ரமழானும் எமது பணியும்

  • 30

வான் படைத்து மண்படைத்து அதில் மனிதகுலம் படைத்து, மாநபியோடு வான் மறையை எமக்களித்து எம்மை வாழ்வாங்கு வாழ வழிவகுத்து இன்றுவரை எம் சமுதாயத்தை பாதுகாத்து வரும் சர்வ வல்லோன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ் மனிதனை இவ்வுலகில் தனது பிரதி நிதியாக படைத்தான். அவன் மனிதனை படைத்ததன் நோக்கத்தை அல்குர்ஆனில் தெளிவாக கூறுகிறான்.

“மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காகவே படைத்தேன்..”

அல்லாஹ்வின் நோக்கமே மனிதன் தன்னை வணங்க வேண்டும் என்பதாகும். எனவே மனித குலமாகிய நாம் அனைவரும் ஏக இறைவன் அல்லாஹ்வை வணங்கி வழிபட கடமைப்பட்டிருக்கின்றோம். அந்த வகையிலே இன்னும் ஒரு சில நாட்களில் நம்மை நோக்கி ஒரு புனிதமான, நன்மைகளை வாரி வழங்கும் ஒரு மாதம் வருகை தந்து கொண்டிருக்க, அந்த விருந்தாளியை வரவேற்க உலகலாவிய ரீதியில் நம் முஸ்லிம் சமூகம் தடல்புடலாக தயாராகிக் கொண்டிருப்பது நாம் யாவரும் அறிந்ததே…

“உங்களுக்கு முன்னுள்ளோர் மீது கடமையாக்கப்பட்டது போன்றே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.”

இந்த திருமறை வசனமானது எங்கள் மூதாதையார் தொட்டே எம்மீது நோன்பு கடமையாக்கப்பட்டு வருகிறது என்பதை தெளிவாக்கிறது. ஆனால் எம் சமூகம் தொழுகையில் அலட்சியத்தோடு இருந்து, வெறுமனே விடுமுறையை மட்டும் அனுபவித்து, தூக்கமும் விழிப்புமாக கடத்தும் ஒரு மாதமாக இந்த ரமளான் மாதம் தற்காலத்தில் இருந்து வருகிறது. வயோதிபர்கள் தூக்கமும் விழிப்பும் என கழிக்க, நம் இளைஞர் சமுதாயமோ கரம் போட்டுகளுடனும் விளையாட்டு மைதானங்களுடனும் கழித்து ரமழானையே வீணாக்கும் ஒரு நிலை அண்மை காலமாக இருந்து வருகிறது.-

மேலும் வேதனைக்குரிய விடயம் நம் நாட்டு பிற மதத்தவரை பொறுத்த வரையில் ரமழான் என்றால் முஸ்லிம்களின் சர்ச்சைக்குரிய மாதம் என மனதில் பதித்து கொண்டுள்ளனர். காரணம்: இரவு நேர தொழுகை 20ஆ? 8ஆ? என்ற சர்ச்சை. பிறை சர்ச்சை என தலைப்பிறையுடன் ஆரம்பிக்கும் நம் சமூகத்தின் இயக்கவாதம். ஆனால் பேசப்படவேண்டிய எல்லா விடயங்களையும் மறந்து விடுகிறோம்.

ஏழையின் பசியை உணர்ந்து அவர்களுக்கு கொடையளிக்கும் நோக்குடனும், தக்வாவை வளர்த்து மனிதனை சுவனத்துக்கு அழைத்துச் செல்லும் நோக்குடனும் கடமையாக்கப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் எமது கருத்து வேறுபாடுகளுக்காக நோன்பாளிகள் என்றும் பாராது முட்டி மோதி சீரழிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் பட்டினியில் வாடும் ஏழைகளின் பசியை உணர்ந்து அவர்களது பசியை போக்க ஒரு சில முயற்சிகளுடன் ஓய்ந்து விடுகிறோம். இவ்வாறு முட்டி மோதும் இயக்கவாதிகள், இஸ்லாமிய அழைப்பாளர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் பின்வரும் ஹதீஸை மறந்துவிட்டனரோ. என்னமோ.

“நீ நோன்பு நோற்றால் உனது செவி, கண்,நாவு என்பவையும் நோன்பு நோற்கட்டும். அவற்றினுடைய நோன்பு பொய், பாவச் செயல்களில் இருந்து தவிர்ந்து கொள்வதாகும். வேலைக்காரனுக்கு தீங்கு செய்தலை விட்டு விடு. நோன்பு நாளில் உன்னிடம் கண்ணியமும், அமைதியும் காணப்படட்டும். நோன்பு நாளும் அது அல்லாத நாளும் சமமாக இருக்க கூடாது…”(அல்ஹதீஸ்)

நபியின் சுன்னா இவ்வாறு கூற இஸ்லாமிய அழைப்பாளர்களாகிய நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்???

இது மாத்திரமன்றி எதிர்நோக்கும் இந்த வருட ரமழானை வெறும் வேடிக்கையுடனும் வீண் விளையாட்டுடனும் கரம் போட்டுடனும் கட்டிலுடனும் கழிக்க நம்மில் எத்தனை பேர் திட்டம் தீட்டி விட்டோம்.

என் அன்பு உறவுகளே நபியின் ஹதீஸ் இவ்வாறு கூறுகிறது என்பதை மறக்க முடியாது.- மேலும் வேதனைக்குரிய விடயம் நம் நாட்டு பிற மதத்தவரை பொறுத்த வரையில் ரமளான் என்றால் முஸ்லிம்களின் சர்ச்சைக்குரிய மாதம் என மனதில் பதித்து கொண்டுள்ளனர். காரணம்: இரவு நேர தொழுகை 20ஆ? 8ஆ? என்ற சர்ச்சை..பிறை சர்ச்சை என தலைப்பிறையுடன் ஆரம்பிக்கும் நம் சமூகத்தின் இயக்கவாதம். ஆனால் பேசப்படவேண்டிய எல்லா விடயங்களையும் மறந்து விடுகிறோம்..

“யார் பொய் பேசுவதையும் அதன் அடிப்படையில் செயற்படுவதையும் விட்டு விடவில்லையோ அவர் தனது உணவையும் குடிபானத்தையும் விட்டு விட வேண்டும் என்ற எந்த தேவையும் அல்லாஹ்வுக்கு கிடையாது” (புஹாரி:1903)

இங்கு பொய் அது சார்ந்தவை எனக்கூறுவது பயனற்ற விடயங்களையாகும் என ஹதீஸ் துறை அறிஞர்கள் விளக்கம் கூறுகின்றனர். பயனற்ற பேச்சு, பயனற்ற விளையாட்டு, வீண் வேடிக்கை இவை அனைத்துமே இதில் தான் உள்ளடக்கப்படுகின்றது. எனவே ஸஹர் செய்து சுபஹ் தொழுகையை கடமைக்காக தொழுது மஃரிப் வரை தொழுகையின்றி உறங்கும் சமூகமாகவோ அல்லது வீண்வேடிக்கைகளில், வீண் விளையாட்டில் ஈடுபடும் சமூகமாகவோ நாம் இந்த ரமளானை பயன்படுத்து விடக்கூடாது. மேலும் கண்ணீர் வடிக்க வேண்டிய விடயம் என்னவெனில் தலைப்பிறை தென்பட்ட நாள் மஃரிப், இஷா தொழுகைக்கு நம் ஊர்ப்பள்ளிவாயல்கள் 10,12 வரிசை எனக்கூடிச் செல்வது என்னமோ மகிழ்ச்சியை தர தேய்பிறை போன்று நடுப்பத்தை அடைகின்ற போது 3,2 வரிகளுக்குக் கூட தொழுகையாளிகள் இல்லாத துர்ப்பாக்கிய நிலை நாம் வருடா வருடம் கண்டு வேதனைப்பட்டு வரும் விடயமாகும். எனவே இந்நிலையையும் மாற்றவேண்டும்.

இந்த ரமளான் தலைப்பிறையில் நம் ஆரம்பிக்கும் தொழுகை நம் மரணம் வரை தொடர வேண்டும் என்ற உறுதியோடு தொழுகையை ஆரம்பிக்க வேண்டும். அதை நடைமுறைபடுத்த இயன்றளவு முயலவேண்டும்.

என் அன்பு இஸ்லாமிய உறவுகளே….! சற்று சிந்தியுங்கள்…! சென்ற ரமளான் எங்களுடன் இருந்த எங்கள் நண்பன், தாய், தந்தை, மகள், மகன், சகோதரன், சகோதரி இந்த ரமழானில் எங்களுடன் இருக்க இருக்கமாட்டார்கள். ஆகவே அடுத்த ரமழானை எம்மால் எதிர்ப்பார்க்க முடியாது. காரணம் இன்னொரு நிமிட உத்தரவாதமற்ற மிக பலவீனமான படைப்பே நாம். நம் முன்னைய ஸஹாபாக்கள் , நோன்பு நோற்றவராக போர் செய்தார்கள். பகலில் நோன்பிருந்து இரவில் நின்று வணங்கினார்கள்.

எனவே மரணம், அது எந்த நேரத்திலும் எம்மை வந்தடையலாம். ஆகையால் வருகின்ற ரமழானை நாம் கழித்த ஏனைய ரமழான்களை விட சிறப்பாகவும், நபி வழிமுறையில் பயன்படுத்தவும் இந்த நொடி முதலே உறுதி பூணுவோமாக.. எம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக..

பஸீம் இப்னு ரஸுல்
நிகவெரட்டிய
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

வான் படைத்து மண்படைத்து அதில் மனிதகுலம் படைத்து, மாநபியோடு வான் மறையை எமக்களித்து எம்மை வாழ்வாங்கு வாழ வழிவகுத்து இன்றுவரை எம் சமுதாயத்தை பாதுகாத்து வரும் சர்வ வல்லோன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்…

வான் படைத்து மண்படைத்து அதில் மனிதகுலம் படைத்து, மாநபியோடு வான் மறையை எமக்களித்து எம்மை வாழ்வாங்கு வாழ வழிவகுத்து இன்றுவரை எம் சமுதாயத்தை பாதுகாத்து வரும் சர்வ வல்லோன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *