ரிஷாட், CID யின் கள்ளன் பொலிஸ் விளையாட்டு

ரிஷாட், CID யின் கள்ளன் பொலிஸ் விளையாட்டு

ரிஷாத் மீதான குற்றச்சாட்டு என்ன?

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 222 பஸ்கள் மூலம் இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்ட வாக்காளர்களை வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்டுத்திக் கொடுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சொந்தமான ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்பத்தியதற்கு அமைய, பொதுச் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய சட்டமா அதிபர், பொலிஸ் மாஅதிபருக்கு உத்தரவிட்டதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்திருந்தார்.

 கடந்த 13 ஆம் திகதி ரிஷாத்தை கைதுசெய்வதற்கான உத்தரவிடப்பட்டது.

மேலும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தற்போது தேடுதல் வேட்டை இடம்பெற்ற வண்ணமுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அப்போதைய கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அப்போதைய மீள்குடியேற்ற திட்ட பணிப்பாளர் சம்சுதீன் மொஹமட் யாசீன், அத்திட்டத்தின் முன்னாள் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரிட் மனுத்தாக்கல்

ரிசாத்பதியுதீனை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே ரிசாத் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ரிட் மனுத்தாக்கல் என்பது ஒருவரை கைது செய்ய நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தன்னை கைது செய்ய ஸேண்டாம் என்று நீதி மன்றில் மேன்முறையீடு செய்வதே ரிட் மனுத்தாக்கல்.

கணக்காளர் கைது

பொலிஸ் குழுவின் தேடுதலின் அடிப்படையில், கிருலப்பனை பகுதியில், சந்தேகநபரான கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் CIDயினால் கடந்த 14 ஆம் திகத  கைது செய்யப்பட்டார்.

குறித்த கைதின்போது முதலாவது சந்தேகநபரான ரிஷாட் பதியுதீன்  13ஆம் திகதி  பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இரு வாகனங்களை (Range Rover Jeep, Axio Car) வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வாகனங்கள் இரண்டிலும் இரு கைத்துப்பாக்கிகள், 4மெகசின்கள், அதற்கான தோட்டாக்கள் 48 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.

மனைவியிடம் விசாரணை

முன்னாள் அமைச்சர் ரஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்காக பொலிஸ் குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறாத நிலையில் நேற்று (15) மாலை கொழும்பிலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரது மனைவிடம் விசாரணை நடத்தியதுடன், நீண்ட வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுக்கொண்டனர்.

சஜித்திடம் விசாரணை

பொலிஸாரால் தேடப்பட்டுவரும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொலைபேசி மூலமாக பேசியதாக அறியவந்ததையடுத்து, சஜித்தின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதறகாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்று சஜித் பிரேமதாசவின் இல்லத்துக்குச் இன்று (16) சென்றுள்ளது.

ரிஷாட் பதியுதீன் எங்கே இருக்கின்றார் என்பதை அறிவதற்காகவே சஜித்தின் வாக்குமூலத்தைப் பெறுவதற்கு சி.ஐ.டி.யினர் விரைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது

தப்பியோடிய ரிஷாத்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தான் விரைவில் கைது செய்யப்படுவேன் என தனது வாகனத்திலுள்ள வானொலிச் செய்தி மூலம் அறிந்து புத்தளம் – சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் என குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்டது.

ரிஷாத் கடந்த 13ஆம் திகதி புத்தளத்திலிருந்து கொழும்புக்கு வந்திருந்தார். பயணத்தின் போது தனது வாகனத்திலுள்ள வானொலியில் ஒலிபரப்பான தனியார் வானொலி அலைவரிசை ஒன்றின் செய்தியை செவிமடுத்துக் கொண்டிருந்தார் என குற்றப்புலனாய்வு திணைக்களவட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

சட்டமா அதிபர் பொலிஸாருக்கு உடனடியாக பதியுதீனை கைது செய்து காவலில் வைக்குமாறு அறிவித்ததாக அந்தச் செய்தி அமைந்திருந்தது. உடனே சாரதியிடம் புத்தளம் – சிலாபம் வீதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துமாறு கூறியதுடன் உடன் அதிலிருந்து வெளியேறி பிறிதொரு வாகனத்தில் புத்தளத்துக்கு தப்பினார். இது குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்த நேரத்தில் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்புக்கு வாகனத்தில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரான பதியுதீன் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

என்றாலும், அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில், அப்போதைய  நிதியமைச்சின் ஒப்புதலுடனும், தேர்தல் ஆணையாளரின் அங்கீகாரத்துடனும், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களுக்கு கட்டணம் செலுத்தப்பட்டு, இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு இந்தப் போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தமையும்  குறிப்பிடத்தக்கது.

செய்தி