 வயதில் தலைநகர் டாக்காவில் இறையடிசேர்ந்தார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். 1916 ஆம் ஆண்டு பங்களாதேஷ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *