கொரோனாவில் சுயமாக முன்னேறுவது எவ்வாறு?

  • 55
  1. இலங்கை முஸ்லிம்களின் சடலங்களை அடக்குவதற்கு அனுமதிக்காமை
  2. அதிக அச்சம் மற்றும் உளவியல் தாக்கம்
  3. மத வழிபாட்டு சார் பிரச்சினைகள்
  4. சுய தனிமைப்படுத்தலும் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளும்
  5. சமூகப் புறக்கணிப்பு
  6. மாணவர்கள் முதல் உயர் கல்வித்துறை வரை கல்வி நடவடிக்கைகள் முடக்கம்
  7. வேலையின்மை, சுற்றுலாத்துறை வீழ்ச்சி, சர்வதேச வர்த்தக முடக்கம்
  8. பொதுப் போக்குவரத்து மற்றும் விநியோக முடக்கம்

அறிமுகம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடுபொருளாதார மற்றும் சமூக கலாசார மற்றும் அறிவியல் ரீதியில் வீழ்ச்சியடையாமல் நாட்டில் உள்ள வளங்களைக் உச்ச  வினைத்திறனாக பயன்படுத்தி எவ்வாறு எதிர் கொள்ளலாம் என ஆராய்வதே  இந்த ஆய்வின் நோக்கமாகும்.

இலங்கையர்களாகிய நாம் இன்று கொரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கியுள்ளோம். நாட்டின் மந்த நிலையில் உள்ள பொருளாதாரம் வீழ்ச்சியடைய விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் நாடாளாவிய ரீதியில் ஊரடங்கை அமுல்படுத்தவில்லை. மேலும் கொரோனாவுடன் வாழப் பழகுங்கள் என்று அறிக்கைகள் விடப்பட்டுள்ளன. என்றாலும் கொரோனாவுடன் சேர்ந்து இலங்கையர் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகாத பொது மக்களும் பல பிர்ச்சினைகளுக்கும், சோதனைகளுக்கும் உள்ளாகிய வண்ணமுள்ளனர். அவற்றை பின்வருமாறு குறிப்பிடலாம்.

கொரோனாவின் சமூக பொருளாதார பிரச்சினைகள்

  1. இலங்கை முஸ்லிம்களின் சடலங்களை அடக்குவதற்கு அனுமதிக்காமை
  2. அதிக அச்சம் மற்றும் உளவியல் தாக்கம்
  3. மத வழிபாட்டு சார் பிரச்சினைகள்
  4. சுய தனிமைப்படுத்தலும் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளும்
  5. சமூகப் புறக்கணிப்பு
  6. மாணவர்கள் முதல் உயர் கல்வித்துறை வரை கல்வி நடவடிக்கைகள் முடக்கம்
  7. வேலையின்மை, சுற்றுலாத்துறை வீழ்ச்சி, சர்வதேச வர்த்தக முடக்கம்
  8. பொதுப் போக்குவரத்து மற்றும் விநியோக முடக்கம்

இன்றைய பகுதியில் இவற்றுக்கான தீர்வாக சில ஆலாசனைகளை முன்வைக்கலாம் என எண்ணுகிறேன்.

நமக்கு கொரோனா தொற்று காரணமாக சமூகத்தில் இவ்வாறு பல பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மனபலம், தமது ஜனாதிபதியின் சர்வாதிகாரம், நிளவளம், பாதைவளம், நீர்வளம், தகவல் தொழில்நுட்ப வளம் என்பவற்றை உச்ச வினைத்திறனுடன் பயன்படுத்தினால் இலங்கையில் விரைவில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தலாம். என்றாலும் சுகாதார வழிகாட்டலுக்கு அமைய முகக்கவசம் அணிந்து உடலை அனைத்து சந்தர்ப்பங்களில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

1. இலங்கை முஸ்லிம்களின் சடலங்களை அடக்குவதற்கு அனுமதிக்காமை

முதலாவது பிரச்சினையாக உள்ள சடலங்களை எறித்தலுக்கான தீர்வை பாராளுமன்றத் தேர்தலின் போது, கடந்த ஏப்ரல் மாதத்தில் எரிக்கப்பட்ட சடலங்களைக் காட்டி வடக்கிலும் கிழக்கிலும், அநுராதபுரத்திலும் வாக்கு வாங்கியபின் ஐக்கிய மக்கள் சக்திக்கு துரோகம் செய்த முஸ்லிம்கள் ஆறு பேரும் நேற்றைய தினம் (29.10.2020) சர்வாதிகாரியாக மாறிய நம்ம ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷா அவர்களுடன் பேசுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்பதால் அதனை தீர்க்கமுடியாத ஒரு பிரச்சினையாக கருதி அது பற்றி எழுதவும் விரும்பவில்லை. ஆனால் இதுபற்றி கடிதங்களை ஜனாதிபதிக்கு எழுதிய அமைப்புக்களினதும், தனிநபர்களினதும் முயற்சியை பாராட்டுகின்றேன்.

உலகில் இலங்கையில் மாத்திரம்தான் இப்பிரச்சினை உள்ளதென்பதை மீண்டும் ஒருமுறை இதை வாசிப்பவர் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுபடுத்தி சர்வாதிகாரியாக உள்ள தங்களால் மாத்திரம் தீர்க்க முடியும் என்பதையும் கூறிவிடுங்கள்.

2. அதிக அச்சம் மற்றும் உளவியல் தாக்கம்

இதுவரை இலங்கையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்த 19 பேரினதும் அறிக்கைகளை அவதானிக்கையில் அனைவரும் கொரோனாவுடன் இன்னொரு நோய்க்கு ஆளாகியிருந்தனர். அதில் நாட்பட்ட நோய், மாரடைப்பு என சில நோய்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலும் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட மரணங்களில் சில பி.சீ.ஆர் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு தாம் ஏற்கனவே குறிப்பிட்ட இறுதிக் கிரிகையான அடக்கம் செய்ய விடாமை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் பி.சீ.ஆர் பரிசோதனை பற்றிய பயம் என்பன மாரடைப்பாக மாறி சில உயிர்கள் பிரிந்துள்ளன.

குறிப்பாக ஒரு நோய் ஏற்பட பல புறக்காரணிகள் செயற்படுவதுபோல் அகக் காரணியாக அதிக அச்சம் மற்றும் உளவியல் தாக்கமும் செல்வாக்கு செலுத்துகின்றது.

பி.சீ.ஆர். பரிசோதனை என்றால் என்ன?

இன்று சமூகத்தில் பலரும் பயப்படுகின்ற ஒரு பரிசோதனையே பி.சீ.ஆர். ஆகும். இதனை சுருக்கமாக கூறுவதென்றால் நமது மூக்கினூடாக அல்லது தொண்டையினூடாக பெறுகின்ற சளியை பரிசோதித்து அதில் கொரோனா நோய் தொற்று கிருமி உள்ளதா? என அவதானிப்பதாகும்.

விரிவாக கூறுவதென்றால், RNA, DNA என்ற இரண்டும் ஓர் உயிரினத்தின் செல்களில் காணப்படும் உட்கரு அமிலங்கள். கொரோனா வைரஸில் இருப்பது RNA. மனித செல்களில் இருப்பது DNA. இதில் DNA முக்கியம். இது ‘ஏடிஜிஸி’ எனும் ‘வேதிப்படி’களால் ஆன நீளமான சங்கிலி. பார்ப்பதற்கு முறுக்கிக்கொண்ட நூலேணி போல இருக்கும். இதில்தான் மரபணு (Gene) உள்ளது. நம் உடலில்  கொரோனா வைரஸ் காணப்பட்டால் அதன் மரபணு, நம் சுவாச செல்களில் இருக்கும். அப்படிஇருக்கிறதா என்று பார்ப்பதுதான்  RT-PCR (Reverse Transcription Polymerase Chain Reaction) பரிசோதனை.

இந்த பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது?

மூக்கு அல்லது தொண்டையின் உட்பகுதியில் இருந்து பிரத்யேக நைலான்/ டெக்ரான் குச்சியால் சளியை சுரண்டி எடுப்பார்கள். சிலருக்கு இருமலில் வரும் சளியை சேகரிப்பார்கள் அல்லது நுரையீரல் சளியை பிராங்காஸ்கோப் கருவி மூலம் உறிஞ்சி எடுப்பார்கள். வைரஸ் உயிரோடு இருப்பதற்கான ஊடகம் உள்ள ஒரு பாட்டிலில் இதை செலுத்துவார்கள். இதேபோல 2 மாதிரிகள்தயார் செய்யப்படும். அவற்றை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகூடதிற்கு அனுப்புவார்கள்.

அங்கு முதல்கட்டமாக, செல்களை உடைக்கும் ஒரு திரவத்தில் முதலாவது மாதிரியில் இருக்கும் சளியைக் கலப்பார்கள். அப்போது சளியில் உள்ள செல்கள் உடைந்து, வைரஸ்கள் பிரிந்து, இறந்துவிடும்.

இறந்த வைரஸ்களில் இருந்து RNA மரபணுக்கள், சில என்சைம்களின் உதவியுடன் பிரித்தெடுக்கப்படும். RT-PCR கருவி DNA மரபணுக்களை மட்டுமே பரிசோதிக்கும் என்பதால், பிரிக்கப்பட்ட RNA மரபணுக்களுடன் ‘Reverse Transcriptase’ எனும் என்சைமை கலப்பார்கள். இது RNAமரபணுக்களை DNA மரபணுக்களாக மாற்றும். பிறகு அதை RT-PCR கருவிக்குள் செலுத்துவார்கள். அது DNA மரபணுக்களை கோடிக்கணக்கில் நகல் எடுத்தும், விஸ்வரூபம் எடுக்கவைத்தும் காண்பிக்கும். இப்போது அவற்றில் ‘Fluorescent’ சாயத்தை செலுத்துவார்கள். அப்போது வெளிப்படும் ஒளியில் கொரோனா வைரஸுக்கே உரித்தான மரபணு வரிசை இருக்கிறதா என்பது துல்லியமாகத் தெரிந்துவிடும். அப்படி இருந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று இருப்பது அறியப்படும். இந்த பரிசோதனை முடிவு தெரிய 6-8 மணி நேரம் ஆகும்.

நமது உடலில் இருந்து தடிமல், இருமல் நிலைமைகளின்போது சாதாரணமாக வெளியேறுபவை சளிதான் அதனை வைத்து பரிசோதனை மேற்கொள்வதால் அதற்காக அஞ்ச வேண்டியதில்லை. மேலும் இப்பரிசோதனை மேற்கொள்ளும் அனைவரும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.

இலங்கையில் இதுவரை 490,563 பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்டு 9791 கொரோனா தொற்றாளர்கள் இனங்கண்டுள்ளனர் அவர்களில் 19 பேர்கள் மரணித்துள்ளனர். இதனை விகிதசாரத்தில் கூறுவதென்றலால் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் வெறும் 2% ஆனோர் தொற்றாளர்களாக இணங்காணப்படுகின்றனர். குறித்த 2% தொற்றாளர்களி 0.2% மரணிக்கின்ற நிலையில் 45% சுகமடைகின்றனர்.

எனவே பொதுமக்கள் பீ.சீ.ஆர் பரிசோதனைக்காக அச்சப்பட வேண்டியதில்லை. மன தைரியத்துடன் பரிசோதனையை எதிர் கொள்ளுங்கள். நீங்கள் மன தைரியத்துடன் இருந்தால் உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும் என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

3. மத வழிபாட்டு சார் பிரச்சினைகள்

முஸ்லிம்களைப் பொருத்தவரையில்  உலகில் அசுத்தமான இடங்களைத் தவிர சுத்தமான வீடுகள், கடைகள், மைதானம் என எங்கும் தமது இபாதத்துக்களை செய்து கொள்ள முடியும், மேலும் இதுபற்றிய சிறந்த வழிகாட்டலை முஸ்லிம் கலாச்சார திணைக்களம் மற்றும் வக்பு சபையும் வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

4. சுய தனிமைப்படுத்தலும் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளும்

சுய தனிமைப்படுத்தல் என்பது சுகாதார அமைப்பு அல்லாத இடத்தில் ஆரோக்கியத்தை பேணுவதோடு, அதிக ஆபத்துள்ள தொடர்புகளைத் தவிர்த்து வைத்திருப்பதைக் குறிக்கிறது. அல்லது தத்தமது சொந்த வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கும் நடவடிக்கையாகும்.

கடந்த 14 நாட்களில் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பிய ஒருவர் / கடந்த 14 நாட்களில் COVID-19 இன் சந்தேகத்திற்கிடமான அல்லது கண்டறியப்பட்டவர்களோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஒருவர்  இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்.

சுய தனிமைப்படுத்தலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
  • முடிந்தால் உங்களுக்காக ஒரு தனி அறை ஒதுக்க வேண்டும்.
  • உங்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்தை பராமரிக்கவும்
  • முடிந்தால் தனி குளியலறையைப் பயன்படுத்துங்கள். நீங்கள் ஒரு குளியலறையைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் கதவு, குழாய் போன்றவற்றை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
  • பார்வையாளர்கள் வருவதை ஊக்குவிக்க வேண்டாம்.
  • நீங்களும், வீட்டிலுள்ள மற்றவர்களும் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் (குறைந்தது 20 விநாடிகளுக்கு)
  • தட்டுகள், கப், கண்ணாடி, துண்டுகள் மற்றும் பெட்ஷீட்களைப் பகிர வேண்டாம். சோப்பு மற்றும் தண்ணீரில் தனித்தனியாக கழுவவும்.
  • தும்மும்போது அல்லது இருமும்போது எப்போதும் உங்கள் வாயை ஒரு திசு அல்லது முழங்கையின் உட்புறத்தால் மூடி வைக்கவும். பயன்படுத்தப்பட்ட திசுக்களை ஒரு மூடக்கூடிய குப்பை தொட்டியில் பாதுகாப்பாக அப்புறப்படுத்துங்கள்
  • தும்மும்போது அல்லது இருமும்போது எப்போதும் உங்கள் வாயை ஒரு திசு அல்லது முழங்கையின் உட்புறத்தால் மூடி வைக்கவும். பயன்படுத்தப்பட்ட திசுக்களை ஒரு மூடக்கூடிய குப்பை தொட்டியில் பாதுகாப்பாக அப்புறப்படுத்துங்கள்
  • கழுவப்படாத கைகளால் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்
  • உங்கள் உடல் வெப்பநிலையை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது அளவிடுவதன் மூலம் கண்காணிக்கவும்
  • காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை நீங்கள் அடையாளம் கண்டால் உடனடியாக பொது சுகாதார ஆய்வாளர் மற்றும் / அல்லது மருத்துவ அதிகாரியிடம் அறிவிக்கவும்.

இவ்வாறு சுய தனிமைப்படுத்தலில் தனிநபர் அல்லது குடும்பம் இருக்கும் போது அவ்வீட்டிற்கு யாரும் வர முடியாது அவ்வாறே அவருக்கும் தேவைகளுக்காக வெளியே செல்ல முடியாது. இந்நிலையில் குறிப்பிட்ட 14 நாட்களுக்கும் செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் பல சிக்கல்களை எதிர் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் பல சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.

எனவே இவர்களுக்கு உதவும் விதமாக தாங்கள் உள்ள பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தல் வீடுகள் காணப்பட்டால் அவர்களுக்கு தேவையான நாளந்த அரிசி மற்றும் மரக்கறி, மாமிச வகைகளை வாங்கி அவர்களின் வீட்டின் நுழைவாயிலில் வைத்துவிட்டு வரவும்.

5. சமூகப் புறக்கணிப்பு

சமூகத்தில் உள்ள இன்னொரு பிரதான பிரச்சினையே வெளிநாட்டில் இருந்து வருவோரை நோயாளியென சந்தேகத்துடன் அவதானித்தல், கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா போன்ற பிரதேசங்களில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கு (தத்தமது சொந்த ஊர்களுக்கு) செல்லும் போது பிரதேச மக்கள் குறித்த நபர்களை பயத்துடன் பார்ப்பது, நோயாளி என கிண்டல் செய்வது, நோயாளிகளை தீண்டத்தகாதவர்களாக பார்ப்பது, சுய தனிமைப்படுத்தலில் உள்ளோரை நோயாளிகள் போன்று பார்ப்பது என்று நடைமுறைகள் உள்ளன.

இவ்வாறான நிலைமைகள் காரணமாக நோய் இல்லாதவர்களும் மன அழுத்தத்திற்கு உட்பட்டு நோயாளிகளாக மாறலாம். இது நோயை சமூகத்தில் அழிப்பதற்கு பதிலாக வளர்ச்சியடையச் செய்யும்.

எனவே இவ்வாறான நடவடிக்கைகளை விட்டு விட்டு சமூக இடைவெளி விட்டு, முகக் கவசம் அணிந்து அவர்களுடன் பேசும் சந்தர்ப்பங்களில் மன மகிழ்வுடன் கலந்துரையாடி தத்தமது மத முறைகளுக்கமைய பிரார்த்தனை செய்து நோயாளிகளையும் சுய தனிமைப்பபடுத்த்தில் உள்ளவர்களையும் ஊக்குவியுங்கள்.

6. மாணவர்கள் முதல் உயர் கல்வித்துறை வரை கல்வி நடவடிக்கைகள் முடக்கம்

கொரோனா தொற்று நிலை காரணமாக நாடாளாவிய நீதியில் மாணவர்கள் முதல்  இளைஞர் யுவதிகள் வரை கல்வி நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளது. என்றாலும் தற்போது பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஸூம் செயலி மூலம் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் தமது  பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை இணையதளம் மூலம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். என்றாலும் நடைமுறையில் இலங்கையில் உள்ள அனைத்து பின்தங்கிய கிராமப் புற பாடசாலை மாணவர்களுக்கு இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளது. அதாவது கையடக்க தொலைபேசிகளை வாங்கும் நிலையில் அனைவரும் இன்மை, மற்றும் துழாவுகை (Coverage) பிரச்சினைகள் காரணமாக உரிய சந்தர்ப்பத்தில் பாடநெறியில் இணைந்து கொள்ள முடியாமை என்பன இவ்வாறு இனங்காணப்பட்ட பிரச்சினைகளாகும்.

என்றாலும் கடந்த அரசு உயர்தர மாணவர்களுக்கு கையடக்க கணனி (Tab) களை வழங்குவதாக கூறியது, மேலும் சுறுசுறுப்பான வகுப்பறை (Smart Class Room) திட்டங்களை அறிமுகப்படுத்தியது.  என்றாலும் நடைமுறை வெற்றி எவ்வாறு உள்ளது என்பது தெரியவில்லை.

நாளுக்கு நாள் மாறிவரும் உலக ஒழுங்கு மற்றும் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு கொரோனாவுடன் போராட வேண்டும் என்ற எச்சரிக்கை என்பன எதிர்வரும் இரண்டு ஆண்டுகளிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை பெரிதும் பாதிக்கலாம்.

எனவே பாடசாலை கல்வி நடவடிக்கைகளில் காலத்திற்கு ஏற்ப மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இன்று தரம் 01 முதல் 11 வரை அரசின் மூலம் பாடநூல்கள் வழங்கும் நடைமுறையுள்ளது. அதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தரம் 09 முதல் உயர்தரம் வரையுள்ள மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்காமல் அதற்கு பதிலாக 09 ஆம் தரத்தில் கல்விசார் இணையங்களுக்கு மாத்திரம் உள்நுழையும் வசதி மற்றும் பாடநூல்களை உட்படுத்தி 09 ஆம் தரம் முதல் உயர்தரம் வரை பயன்படுத்தும் விதத்தில் கையடக்க கணனிகளை (Tab) வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும் எதிர்வரும் காலங்களில் இயங்கலை மூலம் சாதாரண தர மற்றும் உயர்தர கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. வேலையின்மை, சுற்றுலாத்துறை வீழ்ச்சி, சர்வதேச வர்த்தக முடக்கம்

வேலையின்மை, வேலையிழப்பு, சுற்றுலாத்துறை வீழ்ச்சி, சர்வதேச வர்த்தக முடக்கம் என்பன பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையாகும்.

இவற்றுக்கான தீர்வாக பின்வரும் விடயங்களை முன்வைக்கலாம்.

  1. வீட்டுத் தோட்டம் மற்றும் விவசாயத்துறை மீது கவனம் செலுத்துதல்
  2. ஜிக் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடல்
  3. நன்னீர் மீன்பிடித்துறை அபிவிருத்தி
வீட்டுத் தோட்டம் மற்றும் விவசாயத்துறை மீது கவனம் செலுத்துதல்

இச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷா அவர்கள் விவசாயத்துறை மீது அதிக கரிசணை காட்டுகிறார் என்பதை நேற்று முன் தினம் (28.10.2020) அமெரிக்கா இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அவர்களுடன் இடம்பெற்ற கலந்துறையாடல் பற்றிய அறிக்கை மூலம் அறிந்து கொள்ளலாம்.

அமெரிக்கா இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிடம், “இலங்கை அதிக விவசாய வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கு தேவையான வளங்களை கொண்ட நாடாகும். எமது விவசாயத் துறையை நவீனமயப்படுத்த வேண்டும். அதற்காக அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக எமக்கு உதவுங்கள்” என்று ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷா அவர்கள் கேட்டார்.

சுற்றுலா துறையானது தொழில்கள் மற்றும் அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டுவதற்கு உதவும் முக்கிய துறையாகும். முறையான திட்டத்தின் கீழ் அதன் முன்னேற்றத்திற்கு உதவ தனது நாடு தயாராக இருப்பதாகவும் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்த நிலையில் அதற்கு பதிலாக விவசாயம் சார் உதவியை வழங்குமாறு ஜனாதிபதி வேண்டினார்.

நாம் கடந்த காலங்களில் சுற்றுலாத்துறை மற்றும் வர்த்க துணைச்சேவைகளான பாதைகள் அமைப்பு, துறைமுகம், விமான நிலையம், விளையாட்டு மைதானம் என்று சர்வதேச சுற்றுலாப்பயணிகளின் வருகையை இலக்காகக் கொண்டே எமது நாட்டுக்கான கடன் மற்றும் முதலீட்டு அபிவிருத்தி திட்டங்களை பெற்றுவந்தோம். ஆனால் சர்வதேச விமான நிலையங்கள் முடக்கப்பட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சியடைந்த நிலையில் நாம் 10-15 ஆண்டுகளாக மேற்கொண்ட முதலீட்டுத் திட்டங்கள் இன்று செல்லாக்காசாக மாறியுள்ள நிலமையை ஏற்படுத்திய நிலையிலே இவ்வாறான ஓர் உதவியை ஜனாதிபதி எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையின் படி 1950களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46.3% ஆக காணப்பட்ட வேளாண்மைத்துறை 2019 ஆம் ஆண்டாகும்போது 7.4% ஆக குறைவடைந்துள்ளது. அவ்வாறே 36.9% ஆக காணப்பட்ட சேவைத்துறை 58.2% ஆக அதிகரித்துள்ளது. இது நாம் எமது விவசாயத்துறைக்கான பங்களிப்பை குறைத்து சேவைத்துறைக்கான பங்களிப்பை அதிகரித்தமையாகும்.

சேவைத்துறையிலும் இலங்கையில் பிரதான வருமானத்துறையாக சுற்றுலாத்துறை காணப்பட்டாலும் ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா நோய் நிலமை காரணமாக வீழ்ச்சி மற்றும் மந்த கதியிலேயே காணப்படுகின்றது. இவை இன்று பாரிய பொருளாதார வீழ்ச்சியை நாட்டில் ஏற்படுத்தலாம். எனவேதான் ஜனாதிபதி அவர்களும் தமது கலந்துரையாடலில் விவசாயத்துறை ஆய்வு அபிவிருத்திக்கான உதவியை கோரியுள்ளார்.

இவ்வாறு சர்வதேச ரீதியில் ஜனாதிபதி முயற்சிக்கும்போது வீட்டு மட்டத்தில் நாமும் நமக்கான மரக்கறிவகைகள், பழவகைகள், கிழங்கு வகைகள் சார்ந்த வீட்டுத் தோட்ட திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். வீட்டுத்தோட்டம் ஆரம்பிக்க இடமற்ற நகர்புற மக்கள் தமது வீட்டு மொட்டை மாடிகளில் பூ வாஸ்களில் மரக்கறிகளை நாட்டி மரக்கறிகளை வீட்டில் உற்பத்தி செய்தல்.

மேலும்  கிராமிய மட்டத்தில் ஆடு, மாடு, கோழி, வாத்து போன்ற கால்நடை வளர்ப்பு மற்றும் அது சார்ந்த பால், முட்டை, இறைச்சி சார்ந்த சிறு வணிகத்தில் கவனம் செலுத்துதல்.

மேலும் சுற்றுலாத்துறை சார்ந்த முதலீடுகளுக்குப் பதிலாக விவசாயத்துறையில் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனா உலகில் முதலில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முடக்கப்பட்ட நாடாக இருந்தாலும் இன்று உலகலாவிய பொருளாதாரத்தில் மீண்டும் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கின்றது. சீனாவானது இலத்திரனியல் கைத்ததொழில் (மடிகணனி, கையடக்க தொலைபேசி) ஏற்றுமதியில் கடந்த செப்டம்பரில் வளர்ச்சியைக் காட்டியது. அதாவது சீனர்களின் உள்நாட்டு கைத்தொழில் உற்பத்திதான் இன்று உலகின் அனைத்து பகுதிகளிலும் மிக மலிவான விலைக்கு பெறலாம். அதாவது சீனார்கள் தமது உள் நாட்டு உற்பத்தியைத்தான் ஏற்றுமதி செய்தார்கள்.

இவ்வாறு இயற்கை வளம், சாதகமான காலநிலை, விவசாயத்திற்கான நீர் சேகரிக்க குள அமைப்புகள் போன்றன இலங்கையில் காணப்படுகின்றன. எனவே நாமும் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு நெல் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தினால் எமது நாட்டிலும் விரைவாக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

நெல் உற்பத்தியில் நாடு தன்னிறைவடையும் பட்சத்தில் அவற்றை ஏற்றுமதிக்கு பயன்படுத்துதல் அல்லது கோதுமை மாவை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்ற வெதுப்பக (Bakery) உற்பத்திகளுக்கு பதிலாக அரிசி மாவைக் கொண்டு தயாரித்தல் மற்றும் கோதுமை மா இறக்குமதியை குறைத்தல் போன்ற உள்நாட்டு வளங்களை வினைத்திறனாக யன்படுத்த முனைதல்.

ஜிக் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடல்.

ஜிக் பொருளாதாரம் என்பது தடையற்ற சந்தை முறைமையாகும். பாரம்பரிய வியாபார முறைகளுக்கு பதிலாக கொள்வனவாளரும், விற்பனவாளரும் நேரில் சுயமாக சந்தித்து தமது சேவைகளை பரிமாறுவதாகும். இது குறுங்கால ஒப்பந்தம் அதாவது குறிப்பிட்ட ஒரு பொருளை, அல்லது சேவையை பெற்றுக் கொள்ளும் வியாபார முறையாகும். இதனை சுருக்கமாக இயங்கலை வணிக முறை (online Business System) எனலாம்.

இத்திட்டத்தின் மூலம் இயங்கலை (Online) மூலம் வியாபாரசேவை, மொழிபெயர்ப்பு (Translation), தட்டச்சு (Typing), இணையதள மற்றும் செயலி வடிவமைப்பு (Web and App Development), கணக்கீடு (Accounting) சார்ந்த தொழில்களில் கவனம் செலுத்துதல்.

என்றாலும் இத்துறையில் சர்வதேச ரீதியில் இலங்கைருக்கு நன்மதிப்பு இல்லாமை காரணமாக freelancer, eBay போன்ற தளங்களில் இலங்கையர்கள் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வது கடினமாக உள்ளது. மேலும் சர்வதேச பணப்பரிமாற்றமான  PayPal கணக்கினை திறப்பதிலும் இலங்கையர் பல சிக்கல்களை எதிர் கொள்கின்றனர். என்றாலும் இதனை உள்நாட்டு ரீதியில் சமூக வளைத்தளம் மற்றும் பிரதேச வானொலிகள், இணையதளங்கள் மூலம் வினைத்திறனாக மேற்கொள்ள முடியும்.

நன்னீர் மீன்பிடித்துறை அபிவிருத்தி

இலங்கையில் தற்போதைய கொரோனா தொற்றாளர்களை இரண்டு வகையில் நோக்குகின்றனர். மினுவாங்கொடை brandix  கொத்தணி மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி என இணங்காணப்பட்டுள்ளது.

தற்போது பேலியங்கொடை கொத்தணி கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்த வண்ணமுள்ளதால் கடல் மற்றும் சமூத்திர மீன்பிடி நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளமையினால் நாட்டில்  குறுங்கால மீன் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது. அவ்வாறே இலங்கை நாற்புற கடலால் சூழப்பட்ட நாடு போன்றே நாட்டின் உள்ளேயும் 103 ஆறுகள் 50 இற்கும் மேற்பட்ட குளங்கள் என்று நன்னீர் வளமுள்ள நாடு என்றாலும் இலங்கையின் கடல் மீன்பிடித்துறைக்கு செலுத்துகின்ற முக்கியத்துவம் நன்னீர் மீன்பிடித்துறைக்கு செலுத்தப்படுவதில்லை.

இந்நிலமையை மாற்றி கிராமப்புறங்களில் ஆறுகளையும் குளங்களையும் அண்டி வாழும் மக்கள் நன்னீர் மீன் வளர்ப்பு, மீன்பிடி மற்றும் விற்பனை சார்ந்த சுய பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் கரிசணை செலுத்த வேண்டும்.

8.    பொதுப் போக்குவரத்து மற்றும் விநியோக முடக்கம்

கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு உலகளாவிய ரீதியில் மேற்கொண்ட  நடவடிக்கையே ஊரடங்காகும். இதனால் பொதுப் போக்குவரத்து மற்றும் பொருட்கள் விநியோக நடவடிக்கைகள் முடக்கப்பட்டமையினால் பொருட்கள் இறுதி நுகர்வாளரை அடையாமல் தேங்கி நின்றமையாகும்.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க பொதுப்போக்குவரத்தை முடக்கினாலும் தொடர்ந்தும் பொருட்கள் விநியோக (பொருட்கள் போக்குவரத்து) சேவையை முடக்குவது பொருத்தமில்லை. இன்று சீனா மீண்டும் ஏற்றுமதியில் முன்னேறக் காரணம் அவர்களின் பொருட்களின் விநியோக (ஏற்றுமதி) நடவடிக்கையை மீள் ஆரம்பித்துள்ளமையாகும்.

எனவே தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இயங்கலை வணிகம் மூலம் நுகர்வோருக்கு பொருட்களை காட்சிப்படுத்தி கேள்வியை உருவாக்கி பொருட்களை வினைத்திறனாக விநியோகிக்க முயற்சிக்க வேண்டும்.

இறுதியாக ஒரே ஒரு வேண்டுகோள் ஒரு மீற்றர் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து, உடல் சுத்தத்துடன் மேற்கூறிய நடைமுறைகளை நடைமுறைப்படுத்தி இலங்கையை அபிவிருத்தி செய்ய ஒன்றிணையுங்கள். 

Ibnuasad

அறிமுகம் கொரோனாவின் சமூக பொருளாதார பிரச்சினைகள் இலங்கை முஸ்லிம்களின் சடலங்களை அடக்குவதற்கு அனுமதிக்காமை அதிக அச்சம் மற்றும் உளவியல் தாக்கம் மத வழிபாட்டு சார் பிரச்சினைகள் சுய தனிமைப்படுத்தலும் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளும் சமூகப்…

அறிமுகம் கொரோனாவின் சமூக பொருளாதார பிரச்சினைகள் இலங்கை முஸ்லிம்களின் சடலங்களை அடக்குவதற்கு அனுமதிக்காமை அதிக அச்சம் மற்றும் உளவியல் தாக்கம் மத வழிபாட்டு சார் பிரச்சினைகள் சுய தனிமைப்படுத்தலும் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளும் சமூகப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *