நிறைவேற்றப்பட்ட 20 ஆவது திருத்தமும்: ஆதரவளித்த சிறுபான்மையின எம்.பி.க்களின் நிலையும்

  • 8

அரசியல் அமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விட்டாலும் சிறுபான்மையின கட்சிகள் சிலவற்றின் உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தமை அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கின்றது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்தை ஆதரித்து வாக்களித்து இருந்தார்கள். அதன் மூலமாகவே 156 வாக்குகளை அரசுத் தரப்பால் பெற்றுக்கொள்ளக்கூடிய தாக இருந்தது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் பெற்றுக்கொள்வதற்கு 150 வாக்குகள் போதும் என்ற போதிலும் கூட, அதற்கு மேலதிகமாக ஆறு பெரும்பான்மை வாக்குகளை அரசு பெற்றிருக்கின்றது

உண்மையில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள் என்றால்தான், மூன்றில் இரண்டைப் பெற 150 தேவை. ஐக்கிய தேசியக் கட்சியும், தேரர்களின் கட்சியும் தம்முடைய தேசியப்பட்டியல் உறுப்பினர்களை இதுவரை நியமிக்கவில்லை. அதனைவிட ஆளும் கட்சியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதனை அவர் முன்னரே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு 148 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றிருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். ஐக்கிய மக்கள் சக்தியின் டயானா கமகே இதற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தார். ஆக சிறுபான்மையின கட்சிகளை சேர்ந்த 7 உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமலேயே இந்த திருத்தத்தை அரசாங்கத்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியிருக்க முடியும்.

இந்தப் பின்னணியில் சிறுபான்மையினர் அளித்த ஆதரவு என்பது அரசுக்கு தேவையான ஒன்றாக இருக்கவில்லை. ஆனால் ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாராவது திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தால் தமது நிலைமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக சிறுபான்மையினக் கட்சி உறுப்பினர்கள் சிலரை அரசாங்கம் “தயார் படுத்தி” வைத்திருந்திருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது.

இருந்தபோதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நால்வர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர், தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர் ஒருவர் என்ன இந்த ஏழு பேருமே மக்கள் தமக்கு வழங்கிய ஆணைக்கு முற்றிலும் முரணாக வாக்களித்திருக்கிறார்கள். அதற்குப் பின்னர் அதனை நியாயப்படுத்த அவர்கள் சொல்லும் எந்த ஒரு காரணமும் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

20ஆவது திருத்தம் மக்களுக்கு பயனளிக்கும் என்பதாலும், அரசாங்கத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக ஒன்பதாம் ஆதரவாக வாக்களித்ததாக இவர்கள் கூறுகின்றார்கள். இதனை அவர்களுக்கு வாக்களித்த மக்கள் யாருமே நம்ப போவதில்லை. ஏனெனில் 20 ஆவது திருத்தச் சட்டம் வருவதால், மக்களுக்கு குறிப்பாக சிறுபான்மை இன மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்க போவதில்லை. அதற்கும் மேலாக அரசாங்கத்தை பலப்படுத்துவதன் மூலம் சிறுபான்மையின மக்களுக்கு இவர்களால் எதனையும் பெற்றுக் கொடுக்கவும் முடியப்போவதுமில்லை.

20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பி.யை கட்சியிலிருந்து நிறுத்தப்போவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்திருந்தார். ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன மக்களின் அணைக்கு முரணாக வாக்களித்த எம்பி களுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கப்போவதாக இதுவரையில் அறிவிக்கவில்லை.

கட்சித் தலைமையின் இணக்கத்துடன் நடைபெற்ற ஒரு வாக்களிப்பா இது என்ற கேள்வியை அவர்களுடைய இந்த அணுகுமுறை தவிர்க்கமுடியாமல் எழுப்புகின்றது. “சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைகள் இரட்டை வேடம் போடுகின்றன என்றே நாம் கருதவேண்டியிருக்கும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் சுட்டிக் காட்டி இருப்பது கவனிக்கத்தக்கது.

’20’ ஐ ஆதரித்த உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது இந்த கட்சித் தலைவர்களுக்கும் சங்கடமான தாக இருக்கலாம். இருந்தபோதிலும் மக்களின் ஆணைக்கு முரணான சென்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர்கள் தயங்க கூடாது. அரசாங்கத்துடன் இருந்த கிடைக்கக்கூடிய சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும் திருத்த சட்டமூலத்தை ஆதரித்தார்கள் என்பதுதான் மக்களின் கருத்து. தமது செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக அவர்கள் சொல்லிக்கொள்ளும் காரணங்களை நம்புவதற்கு மக்கள் தயாராக வில்லை என்பதையும் இந்த இடத்தில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

Thinakkural

அரசியல் அமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விட்டாலும் சிறுபான்மையின கட்சிகள் சிலவற்றின் உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தமை அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கின்றது. எதிர்க்கட்சியைச்…

அரசியல் அமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விட்டாலும் சிறுபான்மையின கட்சிகள் சிலவற்றின் உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தமை அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கின்றது. எதிர்க்கட்சியைச்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *