என்னை நனைத்த அவளின் கண்ணீர்….

  • 6

என் உளவளத்துணை வாழ்வில் என்றுமே சந்தித்திராத ஒரு வித்தியாசமான உளவளத்துணைநாடிக்கு உளவளத்துணை வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திரில்லர் படம் பார்ப்பதற்கிணையான ஒரு சூழலில் அவள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தாள். என்புடன் ஒட்டிய சதைகள் அவளின் நோயின் வீரியத்தை பறைசாற்றின. அவளை பார்ப்பதற்கே தனி தைரியம் வேண்டும் என்று கூறுமளவு அவளைப் பார்த்தவுடன் கலங்கித் தான் போனேன். உதடுகளையும், கண்களையும் தவிர அனைத்து இடங்களிலும் காயங்கள் அப்பி இருந்தன. இனங்காண முடியாத தொழுநோய் அவளுக்கு. தினம், தினம் வருத்தத்தில் துடிக்கும் அவளை பார்க்க சக்தியுறாத அவளின் தாய் ”அமைதியான, ஏற்றுக்கொள்ளப்பட்ட மரணமாவது அவளை அடையட்டும்!” எனப் பிரார்த்திக்கிறார். இத்தனைக்கும் அவள் 30 வயதை தாண்டிராத துடிக்கும் இளமையில் வலியால் துடிக்கும் ஓர் அழகான யுவதி. மூன்று பிள்ளைகளின் தாய்.

அவளின் மனதை திறக்க உளவளத்துணை யுக்திகள் தேவைப்படவில்லை எனக்கு. அணைத் திறந்த வெள்ளமாய் அனைத்தையும் அப்படியே கொட்டித் தீர்த்தாள். புரிந்தது. வெளிக்காயத்தை விட உள்ளத்தில் பட்ட காயம் பெரிதென்று. இறுதியில் அவள் கூறிய வார்த்தைகள்

உடல்வலியைக் கூட பொறுத்துக் கொள்வேன். ஆனால் குறித்த ஒரு பிரச்சினை ஏற்படுத்திய வலியை மட்டும் என்னால் தாங்கவே முடியாது.

இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஆகக்குறைந்தது அழுவதற்கு கூட அவளால் முடியவில்லை. உதட்டை சுற்றியுள்ள காயங்களிலிருந்து இரத்தம் சொட்ட ஆரம்பிக்கவே அடித்தொண்டையால் அலறினாள்.

அவளின் கண்ணீர் என்னையும் நனைத்தது. அவளுக்கு பொருத்தமான ஆற்றுப்படுத்தலை வழங்கிவிட்டு இறக்கிவிட்ட சுமைகளிலிருந்து வெளியேறிய இன்பத்தில் அவள் கூறிய நன்றியையும் பெறுமதியான துஆக்களைப் பெற்றுக் கொண்டு வெளியேறும் போது அவளுக்காக உள்ளம் உருகி பிரார்த்தித்தேன்.

அவளைப் போலவே பல பேரை மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சந்தித்தும் உண்டு. அவர்கள் நேரம் குறிக்கப்பட்டு வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள். இங்கே அவளின் பிரச்சினையை அலசுவதற்கோ, அனுதாபத்தை பெற்றுக் கொடுக்கவோ இதைப் பதிவிடவில்லை. இறைவன் எம்மிலும் பல மடங்கு அவளுடன் அன்புமிக்கவன். அவனே அவளுக்கு போதுமானவன்.

“தனக்கு அவளைப் போன்ற பெரிய வீடில்லையே..”

“அவனைப் போன்று வாகனம் இல்லையே”

என ஒப்பிட்டுப் பார்ப்பவர்களே! உங்கள் வாழ்வை இவர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆரோக்கியம் மிகப்பெரும் அருள் என்பதை உணர்வீர்கள்.

வாழ்க்கை அழகானது, அருள் நிறைந்தது. இருப்பதற்கு நன்றி கூறப் பழகுங்கள் இல்லாததற்கு குறைகூறுவது குறையும். எல்லாவற்றையும் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்தலும், சிறிய விடயங்களுக்கெல்லாம் முறைப்பாடு செய்தலும் மகிழ்ச்சியை பாரியளவில் மழுங்கடிக்கும் செயல்களாகும். ( stop complaining and comparing).

அதேநேரம் உலகை நேரான கண்ணோட்டத்துடன் பாருங்கள். நாம் எப்போது எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருக்கின்றோமோ அப்போது தான் எம் வாழ்வில் அழகான விடயங்கள் அரங்கேர ஆரம்பிக்கின்றன. (Be positive)

சிறிய பிரச்சினைகளையும் பெரிதாக்கி இடியப்பச் சிக்கலாய் வாழ்வை மாற்றிக்கொள்ளாதீர்கள். அனைத்திற்கும் அழகிய தீர்வுகள் உண்டு. அதை அடையாளப்படுத்தி சரியான முறையில் அனுகுங்கள். பிரச்சினைகளில் கவனத்தைக் குவிக்காமல் தீர்வுகளில் கவனம் செலுத்தும் போது. பிரச்சினைகள் முடிவுறுத்தப்படுவது சாத்தியமே. (focus the solution not the problem).

உணர்வுகளை நிதானமாக கையாளுங்கள். யாரையும் காயப்படுத்தாமல், தன்னால் யாரும் பாதிக்கப்படாமல் வாழ்வதென்பதே மிகப்பெரும் வரம்..!!!

றிப்னா ஷாஹிப்
உளவளத்துனையாளர்
வியூகம் வெளியீட்டு மையம்

என் உளவளத்துணை வாழ்வில் என்றுமே சந்தித்திராத ஒரு வித்தியாசமான உளவளத்துணைநாடிக்கு உளவளத்துணை வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திரில்லர் படம் பார்ப்பதற்கிணையான ஒரு சூழலில் அவள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தாள். என்புடன் ஒட்டிய சதைகள்…

என் உளவளத்துணை வாழ்வில் என்றுமே சந்தித்திராத ஒரு வித்தியாசமான உளவளத்துணைநாடிக்கு உளவளத்துணை வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திரில்லர் படம் பார்ப்பதற்கிணையான ஒரு சூழலில் அவள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தாள். என்புடன் ஒட்டிய சதைகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *