நவமணியின் நல்வாழ்வுக்கு வழியென்ன?

நவமணி பத்திரிகையானது 25 ஆவது ஆண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில், அது இளமையாக துடிப்புடன் செயற்பட வேண்டிய தருணத்தில் தனது சேவைகளை நிறுத்தவுள்ளதாக பத்திரிகையில் வாசித்தது முதல் எனக்குள்ளும் இனம் புரியாத கவலை தொற்றிக் கொண்டு விட்டது.

இந்நிலையில் அதற்கு ஏதாவது ஆலோசனை வழங்க வேண்டும் என்ற அவாவில் சிலருடன் கலந்தாலோசித்து இக்கட்டுரையை எழுதுகின்றேன்.

சமூகத்திற்கான ஊடகம் ஏன் அவசியம்?

ஒரு சமூகத்தின் கலை, கலாசார பண்பாடுகளை மேம்படுத்தி, அச் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளை சுட்டிக்காட்டி, அச் சமூகத்தின் வளர்ச்சிக்காக செயற்படுவதே சமூக ஊடகமாகும். இதன் கருத்து தான் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகம் மாத்திரம் சரியென பிடிவாதத்தில் இருப்பதுமல்ல.

பன்மைத்துவ கலாசார பின்னணியுடைய நாடான இலங்கையில் ஒவ்வொரு சமூகத்தின் தேவைகள், அபிலாசைகள், நம்பிக்கைகள், பிரச்சினைகள், கலை கலாசாரங்கள் வேறுபட்டவை.

தான் சார்ந்த சமூகம் பற்றிய பூரண அறிவை பெற்ற ஒருவன் பிற சமூகம் சார்ந்த விடயங்களில் குறைவான அறிவையே பெற்றிருப்பான்.

எனவே தான் சார்ந்த சமூகத்தின் செயற்பாடுகள், தேவைகள், பிரச்சினைகள், கலை கலாசாரம் சார்ந்த விடயங்களை முன்வைக்க சமூகம் சார்ந்த ஊடகம் அவசியமானது.

இலங்கையை பொறுத்தவரையில் ஊடகத்துறை வரலாறு 100 ஆண்டுகளுக்கு மேலானது. தமிழ் முஸ்லிம் ஊடகத்துறை அறிஞர் சித்திலெப்பையின், 1882 ஆம் ஆண்டு முஸ்லிம் நேசன், 1892 ஆம் ஆண்டு ஞானதீபம் பத்திரிகை முதல் தொடர்கின்றது.

இவ்வாறு நூற்றாண்டை தாண்டிய ஊடக வரலாற்றை கொண்ட இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் தற்போது ஒரு தேசிய ஊடகமாகவும், மிகப் பழமையான ஊடகமாகவும், அச்சு ஊடகமாகவும் காணப்படுவது நவமணி மாத்திரமாகும். தற்போது மேலும் பல ஊடகங்கள் காணப்பட்டாலும் அவை நவமணிக்கு பின்னர் உருவாக்கப்பட்டவையாகும்.

நவமணி எதிர் நோக்கியுள்ள பிரதான சவால்கள்

ஊடகம் என்ற வகையில் அவை மூடுவதில் பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.

இலாபமின்மை, அரசின் சதித்திட்டங்களை பகிரங்கப்படுத்தியதால் அரசின் எச்சரிக்கை அல்லது தடையுத்தரவு, பிற சமூகத்தவர்களின் அத்துமீறல்களை சமூக மயப்படுத்தியதால் அச் சமூகம் சார்ந்தவர்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள்,  போட்டி ஊடக நிறுவனங்களின் காழ்ப்புணர்வான பிரச்சாரங்கள் போன்றன செல்வாக்கு செலுத்துகின்ற சில காரணிகளாகும்.

இவற்றுள் இலாபமின்மை அல்லது வருமானமின்மை அல்லது நட்டத்தில் இயங்குதலே நவமணி எதிர்நோக்கியுள்ள முக்கிய சவாலாகும்.

அதாவது கொரோனா நோய் தொற்று நிலமை காரணமாக நாட்டில் எதிர்நோக்கியுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக விளம்பரம் சார்ந்த வருமானம் குறைவடைந்தமையால் இன்று அவ் ஊடகம் நஷ்டத்தில் இயங்கி மூடுவிழா நோக்கிய வண்ணமுள்ளது. (அந்நிலை ஏற்படக் கூடாது என இறைவனை பிரார்த்திக்கிறேன்.)

மேலும் சமூக மாற்றம் காரணமாக தற்போது அச்சு ஊடக வாசிப்பு குறைவடைந்துள்ளது. இதனால் விற்பனை வருமானம் வீழ்ச்சி என்றாலும் நவமணி பத்திரிகைக்கு கடன்படுநராக உள்ள நாடாளாவிய ரீதியில் உள்ள பத்திரிகை முகவர்களின் மூலம் சுமார் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பணம் கிடைக்கப்பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடித் தீர்வென்ன?

தற்போதைய சூழலில் நவமணியை நிறுத்துவதற்கான தீர்மானம் எடுக்க பிரதான காரணம் வருமானமின்மையாகும். எனவே சமூக சேவை நோக்கமுள்ள தொழிலதிபர்கள் தமது வணிகத்தை நவமணி பத்திரிகை மூலம் விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கடன்படுநராக உள்ள பத்திரிகை விற்பனை முகவர்கள் தமது கடன் தொகையை மீளச் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் அவ்வாறு கிடைக்கப்பெற வேண்டிய தொகையும் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்டதாகும்.

நீண்டகாலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள்

புதுப்பகுதிகள் அறிமுகம்

நவமணியை மீண்டும் தினசரிப் பத்திரிகையாக நடாத்திச் செல்வதுடன் அதன் வெளியீடுகளை பின்வருமாறு பகுதிகளில் கவனம் செலுத்த முடியும்.

 1. தேசிய அரசியல்: பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவை முடிவு சார்ந்த விடயங்கள்
 2. பிரதேச அரசியல்: மாகாண, பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள், அபிவிருத்தி திட்டங்கள்
 3. சமயப் போதனைகள்: இஸ்லாம் உட்பட பிற மத கலாசார விடயங்களை நாட்கள் பிரித்து பிரசுரித்தல்
 4. சினிமா: உள்நாட்டு இளைஞர்களால் கிராமிய மட்டத்தில் நடிக்கப்படும் குறும் திரைப்படம், தேசிய சினிமா, சர்வதேச சினிமா சார்த்த செயற்பாடுகள். காதல், போதைப்பொருள் விளம்பரம் சார் விடயங்கள் இல்லாத சமூக அபிவிருத்தி, ஒழுக்கவியல் சார்ந்த சினிமாக்கள்
 5. பெண்கள்: பிரச்சினைகள், வழிகாட்டல்கள்
 6. சிறுவர்கள்/ மாணவர்கள்: ஆக்கங்கள், சாதனைகள்
 7. இளைஞர்/ யுவதி: ஆக்கங்கள், தொழில் வழிகாட்டல், சாதனைகள்
 8. குடும்ப வாழ்வு
 9. சுகாதாரம்
 10. பொருளாதாரம்/ வணிகம்
 11. விளையாட்டு: உள்நாட்டு மற்றும் பிரதேசம், சர்வதேச விளையாட்டு செய்திகள்
 12. மாற்றுத்திறனாளிகள் சார்ந்த ஆக்கம் மற்றும் சவால்கள்
 13. உள்நாட்டு உயர் கல்வி நிறுவன பேராசியர் மற்றும் மாணவர் ஆய்வு அறிக்கைகள்
 14. சர்வதேச செய்திகள்
 15. கிராமிய வரலாறு: முஸ்லிம், தமிழ், சிங்கள கிராமங்கள்
 16. இலக்கியம் (கவிதை, சிறுகதை, நாடகம், தொடர்கதை)
 17. சமையல்
 18. அறிவியல்
 19. நடைமுறை நிலைமைகள்
 20. விழிப்புணர்வு

இரட்டை மொழி பத்திரிகை

இலங்கையை பொறுத்தவரை சராசரியாக 80% சிங்களம் பேசும் நிலைமையில், 20% தமிழ் பேசும் நிலைமையில் உள்ளனர். இந்நிலையில் ஒரு தமிழ் பத்திரிகையை நடாத்திச் செல்வதென்பது 20% மக்களுக்கான ஒரு ஊடகமாகத்தான் செயற்பட முடியும்.

எனவே புதியதோர் ஆலோசனையாக தமிழில் வெளியிடும் அதே பத்திரிகையின் மொழிபெயர்ப்பாக சிங்கள மொழியிலும் நவமணியை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் எமது வாடிக்கையாளர் பரப்பை அதி உயர்ந்த பட்சம் 80% ஆல் அதிகரிக்க முடியும்.

குறிப்பாக நாட்டில் இனப்பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் பன்மொழி ஆளுமை இன்மைதான். எனவே நாம் நவமணி பத்திரிகையை இரண்டு மொழிகளில் விற்பதன் மூலம் எமது சமூகத்தவர்களின் கலாசாரம், பண்பாடு என்பவற்றை பெரும்பான்மை மக்கள் புரிந்துகொள்வதோடு, பெரும்பான்மை மக்களின் சிங்கள செய்திகள், கட்டுரைகளை தமிழ் மொழிபெயர்ப்பதன் மூலம் அவர்களது பண்பாடு, கலாசாரம் வாழ்வியல் என்பவற்றை அறிந்து கொள்ள முடியும். இது தேசத்தின் நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கும் சிறந்தொரு அடித்தளமாகும்.

இணையதள பாகத்தை அறிமுகப்படுத்தல்

தற்கால யுகத்தில் காலநிலை மாற்றம் காரணமாக அச்சு ஊடகங்களின் கேள்வி குறைவடைந்து சமூக வளைத்தளம், இணையத்தள பாவனை அதிகரித்துள்ளது. எனவே நவமணி பத்திரிகைக்கென இணையத்தளமொன்றை திட்டமிட்டு நடாத்திச் செல்வது சிறந்தாகும்.

தனது தேடலில் navamani.lk என்ற இணையத்தளமொன்றை அவதானிக்க முடிந்தது. ஆனாலும் குறித்த இணையத்தளம் பலநாட்களாக எவ்வித மாற்றங்களும் இன்றியே காணப்படுகின்றது. அவ்வாறு ஓர் இணையத்தளம் ஆரம்பிக்கும் பட்சத்தில் அதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கத் தயாராக உள்ளோம்.

Ibnuasad

Leave a Reply

%d bloggers like this: