முஸ்லிம் சமூக வீழ்ச்சிக்கான காரணம்

  • 25

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகை ஒரு நொடியில் அவதானிக்க முடியுமாக உள்ளது. அவ்வாறு உலகை அவதானிக்கையில் மனிதவளம், மூலதனவளம், நிலவளம் என அனைத்து வளங்களையும் உள்ளடக்கியவர்களாக முஸ்லிம் சமுகத்தை அவதானிக்க முடிகிறது. ஆனாலும் தீராத பிரச்சினைகள், பண்பாடுகள் அற்ற, யுத்தகளமாக முஸ்லிம் சமுகம் மாறியுள்ளது.

இஸ்லாமிய இளைஞர்களே! யுவதிகளே! தாஈகளே! பெற்றோர்களே! அரசியல்வாதிகளே! இவ்வாறான நிலைமைக்கு காரணம் என்ன? இதனை நிவர்த்திக்க நாம் என்ன செய்ய வேண்டும்? பிரச்சினைக்கு ஒரே வழிகாட்டல் துஆவும் பொறுமையும் மாத்திரமா? என்பவற்றை ஆய்வு செய்ய துண்டும் களம்.

இவ்வாறானதோர் அவல நிலைமைக்கு பிரதான காரணம் முஸ்லிம் சமுகம் கல்வி, பண்பாடு, பொருளாதாரம் என்பவற்றில் வீழ்ச்சிப்போக்கில் உள்ளதாகும். இதில் கல்வி பற்றி ஓரளவு ஆராய்வோம்.

இஸ்லாம் கல்விக்கு மிக முக்கிய இடத்தை வழங்கியுள்ளது. இதற்கு மிகச் சிறந்த சான்று ரஸூலுல்லாஹ்வுக்கு அருளப்பட்ட முதல் வஹியாகும்.

“உமது இறைவனின் பெயரைக் கொண்டு நபியே! நீர் ஓதுவீராக ” (96:01)

இஸ்லாத்தில் தொழுகை, நோன்பு, ஸாகாத், ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகளை அறிமுகம் செய்ய முன்னரே கல்வி கற்குமாறு ஏவி உள்ளதை மேற்படி வசனத்தின் ஊடாக அறியக்கூடியதாக உள்ளது. அன்று உலகமே கல்வி அறிவற்ற நிலையில் இருந்தபோது இஸ்லாம் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் இருளில் தூங்கிக் கொண்டிருந்தபோது முஸ்லிம் சமுகம் அறிவியலில் விழித்துக் கொண்டிருந்தது. இவற்றுக்கு சான்றாக பல அல் குர்ஆன் வசனங்கலும் வரலாற்றுச் சான்றுகளும்  இருப்பதை எம்மால் அவதானிக்க முடிகிறது. ஆனால் இன்று முஸ்லிம் உம்மத் எதிர் நோக்கியுள்ள பல சவால்களை முறியடிக்க முடியாமல் இருப்பதற்கு மிக பிரதான காரணங்களில் எம்மிடம் போதியளவு கல்வியறிவு இன்மையாகும்.

இன்றைய இலங்கை முஸ்லிம் ஊர்களை அவதானிக்கையில் முஸ்லிம் ஊர்களில் ஒரு சில ஆசிரியர், மௌலவிமார், தொழிலதிபர்கள் என ஓரளவு காணப்படுகின்றனர். முஸ்லிம் டாக்டர்கள், உளவியலாளர்கள், ஆலோசகர்கள், பொறியிலாளர்கள் என்று முன்னேற்றம் கண்டுள்ளவர்களை தேடுவது மிக கஷ்டமாக உள்ளது. பாடசாலை கல்வியில் முதல் நிலமையில் உள்ள பெண்களை பொறுத்தவரை சமுக எதிர்ப்பு, திருமணம், குடும்ப வறுமை போன்ற பல காரணங்களால், பெண்கள் உயர் கல்வியை தொடர்ந்து தமது இலட்சியக் கனவை அடைய முடியாதுள்ளது. இந்நிலமை மாற வேண்டும்.

குறிப்பாக முஸ்லிம் கிராமங்களில் முஸ்லிம் பெண் ஆசிரியர்களும், பெண் வைத்தியர்களும் கட்டாயமாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஆண் ஆசிரியர்களை விட பெண் ஆசிரியர்களே சிறு பிள்ளைகளை வழிநடத்த சிறந்தவர்கள். அது போன்று மகப்பேற்று சிகிச்சைக்கு பெண் வைத்தியர்கள் தேவையாக உள்ளனர். மகப்பேற்று சிகிச்சை, யுத்த காலங்களில் முதலுதவி செய்தல் போன்ற பல விடயங்களில் ஸஹாபிப் பெண்கள் ஈடுபட்டனர். என்பதை இஸ்லாமிய நாகரீகத்தை ஆராய்வதன் ஊடாக அவதானிக்க முடிகின்றது.

கல்வி ரீதியில் முஸ்லிம் உம்மத்திடம் உள்ள மிக தவறான ஒரு நிலையே கல்வியை உலகக் கல்வி, மார்க்கக் கல்வி எனப் பிரித்துக் நோக்குவதாகும். அதிலும் உலகக் கல்வி அறிந்தவர்கள் மார்க்க கல்வி அற்றவர்களாகவும், மார்க்க கல்வி அறிந்தவர்கள் உலகக் கல்வி அற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். இது முஸ்லிம் சமுகத்தின் பலவீனத்தை வெளிக்காட்டுகிறது.

இஸ்லாத்தின் தாயகமாகிய மக்கா, மதீனா மற்றும் சுற்றுப்புற மத்திய கிழக்கு அரேபியா நாடுகளை அவதானிக்கையில் இந்நாடுகளின் பெரும்பாலான முதலீடுகள் உல்லாச பிரயாண விடுதி,  விமான நிலையங்கள் அமைப்பதை நோக்காக கொண்டுள்ளது. இதற்கு மாற்றமாக அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் அறிவியல் துறையில் பெருமளவு முதலீட்டை ஒதுக்குவதை அவதானிக்கலாம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நாஸாவின் செயற்பாடுகளை குறிப்பிடலாம். உலகில் முதல் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய முஸ்லிம் சமுகத்திற்கு அதற்கு அடுத்த கட்டமாக ஓர் நாஸா போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையமொன்றை ஆரம்பிக்க முடியாமை மிகக் கவலையான விடயமாகும்.

இவ்வாறு இன்று நாம் கல்வி ரீதியில் பல கோணங்களில் பின்னிலையில் உள்ளதை அவதானிக்கலாம் ஆனால் பழைய வரலாற்றை படித்து இன்பத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறு அறிவியல் துறையில் பின் தங்கிய நிலையில் இருந்ததன் விளைவை எமது முஸ்லிம் சமூகம் கடந்த பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றது.

அளுத்கம கலவரத்தில் காயப்பட்டவர்களை அந்நிய வைத்தியர்கள் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு தகுந்த சிகிச்சை வழங்கப்படாமை, போதியளவு சட்டத்தரணிகள் இன்மையால் எமக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமை, அரசியல்வாதிகளின் மார்க்க அறிவு இன்மையால் இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்களை கூறியமை, மார்க்க அறிஞர்கள் போதிய உலகறிவின்மையால் எமக்கு எதிரான போராட்டங்களில் போதிய பங்களிப்பை வழங்க முடியாமை, மகப்பேற்றுக்கான அந்நிய வைத்தியர்களிடம் போகின்றமையால் சில சந்தர்ப்பங்களில் கற்புக்கும் கலங்கம் ஏற்படும் நிகழ்வுகள் ஏற்பட்டமை, ஊடகத் துறையில் முஸ்லிம்களுக்கென பிரத்தியேக தொலைக்காட்சி, வானொலி இன்மையால் உண்மையான நிலவரங்களை உடனுக்குடன் அறிவிக்க முடியாமை போன்றவை எமது முஸ்லிம் சமூகம் கல்வி ரீதியில் பின்னடைந்தமையின் விளைவாகும்.

எனவேதான் உலகின் ஒரே சத்தியமார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் உலகில் பிரச்சினைகளுடன் வாழக்கூடாது. என்பதற்குத்தான் வணக்கத்திற்கு முன்பே கற்குமாறு இஸ்லாம் ஏவியுள்ளது.

இஸ்லாமிய இளைஞர்களே  யுவதிகளே  தாஈகளே  பெற்றோர்களே  அரசியல்வாதிகளே  கல்வியை மாக்கக்கல்வி, உலகக்கல்வி என்று பிரிக்காமல் எமக்கு எதிரான செயற்பாடுகளில் வெற்றி பெறுவதற்கு முறையாக கல்வியை பெறுவோம்.

“நம்பிக்கையாளர்களே  பொறுமையுடன் இருங்கள். இன்னல்களை சகித்துக் கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். (இம்மையிலும், மறுமையிலும்)  வெற்றி பெறுவீர்கள்.”(3:200)

Ibnu Asad

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகை ஒரு நொடியில் அவதானிக்க முடியுமாக உள்ளது. அவ்வாறு உலகை அவதானிக்கையில் மனிதவளம், மூலதனவளம், நிலவளம் என அனைத்து வளங்களையும் உள்ளடக்கியவர்களாக முஸ்லிம் சமுகத்தை அவதானிக்க முடிகிறது.…

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகை ஒரு நொடியில் அவதானிக்க முடியுமாக உள்ளது. அவ்வாறு உலகை அவதானிக்கையில் மனிதவளம், மூலதனவளம், நிலவளம் என அனைத்து வளங்களையும் உள்ளடக்கியவர்களாக முஸ்லிம் சமுகத்தை அவதானிக்க முடிகிறது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *