ஊகச் செய்திகளையும் உத்தியோகபூர்வ செய்திகளையும் இனங்காண்பது எவ்வாறு?

  • 42

கடந்த (09.11.2020 – 15.11.2020) வார இலங்கை அரசியல் பரப்பை அவதானிக்கையில் பேசு பொருளாக இருந்த விடயங்களே கொரோனா சடலங்களை புதைத்தல், பஸ் கட்டண அதிகரிப்பு, வெள்ளைச் சீனி விலை குறைப்பு என்பனவாகும்.

மேற்குறித்த செய்திகள் எம்மை ஆரம்பத்தில் வந்தடைந்த விதங்களை அவதானிக்கையில் கொரோனா சடலங்களை புதைத்தல் தொடர்பாக அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டாதாக நீதியமைச்சர் அலிசப்ரி அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் சில தலைவர்களுடன் தொடர்பு கொண்ட தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் அதனை தொடர்ந்து குறித்த தலைவர்கள் வெளியிட்ட ஒலிப்பதிவுகள் மற்றும் ஊடக அறிக்கைகள் மூலம் வெளியாகின.

கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஊடகவியாளர் மாநாட்டில் தெரிவித்தார். பின்னர் இது பற்றிய விசேட அறவித்தலை தேசிய போக்குவரத்து சபையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருந்தனர்.

பஸ் கட்டணம் 1.2% ஆல் அதிகரிப்பு

சீனியின் விலை குறைப்பு தொடர்பான அறிவித்தல் ஓர் வர்த்தமானி அறிவித்தலாகவே வெளிவந்தது. இதுபற்றிய ஊடகவியாளர் மாநாடுகளோ, அமைச்சரவை முடிவுகளோ வெளியாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளைச் சீனிக்கு உச்சபட்ச விற்பனை விலை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

இதில் முதலாவது விடயம் தொடர்பாக கடந்த வாரம் ஒலிப்பதிவுகளும், ஊடக அறிக்கைகளும் வெளிவந்ததும் சமூகத்தில் இரவோடிரவாக சமூகவலைத்தளங்களில் கொண்டாடி மகிழ்ந்தாலும் குறித்த விடயம் தற்போதுவரை நடைமுறைக்கு வரவில்லை. அதுபற்றி நீதியமைச்சர் அலிசப்ரி அவர்கள் தெரிவித்தாக ஊடகங்கள் வாயிலாகவும், தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொண்ட சிலரும் இது பற்றி அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் ஆவலுடன் மறுநாள் அமைச்சரவை முடிவை பார்த்தால் அதில் இதுபற்றி எவ்வித முடிவும் இருக்கவில்லை. பின்னர் சில அமைச்சர்கள் தெரிவித்த விடயம் இது பற்றி அமைச்சரவையில் கலந்துரையாடினாலும் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை சுகாதார அமைச்சுக்கே வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். அதாவது குறித்த விடயம் இழுபறிநிலையிலே உள்ளது.

அமைச்சரவை முடிவுகள் – 2020.11.09

கொரோனா மரணங்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்குவது யார்?

அடுத்த விடயங்களான பஸ் கட்டணங்கள் அதிகரித்து நடைமுறையில் உள்ளது. அதற்காக பஸ் உரிமையாளர்கள் கொண்டாடி மகிழவில்லை. சீனி விலை குறைக்கப்பட்டுள்ளது. அதற்காக அவர்கள் போராடவில்லை ஆனால் பல வியாபாரிகள் சீனியை பதுக்கிவிட்டனர்.

சடலங்களை அடக்கும் விவகாரம் இலங்கையில் ஒரு மதசார் பிரச்சினையாகவே பார்க்கப்படுகின்றது. ஆனால் இது முஸ்லிம்களுடைய மாத்திரமுள்ள பிரச்சினையல் கிறிஸ்தவர்களுக்கும் உள்ள பிரச்சினையாகும். இப்பிரச்சினையின் ஆரம்பம் முதல் இறுதிவரை கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் செயற்பட்ட விதத்தை அவதானிக்கையில்,

கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்வது கத்தோலிக்க மக்களின் உரிமை என வழக்குத் தாக்கல்

2170/08 ஆம் இலக்க 2020/04/11 ஆம் திகதி அதி விசேட வர்த்தமானிக்கு அமைய (61அ) கொறோனாவைரஸ் நோய் 2019 (கொவிட்-19) இனால் இறந்துள்ள ஆளொருவரின் பூதவுடல் தகனம் செய்யப்படுதல் வேண்டும் என்ற வர்த்தமானி கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டது.

கொரோனாவால் உயிரிழப்போர் உடல் தகனம் செய்யப்படும் – அதி விசேட வர்த்தமானி வெளியீடு

அதனை தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தில் இதற்காக மதசார் அமைப்புகளும் அரசியல்சார் கட்சிகளும் வித்தியாசமான கோணத்தில் போரிட்டனர். மதசார் அமைப்புகளில் பல சடலங்களை எரிக்க வேண்டாம் என்று கோரும்போது சிலர் எரித்த சாம்பலையாவது வழங்கும்படி கோரினர்.

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச அவர்களுக்கு ஓர் திறந்த மடல்!

அரசியல் கட்சிகளோ சடலங்கள் எரிப்பதை ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத் தேர்தல் வரை காட்டி அரசுக்கு எதிரான முஸ்லிமாகளின் வாக்கென திரட்டி ஒக்டோபரில் மீண்டும் 20 என்ற சர்வாதிகாரத்தை உருவாக்க அரசுக்கே தாரைவார்த்து விட்டனர். ஆனால் இதுவரை முஸ்லிம் பொதுமக்களின் சடலங்களை அடக்குதல் என்ற தேவை நிறைவேறவில்லை.

மறுபுறம் கிறிஸ்தவ மக்களின் நடவடிக்கைகள் அவதானிக்கையில் அண்மையில் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணித்த ஒருவரை எரிக்க கொண்டுபோவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குடும்பமொன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

இவ்வாறு தனிநபர்கள் போராடும் போது, கத்தோலிக்க அமைப்பொன்றான கத்தோலிக்க பிரதிஷ்டை அமைப்பு வழக்குத் தாக்கல் தொடர்ந்துள்ளது.

இறுதியாக அவதானிக்கையில் பஸ் கட்டணம் அதிகரித்து, சீனியின் விலை குறைக்கப்பட்டுள்ளது ஆனால் சீனியில்லை. சடலங்களை அடக்கும் அனுமதிகிடைக்கவில்லை.

இந்தச் சம்பவங்களில் முஸ்லிம்களாகிய நாம் சிந்திக்கவும் வேண்டிய விடயங்கள் உள்ளது.

அதாவது இங்குள்ள மூன்று விடயங்களையும் அரச தரப்பைச் சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் தேசிய போக்குவர்த்து ஆணைக்குழு, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை என்பனவாகும்.

வெளியிடப்பட்ட விதத்தை அவதானிக்கையில் தொலைபேசி அழைப்பு, ஊடக மாநாடு மற்றும் விசேட அறிவித்தல், வர்த்தமானி அறிவித்தல் என்பனவாகும்.

வாசிக்கின்ற நீங்கள் மட்டுமல்ல, எழுதும் நான் உட்பட எம் சமூகம் தொலைபேசி அழைப்பை கேட்டதும் கொண்டாடி மகிழ்ந்தோம் ஆனால் ஒரு விடயத்தை சிந்திக்க மறந்தோம். அதுதான்,

“அரசாங்க அறிவித்தலை உத்தியோகபூர்வமாக பெறுவது எவ்வாறு?”

என்பதை சிந்திக்க மறந்தோம்.

முதலில் நாம் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும் அரசாங்கம் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கைகளையும், தொலைபேசி அழைப்பாக அல்லது ஒலிப்பதிவாக வெளியிடுவதில்லை. மாறாக ஊடக அறிக்கை, ஊடக மாநாடு, விசேட அறிவித்தல், அதி விசேட வர்த்தமானி அறிவித்தல், சட்டமூலம், சட்டம், அமைச்சரவை முடிவுகள், வரவு செலவுத் திட்ட உரை என்பனவற்றின் ஊடாகவே வெளியிடுகின்றது.

இவற்றை வெளியிடும் அமைப்புக்களாக அரசாங்க தகவல் திணைக்களம், அமைச்சரவை அலுவலகம், அரசாங்க அச்சுத் திணைக்களம், பாராளுமன்றம் மற்றும் உரிய அமைச்சுக்களின் ஊடகப்பிரிவுகள் என்பன காணப்படுகின்றன.

வர்த்தமானி அறிவித்தல்

இலங்கை வர்த்தமானி அல்லது அரச வர்த்தமானி என்பது சாதாரண மக்களினால் கசெட் அல்லது கெசட் என்றவாறு அழைக்கப்படும் வர்த்தமானப் பத்திரிகை இலங்கை அரசினால் அரச வேலைகளுக்காக வேலைக்கு ஆட்களைச் சேர்த்தல், அமைச்சர்கள், செயலாளர்கள் போன்ற உயர் அரச பதவிகளுக்கு ஆட்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பினை வெளியிடுதல், ஏனைய அரச விளம்பரங்களை மற்றும் சில வங்கி விளம்பரங்களை வெளியிடல் ஆகியவற்றுக்குக்குப் பயன்படும் ஓர் அரச பத்திரிகை ஆகும். இதன் முதலாவது பதிப்பானது மார்ச் 15, 1802 இல் வெளியிடப்பட்டதுடன், இது 1972 ஆம் ஆண்டு மே வரை வெளிவந்து 15011 ஆவது பதிப்புடன் இடைநிறுத்தப்பட்டது. பின்னர் 1978 ஆம் ஆண்டில் மீண்டும் 1 ஆவது இலக்கத்துடன் மீள் ஆரம்பிக்கபட்டது. இது சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் வெளிவருகின்றது. பொதுவாக வாரம் ஒரு முறை (வெள்ளிக்கிழமை) வெளிவரும் இது சில விசேட சந்தர்ப்பங்களில் மேலதிக பதிப்புக்களும் வெளிவருகின்றன. அநேகமாக இலங்கையில் உள்ள எல்லாப் பிரதான, உப அஞ்சல் (தபால்) அலுவலகங்களிலும்,பொது நூலகங்களிலும் இதைப் பார்க்கக்கூடியதாக இருப்பதோடு www.documents.gov.lk என்ற இணையத்தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப் பத்திரிகை வெளிவரும் அறிவிப்புக்கள் சட்டத்தன்மை கொண்டவைகளாகும்.

மேலும் சில விசேட சட்டங்களை வெளியிடுவதற்கு அதி விசேட வர்த்மானி வெளியிடப்படுகின்றது. இதற்கு குறிப்பிட்ட நேரம் காலம் என்று காணப்படுவதில்லை. இதனால்தான் கடந்த வாரம் வெள்ளைச் சீனி விலை குறைப்பு பற்றி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இலங்கையில் கொரோனாவினால் மரணிப்போரைப் எரிக்க வேண்டும் என்று ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் அதிவிசேட வர்த்தமானி மூலமே வெளியிடப்பட்டது. எனவே குறித்த வர்த்மானியை செல்லுபடியற்றதாக்க அதனை திருத்துகின்ற அல்லது செல்லுபடியற்றதாக்கும் விதத்தில் இன்னொரு வர்த்தமானியை வெளியிட வேண்டும்.

அமைச்சரவை முடிவுகள்

இலங்கை அமைச்சரவை என்பது இலங்கை பாராளுமன்றத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களின் பேரவையாகும். அமைச்சரவைக்கான உறுப்பினர்களை அரசுத்தலைவர் நியமிப்பார். அதிகாரபூர்வமாக அரசுத்தலைவரே அமைச்சரவையின் தலைவராக இருப்பார். அரசின் முக்கிய பிரச்சினைகளை விவாதிப்பதற்கு வாரத்தில் பல முறைகள் அமைச்சரவை கூடுகிறது. அமைச்சரவைக்கு வெளியே பிரதி அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர்கள் ஆகியோரும் அமைச்சர்களாக உள்ளனர்.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்தின் அமைச்சரவை

தற்போது இலங்கையில் வாரந்தம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அமைச்சரவை கூடுகின்றது. அவ்வாறே அங்கு நாட்டின் பல பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடி செவ்வாய்க்கிழமை இடம்பெறுகின்ற ஊடகவியாளர் மாநாட்டில் ஊடக அமைச்சர் அவர்களினால் அமைச்சரவை முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுகின்றது. மேலும் அதே தினத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் மும்மொழிகளிலும் வெளியிடப்படுகின்றது. அமைச்சரவையின் உத்தியோகபூர்வ இணையதளம் www.cabinetoffice.gov.lk ஆகும்.

இங்கும் நாம் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள அமைச்சரவையில் பல விடயங்கள் கலந்துரையாடினாலும் எது பற்றி இறுதித் தீர்மானம் எட்டப்பட்டதோ அவை மாத்திரம்தான் அமைச்சரவை முடிவாக வெளியிடப்படும். கடந்த வார அமைச்சரவையில் கொரோனா சடலங்களை எரித்தல் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. என்றாலும் தீர்மானம் எடுக்காமை காரணமாக மறுநாள் குறித்த விடயம் இடம்பெறவில்லை.

கொரோனாவினால் உயிரிழப்போரை அடக்கம் செய்ய அமைச்சரவை அனுமதித்தது உண்மை – சமல்

சட்டம், சட்ட மூலம்

சட்டம் என்பது ஒரு நிறுவன அமைப்பு முறையால் அந்நிறுவன ஆளுகை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும். அவ்வகையில் இலங்கை என்ற ஆளுகை எல்லைக்குள் தற்போது 1978 ஆம் ஆண்டு யாப்பின் 20ஆம் திருத்தம் தற்போது நடைமுறையிலுள்ளது. இது தவிர தனியார் சட்டங்களும் நடைமுறையில் உள்ளது. இலங்கையில் சட்டமியற்றும் தளமாக பாரளுமன்றம் காணப்படுகின்றது.

சட்ட மூலம் என்பது புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள சட்டமொன்றை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களின் பார்வைக்காக வெளியிடப்படும் போது சட்டமூலம் எனப்படுகின்றது.

குறித்த காலப்பகுதிக்குள் குறித்த சட்டத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமெனின் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய முடியும்.

20 ​ஆம் திருத்த சட்டமூலமும் சட்டமும்

தற்போது நடைமுறையிலுள்ள 20 ஆம் திருத்தம் நடைமுறைக்கு வர முன் சடடமூலமாக இருந்த போது 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

ஊடகறிக்கை, ஊடக மாநாடு

ஒரு நிறுவனம் தமது அறிவித்தல்களை பொது மக்களுக்கு எழுத்து வடிவில் வெளியிடும் முறையே ஊடகறிக்கை இது குறித்த நிறுவனத்தின் ஊடக பிரிவின் மூலம் வெளியிடப்படும்.

ஊடக மாநாடு என்பது ஊடகங்களுக்கு தகவல்களை அதிகாரப்பூர்வமாக விநியோகிப்பதற்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஆகும். குறிப்பிட்ட மக்கள் தொடர்பு பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைவதாகும்.

வரவு செலவு திட்ட உரை

ஒரு அரசாங்கம் எதிர்வரும் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வருமான செலவுகளை எவ்வாறு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்பதை பாராளுமன்றத்தில் முன்வைக்கும் உரையே வரவு செலவு திட்டமாகும். இது பாராளுமன்றத்தில் நிதியமைச்சரினால் முன்வைக்கப்படும். வழமையாக இலங்கையில் நவம்பர் மாதத்தில் வரவு செலவு திட்டம் முன்வைக்கப்படும். கடந்த 17 ஆம் திகதி இலங்கை அரசின் வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டது.

உற்பத்தி பொருளாதாரத்தை நோக்கிய 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம்

அரசாங்க தகவல் திணைக்களம்

வெகுசன ஊடக அமைச்சின் கீழ் தொழிற்பட்டு வருவதுடன் அரசாங்க செய்திகளை அனைவரும் இலகுவாக பெறக்கூடிய விதத்தில் செய்திகளை வழங்குவதில் முன்னணியாக செயற்பட்டு வரும் ஊடகமே அரசாங்க தகவல் திணைக்களம் (DGI) ஆகும்.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல், பயிற்சி நெறிகளை வழங்குதல், மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது. அரசாங்கத்துடன் இணைந்து தரவுப் பகுப்பாய்வு, தகவல் முகாமைத்துவம், ஒலி/ஒளிகாட்சியமைப்புக்கள் தயாரிப்பு, மற்றும் பொதுமக்கள் காப்பகமாகவும் தொழிற்பட்டு வருகின்றது.

2016 ஆம் ஆண்டிலிருந்து, இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் புதிய அறிமுகங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதில் அரசாங்க தகவல் திணைக்களம் வலுவான உன்னத பணியை ஆற்றுகின்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ திணைக்களம் www.news.lk, www.dgi.gov.lk என்பனவாகும்.

அரசாங்க அச்சுத் திணைக்களம்

1802 ஆம் ஆண்டு முதலாவது வர்த்தமானப் பத்திரிகை வெளியிடப்பட்டதிலிருந்து அரசாங்க அச்சுத் திணைக்களமே இலங்கை அரசாங்கத்தின் ஏக உத்தியோகபூர்வ அச்சாளராகவும் பிரிசுரிப்பாளராகவும் திகழ்கின்றது. இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக சமூக, பொருளாதார மற்றும் தொழிநுட்ப மாற்றங்கஞக்கு சாட்சி பகரும் அரசாங்க அச்சுத் திணைக்களம் பழைமை வாய்ந்த அரசாங்க நிறுவனங்களில் ஒன்றாகும்.

அரசாங்க நிறுவனங்களுக்குத் தேவையான படிவங்கள் முதற்கொண்டு, பாதுகாப்பானதும், இரகசியம் பேண வேண்டியதுமான வாக்குச் சீட்டுக்கள் மற்றும் முத்திரைகள் வரை அனைத்து வகையான அச்சீட்டுத் தேவைகளையும் நிறைவேற்றுகின்றது.

தற்போது கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை, வாகன சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட அனைத்து அரசாங்க அச்சு நடவடிக்கைகளும் அரச அச்சக திணைக்களத்தின் மூலம் மீற்கொள்ளப்படுகின்றது.

பாராளுமன்றம்

நாடாளுமன்றம் அல்லது இலங்கைப் பாராளுமன்றம் 225 அங்கத்தவர்களைக் கொண்ட ஓரவையுடைய சட்டமன்றமாகும். இலங்கை பாராளுமன்றம் 5 ஆண்டுக்கால தவணையைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தை ஒத்த முறையை கொண்டுள்ளது.

சபாநாயகர் அல்லது அவர் சமூகமளிக்காத போது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அல்லது குழுக்களின் பிரதித் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார். நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க அல்லது கலைப்பதற்கு அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.

மொத்தம் 225 அங்கத்தவர்களில் 196 அங்கத்தவர்கள் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து பொது வாக்கெடுப்பின் மூலமும், மிகுதி 29 அங்கத்தவர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெரும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசியப் பட்டியலிருந்தும் தெரிவு செய்யப்படுகின்றனர். பாராளுமன்றத்தின் ஒத்தியோகபூர்வ இணையதளம் www.parliament.lk ஆகும்.

இவற்றிற்கு மேலதிகமாக ஒவ்வொரு அமைச்சுக்களுக்கும் அரச நிறுவனங்களுக்குமென ஒத்தியோகபூர்வ இணையதளம், சமூக வலைத்தளங்களும் காணப்படுகின்றன.

இவ்வாறு இலங்கையில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை பெறுவதற்கான ஒரு முறைமை உள்ளது. எனவே ஒரு தகவலை ஆரவாரமின்றி உத்தியோகபூர்வமாக பெற்று அல்லது உரிய ஆதரங்களுடன் பெற்று பதிவிடுவோம்.

சில சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் இலட்சினை, பெயரை பயன்படுத்தி பொய்யான தகவல்களும் பரப்பட்டுள்ளன. எனவே ஒரு தகவல் இங்கு குறித்துக் காட்டியுள்ள உத்தியோகபூர்வ இணையதளங்களில் பதிவிடப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

நமது கலந்துரையாடல்களில் ஒன்று கொரோனா மூலம் மரணித்த சடலங்களை எரித்தல் பற்றியாகும். நாம் இது பற்றி உத்தியோகபூர்வ தகவல் கிடைக்க முன்னமே கொண்டாடி மகிழ்ந்தோம். ஆனால் அவ்வாறு கொண்டாடி மகிழ்வதோ நன்றிக் கடிதம் பகிர்வதோ பொருத்தமற்றது.

ஏற்கனவே குறிப்பிட்ட படி வர்தமானி அறிவித்தலாகத்தான் வர வேண்டும். அவ்வாறு வந்தாலும் கொண்டாடி மகிழ வேண்டாம். ஏனெனில் வர்த்மானியை இன்னொரு வர்த்தமானியைக் கொண்டு மாற்ற முடியும். அவ்வாறே இது கொண்டாடி மகிழ கிடைத்தது ஒன்றும் விசேட சலுகையல்ல மாறாக எமக்கிருந்த உரிமையை பறித்துவிட்டு மீண்டும் தருவதாகும்.

உங்கள் சிந்தனைக்கு ஒரு கேள்வியுடன் முடிக்கின்றேன்.

உங்கள் கையடக்க தொலைபேசியை திருடி அதில் உள்ள சில நண்பர்களின் இலக்கத்தை அழித்துவிட்டு, கையடக்க தொலைபேசியின் திரையில் ஓர் கீறல் விழுந்த நிலையில் தொலைபேசியை திருடியவனே கொண்டு வந்து தந்தால் நீங்கள் செய்வது என்ன?

 Ibnuasad

கடந்த (09.11.2020 – 15.11.2020) வார இலங்கை அரசியல் பரப்பை அவதானிக்கையில் பேசு பொருளாக இருந்த விடயங்களே கொரோனா சடலங்களை புதைத்தல், பஸ் கட்டண அதிகரிப்பு, வெள்ளைச் சீனி விலை குறைப்பு என்பனவாகும். மேற்குறித்த…

கடந்த (09.11.2020 – 15.11.2020) வார இலங்கை அரசியல் பரப்பை அவதானிக்கையில் பேசு பொருளாக இருந்த விடயங்களே கொரோனா சடலங்களை புதைத்தல், பஸ் கட்டண அதிகரிப்பு, வெள்ளைச் சீனி விலை குறைப்பு என்பனவாகும். மேற்குறித்த…

3 thoughts on “ஊகச் செய்திகளையும் உத்தியோகபூர்வ செய்திகளையும் இனங்காண்பது எவ்வாறு?

  1. 166596 575752Ive writers block that comes and goes and I need to discover a way to get rid of my writers block. It can occasionally be so bad I can barley make sentences. Any suggestions? 474899

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *