அரபு மொழியும் இலங்கையும்

  • 13

நாம் கடந்து கொண்டிருக்கும் இந்த 2019ஆம் ஆண்டானது இலங்கைக்கு மட்டுமல்ல, சர்வதேசத்துக்கும் கூட மறக்க முடியாத ஒரு ஆண்டு தான் இந்த ஆண்டு. அதிலும் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பிறகு இலங்கை முஸ்லிம்களால் மறக்கமுடியாத , மறக்கக் கூடாத ஒரு ஆண்டு தான் இந்த ஆண்டு.

இஸ்லாத்தின் தோற்றம் முதலே இஸ்லாத்திற்கெதிரான எதிர்ப்பலைகள் எழுந்து கொண்டிருப்பது வரலாறு கூறும் உண்மை. எனவே இஸ்லாம் எதிர்ப்பலைகளை எல்லாம் வெற்றி கொண்டு, 1400 வருடங்களுக்கும் மேலாக வீறு நடை போடும் ஒரு மார்க்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்தவகையிலேயே முஸ்லிம்களது வேத வழிகாட்டியான, வாழ்க்கை நெறியான அல்குர்ஆனே இவ்வாறான வெற்றிகளுக்கு அடிப்படை என்று கூறுவது மிகையாகாது.

அரபு மொழியும் இலங்கையும்… இந்தத் தலைப்பு தெரிவுசெய்யப்பட்டதன் நோக்கம்; தற்காலத்தில் இலங்கையில் அரபு மொழிக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பலைகள், குற்றச்சாட்டுகள், சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களைக் களைவதோடு; நம் நாடு கொடுக்கத் தவறிய அரபு மொழி தொடர்பான ஒரு சரியான புரிதலை சகல மக்களுக்கும் வழங்குவதுமாகும்.

உண்மையிலேயே அரபு மொழி விமர்சிக்கப்படுவதன் பின்னணியில் இருப்பது சில வரலாறு தெரியாத விஷமிகளே. அரபு மொழி இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டமை, கௌரவ அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களது சேவையினாலேயே என்ற போலியான குற்றச்சாட்டில் இருந்தே அரபு மொழி தொடர்பான சகல விமர்சனங்களும் வருகின்றன.

ஆனால், இஸ்லாம் தோற்றம் பெற முன்னரே, அதாவது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே இலங்கைக்கும் அரபு மொழிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததை வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அதாவது, இலங்கைக்கு அரபுலகினர் வியாபார செய்ய வந்தமையை முழு உலகமும் ஏற்றுக்கொள்கிறது. இவ்வாறு ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலே இலங்கையில் அரபு வர்த்தகர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதன் பின்னர் எட்டாம் நூற்றாண்டளவாகும் போது, இந்து சமுத்திரமே அரபுலகின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. எனவே, எட்டாம் நூற்றாண்டிலும் இலங்கை அரபுலகுடன் தொடர்பில் இருந்திருக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கையின் வரலாற்றை கூறும் மூல நூலான மகாவம்சத்தில் “கிறிஸ்துவுக்கு முன்னரே இலங்கையில் அரேபிய இருந்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும், கி.மு 475 இல் அரசி ஷீபாவின் காலத்தில் மன்னன் சாலமோனுக்கு இலங்கை சார்பாக பல விலை உயர்ந்த கனிப்பொருட்கள் கொண்ட பரிசுகள் வழங்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும், இம்மன்னரது காலத்திலேயே இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட சிவப்பு நிற மாணிக்கக் கல் பைத்துல் முகத்தஸில் பதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இன்னும் கி.பி. 377-307 இற்கு உட்பட்ட காலத்தில் பண்டுகாபய மன்னனால் அநுராதபுர மேற்கு வாயிலை சோனகர் எனும் அரபுலக மக்களுக்கு வேறுபடுத்திக் கொடுத்திருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. மேலும், கி.பி. 437-407 இற்கு உட்பட்ட காலத்தில் பராக்கிரமபாகு மன்னனும் கூட சோனகர்களுக்கு என தனியான ஒரு பிரதேசத்தை வழங்கியிருக்கிறார். அத்துடன் , க்லோடியஸ் தொலமி வரைந்த உலகப் படத்தில் இலங்கையின் ஐந்து நதிகளைக் குறிப்பிட்டு, அதில் தெதுரு ஓயாவிற்கு வடக்குப் புறமாக அரேபியர் வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். இது தற்போதைய புத்தளத்தை அண்டிய ஒரு பகுதி என இனங்காணப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் இஸ்லாம் உலகுக்கு அறிமுகமாக முன்னரே, இலங்கைக்கு அரபு மொழி அறிமுகமாகியுள்ளது. மேலும், கி.பி. 628 இல் முஹம்மத் நபியவர்கள் வஹப் இப்னு அபீ ஹப்ஸா என்பவரை இஸ்லாம் பற்றி கூற இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார். இலங்கை வந்த அவரை தக்க மரியாதை செலுத்தி இஸ்லாத்தை பரப்பவும் , பள்ளிவாயல்களை நிர்மாணித்துக் கொள்ளவும் அப்போதைய மன்னனால் அனுமதி வழங்கப்பட்டது. இந்த விடயத்தை நோக்கும் போது, இஸ்லாம் இந்நாட்டில் நாட்டு மன்னனின் அனுமதியுடனேயே பரப்பப்பட்டுள்ளமை தெளிவாவதோடு, ஆரம்ப காலங்களில் இஸ்லாத்திற்கு பாரிய வரவேற்பு இருந்தமையும் தெளிவாகிறது.

இன்னும் இலங்கை வரலாற்றாசிரியர்களில் சிறந்தவர் என கருதப்படுகின்ற சேர் ஜேம்ஸ் எமர்சன் “பன்னெடுங்காலமாக இலங்கையில் அரேபியர் வாழ்ந்துள்ளனர்” என்று தனது ‘இலங்கை’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும், The Perplus Of The Erytrean Sea என்ற கிரேக்க நூல் “உலகத்தின் முதலாம் நூற்றாண்டிலிருந்தே இலங்கை துறைமுகங்களில் அரேபியர் வாழ்ந்துள்ளதாக குறிப்பிடுகிறது.  இந்தக் கருத்தை ஆரம்பகால வரலாற்றாசிரியரான பிளினி ஏற்றுக்கொள்கிறார்.

எனவே இலங்கையில் அரபு மொழியின் அறிமுகத்திற்கு அரபு மக்கள் வாழ்ந்ததே தக்க சான்று. அதைவிட ஒரு படி மேல் சென்று இலங்கை தொல்பொருள் ஆய்வுகளின் போது அரபு மொழியிலான நாணயங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அரபு மொழி இலங்கையின் பிரயோக மொழியாக தொழிற்பட்டுள்ளது என்பதை நிறுவுகிறது.

இந்த இடத்தில்தான் நான் தர்க்கரீதியான சில வினாக்களை வினவுகிறேன். பௌத்த மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்காக சிங்கள மொழி பிரயோகிக்கப்படுவது நியாயமெனில், இலங்கை வரலாற்றில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் ஒரு பாரம்பரிய மொழியான அரபு மொழி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மொழி என கூறுவது நியாயமா? ஒரு பாரம்பரிய மொழியை நம் நாட்டில் பிரயோகத்தில் இருந்து நீக்குவது சரியா?

இவ்வாறு இலங்கை வரலாற்றில் ஒரு பாரம்பரியம் சார்ந்த மொழி என்ன அறிந்த எமது அடுத்த அவதானம் இந்த சர்ச்சைக்குரியதாக கருதப்படும் அரபு மொழி நாட்டுக்கு ஆற்றும் பங்களிப்பு பற்றியதாகும்.

இந்த நாட்டில் இந்து, பௌத்தம், கிறிஸ்தவம், வேடுவர், இஸ்லாம் போன்ற அனைத்து வகையினரும் வாழ்கின்றனர். ஒவ்வொரு கலாசாரத்தை கொண்டவர்கள்…. உதாரணமாக பௌத்த கலாசாரம்…. அவர்கள் சிங்கள மொழி மற்றும் பாளி மொழியை பிரயோகிக்கின்றனர். இந்து மக்கள் தமது தமிழ் மொழியை பிரயோகிக்கின்றனர். ஆனால் இந்த நாட்டில் முஸ்லிம்கள் தமது தாய் மொழியாக அரபு மொழியை பிரயோகித்தது கிடையாது…. இந்த நாட்டின் கலாசார பண்பாட்டின் படி அரபு மொழியை தாய்மொழியாக கருதுவதில் தவறு கிடையாது. ஆனால் தமது வேத நூல் உள்ள அரபு மொழியை தாய்மொழியாக நினைக்காத முஸ்லிம்கள் அல்குர்ஆனின் மொழி என்ற காரணத்துக்காக தமது கலாசார அடையாளமாக அறிமுகப்படுத்துவது தவறா? தவறாக முடியாது…. எனவே இந்த அரபு மொழி ஒரு சமூகத்தின் கலாசார மொழி… ஆகவே கலாசார ரீதியில் ஒரு நிறைவை காட்ட அரபு மொழி பெயரளவிலாவது இந்நாட்டில் இல்லாவிட்டால் ஒரு சமூகத்தின் கலாசார விடயமொன்று புறக்கணிக்கப்பட்டதாக கருதவும் முடியும். எனவே அரபு மொழி எம் நாட்டின் கலாசார மத்தியத்தை காக்க பங்காற்றி வருகிறது.

அடுத்து இன்று வரை இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய நாடுகளின் பட்டியலை நோக்கும்போது இலங்கைக்கு அதிகமான வட்டியற்ற கடன்களை வழங்குவது அரபு மொழி பேசும் அரபுலகம் தான். அரபு மொழிக்கு திட்டும் சமூகத்தில் பெரும்பாலானவர்களின் தொழில் வாய்ப்பு இருப்பதும் அரபுலகத்தில் தான். வாகனங்களில் சுற்றித்திரியும் உறவுகளே உங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதும் அரபு மொழி பேசும் நாடுகளிலிருந்தே. இவ்வாறு இந்நாட்டின் பொருளாதார அபிவிருத்தி துறைக்கு அரபு மொழியின் பங்கு அளப்பெரியது.

அடுத்து ஒரு நாட்டின் கல்வி மட்டம் நாட்டு மக்களிடையிலேயே தங்கியுள்ளது. ஒரு நாட்டின் மக்கள் தேர்ச்சி அடைந்துள்ள மொழிகளின் அடிப்படையில் அந்நாட்டு தரம் மதிக்கப்படுகிறது. உதாரணமாக: உலகில் முதலாவது இடத்தில் உள்ள மொழி ஆங்கிலம். அதற்கு அடுத்தபடி இருப்பது அரபு மொழி. இவ்விரு மொழிகளிலும் ஒரு நாடு தேர்ச்சி பெற்றிருக்குமாயின் அந்த நாட்டின் கல்வித்தரமானது மேலோங்கும் என்பதில் சந்தேகமில்லை.

இறுதியாக முஸ்லிம் சமூகத்திற்கு அரபு மொழியின் பங்களிப்பு. இன்று நம் சமூகத்தில் வேறுபாடுகள் குவிந்துள்ளன. இதற்கான காரணம் அரபு மொழி அறிவின்மையே. எனவே இவற்றுக்கான தீர்வு அரபு மொழியிலேயே தங்கியுள்ளது. அடுத்து அரபுக் கலாசாலைகள் முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீக விருத்தியில் பாரிய பங்களிப்பை வழங்குகிறது. எனவே இந்நாட்டின் முஸ்லிம் சமூக ஆன்மீகம் விருத்தி செய்யப்பட வேண்டுமாயின் அரபு கலாசாலைகள் அத்தியாவசியமானவை யாகிறது.

இவ்வாறு வரலாற்று ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், அரசியல், கலாசார, தர்க்க ரீதியிலும் இந்நாட்டுக்கு அன்றுதொட்டு இன்று வரை அரபு மொழி அரும் பங்காற்றி வருகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்த உண்மையை அறியாமல் அரபு மொழிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களிடம், பாரம்பரிய முஸ்லிம்களை பாதுகாப்போம் குரல் எழுப்புபவர்களிடம், தேசாபிமானிகள் தம்பட்டம் தட்டி கிளர்ச்சி செய்பவர்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோளை விடுகின்றேன்.

இந்த நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பதுதான் உங்கள் நோக்கமாக இருந்தால், இந்நாட்டு கலாசாரத்தை கட்டியெழுப்புவது தான் உங்கள் சிந்தனையாக இருந்தால், இந்நாட்டு பொருளாதார வளர்ச்சிதான் உங்கள் கனவாக இருந்தால் உலகின் முதலாம் நூற்றாண்டு முதல் இந்நாட்டின் கலாசார, அரசியல், பொருளாதார, கல்வி, சமயம் போன்ற சகல துறைகளிலும் அரும்பங்காற்றும் அரபு மொழிக்கு எதிரான குரல்களை முடக்க முன்வாருங்கள்.

எனவே ஒட்டுமொத்தமாக தொகுத்து நோக்குகையில் அரபு மொழியானது இலங்கை வரலாற்றில் இன்றியமையாத ஒன்றாகும் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இறுதியாக அரபு மொழியை ஒழிப்பதாக நினைத்து தேசிய மொழியாக பிரகடனம் செய்யும் நிலைமைக்கு இட்டுச் செல்ல வேண்டாம் என கூறிக்கொள்வதோடு, அரபு மொழி அல்குர்ஆன் இறக்கப்பட்ட மொழி. எனவே தனது வேத நூல் உள்ள மொழிக்கு உரிய அந்தஸ்தை அவன் வழங்குவான். இந்நாட்டு மக்கள் அரபு மொழியும் இலங்கையும் நகமும் சதையும் போன்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டு முடித்துக் கொள்கிறேன்.

1) இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் ,
எம்.ஐ.எம். அமீன் ,
2009. இஸ்லாமிக் புக் ஹவுஸ் , கொழும்பு.

2) மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் (2003) க. குணராசா ,
முதல் பதிப்பு , கமலம் பதிப்பகம் ,
யாழ்ப்பாணம். பக்.11

3) இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – ஒரு அறிமுகம் (2012) ,
ஸெயின் றவூப் ,
சமூக விஞ்ஞானங்களுக்கான இப்னு கல்தூன் ஆய்வகம் ,
கண்டி , பக்.12

4) அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் – 1992 ,
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அலுவலகம் , கொழும்பு.

5) தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு ,
ஏ.கே. றிபாயி.
புத்தளம் வரலாறும் மரபுகளும் – 1992 ,
ஏ.என்.எம். ஷாஜஹான் , பக்.36

6) A.R. NO : 132 of 1894.

7) சேது முதல் சிந்து வரை ( மனித இன ஆய்வு )
எம்.கே.ஈ. மௌலானா – 1982 ,
இஸ்லாமிய ஆய்வு மற்றும் கலாச்சார கூடம் , சென்னை.
பக்கம்.35-36

8)புத்தளம் வரலாறும் மரபுகளும் – 1992 ,
ஏ.என்.எம். ஷாஜஹான் , பக்.16.

9) புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும் ,
எம்.எஸ்.எம். அனஸ். (2009)
குமரன் புத்தக இல்லம் ,
கொழும்பு – பக்.38.

10) அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் – 1992.
பக்.20 ,
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு , கொழும்பு.

11) புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும் ,
எம்.எஸ்.எம். அனஸ். (2009)
குமரன் புத்தக இல்லம் ,
கொழும்பு. பக்.7.

12) இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாச்சாரமும் , இரண்டாம் பதிப்பு ,
இஸ்லாமிக் புக் ஹவுஸ் ,
கொழும்பு , பக்.04.

13) இலங்கை சோனகர் வரலாறு. (1907)
அப்துல் ஐ.எல்.எம். அஸீஸ் ,
பக்.17

பஸீம் இப்னு ரஸூல்
நிகவெரட்டிய.
+94 767 453 568
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

நாம் கடந்து கொண்டிருக்கும் இந்த 2019ஆம் ஆண்டானது இலங்கைக்கு மட்டுமல்ல, சர்வதேசத்துக்கும் கூட மறக்க முடியாத ஒரு ஆண்டு தான் இந்த ஆண்டு. அதிலும் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பிறகு இலங்கை முஸ்லிம்களால்…

நாம் கடந்து கொண்டிருக்கும் இந்த 2019ஆம் ஆண்டானது இலங்கைக்கு மட்டுமல்ல, சர்வதேசத்துக்கும் கூட மறக்க முடியாத ஒரு ஆண்டு தான் இந்த ஆண்டு. அதிலும் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பிறகு இலங்கை முஸ்லிம்களால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *