உடைந்து போன உள்ளத்திற்கு தொடர் 02

  • 8

வாழ்வை புரட்டிப் போடும் வலிமிகுந்த ஒரு செயற்பாட்டை நிராகரிப்பு (rejection) எனலாம். திறமையிருந்தும் வாய்ப்பை இழக்கும் இளைஞன், தகுதி இருந்தும் பதவிகள் மறுக்கப்படும் தொழிலாளர்கள், உப்புச்சப்பற்ற காரணத்தினால் திருமண ஒப்பந்தத்தில் நிராகரிக்கப்படும் பெண்கள், தவறேதும் செய்யாமல் விவாகரத்தை வலிந்து கொடுக்க கண்ணீரோடு பெற்றுக் கொள்ளும் துணைவர், திறமையை பணத்தில் அளவிடும் சமூகத்தால் அடிபட்ட அறிவாலிகள், வயதால் மறுக்கப்பட்ட அனுபவசாலிகள் என இவ்வரிசை தொடரும்.

முதலில் உங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களின் பெறுமதியை உணருங்கள். பின் உங்களை நீங்கள் நிரூபிப்பது சரியான இடத்தில் தானா என்பதை அறியுங்கள். ஏனெனில் உங்களின் பெறுமதி தெரியாதவர்களிடம், அதை புரிந்து கொள்ள முடியுமான மனப்பக்குவமும் (matured), அறிவும் அற்றவர்களிடம் உங்களை நிரூபிக்க முனைந்து பின்பு புலம்புவதில் அர்த்தமில்லை. உங்களை நிராகரிக்க அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை அறிந்தால் பல உள்ளங்கள் இன்று அமைதியை தொலைக்காது இருக்கும்.

இவற்றுள் ஏனையவை போலல்லாது உள்ளம் நொருங்கி உடைந்தே போகும் ஒரு நிராகரிப்பு என ஆத்மார்த்தமான அன்பின் நிராகரிப்பை (rejection of compassionate love) அடையாளப்படுத்தலாம். பல உளவளத்துணை அமர்வுகளை போட வேண்டிய மீண்டும், மீண்டும் துளிர்விடும் பிரச்சினை இது தான்.

அவன் என்னை ஏமாற்றி விட்டான் என்பது தெரியும். துரோகம் பன்னியது புரிகிறது. ஆனாலும் அவன் காட்டிய அன்பு தான் திரும்ப திரும்ப என் கண் முன்னே வருகிறது.

அவள் என்னை எவ்வளவு பாதித்தாலும் அவளை என்னால் மறக்கவோ, வெறுக்கவோ முடியாது.

இதன் பிரதிபலிப்புக்களே (reflections) இந்த கூற்றுக்கள். இந்நிலை மிகவும் ஆபத்தானது. இதனை சரியாக கையாளாதவிடத்து உடனடியாக மனச்சோர்வை (depression) இது ஏற்படுத்தும். இதன் உளவியல் செயற்பாட்டை ஆராய்வோம்.

மனிதனின் ஆழ்மனம் (unconscious mind) மிகவும் விசித்திரமானது. அதற்கு உண்மை எது? கற்பனை எது? என்று பிரித்தறிய முடியாது. நாம் கற்பனை செய்யும் எண்ணங்கள் வலிமையாக மாறும் போது அதனை உண்மையாக (reality) நிகழ்வுகளாக எம் மனதில் பதிய வைக்கும். இவ்வண்ணம் ஒருவரைப் பற்றி போடப்படும் தொகுப்பு உண்மைச் சம்பவங்களின் கோப்பாக ஆழ்மனம் உணர்த்தும்.

இவ்வாறு ஒரு காதலி தன் காதலன் நல்லவன், வல்லவன், தன் மீது அவனுக்கு கடலளவு காதல் என்றெல்லாம் கண்டபடி கற்பனையை வளர்த்துவிடும் நேரம் அது உணர்வுகளோடு நெறுக்கமாகப் பிணையப்பட்டு (emotionally strongly attached) வலிமையான நம்பிக்கையாக ஆழ்மனதில் போடும் போது அது அதனை உண்மை என உணரத்தலைப்படும்.

பின்பு அவனது முகமூடி அவிழும் நேரம் அவனது ஏமாற்றம், தந்திரங்கள் எல்லாம் வெளிப்படும் போது அதனை வெளி மனம் ஏற்றுக்கொண்டாலும் ஆழ்மன விதைப்புக்கள் அடிக்கடி தொந்தரவு செய்யும். இவ்வேளையில் ஏலவே விதைத்த எண்ணங்களின் வலிமை யதார்த்தத்தின் உண்மைத் தன்மையை அறிந்தாலும் ஏற்க மறுக்கும்.

இவர்கள் தான் மகிழ்ச்சியாக உணர்ந்த குறித்த காலத்தில் நிகழ்ந்த நினைவுகளை மீட்டி மீட்டி அதில் கிடைக்கும் வலியுடன் கூடிய சுகத்தில் திளைப்பதில் இன்பம் காணுவார். பின்பு நிகழ்கால யதார்த்தத்தில் கண்ணீர் வடிப்பார். மாறி மாறி இது தொடரும். இதற்கு Time tunnel mind addiction என்று கூறுவோம்.

இது ஆரோக்கியமான ஒரு நிலையல்ல. குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தொடர்ந்தும் நீடிக்குமாயின் தற்கொலை வரை செல்லும். இதில் உண்டாகும் கோபம் வாழ்வில் பலவற்றை இழக்க வைக்கும்.

தவக்குல் கடுமையாக சோதிக்கப்படும் காலஎல்லை என இதனை குறிப்பிடலாம். இதனை இறைவனின் உதவியுடனும் , நம்பிக்கையுடனும் வெற்றிகரமான அனுகுமுறைகளை (success formula) கையாள்வதன் மூலம் முற்றிலுமாக வெளிவரலாம். இவற்றுக்கு பொருத்தமான இடத்தில் முற்றுப்புள்ளி வைப்பது அவசியம்.

தன்னால் இந்நிலையை தனியாக கையாள முடியாத போது உளவளத்துணையை நாடுவது மிகவும் அவசியம். இவ்வாறு ஏமாற்றங்களும், வலிகளும், துரோகங்களும் கரைபுரண்ட வெள்ளமாக வரும்போது அதில் முக்கி, மூழ்கி மூர்ச்சையாகாமல் எதிர்நீர்ச்சலடித்து கரை சேர வேண்டும். அப்போது தான் புரியும் கரையும் கரை தந்த வாழ்வும் கற்பனைக்கும் எட்டாத மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உடையவை என்று.

ஆகவே முடிந்த இடங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். அப்போது தான் ஆரம்பங்கள் அழகாக பிறக்கும். அழகானவற்றையும், உண்மையையும் உள்ளத்திற்குள் நுளைய துர்நாற்றம் வீசும் கழிவுகளை எடுத்தெறியுங்கள். தேவையற்றவைகளை அகற்றும் போது தான் தேவையானவை தானாகக் கிடைக்கும்.

உங்களை நேசியுங்கள். உள்ளங்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள். உடைந்து பின் மீண்டெழும் உங்களின் புன்னகையை அழிப்பது அவ்வளவு இலகல்ல…

றிப்னா ஷாஹிப்
உளவளத்துணையாளர்
வியூகம் வெளியீட்டு மையம்

 

வாழ்வை புரட்டிப் போடும் வலிமிகுந்த ஒரு செயற்பாட்டை நிராகரிப்பு (rejection) எனலாம். திறமையிருந்தும் வாய்ப்பை இழக்கும் இளைஞன், தகுதி இருந்தும் பதவிகள் மறுக்கப்படும் தொழிலாளர்கள், உப்புச்சப்பற்ற காரணத்தினால் திருமண ஒப்பந்தத்தில் நிராகரிக்கப்படும் பெண்கள், தவறேதும்…

வாழ்வை புரட்டிப் போடும் வலிமிகுந்த ஒரு செயற்பாட்டை நிராகரிப்பு (rejection) எனலாம். திறமையிருந்தும் வாய்ப்பை இழக்கும் இளைஞன், தகுதி இருந்தும் பதவிகள் மறுக்கப்படும் தொழிலாளர்கள், உப்புச்சப்பற்ற காரணத்தினால் திருமண ஒப்பந்தத்தில் நிராகரிக்கப்படும் பெண்கள், தவறேதும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *