மனிதனுடனான மனிதநேயம்

மனிதனுடனான மனிதநேயம்

மனிதர்களில் தன்னை தட்டிக் கொடுக்கும் கரங்களை எதிர்பார்ப்போர். நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்காக ஏங்குவோர். ஆறுதலான பேச்சுக்காகத் தவிப்போர். என ஏராளமானோர் உள்ளனர்.

இப்படியானவர்களுக்கு பணம் தேவையில்லை. நம்பிக்கையூட்டும் நல்ல வார்த்தைகளே தேவை. கவலைப்பட்டவனின் கண்ணீரை நல்ல வார்த்தை கொண்டாவது துடைப்போம். மனம் உடைந்தவனுக்கு ஆறுதலாக இருப்போம். நம்பிக்கை இழந்தவனை தட்டிக் கொடுத்து நம்பிக்கையூட்டுவோம். வார்த்தைகளால் காயங்களுக்கு மருந்தாவோம்.

நபிகளாரின் கூற்றைக் கவனியுங்கள்:

“நம்பிக்கையூட்டும் நல்ல வார்த்தை எனக்கு விருப்பமானதாகும்” (ஹதீஸ்.)

“நல்ல வார்த்தை தர்மமாகும்” (ஹதீஸ்.)

பிறரின் குறைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டும் எம்மிடம் அவர்களின் முயற்சியையும் வெற்றியையும் பாராட்டும் பெருந்தன்மை வருவதில்லை. பிறர் குறைகளுக்காக கண்களைத் திறக்கும் நாம் அவர்களின் நன்மைகளின் முன் குருடர்களாகின்றோம். பார்த்த நல்ல முயற்சிகள், முன்னெடுப்புகள், படித்த நல்ல விடயங்கள் போன்றவற்றைப் போற்றலாமல்லவா. அது தானே மனிதம்! நபிகளார் நல்ல விடயங்களைப் பாராட்டி தட்டிக் கொடுத்துள்ளார்கள். அவர்கள்தானே எமது முன்மாதிரி.

நாமும் நல்ல விடயங்களை பாராட்டுவோம். நல்ல முயற்சிகளை வரவேற்போம். பிறரின் வெற்றியில், சந்தோஷத்தில் பங்கெடுப்போம். இவைகளை எம் வழமையாக்கிக் கொள்வோம்.

மல்லிகைகளை கொடுத்துப் பழகியவன் கரங்களில். அதன் வாசனை கொஞ்சமேனும் எஞ்சியிருக்கத்தானே செய்யும். நாம் நலவு செய்யும் காலமெல்லாம் அதன் பலன் நம்மை வந்து சேரும். இவ்வுலகில் இல்லாவிட்டாலும் மறுமையில் இருக்கவே செய்யும்.

பிறர் கவலையில் இன்புறும் துர்குணத்தைக் களைவோம். பொறாமையை கைவிடுவோம்.
பிறருக்கு வழங்கிய இறைவன் நமக்கும் வழங்குவான் என்று நம்பிக்கை கொள்வோம்.

ஏதோ ஒரு விடயத்துக்காக ஒருவர் மீது பொறாமை கொள்ளும் எமக்கு அவர் வாழ்வில் இழந்தவைகள், படும் கஷ்டங்கள் எதுவும் தெரிவதில்லை. ஒருவருக்கும் அநியாயம் செய்யாமல் இருப்பதே அவருக்கு செய்யும் பேருதவிதானே.

பாஹிர் சுபைர்
கட்டுரை வியூகம் வெளியீட்டு மையம்