கந்தூரி ஓர் மீள்வாசிப்பு

  • 11

இலங்கை முஸ்லிம்களிடையே உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 150 வருடங்களுக்கு முன் அறிமுகமான ஓர் விழாவே கந்தூரியாகும். இறுதியாக 05-04-2017 அன்று 3 உயிர்களை பறித்து 1005 பேரை நோயாளிகளாக்கி தனது பயணத்தை தொடர்ந்த வண்ணமே உள்ளது. பலரும் சமுகத்தில் கந்தூரி பற்றி அகீதா, பிக்ஹ் சார்ந்த தமது ஆய்வுக் கருத்துக்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர். என்றாலும் தனது ஆய்வு அதன் வரலாறு  மற்றும் நோக்கம்  சார்ந்ததாகும்.

இஸ்லாமியருக்கு கிடைத்த ஓர் உன்னதமான நூலே அல்-குர்ஆன் ஆகும். ஆனால் அல்-குர்ஆன் அருளிய காலப்பகுதியில் அதை யாரும் விஞ்ஞானப் புத்தகம் என்று கூறவில்லை.. சஹாபாக்கள் தமது வாழ்க்கை வழிகாட்டியாக அதன் கருத்துக்களை தம் வாழ்வில் எடுத்து நடந்தனர். கவிஞர்களான அக்கால காபிர்களில் சிலர் அதை கவிதை நூல் என்றும் குறிப்பிட்டனர். ஆனால் இன்று அல்-குர்ஆன் ஓர் விஞ்ஞானிக்கு ஓர் விஞ்ஞான நூலாகவும், சட்டத்தரணிக்கு ஓர் சட்ட நூலகவும், பொருளியல் நிபுணருக்கு பொருளியல் நூலாகவும் செயற்படுவது அதன் சிறப்பம்சமாகும். அதாவது அல்-குர்ஆன் ஓர் மனிதனின் சிந்தனைக்கு ஏற்ப அவனுக்கு வழிகாட்டியாக செயற்படும் ஓர் அற்புத நூலாகும்.

சமுகத்தின் போக்கிற்கு ஏற்ப இஸ்லாமிய தூதை சமுகத்திற்கு முன்வைத்தவர்களாக இமாம் அப்துல் காதர் ஜெய்லானி, இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப், இமாம் மௌலானா இல்யாஸ், இமாம் ஹஸனுல் பன்னா ஆகியோரை மிகப் பிரதானமாக குறிப்பிட முடியும். ஒவ்வொரு நுற்றாண்டிலும் இவ்வாறான சமுக சீர்திருத்தவாதிகள் தோன்றுவர் என்று நபிமொழியும் உள்ளது.

இலங்கையின் இஸ்லாமிய நாகரிகத்துறையை ஆய்வு செய்தால், மிகப் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகின்ற ஒரு பகுதியே  கந்தூரி, மௌலூத் என்பனவாகும். இதற்கான கரணம் இதனை புரிந்து கொண்டுள்ள விதமாகும். ஸலபிய சிந்தனை போக்குடைய ஜமாத்கள் இவற்றை பித்அத் என்கின்றனர். ஸூபித்துவ சிந்தனைப் போக்குடைய தரீகாக்கள் இவற்றை வணக்கம் என்கின்றனர். ஆனால் இது கந்தூரி பற்றிய இரு துருவச் சிந்தனையாகும். மேலும் முஸ்லிம் சமுகத்தை பிரிக்கின்ற ஒரு செயலாக மாறியுள்ள கவலைக்குரிய விடயமாகும்.

இஸ்லாமிய நாகரிகத்தில் அல்-குர்ஆன், சமுக சீர்திருத்தவாதிகள் சமுகத்தின் போக்கிற்கு ஏற்ப அவர்களுடன் இணைந்து செயற்பட்டு மக்களை நல்வழிப்படுத்தினார்கள். இவ்வாறு சமுகத்தின் போக்கிற்கு ஏற்ப மக்களை நல்வழிப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கலாசார நுட்பமே கந்தூரியாகும். இதனை கந்தூரியின் வரலாற்றுடன், இலங்கை சமுக அமைப்பையும் இணைத்து ஆய்வு செய்தால் உணர்ந்து கொள்ள முடியும்.

கந்தூரி பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சான்றுகள் 1௦௦-15௦ வருடங்களுக்குள் கிடைக்கப் பெறுகின்றது. என்றாலும் கந்தூரிகளுக்கு 5௦௦ வருடத்திற்கும் மேற்பட்ட வரலாறு உள்ளதாக கிராமிய மக்கள் தெரிவிக்கின்றனர்.  அதன் ஸ்தாபகர்களாக தரீக்காக்கள் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும் கந்தூரிகள் இலங்கைக்கு இந்தியாவின் ஊடாக இறக்குமதியனாதாக சில வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை, இந்தியா சமுக அமைப்பை அவதானிக்கையில் இவை இந்து, பௌத்த கலாசாரத்தின் தாயகமாகும். இப் பிரதேச கலாசார நிகழ்வுகளாக சித்திரைப் புத்தாண்டு களியாட்டட்டங்கள், வெசாக் தன்சல் அன்னதானம், தேர்த்திருவிழா என பலவற்றை குறிப்பிட முடியும்.

இக் கலாசார பின்னணியுடைய மக்களிடையே இஸ்லாத்தை பரப்புவதற்கு வந்த இஸ்லாமிய அழைப்பாளர்கள் தமது பிரச்சார உத்தியாக இப் பிரதேச கலாசார நிகழ்ச்சிகளையே பயன்படுத்தினர். இதன் விளைவே நாட்கள், மாதங்கள், கிழமைகள் குறிப்பிட்டு கந்தூரிகள் தோற்றம் பெற்றன.

இலங்கையருக்கும், இந்தியருக்கும் மத்தியில் அவர்களின் அவர்களின் கலாசாரத்திற்கேற்ப கலாசார நிகழ்வுகளை உருவாக்கி அறிமுகப்படுத்தியதன் நோக்கம் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் தமது பழைய கலாசார நிகழ்ச்சிகளால் கவரப்பட்டு மீண்டும் இணைவைப்பின் பக்கம் திரும்பாமல் இருக்கவே செய்தனர். மேலும் இலங்கையில் இன்று ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு வீதிக்கும் குறைந்தது ஓர் மார்க்க அறிஞர் இருப்பார். என்றாலும் சுமார் 2௦௦ வருடங்களுக்கு முன்னோக்கினால் ஓர் மாவட்டத்திற்கு ஒரு சில மார்க்க அறிஞர்களே வாழ்ந்தனர். இதனால் இஸ்லாமிய வழிகாட்டல் கிடைப்பதும் குறைவு. எனவே மார்க்க அறிஞர்கள் அடுத்தடுத்து வரக்கூடிய ரபிஉல் அவ்வல், ரபிஉல் ஆகிர் மாதங்களில் இஸ்லாமிய வழிகாட்டலை கிராமிய மக்களுக்கு முன்வைக்க கிராமகளுக்கு வருகை தந்தனர். அங்கு அக்கிராம மக்களை ஒன்று திரட்டவே கந்தூரி என்ற அன்னதானத்தை வழங்கினர். அன்னதானத்தை வழங்க முன்னர் மார்க்க சட்டங்களையும் கிராமிய மக்களுக்கு முன்வைத்தனர். இது அக்கிராம மக்களை ஒன்று திரட்டும் ஒரு நிகழ்வாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கந்தூரிகளின் தோற்றத்தை வரலாற்று ரீதியில் நோக்கும்போது, முஸ்லிம்களிடையே மார்க்க விழிப்புணர்வு பிரசாரத்திற்கும், மக்களிடையே உதவி மனப்பான்மையை வளர்க்கவும், கிராமிய ஒற்றுமையை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். இது கந்தூரி பற்றிய வரலாற்றில் இருந்து பெறப்பட்ட படிப்பினையாகும். எனினும் தற்கால கந்தூரிகளை எடுத்து நோக்கினால் அவற்றில் இஸ்லாத்தின் அடிப்டையுடன் முரண்படும் பல விடயங்கள் நடப்பதை அவதானிக்க முடியும். எனவே பின்வரும் விடயங்களில் கந்தூரியை நம்பிக்கை, செயல் சார்ந்த விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

  1. எந்த ஒரு விடயத்தை நாம் மேற்கொண்டாலும் அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் செய்ய வேண்டும். ஆனால் இன்று கந்தூரிகள் இறைநேசர்களின் பெயரினால் வழங்கப்படுகிறது. இந்த எண்ணத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
  2. கந்தூரிகள் இபாதாத் என்ற கோட்பாட்டில் இருந்து மாறி அது ஓர் இஸ்லாமிய பிரசார உத்தியாக கையாள வேண்டும்.
  3. சில கிராமத்து கந்தூரிகளில் பகிரங்கமாகவே மஹ்ரமி அஜ்னமி வரையறைகளை பேணாமல் பருவ வயது ஆண்களும், பெண்களும் கலந்து பள்ளி வீதியோரங்களில் நடமாடுவதை காணலாம். இவ்வாறான இஸ்லாத்திற்கு தெளிவாக முரண்படும் அனாசரங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
  4. சில மக்களிடம் காணப்படுகின்ற கந்தூரி உண்பதால் நோய் நீங்குதல், இறைநேசர்களின் அருள் கிடைக்கும் போன்ற நம்பிக்கைகள், மூட நம்பிக்கை என்பதை தெளிவுபடுத்தி தூய இஸ்லாமிய வழியை காட்ட வேண்டும்.
  5. கந்தூரி சாப்பாட்டிற்கு முன் நிகழ்த்துகின்ற உரைகள் இறை நேசர்களின் வரலாற்றை கூறுவதாக அல்லது எதிர் தரப்பிற்கான சொற்போராக சுருங்கிவிடுகின்றது. இதனால் முஸ்லிம்களிடையே குரோத மனப்பாங்கு மாத்திரமே வளர்கிறது. இதற்கு மாற்றமாக அங்கு வருகை தரும் வாலிபர்களினதும், யுவதிகளினதும் ஈமானிய உணர்வை அதிகரிப்பதாக உரைகள் அமைய வேண்டும்.
  6. இன்று கந்தூரிகளில் பிற சமூகத்தவர்களும் கலந்து கொள்கின்றனர். எனவே அவர்களுக்கு இஸ்லாம் பற்றி தெளிவு வழங்குவதற்கு அவர்களின் மொழியில் (சிங்களம், ஆங்கிலம்) பிரசாரம் செய்தல்.

கந்தூரிகளை நடாத்திச் செல்ல உள்ள தோழர்களே! இறுதியாக குறிப்பிட்ட விடயங்களில் கூடியளவு கருசணை காட்டி கிராமிய ஈமானிய, பொருளாதார அபிவிருத்திக்கு  கந்தூரிகளை ஒழுங்கமைக்கவும். எனது அடுத்த ஆய்வில் “கிராமிய பொருளாதார அபிவிருத்தியில் கந்தூரிகளின் பங்களிப்பு” பற்றி தெளிவு படுத்த உள்ளேன்.

இவை எனது தனிப்பட்ட கருத்தாகும். இதை விமர்சிக்க முடியும். தவறுகளை ஏற்கவும் தயராக உள்ளேன்.

Ibnu Asad

இலங்கை முஸ்லிம்களிடையே உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 150 வருடங்களுக்கு முன் அறிமுகமான ஓர் விழாவே கந்தூரியாகும். இறுதியாக 05-04-2017 அன்று 3 உயிர்களை பறித்து 1005 பேரை நோயாளிகளாக்கி தனது பயணத்தை தொடர்ந்த…

இலங்கை முஸ்லிம்களிடையே உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 150 வருடங்களுக்கு முன் அறிமுகமான ஓர் விழாவே கந்தூரியாகும். இறுதியாக 05-04-2017 அன்று 3 உயிர்களை பறித்து 1005 பேரை நோயாளிகளாக்கி தனது பயணத்தை தொடர்ந்த…