ஆன்மீக வாழ்வு உள்ளத்தை உயிர்ப்பித்தல்

  • 11

மனிதன் உடலோடு அறிவையும் ஆன்மாவையும் பெற்ற விசேட படைப்பு. உடல் பலவீனம் அவனுக்கு ஆரோக்கிய இழப்பை உண்டு பண்ணி அவனை நோயாளியாக்கி விடுகிறது. அறிவுப்பலவீனம் அவனது புத்தியில் பேதலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஆன்மாவின் பலவீனமும் உறங்குநிலையும் அவனது ஆன்மீக வாழ்வில் மந்த நிலையை, பின்தங்கிய நிலையை தோற்றுவித்து இறை உறவு அறுபட்டு சைத்தானிய உணர்வு மிகைத்து பாவங்களில் மையல் கொள்ளவும் அதில் பற்றுக்கொண்டு மூழ்கி விடவும் காரணமாகி விடும்.

பிரமாண்டமாக எழுந்து நிற்கும் அறிவியலுக்கும் தொழில்நுட்ப சாகசங்களுக்கும் சாதனைகளுக்கும் முன்னால் மெய் சிலிர்த்து புருவமுயர்த்தி மெய்மறந்து போகும் நிலை தொடர்ந்தால் அவனது ஆன்மா புறக்கணிக்கப்படும். அது அதனது பெறுமானம் இழக்கும்.

மனிதன் கவனம் செலுத்த வேண்டிய பிரதான பகுதி அவனது ஆன்மாவாகும். ஆன்மாவில் கவனம் செலுத்தாது விட்டால் அவனது அழிவும் இழிவும் ஆரம்பித்து விடும். ஆன்மாவை அதன் பாட்டில் விடுவதும் பேராபத்தாகும். கட்டுப்பாட்டை இழந்த ஆன்மா அழிவுக்கு அருகதையாகும்.

ஆன்மாவை தனது கட்டுப்பாட்டிலும் கட்டுக்கோப்பிலும் வைக்க அதிக பிரயத்தனங்கள் எடுத்தே ஆகவேண்டும். அல்லாஹ் ஆன்மாவில் அதனது செம்மைப்படுத்தலில் சத்தியமிடுகிறான். அதனை அழகுற கையாள வேண்டும்.

ஆன்மாவின் அழகு அது அதனை அழகுற படைத்த அல்லாஹ்வின் மீதுள்ள அன்பை வெளிக்காட்டும் வகையில் அமைத்துக்கொள்வதில் காண்கின்ற அளவற்ற இன்ப நிலையில் தான் உள்ளது. அல்லாஹ்வுக்காக ஆன்மாவை அர்ப்பணித்து விழிப்பு நிலையில் இயங்கும் மனிதன் உளப்பலவீனம் தொற்றாதவனாக இருப்பான். ஆன்மா அல்லாஹ்வை வணங்குவதில் சுவை காணும். அதில் லயித்து நிற்கும்.

மனிதர்களாகிய நாம் உணவில், குடிபானத்தில் சுவை காண்கின்றோம். ரசிக்கின்றோம். இன்புற்று மகிழ்கின்றோம். அதைவிடவும் பலபடிகள் மேல் சென்று அல்லாஹ்வை நெருங்குவதில் ஆன்மாவை வழிப்படுத்தி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு உள்ளத்தின் உறங்கு நிலையை அகற்றி விழிப்புடன் இருந்து இறைவனை நெருங்குவதில் தான் ஆன்மா பேரின்பம் காணும்.

புறச்செயல்களில் வணக்க வழிபாடுகளில் காட்டும் தீவிர ஆர்வமும் ஆசையும் அகச்செயற்பாடுகளில் இல்லாத போது தான் அது முகஸ்துதியாக மாறும். மட்டுமல்ல உப்புச்சப்பற்ற வரண்ட அமல்களாக மாறும். அதில் உயிர்ப்பும் துடிப்பும் உணர்வும் இருக்காது. இறைவனுடனான உள்ளார்ந்த உரையாடலும் இருக்காது. அது உலகிலும் மறுமையிலும் எந்த உருப்படியான பயனையும் தராது.

ஆன்மாவை விழிப்பு நிலையில் இயங்கவைத்து உறங்குநிலையை அகற்றி ஆன்ம சுகம் கண்டு பேரின்ப நிலையை உணர்வதுதான் ஆன்மீக வாழ்வாக அமையும்.

M.M.A. Bisthamy
BA (pera)
PGDE (OUSL)
வியூகம் வெளியீட்டு மையம்

மனிதன் உடலோடு அறிவையும் ஆன்மாவையும் பெற்ற விசேட படைப்பு. உடல் பலவீனம் அவனுக்கு ஆரோக்கிய இழப்பை உண்டு பண்ணி அவனை நோயாளியாக்கி விடுகிறது. அறிவுப்பலவீனம் அவனது புத்தியில் பேதலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஆன்மாவின் பலவீனமும்…

மனிதன் உடலோடு அறிவையும் ஆன்மாவையும் பெற்ற விசேட படைப்பு. உடல் பலவீனம் அவனுக்கு ஆரோக்கிய இழப்பை உண்டு பண்ணி அவனை நோயாளியாக்கி விடுகிறது. அறிவுப்பலவீனம் அவனது புத்தியில் பேதலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஆன்மாவின் பலவீனமும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *