என் அன்புத் தாயே!

  • 17

கண்பார்க்கா எனக்காக
உயிர் வலியை பரிசாகப் பெற்று
இந்த உலகைக் காண வா மகளே
என அழைத்தவள் அவள்.

ஊரே என்னை எதிர்க்கும் போதும்
என் மகளை எனக்குத் தெரியும்
என வீண் சண்டை போடும் விசித்திரம் அவள்.

அம்மா அம்மா என தொந்தரவு செய்தாலும்
என்னடா கண்ணு என அலட்சியம்
இல்லாமல் அன்பு செய்பவள்.

என் அனைத்து பொருட்களும்
எங்கு உள்ளது எனக்
குறித்து வைத்துக் கொள்ளும்
பெரிய புத்தகம் அவள்.

நான் எதையும் மறந்து விட்டாலும்
மறக்காமல் நினைவுபடுத்தும்
என் மற்றொரு மூளை அவள்.

கஷ்டங்கள் வந்தாலும்
எனக்காக வரம் தர
கண்முன் காத்திருக்கும் என்
இன்னுமொரு உயிரும் அவள்.

பாதை மாறி சென்றாலும்
தனது சொற்களால் திருத்திவிடும்
என் முதல் ஆசிரியையும் அவள்.

யாரும் இல்லா உலகத்தில்
அனைவரையும் அறிமுகப்படுத்திய
என் முதல் நண்பியும் அவள்.

தான் சாப்பிடாவிட்டாலும்
சாப்பிட்டேன் என பொய் கூறி
எனக்கு ஊட்டி விடும்
பாசக்காரியும் அவள்.

குற்றம் என்ன செய்தாலும்
குத்திக் காட்டி பேசாமல்
அப்போதே மறந்து விடும்
மழலை மொழிக்காரியும் அவள்.

எந்த நிலை வந்தாலும்
என்னை விட்டுப் பிரிந்து செல்லாத
என்னுடைய நிழலும் அவள்.

பஞ்சு மெத்தைகள் தேவை இல்லை
என் அம்மா மடி போதும்
என் கவலைகள் மறந்து
ஆழ்ந்து உறங்குவதற்கு.

வேறு உறவு தேவையில்லை
என் தாய் மட்டும் போதும்
என் உணர்வுகளைப் பரிமாறி
உயிர் வாழ்வதற்கு.

கம்பளிப் போர்வைகள் தேவையில்லை
என் தாயின் பழைய சேலை போதும்
நான் நிம்மதியாக கண் மூடுவதற்கு.

ஆடம்பர உணவு தேவை இல்லை
அம்மா தரும் ஓரிரு வாய் சோறு போதும்
நாள் முழுக்க உற்சாகமாய் நான் நடப்பதற்கு.

ஆசையைத் துறந்தவளே!
அன்பால் என்னை வென்றவளே!
பட்டினியை புதைத்தவளே!
பாசத்தை பங்கு போட்டவளே!

எனக்கு நடை பழக்கித் தந்தவளே!
உறவைச் சொல்லித் தந்தவளே!
நிலாச் சோறு ஊட்டியவளே!
நிதமும் முத்தத்தால் முத்தங்கள் பதித்தவளே!

சிறு காயத்திற்கு கண்ணீர் கொட்டியவளே!
தன் பிள்ளை என்றாலும்
ஒருமையில் பேசாத என் உயிர் நாடியே!
என் வளர்வுக்காக
உன் வாழ்க்கையை தொலைத்தவளே!

என் பாசத்தை உனக்குக் காட்டும்
முன் என்னை விட்டுப் பிரிந்து விட்டாய்!
ஆனாலும்,
என்னுள் பாதியும் நீயே!
என்றும் உன்னை மறவாதவள் நானே!

உன்னை நினைக்காத நிமிடங்கள் இல்லை
நினைக்கையில் என் மனங்கள்
ரணங்களாகாத நாட்களே இல்லை
என் அன்புத் தாயே!

உனக்கு வலி கொடுத்து பிறந்த காரணத்தால்
தானோ என்னவோ
எனக்கு வலிக்கும் போதெல்லாம்
உன்னையே அழைக்கிறேன் அம்மா என்று

உன் அன்பு மகள்.
Shahna Safwan
Dharga Town

கண்பார்க்கா எனக்காக உயிர் வலியை பரிசாகப் பெற்று இந்த உலகைக் காண வா மகளே என அழைத்தவள் அவள். ஊரே என்னை எதிர்க்கும் போதும் என் மகளை எனக்குத் தெரியும் என வீண் சண்டை…

கண்பார்க்கா எனக்காக உயிர் வலியை பரிசாகப் பெற்று இந்த உலகைக் காண வா மகளே என அழைத்தவள் அவள். ஊரே என்னை எதிர்க்கும் போதும் என் மகளை எனக்குத் தெரியும் என வீண் சண்டை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *