“துரோகம்” பண்பாட்டு வீழ்ச்சியின் ஓர் வித்து

  • 15

இந்த உலகில் ஒவ்வொரு மனிதனையும் நிம்மதியான வாழ்வை நோக்கி நகர்த்துவதற்கு உகந்த மார்க்கம் இஸ்லாம் ஆகும். இந்த இஸ்லாம், ஒருவனின் வாழ்வியல் போக்கில் எல்லா கட்டங்களிலும் நகரும்போது, எவ்வாறு அவன் முன் செல்ல வேண்டும் என்பதனை அழகான முறையில் வழிகாட்டியும் இருக்கின்றது.

இஸ்லாத்தை தன் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு, வாழ முயற்சிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும், இஸ்லாத்தில் பரிபூரண வழிகாட்டலின் கீழ் வாழ முயற்சிக்க வேண்டும். அவ்வாறு வாழ்ந்து வருகின்ற பொழுது தான் இறைவன் எதிர்பார்த்த ஒரு அடியானாக நாளை மறுமையில் அவனை சந்திக்க முடியுமாக இருக்கும்.

இந்த புனித மார்க்கமான இஸ்லாம் ஒருவனை வணக்க ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், அறிவை தூண்டுவதன் மூலமாகவும் பண்படுத்துகின்றது. எவ்வாறு அறிவு ரீதியாக ஒருவனின் சிந்தனையை சீர் செய்கின்றதோ மற்றும் எவ்வாறு வணக்கங்களை கடமையாக்கி இருப்பதனை கொண்டு ஒருவனின் உள்ளத்தை தூய்மைப் படுத்துகின்றதோ. அது போன்று மனித பண்பாடுகளின் மூலமும் வழிகாட்டி அவனது நடத்தையை சீரமைக்க வழி அமைக்கின்றது.

எப்பொழுது ஒருவன் தன்னுடைய சிந்தனையை சீராக்கி, தூய்மையான உள்ளத்தின் மூலமும் சிறந்த பண்பாட்டினை வெளிப்படுத்துவதன் மூலமும் சமூகத்தில் வாழப் பழகுகின்றானோ, அப்பொழுது தான் எல்லாவற்றையும் படைத்த அல்லாஹுத்தஆலாவும் அவனின் தூதர் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமும் எதிர்பார்த்த பூரணமாக முஃமினாக மாறமுடியும். இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் குறைபாடுள்ள ஒருவனாக காணப்பட்டால் அவன் பூரண முஃமினாக முடியாது.

இந்த மூன்றும் மிக முக்கியமானதாக இருந்தபோதிலும் இங்கு மனிதப் பண்பாட்டினை களங்கப்படுத்தும் துரோகம் என்ற தீய பண்பு எந்தளவு பாரதூரமானது என்பதை நினைவுபடுத்திக் கொள்வது சிறந்ததாகும். துரோகம் என்பது நம்பிக்கைக்கு எதிரானதாகும். மற்றும் தான் நிறைவேற்ற வேண்டிய ஒன்றில் குறையை ஏற்படுத்துவதுமாகும். இந்த துரோகம் என்ற பண்பை இஸ்லாமும் சமூகமும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. துரோகத்தை தன்னுடைய தொடர் செயலாக கொண்டிருக்கும் மனிதனை இஸ்லாம் வெறுக்கின்றது.

அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

“மேலும் ஏதாவது ஒரு கூட்டத்தினரிடம் இருந்து துரோகத்தை நீர் பயந்தால் அதற்கு சமமாக அவர்கள்பால் எறிந்து விடுங்கள் நிச்சயமாக அல்லாஹ் அவர்களை நேசிக்க மாட்டான்.” (அல் அன்பால் 58)

இவ்வுலகில் மனித வாழ்வு நகர்வதென்பது ஒரு மனிதன் தன்னுடைய இறைவன் மீது, ஒரு மனிதன் தன் பிற சகோதரனின் மீது, ஒரு மனிதன் தன் சமூகத்தின் மீது, சமூகம் ஒரு மனிதனின் மற்றும் குடும்பத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில்தான் என்றால் அது மிகையாகாது. அந்த நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஒருவனின் நடத்தை மாறுகின்ற போது அது துரோகமாக ரூபமெடுக்கின்றது.

இந்த நம்பிக்கைக்கு மாற்றமான துரோகம் என்ற அசிங்கமான பண்பை மூன்றாக பிரிக்க முடியும்.

  1. இறைத் துரோகம்
  2. தனிமனிதனுக்கு விளைவிக்கும் துரோகம்
  3. சமூகத் துரோகம் அல்லது தேசத் துரோகம்.
இறைத் துரோகம்

இறைத் துரோகம் என்பது ஓர் அடியான் தன்னைப் படைத்த ரப்புக்கு மாற்றமாக, அவன் ஏவியவைகளை புறக்கணித்து, அவன் தடை செய்தவைகளை அற்ப இன்பத்திற்காக வாழ்வில் செயற்படுத்தி, தன்னுடைய றப்புக்கு ஆலமுல் அர்வாஹில் வாக்களித்ததற்கு முரணாக இவ்வுலகில் வாழ்வதாகும். இந்த துரோகத்தால்தான் இறைவன் அவனை விட்டும் தூரமாகி விடுகின்றான். அவன் எப்பொழுது தன்னுடைய ரப்பின் அருளையும் அன்பையும் உணர்ந்து பாவமன்னிப்புக் கேட்டு, அவன் ஏவிய பிரகாரம் தன் வாழ்வை மாற்றிக் கொள்கிறானோ அப்பொழுது தான் இறைவன் அவனை ஏற்றுக் கொள்கிறான்.

இமாம் ராஹிப் இவ்வாறு கூறுகின்றார். “துரோகமும் வஞ்சகமும் ஒன்றுதான். ஆனால் நயவஞ்சகம் மார்க்கத்திற்கு மாற்றமாக. இறைவனுக்கு மாற்றமாக நடந்து கொள்வதைக் குறிக்கும். துரோகம் என்பது நம்பிக்கைக்கு மாற்றமாக நடப்பதினை குறிக்கும்” என்கிறார்.

அல்லாஹுத்தஆலா பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

“விசுவாசம் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே உங்களிடமுள்ள அமானிதங்களுக்கும் மோசடி செய்யாதீர்கள்.” (அன்பால் 27)

தனி மனிதன் பிற மனிதனுக்கு செய்யும் துரோகம்

ஒரு மனிதன் தனது வாழ்வை நம்பிக்கையின் அடிப்படையில்தான் அமைத்துக் கொள்கிறான். ஒன்று அவன் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை. மற்றொன்று அவன் பிற மனிதன் அல்லது தன் சகோதரன் மீது வைத்துள்ள நம்பிக்கை ஆகும். இந்த நம்பிக்கைக்கு மாற்றமாக நடந்தால் அது துரோகமாகும். இது இறைத் துரோகத்தை விட பாரதூர மிக்கதாகும். ஏனெனில் ஒருவன் இறைத் துரோகத்தில் ஈடுபட்டால் அவன் தன் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கேட்டால் உடனே அவன் மன்னிப்பான். ஆனால் ஒரு மனிதன் தனது சகோதரனுக்கு பொய் சத்தியம் செய்வதன் மூலமாகவோ, உடன்படிக்கைகளுக்கு மாறு செய்வதன் மூலமாகவோ அல்லது ஏனைய வழிகளில் துரோகம் செய்தால், துரோகம் செய்யப்பட்ட மனிதன் மன்னிக்கும் வரைக்கும் துரோகம் செய்தவனுக்கு மன்னிப்பு கிடையாது.

மேலும் துரோகம் செய்யப்பட்டவன் அல்லாஹ்வின் பார்வையில் அநியாயம் இழைக்கப்பட்டவனாக மாறுகின்றான். அப்பொழுது அவன் கேட்கும் துஆ எவ்வித தடையும் இன்றி ஏற்றுக் கொள்ளப்படுகின்றது .

இன்று இஸ்லாம் என்ற போர்வைக்குள் வாழ்கின்ற முஸ்லிம்களாகிய நாம், எமது அன்றாட வாழ்வியல் நீரோட்டத்தில் தமது சகோதர உறவுகளுக்கு பலவகையில் துரோகங்களை மற்றும் மோசடிகளை மேற்கொள்கிறோம்.

சிலர் வார்த்தைகளால் மோசடி செய்கிறார்கள். இன்னும் சிலர் நடத்தைகளால் துரோகத்தை மேற்கொள்கிறார்கள். இன்னும் சிலர் தன்னுடைய பொறுப்புக்கள் விடயத்தில் துரோகம் இழைக்கின்றார்கள். வேறு சிலர் தன்மீது நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருளில் துரோகம் செய்கிறார்கள்.

எவ்வாறு இருப்பினும் நாளை மறுமையில் மோசடிகாரர்களுக்கு விமோசனம் இல்லை. மற்றும் அல்லாஹ்வின் தூதர் கூட அவர்களுக்கு சிபாரிசு செய்ய மாட்டார்கள்.

துரோகம் இழைத்தவர்கள் இந்த உலகில் எவ்வளவுதான் இன்பமுற்று வாழ்ந்தாலும், நாளை துரோகம் செய்த பொருள் அல்லது விடயத்தை கொண்டு அவர்களே அலறுவார்கள்.

“நம்பிக்கைத் துரோகத்தையும் மோசடியையும் கண்டால் அவனுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தலைவர்கள் பின் நிற்க கூடாது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்கள்

சமூகத் துரோகம் அல்லது தேசத்துரோகம்

பல சிறு சிறு குழுமங்கள் இணைந்து ஒரு சமூகம் ஆகின்றன. பல சமூகங்கள் ஒன்றாகும் பொழுது தேசம் என்ற பெயராக உருவெடுக்கின்றது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்ற ஒரு முஸ்லிம் தனது சமூகத்தை மற்றும் தன் சமூகம்சார் தேசத்தை நேசிக்க வேண்டும். இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற அடிப்படையில் ஒரு மனிதன் தன் தேசத்தை சார்ந்து செயல்படும் உணர்வை இஸ்லாம் ஏற்றுக்கொள்கிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் தேசப்பற்றை தன்னுடைய ஹிஜ்ரத்தின் போது பின்வருமாறு வெளிப்படுத்தினார்கள்.

“மக்களே! இது எவ்வளவு சிறந்த தேசம். எனது சமூகம் என்னை அங்கிருந்து விரட்டியிருக்கா விட்டால் நான் மக்காவை விட்டு சென்று இருக்க மாட்டேன்” (திர்மிதி)

தன்னுடைய தேசத்தை நேசிப்பதை, இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்திப் பேசுகின்ற இஸ்லாமிய அறிஞர்கள் வரவேற்கின்றனர்.

“ஓர் மனிதன் தனது தேசத்தை சார்ந்து சிந்திப்பது, தொழிற்படுவது மற்றும் அதன் சுதந்திரத்திற்காகவும் அபிவிருத்திக்காகவும் போராடுவது என்பன அல்லாஹ் ஏற்படுத்திய சமூகவியல் நியதிகள் ஆகும். அதனை எவராலும், எப்பொழுதும் மாற்ற முடியாது” என்று இஸ்லாமிய அறிஞரான இமாம் முஹம்மத் அப்துஹு குறிப்பிடுகின்றார்.

ஆகவே பூமியை வளப்படுத்துவது ஒரு முஸ்லிமின் பிரதான பணியாகும். பூமி என்று வருகின்ற பொழுது ஆரம்பத்தில் தன்னுடைய தேசம் வளம்பெறுவதற்கு தான் அறிவு மற்றும் செயற்பாட்டு ரீதியாக தன் முயற்சியினை வெளிப்படுத்த வேண்டும்.‌ அப்பொழுது தேசம் வளம் பெறுவதுடன் அபிவிருத்தியும் அடைகிறது .

அதுவன்றி நாம் அதற்கு மாற்றமாக அதற்கு துரோகம் செய்யும் நோக்கில் தன்னுடைய செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதை இஸ்லாம் வெறுக்கின்றது. ஒரு மனிதன் தனது சமூகத்திற்கு செய்யும் துரோகமானது இலகுவில் அழியாது. அது சமூக மட்டத்தில் விருத்தியடைந்து வீழ்ச்சிக்கு உறுதுணையாக அமைந்து விடுகின்றது. இதனால் எதிர்கால பரம்பரையின் சுபீட்சமான வாழ்வில் முட்டுக்கட்டை ஏற்படவும் அது காரணமாகின்றது.

மேலும் சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாம் எமது “உம்மத்” என்ற கருத்தியலையும் தாண்டி, “முவாதனா” என்ற கருத்தியலின் அடிப்படையில் தம் தேசத்தை பார்க்கின்ற பொழுது, தேசமும் வளம் பெறும். முஸ்லிம் சமூகமும் வளம் பெறும். இதனை பெரும் பெரும் இஸ்லாமிய அறிஞர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். தம் தேசத்துக்கு துரோகம் விளைவிக்க எத்தனிக்கும் போது, ஏதோ ஒரு வகையில் அது தன்னையும் தனது சமூகத்தையும் சேர்த்து பாதிக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாமும் நமது சமூகமும் தேசத்தில் ஒரு அங்கம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் பொதுவாக துரோகம் என்பது அசிங்கமான ஒரு பண்பாகும். இது சமூகத்தில் பண்பாட்டு வீழ்ச்சிக்கு வித்திடுகின்றது. பின்னர் அது தேசிய அபிவிருத்திக்கும் தடங்களாக அமைந்து விடுகின்றது. அதுமட்டுமல்லாமல் துரோகத்தில் ஈடுபடுபவன் இம்மையிலும் சிறந்த வாழ்க்கை வாழ மாட்டான். மறுமையிலும் சுவனம் அவனுக்கு கிடைக்காது. ஏனெனில் துரோகம் செய்பவனை சமூக உறவுகளும் ஏற்றுக்கொள்ளாது புறக்கணித்து விடுகின்றனர். மற்றும் அல்லாஹ்வும் துரோகம் செய்பவனை நேசிக்க மாட்டான். இதனால் இறுதியில் எல்லா வகையிலும் அவன் ஒதுக்கப்படுகிறான்.

ஆகவே துரோகம் என்பது ஒரு சிறந்த பண்பல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இம்மோசமான செயலை விட்டும் தவிர்ந்து வாழப் பழகிக் கொள்வோம்.

R.A.J. MAFAZ MOHAMMED
(NALEEMI)
waththegedara

இந்த உலகில் ஒவ்வொரு மனிதனையும் நிம்மதியான வாழ்வை நோக்கி நகர்த்துவதற்கு உகந்த மார்க்கம் இஸ்லாம் ஆகும். இந்த இஸ்லாம், ஒருவனின் வாழ்வியல் போக்கில் எல்லா கட்டங்களிலும் நகரும்போது, எவ்வாறு அவன் முன் செல்ல வேண்டும்…

இந்த உலகில் ஒவ்வொரு மனிதனையும் நிம்மதியான வாழ்வை நோக்கி நகர்த்துவதற்கு உகந்த மார்க்கம் இஸ்லாம் ஆகும். இந்த இஸ்லாம், ஒருவனின் வாழ்வியல் போக்கில் எல்லா கட்டங்களிலும் நகரும்போது, எவ்வாறு அவன் முன் செல்ல வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *