நான் இரசித்து படித்த பக்கம்

  • 12

என் வாழ்க்கைப் புத்தகத்தை மீண்டும் ஒரு முறை புரட்டிப் பார்க்கிறேன், நான் இரசித்து படித்த ஏராளமான பக்கங்களுல் என் பள்ளிப் பருவமே முதன்மையானதும், இனிமையானதும் கூட. தொலைக்கவே கூடாத பக்கம் என்றால் அதுவும் பள்ளிப் பருவமே. எல்லோர் வாழ்க்கையிலும் பள்ளிப் பருவம் ஒரு இனிமையான காலம் தான்..நினைக்கையில் இனிக்கும் பள்ளிப் பருவம் எவ்வளவு சுவாரஷ்யமானது. தவமே இல்லாமல் கிடைத்து, மீண்டும் எவ்வளவு தான் தவம் இருந்தாலும் பெற முடியாத ஒரு அரிய வரம் என்றால் அது பள்ளிப் பருவமே.

பெற்றோரின் கனவுகளை மனதில் ஏந்தியும், புத்தகப் பைகளை முதுகில் ஏந்தியும் முதன் முதலாய் பள்ளிப் படி மிதித்த நினைவுகள் இன்றும் என் மனதில் அலை மோதுகின்றன. கண்ணீருடன் தான் முதன் முதலாய் பாடசாலை சென்றேன், இறுதியில் கண்ணீருடன் தான் விடை பெற வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும் மனப் பக்குவம் அப்போது எனக்கு இல்லை. அன்று நான் சந்தித்த அறிமுகம் இல்லாத புது முகங்கள் தான் நான் நான் உருவாக்கிக் கொண்ட முதலாவது நட்பு வட்டமும் கூட.

வெள்ளைச் சீருடைகள் அணிந்து, வெண்மையான மனதுடனும், வெண் புறாக்கள் போல் பள்ளியில் பறந்து உலாவிய நாட்களை நினைதுப் பார்க்கையில் மனம் ஆனந்தமடைகின்றது. பேதம் பாராத நட்பு, களங்கமில்லா உள்ளங்கள், வகுப்பறை சண்டைகள், அரட்டைகள், விளையாட்டுப் போட்டிகள், வருடார்ந்த சுற்றுலாக்கள், கலை விழாக்கள், காலைக் கூட்டங்கள், என அனைத்து நிகழ்வுகளும் நினைவுகளாக என் கண் முன் நிழலாடுகின்றன. தற்காலிக சந்தோசங்களுக்கு சில சமயங்களில் நினைவுகளும் அழகாகும் என்பதை என் பாடசாலை நாட்களை நினைக்கையில் புலனாகிறது.

பெரும்பாலாக வீட்டு வேலைகள் தருகின்ற பட்சத்தில் ஆங்கிலம் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் நம்மில் பலர் வீட்டு வேலைகள் செய்வது குறைவு. வகுப்பறைக்கு வந்து நன்றாக செய்தவர்களின் விடைகளைப் பார்த்து அச்சடிப்போம். அது கிடைக்காத சந்தர்ப்பங்களில் வகுப்பறைக்கு வெளியே செல்லும் படி ஆசிரியர் கட்டளை இடுவார். நண்பர்களுடன் வெளியே நிற்பதும் மகிழ்ச்சி தானே அதனால் அவர் கட்டளைகளை நாம் புறக்கணிப்பதில்லை. வெளியில் போகின்றவர்களில் சிலர் எங்களைப் பார்த்து கேலியாக சிரிப்பார்கள். சிலர் உதவி செய்வார்கள். இத்தகைய தருணங்கள் வாழ்வில் என்றைக்கும் திரும்பி வராதவையாகும்.

பள்ளிக் காலங்கள் எவ்வளவு இனிமையாக இருப்பினும் பரீட்சைகள் சற்று கசக்கத்தான் செய்கின்றன. பாடசாலைக் காலங்களில் நண்பர்களுக்கு விடைகள் சொல்லிக் கொடுத்து ஆசிரியரிடம் மாட்டிக் கொண்ட சந்தர்ப்பங்கள் எண்ணிலடங்காதவை. விடைத் தாள்களையும் விடைகளையும் ஆசிரியர் அறியா வண்ணம் அடுத்தவருக்கு பரிமாறுவதில் எம்மை மிஞ்சிய வல்லுநர்கள் இருக்க மாட்டார்கள். அச் சமயங்களில் ஆசிரியர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் என் பேச்சாற்றல் எனக்கு நிறையவே துணை செய்ததுண்டு. இதில் சிறப்பு என்னவென்றால் சில நேரங்களில் பிழையான விடைகளை நிறையப் பேர் ஒரே மாதிரியாக எழுதி அதனை ஆசிரியர் கண்டு பிடித்து விசாரிக்கையில் அதனை சமாளிக்கும் சக்தி என் நட்பு வட்டாரத்தில் யாருக்கும் இருக்காது.

வகுப்பறைகளில் ஆசிரியர் இல்லாத சமயங்களில் மீன் சந்தைகள் கூட நாம் போடும் சத்தத்தில் தோற்று விடும். வகுப்பறைகளில் சினிமாப் பாடல்கள் பாடி அதிபரிடம் சன்மானம் வாங்கிய சந்தர்ப்பங்கள் ஏராளம். வகுப்பறைகளில் சேட்டைகள் செய்கையில் திடீரென அதிபர் அவ்விடம் வருவதைக் கண்டால் நாம் அனைவரும் ஒஸ்கார் விருது பெற்ற நடிகர்களாய் மாறி விடுவோம். சில நேரங்களில் சாப்பிடத் தோன்றும் பட்சத்தில் பாட வேளைகளிலும் சிற்றுண்டிசாலை செல்வோம். அச் சமயத்தில் தற்பாதுகாப்பிற்காக கையில் புதிய உலகப் படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டே செல்வோம். ஏனென்றால் வரும் வழிகளில் யாரிடமேனும் மாட்டினால் எம்மைக் காப்பாற்றும் ஒரே ஒரு அஸ்திரம் அது தான்.

சில சமயங்களில் எம் வகுப்பறையிலும் மகாபாரதப் போர் தோற்றம் பெறுவதுண்டு. இருப்பினும் மறு நாளே அவற்றையெல்லாம் மறந்து மறு நாளே ஒன்றாக கலந்துரையாட வைக்கும் சக்தி வாய்ந்தது நட்பு மட்டுமே என்பதில் ஐயமில்லை. அது மட்டுமின்றி எம் வகுப்பறைப் பொருட்களை பக்கத்து வகுப்பினர் திருடிச் செல்கின்ற சமயங்களில் படையெடுத்து அவற்றை மீண்டும் பெறும் வகையில் போராட்டம் தொடரும். இவ்வாறு நினைக்கையில் இனிக்கும் பசுமையான நினைவுகளை தந்ததும் பள்ளிக்கூடம் தான்.

பள்ளிக் காதலும் ஒரு அழகிய அனுபவம் தான். அறியாமல் செய்யும் ஒரு அழகிய தவறு என்றும் அதனைக் கூறலாம். எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி அந்தக் காதல் நீண்டு செல்லும். நிச்சயமாக பள்ளிப் பருவ காதல் அனைவரும் சந்தித்த முதல் காதல் அனுபவமாக கூட இருக்கலாம். சேருவதில்லை என நிச்சயமாக தெரிந்த பின்னும் காதலிப்பது ஒரு தனி அழகு தான். இவ்வாறு பாடசாலைக் காலங்களில் நிறைய காதல் காட்சிகளைக் கண்டிருக்கிறேன். காதல் ஜோடிகளுக்கு தூதுப் புறாவாய் நான் சென்று மாட்டிக் கொண்ட சம்பவங்களும் ஏராளம்.

அதிகமான புனைப்பெயர் சூட்டும் கலைஞர்களை நான் பாடசாலையிலே கண்டிருக்கிறேன். எல்லோரையும் ஏதாவதொரு புனைப்பெயர் கொண்டு தான் அழைப்பார்கள். ஆரம்பத்தில் எரிச்சல் ஊட்டினாலும் நாளடைவில் பழகிவிடுகின்றது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் மாணவர்களிற்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் சில வேளைகளில் புனைப் பெயர் வைத்து வேடிக்கை பார்ப்பதுண்டு. வகுப்பறை மேசைகளை உற்று நோக்கினால் காதல் கவிதைகள், சித்திரங்கள், தத்துவக் குறிப்புக்கள் பாடல் வரிகள் என பல கலைஞர்களினதும் கலையாற்றல் ஒன்று சேர அங்கு அரங்கேற்றப் பட்டிருக்கும். அந்தக் கலைஞர்களில் நானும் ஒருத்தி தான்.

விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்ற வேளைகளில் நான் மைதானத்தின் பக்கமே செல்ல மாட்டேன். விளையாட்டில் எனக்கு அதிகளவு ஈடுபாடு இல்லை. வாசிப்பிற்கும் எனக்கும் அதிக நெருக்கம் இருந்ததால் அச் சமயங்களில் நான் பெரும்பாலும் நூலகத்திலேயே இருப்பேன். சில நேரங்களில் என் சகபாடிகள் புத்தகப் பூச்சி என்று என்னைக் கேலி செய்வதும் உண்டு. ஆனால் புத்தகங்கள் தான் என் அறிவுக் கண்களைத் திறந்து விட்டன என்பதே வெளிப்படையான உண்மை.

இவ்வாறு இலை மறை காய்களாக இருந்த என் திறமைகளை வெளியுலகிற்கு காட்டியது நான் கல்வி கற்ற என் இரு பாடசாலைகளே என்பதில் ஐயமில்லை. வெற்றுக் கல்லாய் இருந்த என்னை அழகாக செதுக்கி சிற்பமாக்கிய பெருமை என் கலாசாலைகளே.

இவ்வாறு கடந்து வந்த வாழ்க்கைப் பயணத்தில் பள்ளி நினைவுகள் சுவாரஷ்யமானவை. நண்பர்களுடன் கதை பேசிய தருணங்கள், அதிபரிடம் திட்டு வாங்கிய தருணங்கள், திருட்டுத் தனமாய் வீட்டிற்கு வந்த தருணங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். நிஜ விடயங்களை நினைவுகளில் மீட்டிப் பார்ப்பதும் ஒரு சுகம் தான்.

பாடசாலையை விட்டு வெளியேறி இரண்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் கூட பாடசாலைப் பக்கத்தால் செல்லும் போது கால்கள் அவ்விடத்தை விட்டு நகர மறுக்கின்றன. கடந்து வந்த பாடசாலைப் பயணம் முற்றுப் பெறாமல் நீண்டு கொண்டே சென்றிருக்கலாமே என் என் மனம் ஏங்குகிறது. பள்ளிப் பருவத்து பசுமையான நினைவுகளை மீட்டிப் பார்க்கையில் கண்களோடு சேர்ந்து மனமும் கண்ணீர் மழை பொழிகின்றது.

கற்பனைக் கதைகளில் வருவதைப் போன்று இறைவன் என் முன்னே தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்டால் நிச்சயமாக பள்ளிப் பருவத்தையே மீண்டும் கேட்பேன். இது கற்பனைக்கே பொருந்துமே ஒழிய நிஜத்தில் அல்ல. நினைவுகளை பத்திரப் படுத்தி மீட்டிப் பார்க்கும் போது கூட மனம் உவகையடையத் தான் செய்கின்றது. ஏனென்றால் சில விடயங்கள் நிஜத்தை விட நினைவுகளில் தான் அழகாக தோன்றும். அவை தான் நிரந்தரமானதும் கூட.

Mishfa Sadhikeen
SEUSL

என் வாழ்க்கைப் புத்தகத்தை மீண்டும் ஒரு முறை புரட்டிப் பார்க்கிறேன், நான் இரசித்து படித்த ஏராளமான பக்கங்களுல் என் பள்ளிப் பருவமே முதன்மையானதும், இனிமையானதும் கூட. தொலைக்கவே கூடாத பக்கம் என்றால் அதுவும் பள்ளிப்…

என் வாழ்க்கைப் புத்தகத்தை மீண்டும் ஒரு முறை புரட்டிப் பார்க்கிறேன், நான் இரசித்து படித்த ஏராளமான பக்கங்களுல் என் பள்ளிப் பருவமே முதன்மையானதும், இனிமையானதும் கூட. தொலைக்கவே கூடாத பக்கம் என்றால் அதுவும் பள்ளிப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *