கிளீன் (Clean) புத்தளம் மக்களின் துரோகமும் அரசின் அநீதியும்.

  • 14

அடுத்தவன் வீட்டுக் கழிவு நம் வீட்டு வாசலில், வளாகத்தில் இருந்தால் கோபம் கொள்கிறோம். ஒரு டொபிக் காகிதம் மீதொட முள்ளை குப்பை மலைக்குள் சில உயிர்கள் புதைந்தன. என்ன நியாயம்? மனித நலனோம்பல் அற்ற நுகர்வுக் கலாசாரத்தின் சுயநலம் தான் வாழும் உரிமையையும் பிறரை சுதந்திரமாக வாழ விடவும் மறுக்கிறது.

சீமெந்து தொழிற்சாலை, நுரைச் சோலை அனல் மின் நிலையம் புத்தளம் மக்கள் பாதித்து வருகின்ற நிலையில் மீண்டும் ஒரு அநியாயத்தை அரசு செய்வதானது எத்தகை உரிமை மீறல்? இந்த உரிமை மீறளுக்கு இலங்கையில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனும் காரணம் என்பதை ஏற்றாக வேண்டும்.

உலக நாடுகள் பல இன்று கழிவகற்றல், கழிவு முகாமைத்துவத்தில் வெற்றிகொண்டு கழிவுகளை பலவகையிலும் மீள்சுழற்சி செய்து, வலு உற்பத்திகளை மேற்கொள்வதில் வெற்றிகொண்டுள்ளன.

இலங்கையை நோக்கும் போது நிலைமைகள் தலைகீழாக உள்ளன. கழிவகற்றல் மற்றும் கழிவு முகாமைத்துவத்தில் பின்தங்கிய நாடுகள் பட்டியலில் பிரதான இடம் வகிக்கின்றது. கழிவு முகாமைத்துவத்தில் எந்தவோர் அரசாங்கமும் கவனம் செலுத்தவில்லை. கழிவு கூட தங்கமாகப் பார்க்கும் உலகரங்கில் நம் நாட்டு கழிபட்ட அரசியல் தலைமைகளின் தனிப்பட்ட இலாபங்கள் இந்த நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்கின்றது.

பிரதேச சபை எல்லைக்குள் வாழும் ஒரு மனிதன் நாளைக்கு 400g கிராம், நகர சபைக்குள்ளவர் 600g கிராம், மா நகர சபைக்குள்ளவர் 750- 850g கிராம் கழிவை சூழலுக்கு விடுவிக்கிறான்.

2007 ம் ஆண்டு நாளாந்தம் 6400, 2014ம் ஆண்டு 10, 497 டொன் (Ton) கழிவு நாடு பூராகவும் சேகரிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக மேல் மாகாணம் மொத்த திண்மக் கழிவுகளில் 60% சூழலுக்கு விடுவிக்கிறது. மீதி 40% ஏனைய எட்டு மாகாணங்களிலிருந்தும் சேகரிக்கப்படுகிறது. இரண்டாவது அதி கூடுதலான கழிவு சூழலுக்கு மத்திய மாகாணம் 229 டொன் (Tons) 8.1% விடப்படுகிறது. 2017 கண்டி பெரகராவின் போது 200 டொன் (Ton) கழிவு சேகரமாகியுள்ளது.

மொத்தக் கழிவுகளில் 75% உக்கக் கூடியன.எஞ்சிய 25% கழிவுகளிலே மீள்சுழற்ச்சி செய்யக் கூடியனவும், பல நூறு வருடங்களுக்குப் பின் உக்கக் கூடியன என வகைப்படுத்த முடியும்.

‘பிலிசரு'(Pilisaru) செயற்றிட்டத்தின் கீழ் நாடு பூராகவும் 116 சேதனப் பசளை மத்திய நிலையங்கள் செயற்படுத்தப்படுகின்ற போதிலும் நாட்டின் குப்பைப் பிரச்சினை தீர்ந்ததாக இல்லை.

வருடாந்தம் 1.2% திண்மக் கழிவுகள் (Solid Waste) அதிகரித்து வருகின்றது. 2050 ஆகும் போது நாளொன்றிற்கான திண்மக் கழிவு 5274 மெட்றிக் டொன்னாக(MT) அதிகரிக்கும். மாகாண ரீதியில் கழிவுகள் சேகரமாகும் அளவு தொடர்பான குறைவான, போதாமைத் தகவல்களே உள்ளன என IJRD அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

மீதொடமுல்ல சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கழிவகற்றல் பிரச்சினைக்கு 6 வாரங்களில் தீர்வுகாண்பதாக வாக்களித்து, குழுவொன்றையும் நியமித்தார். அக்காலப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச நிறுவனங்கள் அவைகளின் திட்டங்களை முன்வைத்திருந்தன.

சுவீடன் (குப்பைகளை தங்கமாகக் கருதும் நாடு) நிறுவனமொன்று இலங்கையின் குப்பைகளை இலவசமாக பெற்று, கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சிக்கு ஈடுபடுத்தி இலாப பங்கீடு மேற்கொள்வதற்கு முன்வந்தது. கழிவுகளை இலவசமாக தரமுடியாதென்று கூறிய அரசாங்கம் அதற்கு விலையொன்றையும் நிர்ணயித்தது. இலவசமாக கழிவுகளை மீள்சுழற்சி செய்ய வந்தவர்களுக்கு சுமக்க முடியாத விலையை நிர்ணயித்தமையே இலங்கையின் கழிவு முகாமைத்துவம் தொடர்ந்தும் சீரற்றிருப்பதற்குக் காரணம்.

இதற்கான தீர்வாக தற்போது புத்தளம் அருவாக்காலுப் பகுதியில் கொழும்பின் குப்பைகளை கொட்டும் (Landfills) திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்கு அரசு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 7000 மில்லியன் ரூபாவை மக்களின் நிதியிலிருந்து ஒதுக்கியுள்ளது. சுவீடனின் இலவசத் திட்டத்தோடு இணைந்து இலாபப் பங்கீடு கிடைக்கக் கூடிய விதத்தில் அரசு செயல்பட்டிருந்தால் மக்கள் மீது சுமையை போடவேண்டி ஏற்பட்டிருக்காது, சூழல் பற்றிய கரிசணை, நிலைபேறான அபிவிருத்தி அரசிடம் இல்லை என்பது இதிலிருந்து விளங்குகிறது.

கொழும்பின் அழுக்குப் பிரச்சினையை இப்படித்தான் தீர்க்க வேண்டும் என்பதை விட எப்படியாவது தீர்த்தல் என்ற அடிப்படையில் புத்தளம் அருவாக்காலுப் பகுதியில் கொண்டு நிரப்புகின்ற (Lanfills) பணியை அரசு மக்கள் நிதிதியில் மேற்கொள்ளவுள்ளது.

அதுமாத்திரமல்லாது, அனுராதபுரம் (கீரிக்குளம்), பொலன்னறுவ (மெதிரிகிய), ஹிக்கடுவ, யாழ்ப்பாணம் (கீரமலை) ஆகிய நான்கு இடங்களில் நிரப்பும் (Landfills) வேலைக்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதற்கான நிதியுதவியை கொரியா “எக்சிம் வங்கியின் “(Exim Bank) வழங்கவுள்ளது என IJRD அறிக்கை குறிப்பிடுகிறது.

குப்பைகள் நிரப்பும் (Sanitary Landfills) இடங்களாக மேல் மாகாணத்தில் ”டொம்பே” (Dombe) (KOICA) எனும் கொரியா அமைப்பு நிதியுதவி வழங்குகிறது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் (ADB)ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியிலும், அம்பாறை மாவட்டத்தில் ஐரோப்பிய யூனியன், ஐக்கிய நாடுகள் (UN) நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என IJRD அறிக்கை குறிப்பிடுகிறது.

மக்களாகிய எமது பொறுப்புகள் என்ன? என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இல்லாத போது பிரச்சினை தீர்வின்றித் தொடரும்.

மக்களின் குப்பைகளை சேகரித்து மக்கள் வாழும் பிரதேசத்தில் கொட்டப்படுகிறது. நமது தவறே அதிகம் உள்ளன. நமது சூழலுக்கு பிரச்சினை வரும் போது மாத்திரமே உணர்கிறோம். கழிவுகளை எவ்வாறு நாம் முகாமை செய்து கொள்வது என்பதில் எடுக்காத கரிசணையின் விளைவையே அனுபவிக்க வேண்டியுள்ளது. கழிவு முகாமைத் துவம் தொடர்பாக இலங்கையின் ஒவ்வொரு பிரஜையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

கழிவுகளை முறையாகப் பிரித்து வழங்கும் பழக்கத்தை நமக்குள் ஏற்படுத்திக் கொள்ளல். ஒவ்வொரு உள்ளூராட்சி எல்லைக்குள் வாழ்கின்றவர்களும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முறையான கழிவு முகாமையை மேற்கொள்ள உதவியாக இருப்பதோடு முறையாக மேற்கொள்வதற்கு அழுத்தம் வழங்குதல்.

சூழல் நேயம் அற்ற பொருட்களை உற்பத்தி செய்யும் கம்பனிகளுக்கு சூழல் வரி (environment tax) ஒன்றை அறிமுகம் செய்தல். சூழல் நேயம் கொண்ட உற்பத்திகளை செய்யும் கம்பனிகளுக்கு வரிகளில் இருந்து சலுகையை வழங்கல். இதனை இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் பிரயோகிக்கலாம்

முறையான மீள்சுழற்சி செயற்றிட்டத்தை மேற்கொள்ளுமாறு அரசுக்கு பாரிய அழுத்தத்தையும் கொடுக்கும் போராட்டத்தை நாட்டின் அனைத்து மக்களும் இணைந்து ஆரம்பிக்க வேண்டும்.

அரசு, மக்கள் முறையாக செயற்பட முன்வராத போது எதிர்கால சந்ததியை அழிவுக்கான புதைகுழியை முன் ஏற்பாடு செய்கிறோம்.

A Raheem Akbar
மடவளை பஸார்
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

அடுத்தவன் வீட்டுக் கழிவு நம் வீட்டு வாசலில், வளாகத்தில் இருந்தால் கோபம் கொள்கிறோம். ஒரு டொபிக் காகிதம் மீதொட முள்ளை குப்பை மலைக்குள் சில உயிர்கள் புதைந்தன. என்ன நியாயம்? மனித நலனோம்பல் அற்ற…

அடுத்தவன் வீட்டுக் கழிவு நம் வீட்டு வாசலில், வளாகத்தில் இருந்தால் கோபம் கொள்கிறோம். ஒரு டொபிக் காகிதம் மீதொட முள்ளை குப்பை மலைக்குள் சில உயிர்கள் புதைந்தன. என்ன நியாயம்? மனித நலனோம்பல் அற்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *