ஒடுக்கத்துப் புதன் என்பது இஸ்லாத்தில் உண்டா?

  • 10

“ஒடுக்கத்துப் புதன்” என்றால், “இறுதிப் புதன்” என்பது பொருளாகும். “ஸபர்” (صفر) மாதத்தின் இறுதியில் வரும் புதன் கிழமை, ஒடுக்கத்துப் புதன் என சடங்குவாதிகளினால் அழைக்கப்படுகிறது . ஒடுக்கத்துப் புதனில் துன்பங்கள், கஷ்டங்கள் இறங்குகின்றன என்றும், அல்குர்ஆனில் “ஸலாம்” (سلام) என்ற சொல்லைக் கொண்டு ஆரம்பமாகும் 7 ஆயத்துக்களை வாழை இலையில், அ‌ல்லது பாத்திரத்தில் எழுதி, அதை தண்ணீரால் கரைத்துக் குடித்தால் ஒடுக்கத்துப் புதனின் தோஷங்கள் பீடிக்காது என்றும் வாதிடுகின்றனர்.

இம்மூட நம்பிக்கை, அல்குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்கள் முன்மாதிரி, ஆகியவைகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாகும். இது பற்றிய தெளிவை பின்வருமாறு பார்க்கலாம் :

அரேபிய மாதங்கள் பின்வருமாறு:

  1. அல் முஹர்ரம் (المحرم)
  2. ஸபர் (صفر)
  3. றபீஉனில் அவ்வல் (ربيع الأول)
  4. ரபீஉனில் ஆகிர் (ربيع الآخر)
  5. ஜுமாதல் ஊலா (جمادى الأولى)
  6. ஜுமாதல் ஆகிறா (جمادى الآخرة)
  7. ரஜப் (رجب)
  8. ஷஃபான் (شعبان)
  9. ரமழான் (رمضان)
  10. ஷவ்வால் (شوال)
  11. துல் கஃதா (ذو القعدة)
  12. துல் ஹிஜ்ஜா (ذو الحجة

இவைகளில் நான்கு மாதங்கள் புனிதமானவைகளாகும். அவைகள் பின்வருமாறு :-

  1. துல் கஃதா (11வது மாதம்)
  2. துல் ஹிஜ்ஜா (12வது மாதம்)
  3. அல் முஹர்ரம் (1வது மாதம்)
  4. றஜப் (7வது மாதம்)

இவைகளில் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாகவும், ஒரு மாதம் தனியாகவும் உள்ளது.

இது பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்:

“அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி, வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல், மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அத்தவ்பா : 36)

நபி(ஸல்) அவர்கள், புனித மாதங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு விளக்கியுள்ளார்கள். (புஹாரி: 4662, முஸ்லிம்: 4354)

இப்புனித மாதங்களில் யுத்தம் புரிவது தடுக்கப்பட்டுள்ளது. இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:-

புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். அதில் போரிடுவது பெருங்குற்றமே என்று கூறுவீராக (2:217)

புனித மாதங்களை மதிக்கும் பழக்கம்,மக்கா காஃபிர்களிடமும் காணப்பட்டு வந்தது.

ஸஃபர் மாதம், பீடை மாதம் என்பது ஜாஹிலிய்யா மக்களின் நம்பிக்கை :

இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு வாழ்ந்த ஜாஹிலிய்யா மக்கள், ஸபர் (2ம்) மாதம், அபசகுண மாதம் என நம்பினார்கள். இம்மூட நம்பிக்கையை, இஸ்லாம் அழித்து ஒழித்தது. இதை பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது :

” ஊரோடி நோயோ, ஸபர் மாத அபசகுனமோ, ஆவி நம்பிக்கையை (இஸ்லாத்தில்)அறவே கிடையவே கிடையாது என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைறா(றழி) அவர்கள் அறிவிக்கின்றனர். (புஹாரி: 5770, முஸ்லிம்: 5749)

ஜாஹிலிய்யா (அறியாமைக்) காலங்களில், மக்கள் ‘ஸஃபர்’ மாதம் ஒரு கெட்ட மாதம் என நம்புவதின் பின்னனி என்னவெனில் , 11,12, 1 மாதங்கள் புனித மாதங்களாக இருப்பதால், யுத்தம் செய்வதை தவிர்த்துக் கொள்வார்கள். 2ம் மாதமாகிய ‘ ஸபர்’ மாதம் வந்துவிட்டால், யுத்தங்களை ஆரம்பிப்பார்கள். இதனால் இம்மாதத்தில் துன்பங்கள், துயரங்கள் ஏற்பட்டன. அவர்களாகவே தேடிக்கொண்ட அவலங்களை, இன்னல்களை அறியாமை காரணமாக, ‘ஸபர் ‘ மாதத்தில் சுமத்திவிட்டார்கள்.

‘ஸபர்’ மாதம் கெட்ட சகுணமுள்ள மாதம் என்ற மூட நம்பிக்கையை, தற்போது கப்று வணங்கிகளும், சடங்குவாதிகளும் பரப்பி பாமரமக்களை ஏமாற்றிவருகின்றனர் .

இஸ்லாத்தில் துரதிஷ்ட நாட்கள் கிடையாது:

இஸ்லாத்தில் அதிஷ்ட காலம் என்ற நம்பிக்கை கிடையாது. திருமணம், தொழில் ஆரம்பம் போன்றவைகளுக்கு முகூர்த்தம், சுப நேரம் பார்ப்பது, இந்து மத கலாச்சாரமாகும். இராசி மண்டலத்தின் 12 பிரிவுகளான :

  1. மேஷம்
  2. விருஷபம்
  3. மிதுனம்
  4. கடகம்
  5. சிம்மம்
  6. கன்னி
  7. துலாம்
  8. விருச்சிகம்
  9. தனுஸ்
  10. மகரம்
  11. கும்பம்
  12. மீனம்

ஆகியவைகள், மனிதனில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என நம்புவது சில கிரேக்க தத்துவ ஞானிகளின் நம்பிக்கையாகும். இந்நம்பிக்கையின் மூலம் ஜோதிட நம்பிக்கை, கிரக வணக்கம் ஆகியவை தோன்றின.

கிரகங்கள், மனிதனின் செயற்பாடுகளில் தாக்கம் விளைவிக்க முடியாது. ஆதியில் எழுதப்பட்ட விதி ஏட்டில் உள்ளபடி, மனிதன் தனது சுய இஷ்டப்படி செயலாற்றிக் கொண்டிருக்கிறான்.

ஒரு நாளில் முஸ்லிம் இறைவனுக்கு திருப்தியளிக்கும் செயலைப் செய்தால், அதுவே அவனுக்கு நல்ல நாளாகும். அதில் பாவமான காரியத்தில் ஈடுபட்டால் அதுவே அவனுக்கு கெட்ட நாளாகும் .

இந்த அடிப்படையில் தான் அல்லாஹ் குர்ஆனில் ஆணவம் கொண்ட ‘ஆத்’ கூட்டத்தினரை அழித்த நாள் பற்றிக் கூறும் போது, அது அவர்களுக்கு கெட்ட நாட்கள் எனக் கூறுகிறான்:

‘ஆத்’ சமுதாயத்தினரும் (ஹூத் நபியை) பொய்யர் எனக் கூறினர். எனவே, வேதனையும், எனது எச்சரிக்கையும் எவ்வாறு இருந்தன (தெரியுமா?) தொடர்ச்சியான (அவர்களுக்கு) கடுமையான நாட்(களில்), அவர்களுக்கு, கடும் சப்தத்துடன் கூடிய குளிர்க்காற்றை நாம் அனுப்பினோம் (அல்கமர் :18,19)

கடுமையான நாட்களில் அவர்கள் (ஆத்கூட்டம்) மீது கடும் சப்தத்துடன் குளிர் காற்றை அனுப்பினோம். (புஸ்ஸிலத் : 16)

‘ஆத்’ சமுதாயத்தினரோ, மிகக் கொடிய காற்றால் அழிக்கப்பட்டனர். அக்காற்றை கடுமையான ஏழு இரவுகளிலும், எட்டு பகல்களிலும் அவர்களுக்கு எதிராக சாட்டிவிட்டான். (அல்ஹாக்கஹ் : 6 -7)

இந்த ஆயத்களில் கூறப்பட்டுள்ள ‘நஹ்ஸ்’ (نحس), ‘ஹுஸுமன்’ (حسوما) என்ற சொற்கள் அந்நாட்கள் வேதனை காரணமாக ‘ஆத்’ சமுதாயத்தினருக்கு கெட்ட நாட்களாக மாறிவிட்டது என்ற பொருளை தாங்கி நிற்கின்றதே தவிர கப்று வணங்கிகள் கூறுவது போன்று அந்நாட்களை தான் துரதிஷ்டமான நாட்களாக இருக்கவில்லை.

எனவே ஸபர் மாதத்தில் ஏனைய மாதங்கள் போன்று நல்ல நிகழ்வுகளும் இடம் பெறலாம், தீய நிகழ்வுகளும் இடம் பெறலாம்.
ஸபர் மாதத்தில் துன்பங்கள், தோஷங்கள் இறங்குகின்ற என்ற மூட நம்பிக்கை கி.பி 1738ல் மரணித்த ‘தைரபி’ (الديربي) எழுதிய ‘முஜர்ரபாத்’ (المجربات) என்ற சூனிய, ஜோதிட நூலில் பதியப்பட்டுள்ளது. அரபிப் பாஷையில் எழுதப்பட்ட நூற்களெல்லாம், இஸ்லாத்தை பிரதிபளிக்கின்றன என நம்பி ஏமாந்த அத்வைத மௌலவி, இச்சூனிய நூலை ஆதாரமாகக் காட்டுகின்றார் .

மேலும், ‘ஸபர்’ மாதம் முடிந்து விட்டதென்று என்னிடம் சுபச் செய்தி சொல்பவனுக்கு சுவனத்தைக் கொண்டு நான் சுப செய்தி சொல்வேன்”

என்ற ஹதீஸ் எந்த ஹதீஸ் கலை நூற்களிலும் இல்லாத அடிப்படையற்ற பொய்யான ஹதீதாகும்.

ஆனால், அதே அத்வைத மௌலவி, இந்த ஹதீஸ் ஹிஜ்ரி 808 ல் மரணித்த ‘அத்தமீரி'(الدميري) எழுதிய “ஹயாதுல் ஹயாவன’ (மிருக உலகம்) என்ற நூலில் பதியப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருப்பது நகைச் சுவைக்குரிய விஷயமாகும்.

சில தரீகாவாதிகள், நபி ஸல் அவர்களின் மரண நோய், ஸபர் மாதம் இறுதியில் ஆரம்பமாகியது. அதனால், அந்தமாதம் அபசகுணம் என்று வாதிடுகின்றார். அப்படியானால், நபியவர்கள் மரணித்தது, ரபீவுனில் அவ்வல் மாதமாகும். மரணம் என்பது நோயை விட பெரிய இழப்பாகும். எனவே, அவர்கள், ரபீவுனில் அவ்வல் மாதத்தை அபசகுண மாதமாகக் கருதவேண்டும். ஆனால் அவர்கள், அம்மாதத்தைக் கொண்டாடுகின்றார்களே!

புதன் கிழமை சம்பந்தமான ஏனைய பொய்யான ஹதீஸ்கள் பின்வருமாறு :

“ஒவ்வொரு மாதத்தின் கடைசிப் புதன் கிழமை துரதிஷ்ட நாளாகும் என நபியவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இதன் அறிவிப்பாளர் தொடரில், மஸ்லமஹ் பின் ஸல்த் என்ற மிகவு‌ம் பலவீனமான ராவி காணப்படுகிறார்.

‘ஒவ்வொரு புதன் கிழமையும் துரதிர்ஷ்டத்துக்குறிய நாள் ‘ என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதில் இப்ராஹீம் பின் அபீ ஹய்யா என்ற மிகவு‌ம் பலவீனமான அறிவிப்பாளர் காணப்படுகிறார்.

‘யாராவது புதன் கிழமை மரத்தை நாட்டி, ‘ஸுப்ஹானல்லாஹ் அல் பாயித் அல்வாரித்’ என்று கூறினால், அவை அவனுக்கு கனிதரும் ‘என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இதில், அப்பாஸ் பின் அல் வலீத் என்ற பொய்யர் உள்ளார்.

எனது உம்மத்தினர் வெறுக்கமாட்டார்கள் என்றிருந்தால் புதன் கிழமை பயணம் செய்ய வேண்டாம் என்று அவர்களை நான் பணித்திருப்பேன் என நபி(ஸல்)அவர்கள் கூறியதாக ஆயிஷா(றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘தைலமி’ அடிப்படை இல்லாத ஹதீத்களை தனது ‘அல்பிர்தவ்ஸ்’ என்ற நூலில் பதிவு செய்பவர் என்பது பிரபல்யமான விஷயமாகும்.

“புதன் கிழமை எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸயீதினில் குத்ரி (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (பவாயித் தம்மாம் : 647) இதில் ஸல்லாம் பின் ஸுலைமான் என்ற மிகவும் பலவீனமான அறிவிப்பாளர் காணப்படுகிறார்.

வெண்குஷ்டம், கருங்குஷ்டம் இரண்டும் புதன் கிழமையில் தான் வெளியாகுமென நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (இப்னு மாஜாஹ் : 3488)

இதில் பலவீனமானவரும், இனங் காணப்படாதவரும் காணப்படுகின்றார்.

புதன் கிழமை ஆரம்பிக்கப்படுகின்ற எந்தவொரு காரியமும் நிச்சயமாக நிறைவேறும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது.

இந்த ஹதீஸ் எந்தவொரு ஹதீஸ் கிரந்தங்களிலும் இல்லாத பொய்யான ஹதீஸாகும்.

கலாநிதி அஹ்மத் அஷ்ரப்

“ஒடுக்கத்துப் புதன்” என்றால், “இறுதிப் புதன்” என்பது பொருளாகும். “ஸபர்” (صفر) மாதத்தின் இறுதியில் வரும் புதன் கிழமை, ஒடுக்கத்துப் புதன் என சடங்குவாதிகளினால் அழைக்கப்படுகிறது . ஒடுக்கத்துப் புதனில் துன்பங்கள், கஷ்டங்கள் இறங்குகின்றன…

“ஒடுக்கத்துப் புதன்” என்றால், “இறுதிப் புதன்” என்பது பொருளாகும். “ஸபர்” (صفر) மாதத்தின் இறுதியில் வரும் புதன் கிழமை, ஒடுக்கத்துப் புதன் என சடங்குவாதிகளினால் அழைக்கப்படுகிறது . ஒடுக்கத்துப் புதனில் துன்பங்கள், கஷ்டங்கள் இறங்குகின்றன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *