சர்வதேச பாடசாலைகளும் இரு தோணிகளில் கால் வைக்கும் எம் பெற்றோரும்

  • 28

இன்று இலங்கையிலுள்ள பாடசாலைகளின் வகைப்பாட்டினை நோக்கினால் பிரதானமாக அரசாங்க பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் என எம்மால் வகைப்படுத்தலாம். அரசாங்க பாடசாலைகளிற்கான போட்டி நிலை, ஆங்கில கல்வி மோகம், சர்வதேச போட்டி உலகிற்கு மாணவர்களை தயார் படுத்தல் போன்ற பல காரணங்களிற்காக மழையில் தோன்றும் காலான்களாய் நாடு முழுவதும் தனியார்/ சர்வதேச பாடசாலைகள் தோற்றம் பெற்றுள்ளன.

இன்று இலங்கையில் மிகத் தரமான சர்வதேச பாடசாலைகள் இயங்கத்தான் செய்கின்றன. அதில் படித்து விட்டு பரீட்சைகளில் சித்தி பெற்று சர்வதேச பல்கலைகழகங்களில் பயிலும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். எவ்வளவு தான் சர்வதேச பாடசாலைகள் கவர்ச்சிகரமாக இருந்த போதிலும் அரசாங்க பாடசாலைகளில் மாணவர்களை இணைப்பதில் காட்டும் போட்டிகளிற்கும் குறைவில்லை. இலவச கல்வி, தரமான சேவை, தேசிய பல்கலைகழகங்களிற்கு இலகுவில் நுழையும் வாய்ப்பு, திறமைகளை வெளிப்படுத்த கிடைக்கும் அதிக வாய்ப்புக்கள், அரசாங்கத்தினால் கிடைக்கும் சலுகைகள் என அரசாங்க பாடசாலைகளால் கிடைக்கும் நன்மைகளும் எண்ணற்றவை, விலை மதிக்க முடியாதவை.

இந்நிலையில் இங்கு பிரச்சினை படும் விடயம் என்னவெனில் சர்வதேச பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்து விட்டு இடையில் அரசாங்க பாடசாலைகளில் தம் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் முனையும் சந்தர்பங்களிலே முரண்பாடுகள், பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அதிக செலவு, கலாசார முறைகேடுகள், போன்ற சில காரணங்களிற்காக சில பெற்றோர் இடைநடுவில் மாணவர்களை அங்கிருந்து விலக்கி அரசாங்க பாடசாலைகளில் சேர்கின்றனர். சிலர் தரம் 5 வரை மாணவர்களை சர்வதேச பாடசாலைகளில் சேர்த்து விட்டு 6 ஆம் ஆண்டில் இருமொழி அரசாங்க பாடசாலைகளில் (bilingual school) சேர்க்க திட்டமிடுகின்றனர். இதற்கு பிரதான காரணமாக அவர்களால் சொல்லப்படுவது இதனால் எம் பிள்ளைக்கு சிறந்த ஆங்கில அடிப்படை அறிவு கிடைக்கும், அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உபயோகமாக இருக்கும் என்பதாகும்.

ஆனால் இங்கு தான் பெற்றோர் இரு தோனிகளில் கால் வைக்க நினைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் பிள்ளைகளிக்கு ஒழுங்காக ஆங்கிலமும் தெரியாது, தமிழும் புரியாது. அவ்வாறு வந்த சில மாணவர்கள் வகுப்பில் கற்பித்தலின் போது பயிற்சிகளை எழுதாமல் இருப்பார்கள். கேட்டாலோ தனக்கு தமிழ் தெரியாது என்று கைவிரிப்பார்கள்.

அனைவரும் இவ்வாறு தான் என்று இல்லை. தம் பிள்ளைகளை சர்வதேச பாடசாலைகளில் இணைத்து விட்டு சமகாலத்திலேயே அவர்களுக்கு சிறந்த தமிழ் அறிவு அடிப்படையையும் வழங்கி மாணவர்களை மிகத் திறமையானவர்களாக கொண்டுவரும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அம்மாணவர்களை இடையில் அரசாங்க பாடசாலைகளில் இணைத்தாலும் அவர்களால் இலகுவாக பாடங்களை பயிலக் கூடியதாக உள்ளதோடு பாடங்களில் திறமை காட்டுவோராகவும் உள்ளனர்.

இதே நேரம் ஆங்கிலத்தை மட்டும் முதன்மைப்படுத்தி விட்டு தமிழ் மொழியை வழங்காமல் இடைநடுவில் சேரும் பிள்ளைகளால் கற்பிக்கும் ஆசிரியர்களும் பாவம், சேர்க்கப்படும் மாணவர்களும் பாவம் என்ற நிலை தான் உருவாகுகின்றது. இந்நிலையில் இவ்வாறான மாணவர்களை அரசாங்க பாடசாலைகளில் இணைத்து கொள்ளவும் முடியாது போகும் நிலையும் உருவாகின்றது. இவ்வாறான நிலைகளால் அம்மாணவர்களில் எதிர்காலம் அநியாயமாக வீணடிக்கப்படும் நிலையே உருவாகின்றது.

ஆக பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் கல்வி, எதிர்காலம் குறித்து தூர நோக்குடன் சிந்தித்து செயல்படுதல் காலத்தின் கட்டாயமாகும்.. பிள்ளைகளை பாடசாலைகளிற்கு இணைக்கும் போதே மிகுந்த முன்யோசனையுடன் எதிர்காலத்தை திட்டமிட்டு முடிவுகளை எடுத்தல் அவசியமாகும். அதே வேளை சர்வதேச பாடசாலைகளில் மாணவர்களை இணைக்கும் பெற்றோர் இடையில் தம் மாணவர்களை அரசாங்க பாடசாலைகளில் இணைக்க விரும்பினால் தமிழை சரளமாக கையாலும் திறனை மாணவர்களுக்கு மேலதிகமாக வழங்கி வர வேண்டும். ஏனெனில் இரு மொழி பாடசாலைகளிலும் சில பாடங்கள் மட்டுமே ஆங்கிலத்திலும் மிகுதி பாடங்கள் தமிழ் மொழியிலும் கற்பிக்கப்படுகின்றது என்பதே உண்மை.

ஆக இறுதியாக இரு தோணிகளில் தாமும் கால் வைத்து பிள்ளைகளையும் தத்தளிக்க விடாது வருமுன் காப்போம் என்ற ரீதியில் சிந்தித்து செயல்படுவது காலத்தின் தேவையாகும்.

Shifana Zameer
வியூகம் வெளியீட்டு மையம்

இன்று இலங்கையிலுள்ள பாடசாலைகளின் வகைப்பாட்டினை நோக்கினால் பிரதானமாக அரசாங்க பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் என எம்மால் வகைப்படுத்தலாம். அரசாங்க பாடசாலைகளிற்கான போட்டி நிலை, ஆங்கில கல்வி மோகம், சர்வதேச போட்டி உலகிற்கு மாணவர்களை தயார்…

இன்று இலங்கையிலுள்ள பாடசாலைகளின் வகைப்பாட்டினை நோக்கினால் பிரதானமாக அரசாங்க பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் என எம்மால் வகைப்படுத்தலாம். அரசாங்க பாடசாலைகளிற்கான போட்டி நிலை, ஆங்கில கல்வி மோகம், சர்வதேச போட்டி உலகிற்கு மாணவர்களை தயார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *