தொழில்வாண்மைப் பதங்களும் , போலி உளவியல் முகங்களும் தொடர் 1

  • 6

அதிகமானவர் வாயினுல் இலகுவாக மொழியப்படும் ஒரு வார்த்தையே “உளவியல், உளவளத்துணை”. குறிப்பாக இலங்கையில் 2004க்கு பிறகு சுனாமி மற்றும் போர் சூழ்நிலைகளின் பிற்பாடு உளவளத்துணைக்கான தேவைப்பாடும், கிராக்கியும் ஏனைய சமூகவியல் துறைகளை விட அதிகமாகவே தோன்றியது.

உளவளத்துணையின் தொழில்வாண்மை பரீட்சயத்தை அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் பல்வேறு தளங்களில் பிரயோகித்தனர். உளவளத்துணையின் வளர்ச்சிக்கு பாரிய ஒரு வெற்றியென இதனை அடையாளப்படுத்தலாம் . ஆனால் உளவளத்துணையின் இலங்கை சூழலுக்கான தேவைப்பாடு மிக மோசமான எதிர் விளைவொன்றையும் ஏற்படுத்தியுள்ளது. போலியான, உளவளத்துணை கும்பலொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகும்.

உளவளத்துணையை முறையாக ஒழுங்கான அதன் அடிப்படை கோட்பாடுகள், நுட்பங்களிலிருந்து கற்றுக் கொள்ளாமலும், உளவியல் சார் நோய்கள் அதன் அறிகுறிகள், மருத்துவச் சுட்டிகளின் பிரயோகம், உளவளத்துணை செயன்முறை, சிகிச்சை தலையீட்டு ஒழுங்கு மற்றும் பன்மைத்துவ சூழலில் உளவளத்துணையின் பிரயோகமும், உளவளத்துணை சார்ந்த சர்வதேச ஒழுக்க மாண்புகள் மற்றும் இலங்கைக்கான மிகச் சிறப்பான மூல தர்மங்களும் பெருமானங்களும் போன்ற அடிப்படை தொழில்வாண்மைக் கல்வியும் ஆற்றலும் இல்லாமல், ஒரு கூட்டம் உளவளத்துணை சார்ந்த பதப் பிரயோகங்களை வைத்துக் கொண்டு ஏமாற்றுவதை அவதானிக்கலாம்.

குறிப்பாக மனித உள்ளங்களை சரிப்படுத்தும் மிகப் புனிதமான இத்துறையை, பணியை மிக மோசமாக கையால்வது மிகப் பெரிய ஒரு சமூக குற்றச் செயலாகும், மருத்துவத்துறையில் போலி நுஸ்ரான்களுக்கு எதிராக போர் கொடி தூக்கியதைப் போல இவர்களையும் சமூகத்தவர்கள் அடையாளப்படுத்தி விழிப்பாக இருக்க வேண்டும். சர்வதேச நாடுகளில் உளவளத்துணைப் பரீட்சயத்திற்கு அரச அனுமதிப் பத்திரமும், ஒன்றிணைக்கப்பட்ட தாபனங்களும் இருப்பதைப் போல இலங்கையில் இன்னும் அப்படியான ஒரு முறைமை இன்மையால் அதன் ஆபத்து இன்னும் விகாரம் அடைகின்றது.

பாரம்பரிய, தொழில்வாண்மையற்ற, மத சார் கருத்துக்களை கூறி ஓர் ஆலோசனையாக உளவளத்துணையை இந்நாட்டில் ஜனரஞ்சப்படுத்திய பாரம்பரிய உளவளத்துணையாளர்களை இங்கு நான் நாடவில்லை. அவர்களை விடவும் ஆபத்தான ஒரு கும்பல் இது .

பாரம்பரியமும் தெரியாமல் நவீனமும் தெரியாமல் மனித உள நலப் பிரச்சினைகளை தமது வியாபார மூலதனமாகவும் நவீன மற்றும் பாரம்பரிய தொழில்வாண்மை துறைகளது பதப் பிரயோகங்களை தமது வியாபாரத்துக்கான விளம்பரமாகவும் பயன்படுத்தும் ஏமாற்றுப் பேர்வழிகள் இவர்கள்.

இந்த ஆக்கம் இப்படியான போலி “”counsellors”” சம்பந்தமான ஒரு விழிப்பூட்டலையும் இத்தகைய போலிகள் பயன்படுத்தும் சில பதப் பிரயோகங்களின் தொழில்வாண்மைத் தன்மையையும் அலச முனைகின்றது.

போலி உளவியல் முகங்கள்……

மார்க்கத்தின் பெயராலான உளவியல் முகம்

மார்கக் கல்வியை, இஸ்லாமிய ஷரீஆவை அதன் அடிப்படைகளோடு, அதன் இலட்சியங்களோடு இணைத்து கற்றுவிட்டால் ஏதோ ஏனைய அனைத்தையும் தான் கற்றுவிற்றதாகவும், அனைத்து கலைகள் சம்பந்தமான ஒரு முழுமையான அறிவு தன்னிடம் வந்திருப்பதாகவும் ஒரு பிரமை,

இஸ்லாமிய ஷரீஆவை பொருத்தவரையில் இஸ்லாமிய அடிப்படை சார் அம்சங்களுக்கான முழுமையான வழிகாட்டல்களை உள்ளடக்கியிருப்பதோடு, ஏனைய வாழ்வியல் அம்சங்களுக்கான (பொருளாதாரம், அரசியல், மருத்துவம், உளவியல்……) பொதுவான விதிகளையே பெருமானங்களாக போதித்திருக்கின்றது, சீரிய சிந்தனை மற்றும் மனித அறிவு, நுட்ப முயற்சிகள், கால மாற்றத்துக்கு ஏற்ப மனிதன் தனது பகுத்தறிவின் பிரயோகத்தில் விருத்தி செய்து கொள்ளும் அத்தகைய அடைவுகளுக்கு இந்த பெருமானங்களை பிரயோகிக்கும் போது அந்த அடைவுகளில் இறை சுவையை உணரலாம். (அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் என்ற பெரிய பகுதி இது)

இப்படி இருக்க இஸ்லாமிய ஷரீஆவில் உளவளத்துணை தொழில்வாண்மைக் கல்வியை முழுமையாக துறை போக கற்றதைப் போல ஒரு பிரம்மிப்பில் உளத்துணை கடை போடுவார்கள். பிரச்சினையோடு வருகின்ற சேவைநாடியின் பிரச்சினையை இன்னும் பெரிதாக்கி, போதாக்குறைக்கு சமூக மேடைகளிலும் தம் பேச்சு எடுபட தம்மிடம் உதவி தேடி வந்த சேவை நாடியை பேசு பொருளாக்குவார்கள்.

சமூகம் இவர்கள் விடயத்திலும் விழிப்பாக இருக்க வேண்டும், உள ஆற்றுப்படுத்தலுக்கான அல்குர்ஆனிய வழிகாட்டல்களை, இறை தூதர் முறைமைகளை சரியாக பிரயோகிக்க உளவளத்துணை சார் அடிப்படை அறிவும் ஆற்றலும் இன்மையையே விமர்சனத்திற்கு உற்படுத்துகின்றேன்.

சமூக செயல்பாட்டாளர்கள்.

இவர்களும் சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும், சமூகத் தீமைகளை ஒழிக்க வேண்டும் குறிப்பாக இளைஞர்களை காப்பாற்ற வேண்டும், போதையிலிருந்து வெளிக் கொண்டு வர வேண்டும். என்ற உயர்ந்த நல்ல நோக்கத்தில் களம் குதிப்பார்கள். ஓர் இரண்டு பாடசாலை நிகழ்சிகள், சில இஸ்லாமிய செயற்பாட்டு இயக்கங்களின் வலுவூட்டல் நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக, வளவாளராக கலந்து கொண்டு உணர்ச்சி துடிக்க உரத்து பேசி நிகழ்ச்சி பங்குபற்றுனர் ஒரு சிலரின் கண்களில் கண்ணீரை கண்டவுடன், அதுதான் தான் ஒரு சிறந்த வழிநடாத்துனர் என்பதற்கான ஆதாரமாக கொண்டு பின்பு தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள, தாய் மார் உள்ளத்தில் ஓர் இடம் பிடிக்க தனக்கு தானே சூட்டிக் கொள்ளும் பெயர்களே. Counsellor, psychiatric , social welfare psychologist , psychotherapist ……..

நல்லெண்ணமொன்று தம் செயலுக்கு பின் இருந்தாலும் குறித்த செயற்பாடு தொடர்பான தொழில்வாண்மைக் கல்வி தன்னிடம் இன்மையினால் பாரிய ஒரு விபரீதமாக இது மாறிவிடுகின்றது.

இது போன்ற போலி உளவியல் முகங்கள் அதிகமாக நடமாடுவதை அவதானிக்கலாம், போதாக்குறைக்கு முக நூல் விளம்பரங்களை காணும் போதும் தொழில்வாண்மை உளவளத்துணையாளர்கள் ஏன் இவர்களைப் பார்த்து, இவர்களுக்கு மௌன அங்கீகாரம் கொடுக்கின்றார்கள் என எண்ணத் தோன்றும்!

இவர்கள் தொடர்பாக இரண்டு விதமான தீர்வை முன் மொழிகின்றேன். வேறு ஏதேனும் பொருத்தமான தீர்வுகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  1. உளவளத்துணையை தொழில்வாண்மையாக போதிக்கும் ஏராளமான நிறுவனங்கள் இலங்கையில் இருக்கின்றன. (NISD، SLFI, OUSL……..) போன்ற நிறுவனங்களில் போதிக்கும் உளவளத்துணை தொழில் வாண்மைக் கல்வியை கற்றுக் கொள்ள முயற்சிக்கலாம். (ஒரு விடயம் தொடர்பான புரிதல் உங்களிடம் இல்லையெனின் அது பற்றி தெரிந்தவர்களிடம் வினவுங்கள் – அல் – குர்ஆன்)
  2. பொதுமக்களுக்கு அல்லது சமூக நலன் விரும்பிகளுக்கு இது போன்ற போலி உளவியல் முகங்களை சட்டத்தின் முன் நிறுத்த முயற்சிக்கலாம்.
தொடரும்…….
ஹுஸ்னி ஹனீபா
(நளீமி, NISD உளவளத்துணை மாணவன்.)
வியூகம் வெளியீட்டு மையம்

அதிகமானவர் வாயினுல் இலகுவாக மொழியப்படும் ஒரு வார்த்தையே “உளவியல், உளவளத்துணை”. குறிப்பாக இலங்கையில் 2004க்கு பிறகு சுனாமி மற்றும் போர் சூழ்நிலைகளின் பிற்பாடு உளவளத்துணைக்கான தேவைப்பாடும், கிராக்கியும் ஏனைய சமூகவியல் துறைகளை விட அதிகமாகவே…

அதிகமானவர் வாயினுல் இலகுவாக மொழியப்படும் ஒரு வார்த்தையே “உளவியல், உளவளத்துணை”. குறிப்பாக இலங்கையில் 2004க்கு பிறகு சுனாமி மற்றும் போர் சூழ்நிலைகளின் பிற்பாடு உளவளத்துணைக்கான தேவைப்பாடும், கிராக்கியும் ஏனைய சமூகவியல் துறைகளை விட அதிகமாகவே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *