தத்தெடுப்பு

0 Comments

அப்துல்லாவுக்கு வயது 42. அவனுக்கோ மூன்று குழந்தைகள். அக்குழந்தைகளில் ஒரு குழந்தை அப்துல்லாவின் மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க தத்தெடுத்துக் கொண்ட குழந்தை ஆகும். ஆனால் தற்போது அவனுடைய மனைவி உயிரோடு இல்லை.

அவனும் அவனது குழந்தைகளும் அவனது வயதான தாயும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்தார்கள்.

என்னதான் அப்துல்லாவுக்கு மூன்று குழந்தைகள் இருந்தாலும், அவன் தத்தெடுத்துக் கொண்ட குழந்தையின் மேல் அவன் காட்டுகின்ற பாசம், அடுத்த இரு பிள்ளைகளின் மேல் காட்டும் பாசத்தை விட மிகவும் குறைவாகவே இருந்தது.

இப்படியே பல காலம் கழிந்தது. காலங்கள் செல்ல செல்ல அவன் அந்தத் தத்தெடுத்த பிள்ளையை கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க தொடங்கினான்.

அவனது குழந்தைகள் இருவருக்கும் புதிய ஆடைகள் வாங்கிக் கொடுப்பது, வெளியே சுற்றுலா கூட்டிச் செல்வது, வெளியே உணவகங்களுக்கு கூட்டிச் செல்வது, என்று அன்பாக நடந்து கொண்டான். ஆனால் அந்தத் தத்தெடுத்த பிள்ளைக்கோ எந்தப் புதிய ஆடைகளும் வாங்கிக் கொடுப்பதில்லை. எங்கும் வெளியே கூட்டிச் செல்வதும் இல்லை. இதனால் அக்குழந்தை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தது.

இப்படியே பல காலம் செல்ல செல்ல ஒரு நாள் பண்டிகை காலத்திற்கு புதிய ஆடைகள் வாங்கி வரும்போது! அப்துல்லா அவனது இரு குழந்தைகளுக்கும் பத்தாயிரம் ரூபா பெறுமதியான ஆடையும் அவன் தத்தெடுத்த குழந்தைக்கு வெறும் 1000 ரூபா விலான ஒரு ஆடையும் வாங்கி வந்தான்.

இதை நன்கு அவதானித்த அப்துல்லாவின் தாய்,

“மகனே! இங்கே வா என்று அழைத்து தன் அருகில் அமர்ந்து கொள். நான் உன்னிடம் ஒரு கதை கூறுகிறேன். என்று கதையை சொல்ல ஆரம்பித்தாள். மகனே! எனக்கு நான்கு குழந்தைகள். அதில் மூவர் தான் என் குழந்தை. உன்னை வெறும் ஏழு மாத குழந்தையாக இருக்கும்போதே உன் தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க நான் உன்னை தத்தெடுத்துக் கொண்டேன். அன்றிலிருந்து இன்றுவரை உன்னை ஒருபோதும் நான் கஷ்டப்படுத்தியதில்லை. என் அடுத்த பிள்ளைகள் மூவரை போலவே உன்னையும் நான் வளர்த்து வந்தேன். என் மூன்று பிள்ளைகளுக்கும் போலவே உனக்கும் நான் பாசம் காட்டினேன். உனக்கு நான் எவ்விதக் குறையும் வைத்ததில்லை. மகனே! சற்று யோசித்துப் பார். நான் உன்னை அன்றே வெறுத்து இருந்தால், உனக்கு பாசம் காட்டாமல் இருந்திருந்தால், என் மூன்று பிள்ளைகளுக்கும் பத்தாயிரத்தில் ஆன ஆடையும் உனக்கு மட்டும் ஆயிரம் ரூபாவில் ஆன ஒரு ஆடையும் என்று உன்னை அணு அணுவாக வெறுத்து உன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருந்தால்! உன் நிலைமை இன்று எப்படி இருக்கும்”

என்று கூறியதும், அப்துல்லாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஊற்றியது. அவன் செய்த தவறை உணர்ந்துகொண்ட அவன் கண்களில் கண்ணீர் வடிந்த வண்ணம் அவன் செய்த தவறுக்காக வருந்தியபடி அவன் தத்தெடுத்த குழந்தையின் முகத்தை பார்த்துக்கொண்டு ஒன்றும் பேசாமல் திகைத்தபடி நின்று கொண்டிருந்தான்.

நண்பா! ஒன்றை ஒன்று புரிந்து கொள். உன்னை நம்பி வரும் ஒரு குழந்தையை உன்னதமாக பார்த்துக்கொள் ஒரு நாள் இல்லை ஒரு நாள் உன்னை அக்குழந்தை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளும்.

Fasool Muhammadh Fasroon
Kekirawa,
Udanidigama

Leave a Reply

%d bloggers like this: