ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச அவர்களுக்கு ஓர் திறந்த மடல்!

  • 12

மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களே!

நீண்ட நாளாக ஒரு ஏக்கம். ஒரு வலி. யாரிடம் கூறுவது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்தேன்.

இந்தப் புலம்பலானது எனது புலம்பல் மாத்திரமல்ல, ஒரு ஒட்டுமொத்த சிறுபான்மைச் சமூகமொன்றின் புலம்பல். அவர்களுக்கும் தெரியவில்லை, யாரிடம் கூறினால் அவர்களின் புலம்பலுக்குத் தீர்வு கிடைக்கும் என்று.

நான் ஒரு இலங்கைக் குடிமகனாக இருப்பதால், எமது ஜனாதிபதியான உங்களிடமேயே நேரடியாகப் புலம்பி விட முடிவெடுத்து விட்டேன். உங்களால் மாத்திரமேயே எனது புலம்பலுக்கு, மன்னிக்க வேண்டும் எமது புலம்பலுக்குத் தீர்வு தர முடியும் என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் நம்பிக்கை.

தயவு கூர்ந்து இந்தக் கடிதத்தை முழுமையாக வாசிக்கவும், எமது ஜனாதிபதி அவர்களே.

இலங்கை நாட்டிற்கு இயற்கையானது அழகூட்டுகிறது. இலங்கையில் பல்லினங்கள் ஒற்றுமையாக சகோதரர்களாக காலாகாலமாக வாழ்ந்து வருவது அவ் அழகை மேலும் மெருகூட்டுகிறது.

இனங்களுக்கிடையே சில பிரச்சினைகள் நடந்திருக்கிறது தான், இருந்தும் அவற்றை மறந்து மீண்டும் மீண்டும் சகோதரர்களாக ஒன்றிணைந்து வாழ்வது, இலங்கையர்களின் பெரும் சிறப்புகளில் ஒன்று.

ஒவ்வொரு இனங்களுக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் இருக்கும். அதேபோல் ஒவ்வொரு சமயங்களுக்கும் குறிப்பிட்ட சமயக் கிரியைகள் இருக்கும். இவையனைத்தும் இலங்கையில் காலாகாலமாக பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.

ஒருவரின் பிறப்பில் தொடங்கி, வளர்ப்பு, திருமணம் பின்னர் இறப்பு வரை வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளிலும் ஒவ்வொரு சமயத்தைப் பின்பற்றுவோரும் அவர்களது சமய முறைப்படி சமய அனுஷ்டானங்களை நடாத்தும் சுதந்திரம் இலங்கையில் காலாகாலமாக இருந்து வருகிறது.

உயிராபத்து விளைவிக்கும் விபரீத நிலைமைகளின் போது, ‘சில சமய அனுஷ்டானங்களை விட்டுக் கொடுத்துத்தான் ஆகவேண்டும்’ எனும் நிலை வந்தால், உணர்வுபூர்வமானதாக இருந்தாலும் விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும்.

அவ்வாறு வரலாற்றில் பல இக்கட்டான தருணங்களில், ஒவ்வொரு இனத்தினாலும் பலவகையான விட்டுக் கொடுப்புகள் நிகழ்ந்து தான் இருக்கின்றன. அந்த வகையில் இலங்கையர்கள் பாராட்டப்பட்ட வேண்டியவர்களே

அவ்வாறான ஒரு அவசர கால நிலைமையிலேயே தற்போது இலங்கையானது இருந்து கொண்டிருக்கிறது.

COVID 19 இன் பாதிப்பால் இலங்கை தடுமாறிக் கொண்டிருப்பது, ஒரு கவலைக்குரிய விடயமாகும். பல தியாகங்களுடனுடனும் கஷ்டங்களுடனும் நாட்களை இலங்கையர்கள் நகர்த்தும் இவ்வேளையில், COVID 19 இனால் பாதிக்கப்பட்டு இறப்புக்கள் நிகழ்வது பெரும் கவலையை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும். அவ் இறப்புக்களை எண்ணி முழு இலங்கையருமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கடிதத்தின் முக்கியமான இடத்தில் இருக்கிறீர்கள், தயவு கூர்ந்து தொடர்ந்து வாசிக்கவும்!

COVID 19 இனால் பாதிக்கப்பட்டு இறந்தோரின் உடலைப் புதைப்பதன் மூலமும் வைரஸ் பரவலாம் எனும் கருத்தொன்று ஆரம்பத்தில் இருந்தது.

இதனால், ‘இலங்கையில் COVID 19 வைரசினால் பாதிக்கப்பட்டு இறப்போரின் உடலானது எரிக்கப்பட வேண்டும்’ என சுகாதார திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டதால், COVID 19 வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உடலும் எரிக்கப்பட ஆரம்பித்து தற்போதும் எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இறந்த முஸ்லிம்களின் உடலைப் புதைப்பதே இஸ்லாமிய சமய முறையாகும். இருப்பினும், உடலைப் புதைப்பதால் வைரஸ் பரவும் என்று எதிர்வு கூறப்பட்டதால், பொதுமக்களின் நலன் கருதி, அவர்கள் தமது அதிமுக்கிய சமய அனுஷ்டானங்களில் ஒன்றான மையத்தை நல்லடக்கம் (இறந்தவரைப் புதைத்தல்) செய்வதை விட்டுக் கொடுத்தனர்.

ஒவ்வொரு இஸ்லாமிய உடலும் எரிக்கப்படும் போதும் ஒவ்வொரு இலங்கை முஸ்லிமும் கண்ணீர் விட்டழுதனர், அதை நினைத்துக் கவலைப்பட்டே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டனர். இருப்பினும் நாட்டு நலன் கருதி பொறுமை காத்தனர். எமது ஜனாதிபதி அவர்களே!

அதேபோல், தொடர்ந்து இன்றும் கண்ணீர் விட்டுக் கொண்டு இருக்கின்றனர், எமது ஜனாதிபதி அவர்களே!

உலக சுகாதார அமைப்பு (WHO) இனால், கடந்த 24 மார்ச் 2020 இல் ஓர் அறிக்கை வெளியிட்டது, COVID 19 வைரசினால் பாதிக்கப்பட்டு இறந்தோரின் உடலைக் கையாளுவது பற்றிய அதி முக்கியமான ஓர் அறிக்கையே அது.

“Ebola, Marburg, Cholera போன்ற நோய்களையுடை உடல்களைத் தவிர, வேறு எந்த இறந்த உடலில் இருந்தும் வைரஸ் பரவாது” (Except in cases of hemorrhagic fevers (such as Ebola, Marburg) and cholera, dead bodies are generally not infectious) எனவும்,

“Autopsy இன் போது கவனமாக கையாளப்படாத, COVID 19 போன்ற வைரஸால் பாதிக்கப்பட்ட உடல்களின் சுவாசப்பைகள் (Lungs) இனால் மாத்திரமே வைரஸ் பரவக்கூடியதாக இருக்கும்” (Only the lungs of patients with pandemic influenza, if handled improperly during an autopsy, can be infectious) எனவும்,

“அப்படி இல்லாத விடத்து இறந்த உடலில் இருந்து வைரஸ் பரவாது” (Otherwise, cadavers do not transmit disease.) எனவும்,

“தொற்று நோய்களினால் இறந்த உடல்கள் கட்டாயமாக எரிக்கப்பட வேண்டும் என்பது ஒரு பொதுவான கட்டுக்கதை (Myth) ஆனால் அது பொய்யான கூற்று” (It is a common myth that persons who have died of a communicable disease should be cremated, but this is not true.) எனவும்,

“இறந்த உடலைத் தகனம் செய்வது கலாச்சாரத் தேர்வுக்குரியது மற்றும் கிடைக்கும் வளங்களைப் பொறுத்தது” (Cremation is a matter of cultural choice and available resources) எனவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அத்துடன், “இதுவரையில் எந்த நபருக்கும் COVID 19 இனால் பாதிக்கப்பட்டு இறந்தோரின் உடலில் இருந்து வைரஸ் தொற்றவில்லை” (To date there is no evidence of persons having become infected from exposure to the bodies of persons who died from COVID-19;)
எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) இன் இந்த ஆய்வறிக்கையின் படி, இறந்த உடலைப் புதைப்பதன் மூலம் எந்தவகையிலும் COVID 19 வைரசானது, அவ் உடலில் இருந்து பரவாது என்பது ஊர்ஜிதமாகிறது.

உடலைத் தகனம் செய்வது சமய நம்பிக்கைக்குரியதெனவும் தெரிகிறது,

கணம் ஜனாதிபதி அவர்களே! பல அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கூட COVID 19 இனால் இறந்த உடல்களை அடக்கம் (புதைத்தல்) செய்கிறார்கள் என்பதும் உண்மை!

உமது நாட்டு மக்களான, இலங்கை முஸ்லிம்களாகிய எமது சமய முறைப்படி இறந்த உடலைப் புதைப்பதே வழக்கமாகும். இதுவரை காலமும் அந்த வழக்கமே நடைமுறையில் இருந்து வருகிறது.

COVID 19 இனால் இறந்த முஸ்லிம்களின் உடலை எரிக்கும் போது, ஒவ்வொரு இலங்கை முஸ்லிம்களும் தம்மை உயிருடன் எரிப்பது போல உணர்கிறார்கள்.

எமது ஜனாதிபதி அவர்களே! COVID 19 பாதிக்கப்பட்டு இறந்தால் உடலை தகனம் செய்வார்கள் எனப்பயந்தே பலர், COVID 19 பாதித்ததற்கான அறிகுறிகள் தென்பட்டும் மூடி மறைக்கின்றனர்.

எமது ஜனாதிபதி அவர்களே! இதனால் பாதிக்கப்படப் போவது முழு இலங்கையர்களும் தான்.

எமது ஜனாதிபதி அவர்களே! இந்நிலை இவ்வாறு தொடர்ந்தால், உமது நாட்டு மக்களாகிய எமது முஸ்லிம் சமூகம் உளவியல் ரீதியாக தொடர்ந்து பாதிக்கப்படுவர்.

எமது ஜனாதிபதி அவர்களே! நாட்டின் நலன் கருதியும், முஸ்லிம்களின் உணர்வுக்கு மதிப்பளித்தும் எமது சமயப்படி, COVID 19 இனால் இறந்த உடல்களை சரியான விதிமுறைகளின் படி நல்லடக்கம் செய்ய ‘சுகாதார திணைக்களத்திற்கு’ ஆலோசனை வழங்கி, ஆணை பிறப்பிக்குமாறு, இலங்கை முஸ்லிம் சமூகம் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

நன்றி,

உண்மையுள்ள,
Ifham Aslam
Visiting Lecturer (OUSL)
BSc (Hons) Physics
MSc in Medical Physics (R)

மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களே! நீண்ட நாளாக ஒரு ஏக்கம். ஒரு வலி. யாரிடம் கூறுவது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்தேன். இந்தப் புலம்பலானது எனது புலம்பல் மாத்திரமல்ல, ஒரு ஒட்டுமொத்த சிறுபான்மைச் சமூகமொன்றின் புலம்பல்.…

மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களே! நீண்ட நாளாக ஒரு ஏக்கம். ஒரு வலி. யாரிடம் கூறுவது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்தேன். இந்தப் புலம்பலானது எனது புலம்பல் மாத்திரமல்ல, ஒரு ஒட்டுமொத்த சிறுபான்மைச் சமூகமொன்றின் புலம்பல்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *