நாளும் தொடரும் வறுமை!

  • 16

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது

என்பது வள்ளுவர் வாக்கு.

அதாவது, வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே! எனப் பொருள்படும். வள்ளுவர் குறளே வறுமையின் கொடுரத்தை உணர்த்த வல்லது. காலம் கடந்து தொடரும் வறுமையை ஒழிக்க ஒக்டோடர் மாதம் 17ம் திகதி கைகோர்த்து நிற்கின்றது.

“உலகில் ஏதாவது ஒரு இடத்தில், வறுமையால் யாராவது பாதிக்கப்பட்டால், அவர்களது மனித உரிமை மீறப்படுகிறது” என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி.

இவர், சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் தான், உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்டோபர் ,17ல் உருவாக்கப்பட்டது. பின் 1922ம் ஆண்டு ஐ.நா. சபையால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது.  இன்றைய நாளை உலகளாவிய மக்களிடையே வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முதன் முதலாக பிரான்சின் பரிஸில் கொண்டாடப்பட்டது.

2020 இன் வறுமைஒழிப்பின் தொனிப்பொருளாய்,

சுற்றுச்சூழல் அநீதிகளை ஆக்ரோஷமாக சரிசெய்யாமல் சமூக நீதியை முழுமையாக உணர முடியாது. வருமான வறுமையை நிவர்த்தி செய்வதில் முன்னேற்றம் காணப்பட்டாலும், வறுமையின் மற்ற முக்கிய பரிமாணங்களை, சுற்றுச்சூழலில் வேகமாக வளர்ந்து வரும் தாக்கம் உட்பட, ஒரு முழுமையான அணுகுமுறைக்கு தீர்வு காண்பதில் குறைவான வெற்றி கிடைத்துள்ளது.

உலகளாவிய சுற்றுச்சூழல் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், சூழலுக்கு ஏற்படும் சேதங்களை சரிசெய்வதில் மற்றும் கட்டுப்படுத்துவதில் அவசரமும் கவனம் செலுத்துவதும் அவசியம். மேலும் நாம் நிலம், தூய நீர் மற்றும் நமது பெருங்கடல்கள் உள்ளிட்ட முக்கிய இயற்கை சுற்றுச்சூழல் வளங்களை மிகைப்படுத்தி, தவறாக நிர்வகித்து, மாசுபடுத்துகிறோம். இத்தகைய சுற்றுச்சூழல் சேதம் மற்றும் அழிவு வறுமையில் வாழும் மக்களின் வாழ்வாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை சமமாக பாதிக்கிறது.

காடழிப்பு, நில பயன்பாட்டு மாற்றம் மற்றும் மனிதனால் ஏற்படும் பிற செயல்களிலிருந்து முக்கியமான பல்லுயிர் பெருக்கத்தை நாம் இழந்து வருகிறோம், அதே நேரத்தில் பூச்சிக்கொல்லிகள், கன உலோகங்கள், பிளாஸ்டிக் மற்றும் பிற பொருட்களின் பொருத்தமற்ற பயன்பாடும் வறுமைவாழ் மக்களை அச்சுறுத்துகிறது. அவ்வகையில், 2020ம் ஆண்டு  அனைவருக்கும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நீதியை அடைய ஒன்றாக செயல்படுதல் எனும் கருப்பொருளில் வறுமை  ஒழிப்பு பணியை ஐ.நா.சபை முன்னெடுக்குகின்றது. உலகளாவியரீதியில்

  • ஒன்பது பேரில் ஒருவருக்கு உண்பதற்கே இல்லை.
  • 98% போசாக்கற்ற மக்கள் அபிவிருத்தியடைந்து வரும்  நாடுகளில் வாழ்கின்றனர்.
  • வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பெரும்பாலான மக்கள் இரண்டு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்: தெற்கு ஆசியா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா.
  • 1.2 பில்லியன் மக்களின்  வாழ்வாதாரச் செலவு ஒரு நாளைக்கு $ 1 விடக்குறைவு.
  • 2.8 பில்லியன் மக்கள், கிட்டதட்ட உலக சனத்தொகையில் அரைவாசிபேரின் வாழ்வாதாரச் செலவு ஒரு நாளைக்கு $2 விடக்குறைவு .
  • உலகமக்களில் 17% க்கு போசாக்கின்மை
  • ஒவ்வொரு நிமிடத்திற்கும்  குழந்தை பிறப்பின் போது ஒரு பெண்ணின் இறப்பு நிகழ்கிறது.
எது வறுமை?

அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், சத்தான உணவு, மருத்துவம், வேலை வாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உடை, இருப்பிடம் கிடைக்க வேண்டும். இவை இல்லாத அனைவரும், வறுமை நிலையில் இருப்பவர்கள் எனக் கருதப்படுகிறார்கள். வறுமை, பட்டினி வன்முறைக்கு வழிவகுக்கிறது.

ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்குக் கீழ் வாழும் மக்களை ஏழ்மை நிலையில் அல்லது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என வரைவிலக்கணப்படுத்தலாம்.   பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே வறுமை நிலை அளவு சார்ந்து மதிப்பிடப்படுகின்றது. தீவிர வறுமை நிலை என்பது, நாளொன்றுக்கு 1.25 டொலர்களுக்கும் குறைவான தொகையில் ஒருவர் வாழ்க்கை நடத்துவது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது நாட்டுக்கு நாடு வேறுபடலாம். பொதுவாக வறுமை நிலை உணவு, சுத்தமான நீர், உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புகள், மனித அரசியல் உரிமைகள், பிற சமூகங்களுடன் தொடர்புகள் அற்ற அல்லது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலையைக் குறிக்கின்றது.

வறுமையின் வகைகள்

முழு வறுமை (Absolute poverty)

அடிப்படை  தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையைக் குறிக்கின்றது. உலகளாவிய ரீதியில்  ஒரு நாளைக்கு ஒரு டொலரைவிடக் குறைவாக வருமானத்தை பெறுபவர்கள் முழு வறுமைக் கோட்டின் கீழ் உள்ளடக்கப்படுகின்றனர்.

சார்பு வறுமை (Relative poverty)

குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் நிலவும் வறுமையின் நிலை வேறுபடக்கூடியது. இதனடிப்படையில், மக்களது தேவைகள், விருப்பங்கள், கேள்விகள் போன்றவற்றிற்கிடையே காணப்படும் சமனற்ற நிலையை ஒப்பீடு செய்து வறுமையினை பகுப்பாய்வு செய்வதே சார்பு வறுமை.

வறுமைக்கு இட்டுச் செல்லும் காரணிகள்.

வறுமைக்கான காரணம் நாட்டிற்கு நாடு இடத்திற்கு இடம் வேறுபட்டு காணப்படும். இதனால் இவற்றை பொதுவாக சூழற்காரணிகள், பொருளாதார காரணிகள், அரசியல் காரணிகள், குடிப்புள்ளியியற், சமூகக் காரணிகள் வகைப்படுத்தலாம்.

  • ஒரு நாட்டின் கொள்கை வகுப்பில் பொருளாதாரக் கொள்கையானது முக்கிய இடத்தை வகிக்கின்றது. மாறாக பொருளார ரீதியான குறைவிருத்தி மொத்த நாட்டின் முன்னேற்றத்திற்கும் தடையாக அமைந்து வறுமை குடி கொள்ளும்
  • இயந்திரமயமாக்கத்தின் தாக்கம் மனித ஊழியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வகையில் வேலையின்மை வறுமைக்கு பிரதான காரணியாக பல நாடுகளில் தொழிற்படுகின்றது. குறிப்பாக கல்விகற்ற இளவயதினரின் வேலையின்மை நாட்டின் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லன.
  • எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் ஏற்படும் அனர்த்தங்களால் உயிர் உடைமைகளை இழந்து நிர்க்கதியாகி வறுமைக்கு தள்ளப்படுகின்றன.
  • நடுத்தர, அடிமட்ட சமூக கட்டமைப்புக்களிடையே குறைந்த ஊழியம், வாழ்க்கைத்தர உயர்வுகள், மேல்வகுப்பினரின் சுரண்டல் வறுமையில் வாட வழிவகுத்துள்ளது.
  • வயோதிப பருவ உழைக்க முடியாத நிலை, குடும்ப உருவாக்கத்தின் போது சொத்துக்களை கொண்டிராமை, விசேட தேவையுடைய ஊனமுற்றவர்களாக இருக்கின்ற அடிப்படைக்காரணிகளும் வறுமைநிலைக்கு உரமூட்டுவதை அவதானிக்கலாம் .
இலங்கையில்

நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று 16664 ரூபாவிலும் பார்க்க குறைவான வருமானம் பெறுமாயின் அது வறிய குடும்பம் எனக் கொள்ளப்படுகின்றது. அவ்வகையில் இலங்கையில் 0.73% தீவிர வறுமையை அனுபவிக்கின்றனர். ஆசிய அபிவிருத்தி வங்கியின் தரவுகளின் படி தென்னாசியாவில் இலங்கை குறைந்த வறிய மக்களை கொண்ட நாடாகக் காணப்படுகின்றது.

வறுமை நிலை குறைந்துள்ள போதிலும் வறுமை கோட்டின் கீழ் உள்ள பத்து மாவட்டங்களில் முல்லைத்தீவு (12.7%), கிளிநொச்சி அதிக பட்ச வறுமைநிலை சுட்டெண்னைக் கொண்டதாக காணப்படுகின்றன. இதில்  40%  மக்கள் விவசாயம், மீன்பிடி தொழிலை நம்பி வாழ்பவர்கள். வடக்கு மாகாணமே அதிக பட்ச வறுமை சுட்டெண்ணைக் கொண்டுள்ளது. இங்கு 7.7% மக்கள் வறுமை நிலையில் உள்ளனர்.

இலங்கை வறுமை ஒழிப்புத்திட்டங்களுடன்

கிராமிய சமூக அமைப்பில் மக்கள் விவசாயம், கால்நடை, மீன்பிடி போன்ற துறைகளிலே தொழில்களைப் பெற்றுள்ளனர். இதனடிப்படையில் கிராமியத்துறையிலே அதிக வறுமை நிலை நிலவுவதை அவதானிக்கலாம். அவ்வகையில் பல்வேறு கிராமிய அபிவிருத்தி திட்டங்களை துரித கதியில் அரசு அமுல் படுத்தியுள்ளது.

உதாரணமாக ஜனசவிய, சமூர்த்தி, கல்லோயாத்திட்டம், ருஹுனு கால்நடை வளர்ப்பு, கிராமிய விவசாய அபிவிருத்தி திட்டம், கிராமிய சிறுதொழில் பயிற்சித் திட்டம், திவிநெகும, கமநெகும, கம்பெரலிய, ஸ்ரீலங்கா என்ரபிரைஸஸ் போன்றன வறுமையை தனிப்பதில் வெற்றிகரமாக செயற்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் 2015-2030 நிலையான அபிவிருத்திக்கான இலக்குகளில் 2030 ல் 0% வறுமையை குறைக்க இலக்கு வைத்து அதன் பொருட்டு சமூர்த்தி திட்டத்தின் வாயிலாக தேசிய ரீதியாக 125000 வறிய குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கி அவர்களை வறுமை கோட்டிலிருந்து மேலே கொண்டு வர முன்வந்துள்ளது.

நீடித்த கொரோனாத்தொற்றும் நிலைத்த வறுமையின் விளைவுகளும்.

உலகை அச்சுறுத்தும் வைரஸ் தொற்றால் சர்வதேச நாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில் இவ்வைரஸ் மில்லியன் கணக்கானவர்களை பாதித்து நூறாயிரக்கணக்கானவர்களை கொன்றது. இது உடல் ரீதியாக தொடர்பு கொள்ளும் விதத்தை மட்டுமல்லாமல் நமது சமூகத்தை சுற்றியுள்ள சுற்றுச்சூழலிலும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

வீடற்றவர்கள் மற்றும் தரமற்ற வீடுகளில் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் வைரஸிலிருந்து தங்களைக்காத்துக் கொள்ள முடியாத நிலைமையை எதிர்கொண்டனர். அதுமட்டுமா அவர்களின் குழந்தைகள் கல்வியைத்தொடர அடிப்படை டிஜிட்டல் அணுகள் முறைமைகள் இல்லாத நிலைமை மேலும் வறுமையின் தீவிரத்தை எடுத்துக்காட்டின. இனி பள்ளி உணவை பெறாத மில்லியன் கணக்கான குழந்தைகள் பசியில் வாடுகின்ற நிலைமையும் வறுமைப்பிடியை படம் பிடித்துக்காட்டின.

அத்துடன் உண்ணும் உணவிலும், சுவாசிக்கும் காற்றிலுமுள்ள மாசினால் ஏற்படும் வயிற்றுப்போக்கு மற்றும் குடல் ஒட்டுண்ணிகள் போன்ற தடுக்கக்கூடிய நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.4 மில்லியன் மக்கள் இறக்கின்றனர், மோசமான சுகாதாரம் மற்றும் சுத்தமான குடிநீர் கிடைக்காதது. நகரங்களில் புகைமூட்டம் முதல் வீட்டிற்குள் புகைபிடித்தல் வரை காற்று மாசுபாடு ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் “உலகளவில் ஏழு மில்லியன் மக்களைக் கொல்கிறது.” 10 பேரில் 9 பேர் அதிக அளவு மாசுபடுத்தும் காற்றை சுவாசிக்கின்றனர். நோய் சுமைகளில் பெரும்பாலானவை, குறிப்பாக வளரும் நாடுகளில், வறுமையின் தாக்கங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது.

சோமாலியாவாக மாறிவரும் ஹெயிட்டியில் ‘Bon Bon Terres’ எனும் மண் கேக்குகளை உண்ணும் நிலையும், மண்ணை அப்படியே உண்ண முடியாததால் அதனை சுத்தப்படுத்தி மண்கேக்குகளை தயார் செய்து குழந்தைகளுக்கும் ஊட்டுகிறார்கள். முதல் நாள் இதனை உண்ட குழந்தை வயிற்றுவலியால் துடிக்கும் அவலநிலை ஒளவையாரின்

‘கொடிது கொடிது வறுமை கொடிது
அதினினும் கொடிது இளமையில் வறுமை.’

எனும் வாக்கை நினைவுபடுத்துகின்றது.

இவ்வாறு அல்லல்படும் வறுமை வாழ்மக்கள் சவால்களுக்கு பதிலளிக்க குரல் எழுப்பினாலும் அவை சர்வதேச ரீதியில் பலமாக ஒலிக்கவில்லை. இது மாற வேண்டும்.

உன் வலியை உன்னால் உணரமுடிந்தால் நீ உயிரோடு இருக்கின்றாய். பிறர் வழியை உன்னால் உணரமுடிந்தால் நீ வாழ்ந்துக் கொண்டிருக்கிறாய்

அவ்வகையில் வறுமை வாழ் மக்களின் அறிவு, அனுபவங்கள், பங்களிப்புக்கள் மதிக்கப்படவேண்டும். அவர்களுக்கான பசுமையான பாதையை நிறுவுவதில் கவனம் செலுத்தல் அவசியம் என இந்நாளில் வறுமை ஒழிப்புக்காக குரல் கொடுப்போம்.

ASHRA MINSAR

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது, வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே! எனப் பொருள்படும். வள்ளுவர்…

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது, வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே! எனப் பொருள்படும். வள்ளுவர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *