முஸ்லிம் அரசியல் அமானிதம் பாழ் படுத்தப்படுகின்றதா?

  • 15

பங்காளர்களும் பார்வையாளர்களும் அல்லாஹ்விடம் பதில் கூறியே ஆக வேண்டும், அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சிக் கொள்ளுங்கள்.

கட்சி, அரசியல், தேர்தல், வாக்குரிமை, ஆட்சி, அதிகாரம், நிர்வாகம், மக்களது வரிப்பணம், அபிவிருத்தி நிதிகள், தொழில் சார் சலுகைகள், சிறப்புரிமைகள், வசதி வாய்ப்புக்கள், கொடுப்பனவுகள், ஊதியங்கள் என எல்லாமே அமானிதங்கள். கருத்துக்கள், சிந்தனைகள், விமர்சனங்கள், எழுத்துக்கள், பேச்சுக்கள், ஊடகப்பணிகள், பத்திரிக்கை தர்மங்கள், முடிவுகள் சகலதும் அமானிதங்களாகும். வாக்குறுதிகள், உடன்பாடுகள், உடன்படிக்கைகள் அமானிதங்கள் ஆகும், சந்தர்ப்பங்கள், சலுகைகள், வசதி வாய்ப்புக்கள், வளங்கள், என சகலதும் அமானிதங்களாகும்.

ஒரு அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த சமயம் அவர்களிடம் நாட்டுப்புறத்து அரபி ஒருவர் வந்தார். “மறுமை நாள் எப்போது?” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர், “நபி (ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதை செவியுற்றனர், எனினும் அவரது இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை” என்றனர். வேறு சிலர், “அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை” என்றனர். முடிவாக நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துக் கொண்டு, “மறுமை நாளைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்) “அல்லாஹ்வின் தூதரே, இதோ நான் தான்” என்றார். அப்போது “அமானிதம் பாழ்படுத்தப் பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்” என்று கூறினார்கள். அதற்கவர், “அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” எனக் கேட்டார். அதற்கு, “எந்தக் காரியமாயினும் அது தகுதி அற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி)

“நான் (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை (எதாவது) அதிகாரத்தில் அமர்த்தக் கூடாதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோள் பட்டையில் அடித்துவிட்டு, “அபூதர்ரே! நீர் பலவீனமானவர். அதுவோ( அமானிதம். யார் அதைக் கையாள வேண்டிய முறைப்படி கையாண்டு, தன் மீதுள்ள கடமையை நிறைவேற்றுகிறாரோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) மறுமை நாளில் அது இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: முஸ்லிம் 3729)

(மறுமையில்) மக்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்வார்கள். உடனே அவர்கள் எழு(ந்து பரிந்துரைக்க அனுமதி கோரு)வார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அப்போது நம்பகத்தன்மையும் இரத்த பந்த உறவும் அனுப்பி வைக்கப்படும். அவையிரண்டும் (நரகத்தின் மீதுள்ள) அப்பாலத்தின் இரு மருங்கிலும் வலம், இடமாக நின்று கொள்ளும். அப்போது உங்களில் முதல் அணியினர் மின்னலைப் போன்று அதைக் கடந்து செல்வார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 329.)

“நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்து கொண்டான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான் ” [33:72]

நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத் தூதருக்கும் (முஹம்மதுக்கும்) மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள்! (அல்குர்ஆன் 8:28)

எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு அஞ்சிய, கூட்டுப் பொறுப்பும், வெளிப்படைத் தன்மையும், பொறுப்புக் கூறலும் (Collective Responsibility, Transparency and Accountability) உள்ள ஒன்றுபட்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் மாத்திரமே எமது இருப்பு, பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உத்தரவாதப்படுத்த முடியும்.

அவ்வாறான அடிப்படைப் பண்புகளை இழந்தமையினாலேயே எமது போராட்ட அரசியல் தனிநபர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் அகப்பட்டு சூதாட்ட அரசியலாக பரிணாமம் அடைந்து பங்காளிச் சண்டைகளுக்குப் பலியாகி இன்று தேசிய அரங்கில் கையாலாகாத சரணாகதி அரசியலைச் செய்து கொண்டிருக்கிறது.

பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற கையறு நிலையில் முஸ்லிம் சமூகம் மீண்டும் அரசியலில் அனாதையாகி அந்தரப்பட்டு நிற்கின்றது. எமது வங்குரோத்து அரசியல் கலாசாரத்திற்கான மாற்றீடு குறித்து சிந்திப்பதும் செயலாற்றுவதும் சமூகத்தின் ஒவ்வொரு ஆண் பெண் உறுப்பினர் மீதும் சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுக் கடமையாகும்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

பங்காளர்களும் பார்வையாளர்களும் அல்லாஹ்விடம் பதில் கூறியே ஆக வேண்டும், அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சிக் கொள்ளுங்கள். கட்சி, அரசியல், தேர்தல், வாக்குரிமை, ஆட்சி, அதிகாரம், நிர்வாகம், மக்களது வரிப்பணம், அபிவிருத்தி நிதிகள், தொழில் சார் சலுகைகள்,…

பங்காளர்களும் பார்வையாளர்களும் அல்லாஹ்விடம் பதில் கூறியே ஆக வேண்டும், அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சிக் கொள்ளுங்கள். கட்சி, அரசியல், தேர்தல், வாக்குரிமை, ஆட்சி, அதிகாரம், நிர்வாகம், மக்களது வரிப்பணம், அபிவிருத்தி நிதிகள், தொழில் சார் சலுகைகள்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *