இறை திருப்திக்காக வாழ்வோம்

இறை திருப்திக்காக வாழ்வோம்

வாழ்வில் சந்திப்பவர்கள் அனைவரும் என்ன தொழில் செய்கின்றீர்? திருமணம் முடித்து விட்டாயா? வீடு இருக்கின்றதா? என்றெல்லாம் கேட்பார்கள். ஏதோ வாழ்க்கை என்றாலே கடையில் வாங்கும் பொருட்களின் பட்டியல் போன்றே நோக்குகின்றனர்.

நீ மகிழ்ச்சியுடன் இருக்கின்றாயா என்று யாரும் ஒருபோதும் கேட்பதில்லை.

வாழ்க்கை என்பது இருக்கின்றவற்றைக் கொண்டு நிம்மதியாக வாழ்வதற்கே. எதிர்காலம் பற்றிய தேவையற்ற பயம், கவலை இருக்கின்ற வாழ்வையும் சிதைத்து விடும். ஆரம்பக் கல்வி பயின்றேன். எதிர்காலத்துக்காக சாதாரண தரம் படி என்றனர். பின் எதிர்காலத்துக்காக உயர்தரம் படி. எதிர்காலத்துக்காக பல்கலைக் கழகம் செல். எதிர்காலத்துக்காக தொழிலொன்றைப் பெற்றுக்கொள். எதிர்காலத்துக்காக திருமணம் முடி. எதிர்காலத்துக்காக பிள்ளைகள் பெற்றுக்கொள். எதிர்காலத்துக்காக. எதிர்காலத்துக்காக. என பல விடயங்களைக் கூறினர்.

இப்போது எனக்கு 77 வயதாகிறது. இன்னும் அந்த எதிர்காலத்தை எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றேன். எதிர்காலத்தை அடைய முடியாது. காரணம் எதிர்காலம் உன்னை அடைந்தால் அது நிகழ்காலமாகி விடும். நிகழ்காலம் இறந்த காலமாகிவிடும். பின் மீண்டும் புதியதொரு எதிர்காலத்தை எதிர்பார்க்க வேண்டியதுதான். உண்மையான எதிர்காலம் அல்லாஹ்வை திருப்திப்படுத்துவதும் நரகிலிருந்து பாதுகாப்புப் பெற்று சுவனத்தில் நுழைவதும்தான். இது ஓர் அறிஞரின் கூற்று.

உலக வாழ்வுக்காகவும் எதிர்காலத்துக்காகவும் மூன்று வயது பாலர் பாடசாலை முதல் இயந்திர வாழ்வு ஆரம்பிக்கின்றது. ஒவ்வொருவரும் எதிர்காலம் பற்றிய பயத்துடனேயே ஒவ்வொரு நாளையும் கழிக்கின்றனர்.

உலக வாழ்வு பற்றிய கவலையை விடுவோம். அது இறைவனுக்குரியது. வாழ்வாதாரம் பற்றிய கவலையையும் விடுவோம். அது இறைவனிடம் இருந்து வருவது. எதிர்காலம் பற்றிய கவலையையும் விடுவோம். அது இறைவனின் கையில் உள்ளது.

ஒரேயொரு கவலையை மட்டும் சுமப்போம். படைத்த இறைவனை எவ்வாறு திருப்திப்படுத்துவது?

ஏனெனில் நாம் இறைவனை திருப்திப்படுத்தினால் அவன் நம்மைப் பொருந்திக் கொள்வான்; நமக்கு விடிவைத் தருவான், வாழ்வாதாரத்தை வழங்குவான். நமக்கு அவனே எல்லாவற்றுக்கும் போதுமானவன். இறைவனுக்காக வாழ்வோம். உலக வாழ்வு வளமாகும்; மறுமை வாழ்வு செழிப்பாகும்.

பாஹிர் சுபைர்
கட்டுரை வியூகம் வெளியீட்டு மையம்