முஸ்லிம் பெண்களும் உயர் கல்வியும்

  • 223

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் நாம் பல்கலைக்கழகம் செல்வோமா? என்றும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவது பற்றியும் சிந்திக்கும் இத்தருணத்தில் இக் கட்டுரையை எழுதுவது மிகப்பொருத்தம் என்று நினைக்கிறேன். மேலும் சிலருடன் கலந்தாலோசித்து பெற்ற கருத்துக்களையும் இத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உலகிலே பெண்களுக்கு பலவாறான உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கிய ஒரு மார்க்கம் இஸ்லாம் என்றால் அது மிகையாகாது. வல்லோன் கட்டளைகளும், கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது நடைமுறைகளும் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர்களது உரிமைகள் நேர்த்தியாக வரையறுக்கப்பட்டுள்ளன. பெண்களின் உரிமைகள் எனும் போது சமூக உரிமை, கல்வியுரிமை, அரசியல் உரிமை, சொத்துரிமை என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இவற்றில் கல்வியுரிமை தொடர்பாக அண்மைய நடைமுறைகளுடன் நோக்குவோம்.

“(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவன் பேனையைக் கொண்டு மனிதனுக்கு கற்றுக் கொடுத்தான்.” (ஸுறா அலக்)

“அறிவைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.” (இப்னு மாஜா)

கல்வியைத் தேடுவதில் ஆண், பெண் என்ற எந்த வேறுபாடும் கிடையாது. இருபாலார் மீதும் கடமையாகும். பெண் குழந்தைகள் இரக்கமின்றி புதைக்கப்பட்ட ஜாஹிலிய்யாக் காலத்தில் பெண்களுக்கு உரிமை வழங்கிய இஸ்லாம் கல்வி உரிமையை வழங்கியதால் பெண்கள் இஸ்லாமிய அறிவியல் மருத்துவம், விஞ்ஞானம், வணிகம் போன்ற துறைகளிலும் ஈடுபாடு காட்டியுள்ளமையை வரலாறுகளில் காண முடிகிறது.

ஸஹாபாப் பெண்மணிகளின் வரலாறுகளை அவதானிக்கின்ற போது இறை நம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா (ரழி) அவர்களின் அறிவுத்துறை எந்தளவுக்கு இருந்ததெனின் இஸ்லாமிய கிலாபத்தை கையிலேந்திய கலீபாக்கள் கூட ஆயிஷா நாயகியிடம் வழிகாட்டுதல்களைப் பெற்றுள்ளனர். மேலும் அன்னையவர்கள் வாரிசுரிமைச் சட்டம், வரலாறு, தப்ஸீர், அறபுக் கவிதை போன்ற அனைத்துத் துறைகளிலும் புலமை பெற்றிருந்தார்கள். மேலும் இஸ்லாமிய வரலாற்றில் பாத்திமா பின்த் கைஸ் (ரழி), உம்மு தர்தா (ரழி) என ஸஹாபிப் பெண்மணிகளின் பெயர்களை கூறிக்கொண்டே செல்லலாம்.

இஸ்லாம் பெண்களுக்கு கல்வியின் வாசலை திறந்து கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். இவ்வாறிருக்கையில் முஸ்லிம் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவதில்லை என்பது சமகாலப் பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது. இதனை இலங்கையிலும் சில பகுதிகளில் அவதானிக்க முடிகிறது. பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் தமது கல்வியை குறிப்பாக உயர் கல்வியை தொடரும் அதேவேளை சில பகுதிகளில் கல்வியில் எமது பெண்களின் பங்கு மிகவும் குறைவானதாகவே காணப்படுகிறது.

மாணவிகள் தங்கள் க.பொ.த சா/தரத்திற்குப் பின் பல கனவுகளுடன் கலை, வணிகம், இணைந்த கணிதம், விஞ்ஞானம் எனப் பல்வேறு துறைகளில் தங்கள் உயர் கல்வியைத் தொடர்கின்றனர். சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்றனர். பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்து பல்கலைக்கழக அனுமதியும் கிடைக்கிறது. பலர் செல்கிறார்கள் ஆனால் சிலர் கேள்விக்குறியாகி விடுகின்றனர். பல காரணங்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து முஸ்லிம் பெண்களின் உயர் கல்வியை மறுத்து விடுகின்றனர்.

பெண்கள் தமது உயர் கல்வியை தொடராமைக்கான சில காரணங்களை அவதானிப்போம்.

  • உயர் கல்வியின் பெறுமதி உணரப்படாமை.
  • பொருளாதார நெருக்கடிகள்
  • திருமணம்
  • பெண்கள் ஏன் உயர் கல்வியை தொடர வேண்டும், தொழில் செய்யவேண்டும் என்ற உதாசீனம்.

இவற்றின் நடைமுறைத் தன்மையையும், சில பரிந்துரைகள் தொடர்பாகவும் நோக்குவோம்.

உயர் கல்வியின் பெறுமதி உணரப்படாமை

முஸ்லிம் பெண்கள் தமது உயர் கல்வியைத் தொடர்வதால் கிடைக்கும் பலன்கள் சமூகத்தின் மத்தியில் உணரப்படாமையும் அவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்லாமைக்கான ஒரு காரணமாகக் காணப்படுகிறது. அதாவது இதன் பெறுமதியை உணர்ந்த பெற்றோர் தம் பிள்ளைகளினதும், கணவன்மார் தம் மனைவிகளினதும், சகோதரர்கள் தங்கள் சகோதரிகளினதும் கல்விக்காக பெரிதும் உதவுகின்றனர். வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். ஆயினும் சில இடங்களில் கல்வியின் பெறுமதியை உணர்ந்த மாணவிகள் தம் பெற்றோரால் அல்லது சமூகத்தால் மறுக்கப்படுவதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

சமூகத்தில் முஸ்லிம் பெண் கல்வியலாளர்கள், வைத்தியர்கள், அரச சட்டத்துறை சார்ந்தவர்கள் உருவாக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். ஆனால் அதனை தன் மகள், சகோதரி, மனைவி சார்பில் உருவாக்க வேண்டும் என்பதை மறந்து விடுகின்றனர்.

பொருளாதார நெருக்கடிகள்

பொருளாதார நெருக்கடிகளும் சிலவேளை கல்விக்கு தடையாகும் சந்தர்ப்பங்களுண்டு. ஒரு வீட்டில் ஒரே சந்தர்ப்பத்தில் பல பிள்ளைகள் கல்வியை தொடர்கின்ற போது பெண் பிள்ளைகளின் கல்வி உயர்தரத்துடன் முற்றுப் பெற்று விடுகின்றன. மேலும் உயர்கல்வியை தொடர்வதால் செலவுகள் அதிகரிக்கும் என்ற நிலைப்பாட்டிலும் உள்ளனர்.

அரச பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு அரசாங்கம் ‘Mahapola’, பல்கலைக்கழகங்கள் ‘Bursary’ போன்ற நிதி உதவிகளை வழங்குகின்றன. மேலும் இத்தகையோருக்கு தற்காலத்தில் பல தொண்டு அமைப்புக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி செய்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கல்வியைத் தொடரும் அதேவேளை எழுத்துத்துறை, அலங்காரப் பொருட்கள் தயாரிப்பு, ஓவியம் வரைதல், கைவினை அலங்காரம் போன்றவற்றில் ஈடுபட்டு செலவுகளை ஈடு செய்யலாம்.

எத்தகைய நெருக்கடிகளிலும் கல்வியைத் தியாகம் செய்யாதிருந்தால் எதிர்காலம் கல்வியால் சிறக்கும் என்பதில் ஐயமில்லை.

திருமணம்

திருமணம் குடும்ப வாழ்விற்கு அடித்தளம் என்றே சொல்லலாம். ஆனால் கல்விக்குத் தடையில்லை. ஆயினும் நடைமுறையில் சில பெண்கள் திருமணம் உயர்கல்விக்கு முட்டுக் கட்டையாக அமைந்து விடுமோ என எண்ணுகின்றனர். ஆனால் அவ்வாறல்ல பல்கலைக்கழக அனுமதி கிடைத்த ஒரு பெண் திருமணம் செய்த பின்னரும் கல்வியை தொடர முடியும். மேலும் சில காரணங்களுக்காக அனுமதியைப் பிற்போட்டு குறிப்பிட்ட வருடத்திற்குள் கல்வியைத் தொடரவும் முடியும். அதற்கான வாய்ப்பு அரச பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்றது.

உதாசீனம்

சமூகத்தில் முஸ்லிம் பெண்கள் ஏன் கல்வி கற்க வேண்டும், தொழில் செய்ய வேண்டும் என்ற உதாசீனம் காணப்படுகின்றது. இஸ்லாம் கல்வியைப் பெறுவதில் ஆண் பெண் வேறுபாட்டை வழங்கவில்லை. அவர்கள் கற்று தொழில் புரிவதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தம் குடும்பத்தினருடைய தேவைகளை நிறைவேற்ற முடிகிறது. அது கல்வி, திருமணம், குடும்பச் செலவுகள் போன்ற எதுவாக இருப்பினும் சரியே. மேலும் சமூகத்திலுள்ள வறுமைத் துயரை அகற்ற கைகொடுக்கவும் முடியும்.

நவீன உலகில் முஸ்லிம் பெண்கள் கல்வித் துறையில் மாத்திரமன்றி இஸ்லாமிய அறிவியல், அரசியல், விஞ்ஞானம், ஊடகம், சட்டம், வைத்தியம், இலக்கியம், நிர்வாகம், வணிகம், விவசாயம், சுகாதாரம் போன்ற அனைத்துத் துறைகளிலும் கால் பதிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

பெண்கள் கல்வி கற்பதன் அவசியம்

பெண் என்பவள் ஒரு குடும்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறாள். அறிவு வளர்ச்சிக்கும், பண்பாட்டிற்கும் அடித்தளம் இடுபவள் அவளே. ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் பள்ளிக்கூடமும், ஆசிரியையும் தாயாகிய பெண்ணே. ஆகவே முதலில் அவள் படித்திருக்க வேண்டும். கேள்வி ஞானம் அவளுள் உதயமாக வேண்டும். ஒரு பெண் கற்ற பெண்ணாக மாறுவதால்,

  • சிறுவர்களின் அறிவியல் வளர்ச்சிக்கு பங்களிக்க முடிகிறது.
  • சமயோசிதத்தடன் குடும்பத்தை பராமரிக்கும் ஆற்றலைப் பெறுகிறாள்.
  • உறவினர்களுடனான ஒருங்கிணைப்பின் மூலம் சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறாள்.
  • தொழில்சார் நடவடிக்கைகள் மூலம் வீட்டுக்கு மேலதிக வருமானம் உழைக்கலாம்.
  • சமுதாய முன்னேற்றத்திற்கு உதவ முடிகிறது.
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கலாம்.

என நன்மைகள் ஏராளம்.

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்று பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்து அனுமதி கிடைத்தும் உதாசீனம் செய்வது வளங்களை வீணாக்குவது மாத்திரமன்றி இன்னொருவருக்கு கிடைக்கும் வாய்ப்பும் இழக்கப்படுவதற்கு தாம் காரணமாகுவதை உணர வேண்டும். ஏனெனில் சமூகத்தில் பல யுவதிகள் சிறந்த பெறுபேறுகள் பெற்றும் பல்கலைக்கழக வாய்ப்புகள் இன்றி அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்கும் தருணத்தில் தமக்கு கிடைத்த வாய்ப்பை உதாசீனம் செய்வது மிகப் பெரிய அநியாயமாகும்.

மேலும் நாளை மறுமையில் நமது இளமை, கல்வி, குடும்ப வாழ்வு என்று அணு அணுவாக விசாரிக்கப்படும். எனவே அச்சந்தர்ப்பத்தில் நமக்கு கிடைத்த வாய்ப்பை உதாசீனம் செய்தமை பற்றியும் விசாரிக்கப்படும் என்பதை மறந்துவிடலாகாது.

மேலும் உயர் கல்வியை தொடர்ந்து வருடங்கள் வீணாகுவதை விட தொழில் செய்யலாம் என்ற மனநிலையின்றி ஒரு பட்டப்படிப்புடன் தொழில் புரிவதால் அத் தொழிலுக்கு பெறுமதி சேர்க்கும் வகையில் சிந்தித்து செயற்படுவோம்.

இஸ்லாம் கல்வியை ஒரு குறிப்பிட்ட பருவத்துக்கோ, காலத்துக்கோ உரியதாக வரையறுக்கவில்லை. முஸ்லிம் சமூகம் தாயின் கருவறை முதல் மண்ணறை வரை கற்கும் சமூகமாகத் திகழ வேண்டும்.

ஆகவே கிடைக்கும் வாய்ப்புக்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம். பல்கலைக்கழகங்களில் கல்வியைப் பெற்று தொழிலை அடைவது மாத்திரமன்றி பல்கலைக்கழக வாழ்வை எமது  ஆளுமை விருத்திக்கான களமாகவும் மாற்றிக் கொள்வோம்.  இன்ஷா அல்லாஹ்!

ASMA MASAHIM
PANADURA
SEUSL

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் நாம் பல்கலைக்கழகம் செல்வோமா? என்றும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவது பற்றியும் சிந்திக்கும் இத்தருணத்தில் இக் கட்டுரையை எழுதுவது மிகப்பொருத்தம் என்று நினைக்கிறேன். மேலும் சிலருடன்…

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் நாம் பல்கலைக்கழகம் செல்வோமா? என்றும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவது பற்றியும் சிந்திக்கும் இத்தருணத்தில் இக் கட்டுரையை எழுதுவது மிகப்பொருத்தம் என்று நினைக்கிறேன். மேலும் சிலருடன்…

12 thoughts on “முஸ்லிம் பெண்களும் உயர் கல்வியும்

  1. An intriguing discussion is worth comment. I do think that you ought to write more on this issue, it might not be a taboo subject but usually people don’t speak about such topics. To the next! All the best!!

  2. After checking out a number of the blog posts on your web site, I honestly like your way of blogging. I book marked it to my bookmark website list and will be checking back soon. Take a look at my web site as well and let me know how you feel.

  3. Сделайте свой первый шаг к большому выигрышу с lucky jet онлайн! Веселье и возможности для заработка ждут вас после регистрации на 1win.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *