உஸ்தாத் மன்சூரின் புத்தகம் மீதான ஒரு வாசிப்பு

  • 8

03.09.2019 அன்று BMICH லோடஸ் மண்டபத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிட்டு வைக்கப்பட்ட உஸ்தாத் மன்சூர் அவர்களது புத்தகம் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகமாகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது. இடையில் எமது சில தனிப்பட்ட கருத்துக்களையும் இணைத்துள்ளோம் என்பதையும் கருத்திற் கொள்க.

புத்தகம் நான்கு தலைப்புகளைக் கொண்டது.

(01) முதல் தலைப்பு “ஆய்வுக்கு ஒரு முன்னுரை” என்பது. அல்குர்ஆனை அணுகும் போது அல்லது ஒரு விடயம் பற்றிய அல்குர்ஆனது கருத்து, சிந்தனையை புரிந்து கொள்வதாயின் எவ்வகையான ஆய்வுமுறையை கையாள வேண்டும் என்பதை மிக சுருக்கமாக விளக்குகிறார் ஆசிரியர். குறிப்பாக இரு பகுதிகள் கட்டாயமாக எமது வாசிப்பில் உள்வாங்கப்பட வேண்டும், இல்லாத போது பிழையான முடிவுகளுக்கு வர வாய்ப்பிருக்கிறது என்பதை வலியுருத்துகிறார்:

குறிப்பிட்டதொரு தலைப்புடன் தொடர்புபடும் அனைத்து வசனங்களையும் திரட்டல்

தப்சீர் துறையில் இவ் ஆய்வுமுறைமை இன்று தனியாக ஆராயப்படுகிறது. “தப்சீர் அல்-மவ்ழூஈ” (தலைப்பு ரிதியான தப்சீர்) என இதனை அழைப்பர். ஒரு விடயம் சார்ந்து அல்குர்ஆனின் கருத்தை அறிவதாக இருந்தால் அத்தலைப்புடன் தொடர்புபடும் அனைத்து வசனங்களையும் திரட்டில் கொள்ளல் அவசியம். அதுவே ஒட்டுமொத்த பார்வையொன்றை (Holistic view) தரும். போர் பற்றிய தலைப்பாக இருந்தால் அது பற்றிய அனைத்து வசனங்களையும் திரட்டி அவற்றை ஆய்வுக்குட்படுத்துவதே அறிவுபூர்வமானது. இவ் ஆய்வுமுறைமை பின்பற்றப்படாத போது அல்குர்ஆனின் ஒரு பகுதி எடுக்கப்பட்டு இன்னொரு பகுதி புறக்கணிக்கப்படும். அல்குர்ஆன் இப்போக்கை கண்டிக்கிறது: அவர்கள் அல்குர்ஆனை கூறுபோடுகின்றனர் (ஹிஜ்ர் 90-91). இவ்வாறான பிழையிலிருந்து தவிர்ந்துகொள்ள அனைத்து வசனங்களையும் ஓரிடத்துக்கு கொண்டு வர வேண்டியுள்ளது. இதனையே உஸ்தாத் மன்சூர் புத்தகத்தின் ‘பிழையாக புரிந்துகொள்ளப்பட்ட இறைவசனங்கள்’ என்ற மூன்றாம் தலைப்பில் உரையாடுகிறார். வசனங்களை திரட்டி, ஒன்றோடொன்று முரன்படா விதத்தில் விளக்கங்களை எடுத்தல் எனலாம்.

அல்குர்ஆன் இறங்கிய சூழலை கருத்திற் கொள்ளல்

அல்குர்ஆன் இறங்கிய சூழல், அக்காலத்தின் நிலவிய கோத்திர அமைப்பு, ஆட்சி முறைமை, மக்கள் பழக்கவழக்கங்கள், வழக்காறுகள், பாரம்பரியங்கள், செல்வாக்கு செலுத்திய சிந்தனைகள், கோட்பாடுகள், சர்வதேச அரசியல் சூழல் மற்றும் உறவு போன்ற பகுதிகளை மிகக் கவனமாக விளங்கிக் கொள்கின்ற போதே அல்குர்ஆன் எவ்வகையான மாற்றத்தை ஏற்படுத்தியது, அதன் சமூக மாற்ற முறைமை யாது என்றெல்லாம் புரிந்துகொள்ளலாம்.

இன்னொரு பகுதியையும் மேலதிகமாக குறித்துக் காட்டுவது பொருத்தம் எனக் கருதுகிறோம். அறிஞர் பஸ்லுர் ரஹ்மான் முன்வைக்கும் Double movement method இங்கு எமது அவதானத்தைப் பெறுகிறது. இங்கிருந்து அல்குர்ஆனது சூழலுக்குச் செல்லல், பின் அங்கிருந்து எமது சூழலுக்கு வரல் எனக் கூறலாம். இருமுறை கொண்ட பயணம். அல்குர்ஆன் இறங்கிய சூழலை ஆழ்ந்து புரிவது போல எமது சூழலையும் புரிதல். இவ்விரு சூழலையும் புரிவதனூடாக அல்குர்ஆன் அன்று தீர்வு கூறியது போல இன்றைக்கான தீர்வைகளை எடுத்தல். இறைதூதர் காலத்தில் ஏன் போராட்டம் உருவாகியது என்பதை புத்தகத்தின் இரண்டாம் தலைப்பில் யுத்தம் பற்றிய அல்குர்ஆனின் பார்வை, சமாதானம் பற்றிய அல்குர்ஆனின் பார்வை ஆகிய கிளைத்தலைப்புகளில் விளக்குகிறார் உஸ்தாத் மன்சூர். போர் பற்றிய உரையாடலில் இன்று ஏன் இஸ்லாத்தின் பெயரில் போராட்டக் குழுக்கள் உருவாகின? அவற்றின் பின்னணி யாது? போன்ற பகுதிகள் பற்றிய தெளிவும் அவசியமாகின்றன. பூகோள, சர்வதேச அரசியலின் அறிவும் எமக்கு அவசியப்படுகின்றது. இஸ்லாத்தின் பெயரில் இன்று தோற்றம்பெற்றிருக்கும் தீவிரவாத குழுக்கள் பற்றி முஸ்லிம்களிடம் வினவுகின்றனர். அவற்றுக்கு சரியாக பதிலளிக்க இன்றைய அரசியல், பொருளாதார, சமூக ஒழுங்குகள் பற்றிய தெளிவும் அவசியப்படுகிறது.

(02) இரண்டாம் தலைப்பில் யுத்தம், சமாதானம் ஆகிய இரு பகுதிகள் பற்றி எழுதுகிறார். அவற்றுக்கு முன் அல்குர்ஆனின் பார்வையில் மனிதன், கருத்துச் சுதந்திரமும் தெரிவுச் சுதந்திரமும், அறிவுபூர்வ அணுகுமுறை ஆகிய கிளைத் தலைப்புக்களை கொண்டுவருகிறார். இது ஆய்வின் இன்னொரு முக்கிய பகுதி. அல்குர்ஆன் மனிதனை எவ்வாறு நோக்குகிறது?, அவனுக்குரிய பெறுமானம் யாது?, அவன் விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமை அவனுக்கிருக்கிறதா? மத சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறதா? பிரபஞ்சம், அதன் படைப்புகள் பற்றிய அல்குர்ஆனின் பார்வை என்ன? போன்ற அடிப்படை கேள்விகளே போர், சமாதானம் பற்றிய அல்குர்ஆனின் கருத்தை அறிவதற்கான சட்டகத்தை (Frame) உருவாக்கித் தருகிறது. முஸ்லிம் அறிஞர்கள் குறிப்பிடுவது போல இறைவன், மனிதன், பிரபஞ்சம், வாழ்வு ஆகிய நான்குக்குமிடையிலான தொடர்பை சரியாக வரைவதனூடாக உருவாகும் உலகக் கண்ணோட்டத்தின் பின்புலத்திலிருந்து போர், சமாதானம் ஆகிய தலைப்பை அணுகுவதே சரியானதொரு முடிவை எமக்கு பெற்றுத் தருவாதாக இருக்கும். இதனை உஸ்தாத் மிக கச்சிதமாக ஒழுங்கடுத்தியிருக்கிறார்.

போர் தற்காப்புக்காக அனுமதிக்கப்படுகிறது என வாதாடும் உஸ்தாத், எதிர்தரப்பு போராட்டத்தை ஆரம்பித்தமை, ஒப்பந்தங்களை முறித்தமை, நாட்டைவிட்டு வெளியேற்றியமை, கொடுமைகளை கட்டவித்துவிட்டமை போன்ற காரணங்களுக்காகவே அது அனுமதிக்கப்படுகிறது என கூறுகிறார். போர் பண்பாடுகள் பற்றியும் சிறியதொரு விளக்கத்தை முன்வைக்கிறார்.

(03) புத்தகத்தின் மூன்றாம் தலைப்பு பிழையாக புரிந்துகொள்ளப்பட்ட இறைவசனங்கள் என்பது. முதல் தலைப்பில் கூறிய ஆய்வுமுறைமை பின்பற்றப்பட்டு, இரண்டாம் தலைப்பில் விபரித்த சட்டகத்தை, உலகக் கண்ணோட்டத்தை மையமாக வைத்து மூன்றாம் பகுதி கட்டமைக்கப்படுகிறது. அல்குர்ஆன் வன்முறையை தூண்டுவதாக கூறப்படும் வசனங்கள் தனித்தனியாக ஆய்வுக்குற்படுத்தப்படுகின்றன.

கிளைத்தலைப்புகளாக அத்தியாயம் அன்பாலின் பிழையாகப் புரியப்பட்ட வசனங்கள், அத்தியாயம் தவ்பாவின் பிழையாகப் புரியப்பட்ட வசனங்கள், அத்தியாயம் ஆல இம்ரானின் பிழையாகப் புரியப்பட்ட வசனங்கள், அத்தியாயம் பகராவின் பிழையாகப் புரியப்பட்ட வசனங்கள், அத்தியாயம் நிசாவின் பிழையாகப் புரியப்பட்ட வசனங்கள் ஆகியன அமைந்திருக்கின்றன. இத்தலைப்பை வாசிக்கின்ற போது உஸ்தாத் மன்சூர் ஆரம்ப கால, நவீன கால தப்சீர் அறிஞர்களின் புத்தகங்களில் ஆழ்ந்த புலமை கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆரம்பமாக கூறிய சமாதானமே அடிப்படை, போர் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் நியாயமான காரணங்கள் கொண்டு அனுமதிக்கப்படுகிறது என்ற தனது வாதத்தை ஆயத் ஆயத்தாக விளக்குகிறார்.

(04) புத்தகத்தின் நான்காம் தலைப்பு அல்குர்ஆனில் போரை தூண்டும் வசனங்கள் காணப்படுவதற்கான காரணங்கள் என்பது. இது தர்க்க ரீதியான வாதமொன்றை முன்வைக்கிறது. யுத்தத்துக்கு தூண்டும் வசனங்கள், போராட்டத்தால் அதிக கூலி கிடைக்கும் எனக் கூறும் வசனங்கள் ஏன் அல்குர்ஆனில் இடம் பெற்றிருக்கின்றன என்ற கேள்விக்கு நான்கு காரணிகளை அடையாளப்படுத்துகிறார் உஸ்தாத். யுத்தத்தின் இலக்கு சாதாரன உலக பொருட்கள் என்றில்லாமல் இஸ்லாம் சுமந்து வந்த விழுமியங்களுக்கான போர் என்ற இலக்கு நோக்கி நகர்ந்தமை அதிக தூண்டுதலை வேண்டிநிற்கும் முதல் காரணம். தன் உறவினர்களோடு போராட வேண்டிய நிர்ப்பந்த நிலையும் இன்னொரு காரணம். யுத்த வரம்புகளை முன்வைக்கின்ற போது இவ்வுலகில் கிடைக்காமல் செல்லும் செல்வத்துக்கு பதிலாக மறுமை செல்வம், வெற்றி போன்றன காட்சிப்படுத்தப்படுகின்றன என்பது அடுத்த காரணம். போராளிகள் தொகையும் ஆயுதங்களும் சொற்ப தொகையாக இருந்தமையால் இருப்பவர்களை அதிகம் ஆர்வமூட்ட வேண்டியிருந்தமை நான்காம் காரணம்.

இத்தலைப்பு ஆரம்பமாக கூறிய தூது இறங்கிய சூழல் பற்றிய அறிவுப் பின்னணியிலிருந்தே தோற்றம் பெறுகிறது. குறிப்பிட்ட சூழல் புறக்கணிக்கப்பட்டு ஆசையூட்டும் வசனங்கள் மாத்திரம் கருத்திற் கொள்ளப்படுமாயின் பிழையான புரிதல்களுக்கே வரவேண்டியிருக்கும்.

சுருக்கமாக கூறுவதாயின் உஸ்தாத் மன்சூருடைய இப்புத்தகம் அல்குர்ஆன் வசனங்களை ஆய்வுக்குற்படுத்தும் ஆய்வுமுறைமையை பேசுகிறது. அவ் ஆய்வுக்கான தலைப்புதான் போர் என்பது. ஈஸ்டர் தாக்குதலும் அதனைத் தொடர்ந்து உருவாகிய சூழலும் இத்தலைப்பை தேர்ந்தெடுக்க தூண்டியிருக்கிறது. ஒவ்வொரு தலைப்பையும் அடுத்த தலைப்புடன் மிக கச்சிதமாக தொடர்புபடுத்தி புத்தகத்தின் கருத்தை நகர்த்துகிறார்.

உஸ்தாத் தப்சீர் துறையில் நீண்ட கால அனுபவம் பெற்றவர். அதன் விளைவுதான் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினையொன்றை அல்குர்ஆனிடம் சம்ர்ப்பித்து அதற்கான தீர்வை தேடும் இம்முயற்சி. அல்லாஹ் அவரது முயற்சியை ஏற்றுக் கொள்வானாக. இதற்காக உழைத்த அனைவருக்கும் நிரப்பமான கூலி கிடைக்கட்டும்.

Rishard Najimudeen Naleemi
வியூகம் வெளியீட்டு மையம்

03.09.2019 அன்று BMICH லோடஸ் மண்டபத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிட்டு வைக்கப்பட்ட உஸ்தாத் மன்சூர் அவர்களது புத்தகம் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகமாகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது. இடையில் எமது…

03.09.2019 அன்று BMICH லோடஸ் மண்டபத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிட்டு வைக்கப்பட்ட உஸ்தாத் மன்சூர் அவர்களது புத்தகம் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகமாகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது. இடையில் எமது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *