ஈஸ்டர் தாக்குதல் சகல குற்றச்சாட்டுல் இருந்தும் அதாவுல்லாஹ், ரிஷாத் விடுதலை

ஈஸ்டர் தாக்குதல் சகல குற்றச்சாட்டுல் இருந்தும் அதாவுல்லாஹ், ரிஷாத் விடுதலை

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த காலி அத்தக்வா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் அஷ்ஷேக் அதாஉல்லாஹ் பஹ்ஜி, பொருளாளர் எம். ரிஷாத் ஆகியோர் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், வௌிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டு கடவுச் சீட்டுகள் மீள வழங்கப்பட்டதோடு, கைப்பற்றப்பட்ட மடிகணனி, டெப் என்பனவும் மீள வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 16ஆம் திகதி காலி நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன் போது சட்ட மாஅதிபர் திணைக்கள விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை ஆராய்ந்த நீதவான் ஹர்சண கெகுணுவெல்ல சந்தேகநபர்களுக்கு எதிரான சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தார்.

ஏப்ரல் 21 இல் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து பள்ளிவாசல் தலைவரும் பொருளாளரும் கடந்த 2019 ஏப்ரல் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்கள். ஸஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பள்ளிவாசலை நிர்மாணிக்க ஸஹ்ரானுடன் தொடர்பினூடாக பணம் கிடைத்ததாகவும் இனவாதத்தை தூண்டும் விரிவுரைகள் நடத்தப்பட்டதாகவும் இவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில், பள்ளிவாசலில் இருந்த 800 ற்கும் அதிகமாக இறுவட்டுகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிந்த நிலையில், ஆறு மாதங்களின் பின்னர் கடந்த 2019 ஒக்டோபரில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

தொடர்ந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டதோடு இறுவட்டுகளும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. இந்நிலையில் இறுதியாக கடந்த மாதம் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு 2021 மார்ச் 15 இற்கு வழக்கு பின்போடப்பட்டது.

இந்த நிலையிலேயே சட்ட மாஅதிபர் திணைக்கள அறிக்கை காலி பொலிஸிற்கும் நீதிமன்ற பதிவாளருக்கும் அனுப்பபட்டது.

இதனையடுத்து பொலிஸார் இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்த நிலையில் வழக்கு கடந்த வௌ்ளியன்று (16) மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது எனவும் இறுவட்டுகளில் சந்தேகத்திற்கு இடமான விரிவுரைகள் கிடையாது எனவும் சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து குறித்த இருவரும் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டதோடு வழக்கும் நிறைவுக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி கே.ஆர்.எம். முபீன் ஆஜராகியிருந்தார்.

Thinakaran
செய்தி