மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் (MCC) என்றால் என்ன?

  • 347
  1. அறிமுகம்
  2. நிறுவன கட்டமைப்பு
  3. இயக்குனர் குழு
  4. நடைமுறைப்படுத்தப்படும் விதம்
  5. MCC யின் தந்திரோபாய நோக்கங்கள்
  6. மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் சர்வதேச ஒப்பந்தங்கள்
  7. கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள்
  8. நிறுத்தப்பட்ட உடன்படிக்கைகள்
  9. புதிய உடன்படிக்கைகள்
  10. மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் இலங்கை ஒப்பந்தம்
  11. மிலேனியம் சலெஞ்ச் காணித் திட்டம்
  12. மிலேனியம் சலெஞ்ச்  போக்குவரத்துத் திட்டம்
  13. வெள்ளை வேன் கலாசாரத்தால்  தடைபட்ட திட்டம்
  14. நாட்டு மக்களின் இறையாண்மையில் தாக்கம் செலுத்தும் ஓர் ஒப்பந்தம்
  15. அமெரிக்காவின் தலையீட்டை அதிகரிக்கும் அபாயகரமான ஓர் ஒப்பந்தம்
  16. உசாத்துணை.

அறிமுகம்

கடந்த நல்லாட்சி அரசில் அதிகம் விமர்சிக்கப்பட்ட ஓர் ஒப்பந்தமே மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் என்றாலும் அந்த உடன்படிக்கை பற்றிய விமர்சனங்கள் தற்போதும் பேசப்பட்ட வண்ணமுள்ளது. இத்திட்டத்தின்  தலைவர் மாநில செயலாளர் மயிக் பொம்பியோ இலங்கைக்கு வருகை தந்துள்ள இத்தருணத்தில் அத்திட்டம் பற்றி அலசி ஆராய்ந்து தொகுக்கப்பட்ட ஆக்கமாகும். என்றாலும் இவ் ஒப்பந்தத்தில் இலங்கை இதுவரை கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவன கட்டமைப்பு

மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் என்றால் உலக வறுமைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு உதவிவரும் புத்தாக்க, சுயாதீன அமெரிக்க வெளிநாட்டு உதவி நிறுவனமாகும். 2004ஆம் ஆண்டில் அமெரிக்க கொங்கிரசினால் உறுதியான இருதரப்பு ஆதரவுடன் உருவாக்கப்பட்டது.

பிரதம நிறைவேற்று அதிகாரி ஒருவரின் தலைமையிலான MCC 9 உறுப்பினர்களை கொண்ட அரச-தனியார் பணிப்பாளர்கள் சபையின் ஆளுகைக்கு உட்பட்டதாகும். ராஜாங்க செயலாளரின் தலைமையிலான MCC சபையில் திறைசேரி செயலாளர், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஆகியோருடன் USAID நிறுவனமும் அங்கம் வகிக்கிறது. MCC என்பது அமெரிக்காவின் புதிய தந்திரோபாய நோக்கங்களுக்காக USAID ஐ பயன்படுத்தி 2004ல் அமைக்கப்பட்ட நிறுவனமாகும்.

இயக்குனர் குழு

MCC இயக்குனர் குழுவானது ஐந்து அரச ஊழியர்கள் மற்றும் நான்கு தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்களை கொண்டுள்ளது.

  • மாநில செயலாளர் மயிக் பொம்பியோ (தலைவர்)
  • கருவூல செயலாளர் ஸ்டீவன் டி.மியுன்சின் (பிரதி தலைவர்)
  • அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ரொபட் ஈ. லெத்திசர்
  • அமெரிக்க உதவி நிர்வாகி மார்க்கிரீன்
  • MCC தலைமை நிர்வாக அதிகாரி
  • அமெரிக்க அதிகார சபை அங்கத்தினர் மைக்ஜொஹான்ஸ்
  • வெற்றிடம்
  • வெற்றிடம்
  • வெற்றிடம்

நடைமுறைப்படுத்தப்படும் விதம்

MCC கடன் திட்டமானது மீள் செலுத்தப்படாத ஓர் கடன் திட்டமாகும். நல்லாட்சி, பொருளாதார சுகாதாரம், தமது பிரஜைகளில் முதலீடுசெய்யவதில் அர்ப்பணிப்புடன் உள்ள அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுடன் மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தும்.

நன்கொடைக்கான நிதியளித்தல் போட்டி தெரிவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் – மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷனின் சபை குறிப்பிட்ட நாட்டின் செயற்பாடுகளை 20 சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கொள்கை குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வதுடன், கொள்கை செயற்பாட்டின் அடிப்படையில் நாடுகளை தெரிவுசெய்வார்கள்.

நிலைபேறான பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கு தெரிவுசெய்யப்பட்ட நாடுகள் வழங்கியுள்ள முன்னுரிமையை அடையாளம் காணுமாறு மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் கோரும்.

ஒரு நாட்டுக்கு மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் உதவி வழங்கப்பட்டால் அதனை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துக்கும் முகாமைத்துவம் செய்யவும், கண்காணிப்புக்களை மேற்கொள்ளவும் பொறுப்புக் கூறும் உள்ளூர் நிறுவனமொன்று அமைக்கப்பட வேண்டும்.

சமகால உடன்படிக்கைகளாவன வறுமையை குறைத்து பொருளதாரவளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு குறிப்பிட்ட சில திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக MCCக்கும் தகுதிவாய்ந்த ஒரு நாட்டுக்கும் இடையே செய்து கொள்ளப்படும் ஐந்து வருடகால உடன்படிக்கைகளாகும்.

சிறு அளவிலான நன்கொடைத் திடட்டங்களாவன நிதி அளிப்பிற்கு தகுதியற்றவையும் அதேவேளை கொள்கை செயற்பாட்டை விருத்தி செய்வதற்கு உறுதியாக அர்ப்பணிப்புச் செய்யும் நாடுகளுக்கு சிறு அளவிலான கொடைகளை வழங்குவதாகும். எல்லை கடந்த பொருளாதார ஒருங்கிணைப்பு, வர்த்தகம், உடனுழைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு MCC பிராந்திய முதலீட்டுக்கான சமகால நிதி உடன்படிக்கைகளை மேற்கொள்ள 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாத AGOA, MCA நவீனமயப்படுத்தல் சட்டம் அதிகாரம் அளித்தது.

MCC யின் தந்திரோபாய நோக்கங்கள்

  • அமெரிக்காவின் தந்திரோபாய தேவைகளுக்கேற்ப முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியங்களின் நிலைத்தலை பாதுகாத்தல்.
  • அமெரிக்க பாதுகாப்புக் கொள்கையை நடாத்திச் செல்லல்
  • அமெரிக்காவிற்கு வரி செலுத்துபவர்களின் ஒவ்வொரு டொலரையும் குறிப்பிட்ட நோக்கத்தோடு முதலீடு செய்தல்
  • நிதியுதவிகள் பெறும் நாடுகளை வியாபார உதவியாளர்களாக ஆக்குவதல்.

மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் சர்வதேச ஒப்பந்தங்கள்

துறை ரீதியான உடன்படிக்கைகள்

  1. நீர் வழங்கள் மற்றும் சுகாதாரம் 11%
  2. போக்குவரத்து (வீதி,நீர் மற்றும் வளி) 26%
  3. திட்ட நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு 11%
  4. சுகாதாரம் கல்வி மற்றும் பொதுச்சேவை 13%
  5. ஆட்சி மற்றும் நிலம் 5%
  6. நிதிச் சேவைகள் 1%
  7. சக்தி 18%
  8. விவசாயம் 15%

கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள்

அண்ணளவாக 29 நாடுகளுடன் 13 பில்லியன் அ.டொ க்கு அதிக பெறுமதியான 37 உடன்படிக்கைகளை கைச்சாத்திடப்பட்டுள்ளன. அவ் உடன்படிக்கைகள் 175 மில்லியன் மக்களுக்கு பயனளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது,

ஒப்பந்த பெறுமதி  மில்லியன் அமெரிக்கா டொலர்களில்

ஆபிரிக்கா (66%)

  1. பெனின் :$307.3 (2006)
  2. பெனின் :$375 (2015)
  3. புர்கினா பாசோ :$480.9 (2008)
  4. கபோ வெர்டே :$110.1 (2005)
  5. கபோ வெர்டே : $66.2 (2012)
  6. கோட் டி ‘ஐவோரி : $524.7 (2017)
  7. கானா :$547 (2006)
  8. கானா : $498.2 (2014)
  9. லெசோதோ : $362.6 (2007)
  10. லெப்ரியா : $256.7 (2015)
  11. மடகஸ்கார் : $109.8 (2005)
  12. மலாவி : $350.7 (2011)
  13. மாலி : $460.8 (2006)
  14. மொரோக்கோ : $697.5 (2007)
  15. மொரோக்கோ : $450 (2015)
  16. மொசாம்பிக் : $506.9 (2007)
  17. நமீபியா : $304.5 (2008)
  18. நைஜர் : $437 (2016)
  19. செனகல் : $540 (2009)
  20. செனகல் : $550 (2018)
  21. தன்சானியா : $698.1 (2008)

ஆசியா (15%)

  1. இந்தோனேசியா : $600 (2011)
  2. பிலிப்பைன்ஸ் : $433.9 (2010)
  3. மொங்கோலியா : $284.9 (2007)
  4. மொங்கோலியா : $350 (2018)
  5. நோபாளம் : $500 (2017)
  6. வனுவாட்டு : $65.7 (2006)

ஐரோப்பா மற்றும் கிழக்கிற்கு அருகில் (10%)

  1. ஆர்மீனியா : $235.7 (2006)
  2. ஜார்ஜியா : $395.3 (2005)
  3. ஜார்ஜியா : $140 (2013)
  4. ஜோர்டான் : $275.1 (2010)
  5. மால்டோவா : $262 (2010)

இலத்தீன் அமெரிக்கா (9%)

  1. எல்செல்வெடோர் : $460.9 (2006)
  2. எல்செல்வெடோர் : $277 (2014)
  3. ஹோன்டுராஸ் : $215 (2005)
  4. நிகரகுவா : $175 (2005)

 24 உடன்படிக்கைகளை நிறைவுசெய்துள்ளது.

  1. ஆர்மீனியா (2011)
  2. பெனின் (2011)
  3. புர்கினா பாசோ (2014)
  4. கபோ வெர்டே (2010)
  5. கபோ வெர்டே (2017)
  6. எல்சல்வெடோர் (2012)
  7. ஜோர்ஜியா (2011)
  8. கானா (2011)
  9. ஹோண்டுராஸ் (2010)
  10. இந்தோனேசியா (2018
  11. ஜோர்டான் (2016)
  12. லெசோதோ (2013)
  13. மலாவி (2018)
  14. மால்டோவா (2015)
  15. மங்கோலியா (2013)
  16. மொரோக்கோ (2013)
  17. மொசாம்பிக் (2013)
  18. நமீபியா (2014)
  19. நிகரகுவா (2011)
  20. பிலிப்பைன்ஸ் (2016)
  21. செனெகல் (2015)
  22. தான்சானியா (2013)
  23. வனுவாட்டு (2011)
  24. சாம்பியா (2018)

நிறுத்தப்பட்ட உடன்படிக்கைகள்

இரு உடன்படிக்கைகள்; (மடகாஸ்கர் மற்றும் மலி) இராணுவ சதித்திட்டங்களுக்கு பின் நிறுத்தப்பட்டது.

புதிய உடன்படிக்கைகள்

  1. புர்கினா பெசோ
  2. லெசோதோ
  3. இந்தோனேஷியா
  4. கொசோவோ
  5. இலங்கை
  6. கிழக்குத் திமோர்
  7. துனீசியா
  8. மலாவி

மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் இலங்கை ஒப்பந்தம்

மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் இலங்கை ஒப்பந்தமானது இலங்கையினால் இதுவரை பெறப்பட்ட ஆகக்கூடிய தொகையிலான நன்கொடையாகும். இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் கட்டுப்பாடாக உள்ள இரண்டு விடயங்களான பலவீனமான போக்குவரத்து உட்கட்டமைப்பு மற்றும் காணி நிர்வாக செயற்பாடு என்பவற்றை இலங்கை அரசாங்கமும், மிலேனியம் சலெஞ் கோப்ரேஷனும் இணைந்து அடையாளம் கண்டுள்ளன.

மொத்த நன்கொடை தொகை : 480 மில்லியன் டொலர்கள் ஐந்து வருடங்களுக்கு

நன்கொடை அனுமதிக்கப்பட்டது : 25, ஏப்ரல் 2019

திட்டம் : போக்குவரத்து (350 மில்லியன் டொலர்கள்) , காணி (67 மில்லியன் டொலர்கள்)

இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் MCA Sri Lanka எனப்படும் நிறுவனத்தினால், MCC திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அமெரிக்காவின் சட்டங்களுக்கு முரணாக இந்த நிறுவனத்தில் சட்ட ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாது. அதனால், அந்நிறுவனத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் MCC நிறுவனத்திற்கே உள்ளது. திட்டத்துடன் தொடர்புடைய தரவுகள், தகவல்கள் உள்ளிட்ட புலமைச் சொத்துக்கள் MCC நிறுவனத்திற்கு உரித்துடையதாகும்.

மிலேனியம் சலெஞ்ச் காணித் திட்டம்

காணித் திட்டமானது 67 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொண்டது என மதிப்பிடப்பட்டிருப்பதுடன், இடஞ்சார் தகவல்கள் கிடைக்கக்கூடிய தன்மை மற்றும் காணி உரிமைத் தகவல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளை விஸ்தரிப்பது மற்றும் முன்னேற்றுவது இதன் நோக்கமாகும். இந்தத் திட்டமானது பயன்படுத்தப்படாதுள்ள அரசாங்க காணிகளை அடையாளம் கண்டு அவற்றை முடிந்தளவு வினைத்திறனாகப் பயன்படுத்தவும், அவற்றை அரசாங்கம் குத்தகைக்கு வழங்கி ஆகக்கூடியளவு வாடகைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் உதவியாகவிருக்கும். அத்துடன் பணிக்காலப் பாதுகாப்பு மற்றும் சிறுகாணி உரிமையாளர்கள், பெண்கள் நிறுவனங்களுக்கான காணி வர்த்தகத்தன்மை என்பவற்றை அதிகரிப்பதுடன், கணனி மயப்படுத்தப்பட்ட காணி உறுதிகளைப் பேணுவது போன்றவற்றால் பாதிப்புக்கள், திருட்டுக்கள், இழப்புக்களிலிருந்து தவிர்த்தல் என்பவற்றுக்கு உறுதுணையாக இருப்பதுடன், தலைப்புப் பதிவு முறையிலிருந்து காணி உறுதி முறைக்கு சொத்துக்களை மாற்றுவதாகும். காணித் திட்டமானது ஐந்து செற்பாடுகளைக் கொண்டிருப்பதுடன், அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள முயற்சிகளை மேம்படுத்துவதாக இவை அமையும். அவையாவன:

  • நிலம் தொடர்பான காணி வரைபடத்தை உருவாக்குவது மற்றும் அரசாங்க காணிகள் குறித்த முழுமையான இருப்புக்களைப் பெறுதல், இலத்திரனியல்-அரச காணிகள் தகவல் முகாமைத்துவ முறைமைக்கு தகவல்களை வழங்குதல். மதிப்பீடு 23,400,000 டொலர்கள்;
  • கணினி மயப்படுத்தப்பட்ட வெகுஜன மதிப்பீட்டுக்கு உதவியாக அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பான தகவல் சேகரிப்பை மேம்படுத்துதல், மதிப்பீட்டுத் திணைக்களத்தைப் பலப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளைப் பலப்படுத்துதல். மதிப்பீடு 6,5000, 000 டொலர்கள்;
  • காணி உறுதி பதிவேட்டில் உள்ள பதிவுகளை கணனி மயப்படுத்தி மேம்படுத்தல், இலத்திரனியல் தகவல் கட்டமைப்பில் அவற்றை இணைத்தல், அரசாங்கத்தின் இலத்திரனியல்-பதிவு முயற்சிகளைக் கட்டியெழுப்புதல். மதிப்பீடு 11,400,000 டொலர்கள்;
  • காணி உறுதி முறையிலிருந்து தலைப் பதிவேட்டு முறைக்குச் சொத்துக்களை மாற்றுவதன் ஊடாக காணி உரிமையாளர்களின் உரிமையை மேம்படுத்தல். அரசாங்கத்தின் பிம் சவிய திட்டத்தை விஸ்தரித்தல். மதிப்பீடு 19,300,000 டொலர்கள்;
  • காணி நிர்வாக கொள்கைத்திட்டங்களை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பதற்கான ஆய்வுளுக்கு உதவியளித்தல். மதிப்பிடு 6,700,000 டொலர்கள்;

இலத்திரனியல்-அரச காணிகள் தகவல் முகாமைத்துவ முறைமை என்பது அரசாங்கத்தின் பல்வேறு முவர்களிடம் உள்ள அரச காணிகள் தொடர்பான காணி வரைபடைத்தை உள்ளடக்கிய தகவல் தொழில்நுட்ப பொறிமுறையாகும்.

இந்தப் பொறிமுறையானது அரசாங்கம் ஏற்னவே குத்தகைக்கு வழங்கிய அரச காணிகள் குறித்த தகவல்கள் பற்றிய விண்ணப்பங்களை பின்தொடர்ந்து அவற்றிலிருந்து வருமானங்களை சேகரித்துக் கொள்ளும். அரசாங்கம் தற்பொழுது காணி மதிப்பீட்டு செயற்பாட்டை தானியங்குமுறைக்கு மாற்றி வருகிறது. இது வரி மதிப்பீடு மற்றும் ஏனைய தேவைகளுக்காக சொத்துக்கள் மதிப்பிடப்படுவதை விரைவுபடுத்தும். இலத்திரனியல்-காணி பதிவேடு முறைமையானது காணி பதிவுத் தகவல்களை இலத்திரனியல் மயப்படுத்துவதுடன், காணி தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கான தகவல்களை இலகுவாகப் பெற்றுக் கொடுப்பதற்கும் வழிகோலும்.

பிம் சவிய திட்டமானது தனியார் காணிகளை காணி உறுதி முறையிலிருந்து மிகவும் பாதுகாப்பான தலைப்பு பதிவு முறைக்கு மாற்றுவதாகும். துரதிஸ்டவசமாக போதிய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப வளங்கள் இன்மையால் இந்த முயற்சிகள் யாவும் அங்கும் இங்குமாக இழுபடுவதுடன் சரியான ஒருங்கிணைப்பின்றிக் காணப்படுகின்றன. மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் காணி திட்டமானது இந்த வளப் பிரச்சினையை நிவர்த்திசெய்யும்.

மிலேனியம் சலெஞ்ச்  போக்குவரத்துத் திட்டம்

போக்குவரத்துத் திட்டமானது 350 மில்லியன் டொலர்களைக் கொண்டது என மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதுடன் இது மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகணங்களில் நகர மற்றும் கிராமிய நகரும் தன்மையை இருவழியில் முன்னேற்றுவது இதன் நோக்கமாகும். முதலில் கொழும்பு பெருநகரப் பிராந்தியத்தில் காணப்படும் வாகன நெரிசலை எளிதுபடுத்துவதுடன், பொதுப் போக்குவரத்தை முன்னேற்றும். கொழும்பை மேலும் வாழக்கூடிய, நன்கு செயற்படக்கூடிய நகரமாக்குவதற்கு போக்குவரத்து உரிமையைப் பெறுவது முக்கியமானதாகும். இரண்டாவதாக, போக்குவரத்துத் திட்டமானது மேல் மாகாணத்திலுள்ள துறைமுகங்கள் மற்றும் சந்தையுடன் நாட்டின் மத்திய பகுதியை இணைப்பதை மேம்படுத்தும். போக்குவரத்துத் திட்டமானது போக்குவரத்து உட்கட்டமைப்பு மற்றும் பொறிமுறைகளை தரமுயர்த்தும். இது மூன்று செயற்பாடுகளைக் கொண்டதாகும்:

  • கொழும்பு பெருநகர பிராந்தியத்தின் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறைக்காக (Advanced Traffic Management System) 160 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறையானது மத்திய கொழும்பை புறநகர் பகுதிகளுடன் இணைக்கும் அதிக போக்குவரத்துக்களைக் கொண்ட எட்டு பாதைகளில் உள்ள வீதி வலையமைப்புக்களை தொழில்நுட்ப மேம்படுத்தலுடன் பௌதீக ரீதியாக முன்னேற்றுவதுடன், சிவில் வேலைகளை முன்னேற்றுவதாகும். இந்த செயற்பாடானது வாகனங்களை கண்டறிவதற்கு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தல், நிகழ்நேர தகவல் சேகரிப்பு, போக்குவரத்தை ஆய்வுசெய்தல், போக்குவரத்து சமிக்ஞைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தல் மற்றும் முழுமையான வலையமைப்பிலும் பஸ் முன்னுரிமை முறைக்கு இடமளித்தல் என்பன உள்ளடங்குகின்றன.

பாதசாரிகள், உலகின் பல நகரங்களில் பொருட்கள் மற்றும் பயணிகள் நகர வீதிக் கட்டமைப்பில் நெரிசல்கள் இன்றி பயணிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முக்கியமான கருவியாக மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறை நிரூபணமாகியுள்ளது. மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறையானது கொழும்பு மாகரில் உள்ள 132 சந்திகளில் சிவில் செயற்பாடுகளை முன்னேற்றுவது மற்றும் ஏறத்தாழ 205 கிலோமீற்றர் வீதி வலையமைப்பில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு சமிக்ஞை திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதையும் மேம்படுத்தும்.

  • 50 மில்லியன் டொலர்கள் கொழும்பு மாநகரில் பஸ் சேவையை மேம்படுத்த பஸ் சேவை நவீனயப்படுத்தல் செயற்பட்டுக்கு ஒதுக்கப்படும்.

கொழும்பு மாநகரில் உள்ள பயணிகளில் 45 வீதமானவர்களே பஸ் சேவையைப் பயன்படுத்துவதுடன், குறைந்தவருமானம் பெறும் நபர்களாலேயே இது அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயற்பாடானது ஸ்மார்ட் அட்டையின் அடிப்படையில் தன்னிச்சையாக கட்டணங்களை அறவிடும் பொறிமுறையை அறிமுகப்படுத்தும். ஒரு அட்டையை பல்வேறு வழித்தடங்களில் செல்லும் பஸ்களுக்குப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அமைவதுடன், பஸ்கள் சரியான முறையில் தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனவா என்பதைக் கண்டுகொள்வதற்காக GPS பொறிமுறையை அறிமுகப்படுத்துவதும் இதில் அடங்குகிறது. சரியான நேரசூசியில் பஸ்கள் செயற்படுகின்றனவா, பஸ்களில் பயணிக்கும் பெண்கள், வயது வந்தவர்கள், மாற்றுவலுவுடையவர்கள் மற்றும் அங்கவீனமானவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இது உதவியாகவிருக்கும். இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் செயற்பாட்டாளர்கள் அதிநவீன போக்குவரத்துக்கான புதிய பஸ்களை கொள்வனவு செய்வதற்கான நிதி ஏற்பாடுகளை செய்வதற்கு மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் உதவியளிக்கும்.

  • 140 மில்லியன் கிராமிய போக்குவரத்து செயற்பாடானது மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகணங்களுக்கிடையிலான ஏறத்தாள 131 கிலோமீற்றரைக் கொண்ட மத்திய வளைய வீதி வலையமைப்பை மேல் மாகாணத்தின் சந்தைகள் மற்றும் துறைமுகங்களுடன் இணைப்பதை மேம்படுத்தும்.

மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் பல்வேறு பிரிவு வலையமைப்புக்களை புனரமைக்கும். கிழக்கு மாகாணத்திலுள்ள பயணிகள் மற்றும் பொருட்கள் இந்த வலையமைப்பின் ஊடாகப் பயணப்படும். இந்த வலையமைப்பை மேம்படுத்துவது விவசாயம், சுற்றுலாத்துறை என்பவற்றின் மையமாகவிருக்கும் மத்திய பிராத்தியத்துக்கும், அங்குள்ள இன பல்வகைமை மற்றும் வறுமை நிலையில் உள்ள அதிகமானவர்களுக்கும் நன்மையாக அமையும்.

இலங்கையில்செயற்திட்டத்திற்கென இனங்காணப்பட்ட வலயங்கள்

  • கொழும்பிலிருந்து திருகோணமலை
  • களுத்துறையிலிருந்தி சிலாபம்
  • காலியிலிருந்து அம்பாந்தோட்டை
  • வாழைச்சேனையிலிருந்து பொத்துவில்
  • கிளிநொச்சியிலிருந்த யாழ்ப்பாணம்

வெள்ளை வேன் கலாசாரத்தால்  தடைபட்ட திட்டம்

ஐக்கிய அமெரிக்காவினால் MCC ஒப்பந்தத்திற்காக 5 சதமேனும் இலங்கைக்கு வழங்கப்படவில்லை என முன்னாள் நிதி அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்தார்.

மேலும் இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த ஒப்பந்தத்தில் ஆரம்பம் முதலே பங்குபற்றியவன் என்ற விதத்தில் நான் விடயங்களை அறிந்து வைத்துள்ளேன். 2006 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிவிகார அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி என்னிடம் முதல் கோரிக்கையாக, எப்படியாவது அமெரிக்காவிற்கு சென்று இராஜாங்க செயலாளரான கொன்டலிஸா ரைசை சந்தித்து உரையாடி இது கிடைப்பதற்கு வழி செய்யுமாறு கோரினார்.

இந்த ஒப்பந்தம் ரணில் விக்ரமசிங்க பிரதமாரக இருந்த காலத்தில் 2004 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது. அந்த அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதன் பின்னர் அந்த நிதியைப் பெற்றுக்கொள்ளும் பாரிய தேவை மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு இருந்தது. முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் நிவாட் கப்ராலே அந்த அரசாங்கத்திலும், இந்த அரசாங்கத்திலும் ஏற்பாட்டாளர் பொறுப்பை வகித்தார்.

இறுதியில் 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் வைத்து மஹிந்த ராஜபக்ஸவிற்கும் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷூக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடத் தயாராகியிருந்த தருணத்திலேயே இங்கு வௌ்ளை வேன் கலாசாரம் ஆரம்பமாகியது. ரவிராஜ் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். வௌ்ளவத்தை பகுதியில் இளைஞர்களைக் கப்பம் கோரி கொன்றனர். திருகோணமலையில் இன்னும் சிலர் கொல்லப்பட்டனர். இந்த மாற்றத்தை அடுத்து தற்போது இலங்கைக்கு கொடுக்க முடியாது என்று அமெரிக்கா அறிவித்தது. ஏனென்றால் அது வழங்கப்படுவதற்கான பிரதான மற்றும் ஒரே நிபந்தனை நாட்டில் ஜனநாயகம் நடைமுறைப்படுத்தப்படுவது தான். என மங்கள சமரவீர கூறினார்.

நாட்டு மக்களின் இறையாண்மையில் தாக்கம் செலுத்தும் ஓர் ஒப்பந்தம்

MCC உடன்படிக்கையின் நிபந்தனைகளைத் திருத்துவதற்கு இணக்கம் தெரிவிப்பதாயின், அது தொடர்பான தொழில்சார் ஆய்வின் பின்னர் மக்கள் கலந்துரையாடல் மற்றும் பாராளுமன்ற பெரும்பான்மையின் அனுமதியின்றி நடைமுறைப்படுத்தக்கூடாது என உடன்படிக்கை குறித்து மீளாய்வு செய்த குழு பரிந்துரைத்துள்ளது. அவ்வாறான விடயத்திற்கு MCC நிறுவனம் இணங்காவிட்டால், உடன்படிக்கையை நிராகரிக்க வேண்டும் என அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

MCC பிரேரணை தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தமது இறுதி அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளித்தது. பேராசிரியர் லலிதசிறி குணருவன் தலைமையிலான அந்தக் குழுவில், டீ.எஸ்.ஜயவீர, நிஹால் ஜயவர்தன, நாலக ஜயவீர ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர். இந்த MCC உடன்படிக்கை சட்டமூலத்தின் பாரதூரமான பல விடயங்கள் குறித்து, குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் MCA Sri Lanka எனப்படும் நிறுவனத்தினால், MCC திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அமெரிக்காவின் சட்டங்களுக்கு முரணாக இந்த நிறுவனத்தில் சட்ட ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாது. அதனால், அந்நிறுவனத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் MCC நிறுவனத்திற்கே உள்ளது.
  • திட்டத்துடன் தொடர்புடைய தரவுகள், தகவல்கள் உள்ளிட்ட புலமைச் சொத்துக்கள் MCC நிறுவனத்திற்கு உரித்துடையதாகும்.
  • சாதாரணமாக நாட்டிற்குக் கிடைக்கும் வெளிநாட்டு கடன் திட்டங்களை திறைசேரி நடைமுறைப்படுத்தும் முறைமைக்கு முரணாக, வேறு நிறுவனமொன்றின் ஊடாக முன்னெடுக்கும் இந்த செயற்பாட்டை, சட்டத்தைக் கருத்திற்கொள்ளாத செயற்பாடாகவே மீளாய்வுக் குழு பார்க்கின்றது.
  • குறித்த திட்டத்திற்கான விலைமனுக் கோரல், நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட முறைமையின் கீழ் இடம்பெறாது எனவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • செயற்றிட்டங்களில் சிக்கல் நிலை ஏற்படுமாயின், அதன் பொறுப்பை இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தி, அவர்களால் நாட்டிலிருந்து வெளியேற முடியும், அவ்வாறான நிலைமை ஏற்படுமாயின், இலங்கை மிகவும் கடினமான நிலையை எதிர்நோக்கும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதேவேளை, சர்வதேச உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவது நிறைவேற்றதிகாரத்திற்கு மாத்திரம் உரிய விடயம் அல்லவெனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது நாட்டு மக்களின் இறையாண்மையில் தாக்கம் செலுத்தும் விடயம் எனவும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய, உடன்படிக்கை அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அது பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டால், அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள சில சட்டங்கள் இலங்கைக்கு செல்லுபடியானதாக அமையும்.

நல்லாட்சி அரசாங்கம் இந்த உடன்படிக்கையின் சட்டமூலம் தொடர்பில் இணக்கம் காணப்படவிருந்த நிலையில், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் நீக்கப்பட்டு, மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டமை, அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் நிலவரத்தினால் அது இடம்பெறவில்லை என மீளாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்தும் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடுகையில், பாராளுமன்ற பெரும்பான்மையின் அனுமதி அவசியம் எனவும், முழுமையான நிபந்தனைகள் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் மீளாய்வுக் குழு யோசனை முன்வைத்துள்ளது.

2004 ஆம் ஆண்டிலிருந்த அரசாங்கம் MCC திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், 2005 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை அது குறித்து எந்தவொரு செயற்பாடும் இடம்பெறவில்லை என மீளாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

MCC இணக்கப்பாடு, நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இறையாண்மையைக் கருத்திற்கொள்ளாது நடைமுறைப்படுத்தப்படும் ஒன்றென்பது தெளிவாகியுள்ளது. எனினும், உடன்படிக்கையின் நிபந்தனைகளைத் திருத்தி பாராளுமன்றத்தின் அனுமதியுடன் MCC நடைமுறைப்படுத்தப்படுமா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல் மற்றும் காணி தொடர்பான சட்டங்களை மறுசீரமைத்தல் உள்ளிட்ட இரண்டு யோசனைகள் இதில் காணப்படுகின்றன. இதில் காணி தொடர்பான திட்டம் மீளாய்வுக் குழுவின் அறிக்கையில் அதிகம் விமர்சிக்கப்பட்டுள்ளது.

MCC தொடர்பான ஆரம்ப பேச்சுவார்த்தைகளில் போக்குவரத்து மற்றும் காணி விடயங்களைத் தவிர, மின்சக்தி உள்ளிட்ட சில துறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மீளாய்வுக் குழு தெரிவித்துள்ளது. மீளாய்வுக் குழுவின் அறிக்கை வெளியிடப்படும் சந்தர்ப்பத்தில், அமெரிக்கத் தூதுவர் மின்சக்தி அமைச்சரைச் சந்தித்து மின்சக்தித் திட்டங்களுக்கு அமெரிக்காவினால் ஒத்துழைப்பு வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்,

அமெரிக்காவின் தலையீட்டை அதிகரிக்கும் அபாயகரமான ஓர் ஒப்பந்தம்

  • காணிகள் அதிகளவில் தனியார் மயமாக்கப்படலாம். காணிகளின் வரைபடங்கள் கணனி மயப்பபடுத்தப்பட்டு அவை MCC நிறுவனத்திற்கு உரித்துடையாக்கப்படும். இதன் மூலம் காணிகள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள நிலக்கீழ் கனியவளங்கள் தொடர்பான தரவுகள் MCC வசமாகும்.
  • இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு பிரிவின் பயிற்சிகளுக்கு நிதியை பயன்பத்த முடியாது.
  • அமெரிக்காவின் உற்பத்தி தொழில் வாய்ப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக நிதியை பயன்படுத்த முடியாது.
  • கொழும்பு துறைமுகம் முதல் திருகோணமலைதுறைமுகம் வரை 200km நீளமான பாதையொன்று நிர்மாணிக்கப்படும். இதன் பெயர் “அமெரிக்காத் தாழ்வாரம்.”
  • திருகோணமலை, கந்தளாய், தம்புள்ளை, ஹபரண பொலன்னறுவை, மாத்தளை, குருணாகல், கேகாலை, கம்பளை , கொழும்பு ஆகிய பிரதேசங்களில் செயற்திட்டங்களை நடைமுறைப்படுதும் உரிமை அமெரிக்கா வசமாகும்.
  • ஐந்து வருடங்களைக் கொண்ட சர்வதேச உடன்படிக்கையை முறிக்க முடியாது. அவ்வாறு முறிக்கும் சந்தர்ப்பங்களில் அமேரிக்காவின் சட்டங்களுக்கு கட்டுப்படவேண்டிவரும். இல்லாவிடின் அமெரிக்கா இராணுவத்திற்கும் நாட்டிற்குள் நுழைந்து சட்டத்தை நிலை நிறுத்த முடியும்.

ஏற்கனவே 2006 ஆம் ஆண்டுகளில் யுத்தம், வெள்ளை வான் கலாசாரம் காரணமாக உடன்படிக்கைக்கு கைச்சாத்திடாத அமெரிக்கா மீண்டும் உடன்படிக்கைக்கு கைச்சாத்திட முனைகிறது.  ஆனால் இனக்கலவரம், அடிக்கடி மாற்றப்படும் அரசியலமைப்பு திருத்தங்கள் காரணமாக நாட்டில் மீண்டும் ஓர் கலவர நிலைமைகள் உருவாகி ஒப்பந்தம் முறிவடைந்தால் அமேரிக்காவின் சட்டங்களுக்கு கட்டுப்படவேண்டிவரும்.

உலகின் பிரதான பொருளாதார பலவான்கள் என்ற வகையில் சீனாவும், அமெரிக்காவும் இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளில் போட்டி போட்டு தலையீடு செய்வதும், அது இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் வர்த்தக, பாதுகாப்பு, கடல் மற்றும் விமானப் பயணங்கள் போன்றே அரசியல் உறவுகள் சார்ந்த ஆதிக்கம் சம்பந்தமான போட்டியாகும் என்பதும் உறுதியாகிறது.

இதனால், MCC  என்பது எதிர்காலத்தில் இலங்கையுடன் மிகப்பலமான உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவும், ஒப்பந்தங்கள் ஊடாக இலங்கை மீதான தலையீடுகளை கூர்மை படுத்தும் அமெரிக்காவின் நோக்கத்திற்கான முதலீடாகும்.

கொரோனா இன்று கொல்லும் MCC நின்று கொல்லும்

உசாத்துணை

https://lk.usembassy.gov/mcc-fact-sheets_/

https://tamil.lankaviews.com/mcc-இலங்கைக்கு-அமெரிக்கா-வழ/

https://www.newsfirst.lk/tamil/2020/07/09/mcc-தொடர்பில்-அமைச்சர்கள்-ப/

https://www.newsfirst.lk/tamil/2020/06/27/mcc-நிதியைப்-பெறும்-முயற்சி/

Country First Video Clip

Ibnuasad

அறிமுகம் நிறுவன கட்டமைப்பு இயக்குனர் குழு நடைமுறைப்படுத்தப்படும் விதம் MCC யின் தந்திரோபாய நோக்கங்கள் மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் சர்வதேச ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் நிறுத்தப்பட்ட உடன்படிக்கைகள் புதிய உடன்படிக்கைகள் மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன்…

அறிமுகம் நிறுவன கட்டமைப்பு இயக்குனர் குழு நடைமுறைப்படுத்தப்படும் விதம் MCC யின் தந்திரோபாய நோக்கங்கள் மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் சர்வதேச ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் நிறுத்தப்பட்ட உடன்படிக்கைகள் புதிய உடன்படிக்கைகள் மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *