பிறர் பார்க்க அல்லது பிறரைப் பார்த்து வாழாதீர்

ஒரு கூலித் தொழிலாளி, ஒரு சிற்றூழியர், ஒரு கீரை வியாபாரி, ஒரு மீன் வியாபாரி, வீட்டில் உணவு தயாரித்து விற்கும் சகோதரிகள், கடல்கடந்து கண்காணா இடங்களில் கஷ்டப்பட்டு உழைப்போர், ஒரு நடைபாதை வியாபாரி, ஒரு சிற்றுண்டி வியாபாரி, ஒரு சர்பத் கடை நடாத்துனர், ஒரு கஞ்சி வியாபாரி, ஒரு சிறிய விவசாயி, ஒரு சிறிய கால்நடை வளர்ப்பாளர், ஒரு பெட்டிக்கடை நடத்துனர், ஒரு சலூன் கடைக் காரர்,

இவ்வாறு பல சிறிய வியாபார நடவடிக்கைகளை, சிறு கைத் தொழில்களை மேற் கொண்டு ஹலாலாக உழைத்து அன்றாட வாழ்வை முன் நகர்த்தும் ஏழை எளியவர்கள் இந்த பூமியிற்கோ அதன் மீது வாழ்வோரிற்கோ சுமையாகாது வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள். அவர்களும் திருமணம் முடிக்கிறார்கள், வீடு கட்டுகிறார்கள், பிள்ளைகள் பெற்று வளர்க்கிறார்கள். அவர்களிற்கும் சுக துக்கங்கள் இருக்கின்றன.

பூமியிற்கு சுமையாக மக்களை நேரடியாகவும் மறமுகமாகவும் ஏமாற்றி சுரண்டி வாழ்வோர், ஊழல் மோசடி பேர்வழிகள். தான் எமது பார்வையில் வாழ்வாங்கு வாழ்கிறார்கள், விஷேட அதி விஷேட பிரமுகர்கள். அவர்களுக்கு ஆள் பிடித்து வால் பிடித்து கால் பிடித்து அண்டிப்பிழைப்பு நடத்துவதில் பெருமை கொள்ளும் பலரும் தாம் வாழ்வாங்கு வாழ்வதாக தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாள் நாம் தனித்தனியாக அழைக்கப்படுகின்ற அந்த நாள் எமது வாழ்வு, உழைப்பு, கற்றவைகள், பெற்றவைகள் என எல்லாவற்றிற்கும் பொறப்புக்கூற
அந்த வல்லோன் சந்நிதியில்
நிற்கும் பொழுதே யார் வாழ்வாங்கு வாழ்ந்த பிரமுகர் என்பது வெளிச்சத்திற்கு வரும்.

வாழ்வு உங்களுடையது, ஒவ்வொரு பொழுதையும் நேர்மையாக வாழுங்கள், பிறர் பார்க்க அல்லது பிறரைப் பார்த்து வாழாதீர் அதனை தொலைத்து விடுவீர்கள் பூமியில் தான் எத்தனை பிரபலங்கள் வானத்தில் அவர்களுக்கு அறிமுகமே இல்லை, பூமியில் அறிமுகமற்ற எத்தனையோ பேர்
வானத்தில் வரவேற்புக்குரிய பிரமுகர்கள். வாழ்வு குறித்த எமது பார்வைகளை சரி செய்து கொள்வோம். புறக்கோலங்கள் உண்மையான வாழ்வின் அளவுகோல்கள் அல்ல.

யா அல்லாஹ், இல்லாமை, இயலாமை, போதாமைகளுக்கு மத்தியிலும் எம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கி ஹலாலான வாழ்வு தந்த எமதருமைப் பெற்றோரின் ஈருலக வாழ்விலும் நிறைவாக அருள் புரிவாயாக..!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

Leave a Reply

%d bloggers like this: