இது பொய்யல்ல பிரம்மை..

  • 7

சில வருடங்களுக்கு முன்பு கடுமையான தலைவலி, மூட்டு வலி, முதுகு வலி, வயிற்று வலி, நெஞ்சடைப்பு போன்ற நோய்களிகளால் மிகவும் அவதியுற்றவாறு ஒரு சேவைநாடி என்னிடம் உளவளத்துணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தார்.

அவரின் பிரச்சினையை (case study) ஆய்வு செய்யும் போது பல விடயங்கள் புலப்பட்டன. கிட்டத்தட்ட 5 வருடங்களாக இதே நோய்களால் இவர் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார். பார்க்காத வைத்தியர்கள் இல்லை, செய்யாத பரிசோதனைகள் (tests) இல்லை. அனைத்துப் பரிசோதனைப் பெறுபேறுகளும் மேற்போந்த நோய்களுக்கான எந்தவொரு அறிகுறிகளையும் காட்டவில்லை. ஈற்றில் வைத்தியர்களின் பரிந்துரையின் பெயரில் ஒரு மனநல மருத்துவரை நாடியுள்ளார். சிறிது காலம் நோய்கள் அடங்க மீண்டும் மீண்டும் அதே பிரச்சினைகள் துளிர்க்க உளவளத்துணையை நாடியுள்ளார்.

வைத்தியப் பரிசோதனைகள் மற்றும் அறிக்கைகள் (medical reports) தெளிவாக உடலியல் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதை காட்டியதை உறுதிப்படுத்தியதன் பின் சிகிச்சையைத் தொடர்ந்தேன். ஆம். இவரைப் பாதித்திருந்தது போலித் தோற்ற உடல் நோய்க் கோளாறு (somatoform disorder) எனப்படும் ஓர் உளவியல் நோயே.

எம்மில் பலருக்கு இந் நோய் காணப்படுகிறது. வைத்தியர்களிடம் செல்லும் நோயாளர்களில் 50% ஆனவர்கள் உளவியல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. போலித்தோற்ற உடல் நோய்க் கோளாறுகளால் (somatoform disorder) எம்மில் நூற்றுக்கு ஒருவர் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அதாவது போலித்தோற்ற உடல் நோய்க் கோளாறு என்றால் உடல்ரீதியாக எந்த நோயும் இல்லாத போது தாம் உடல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக எண்ணி அதை முற்றிலும் நம்பி அதனால் ஏற்படும் போலி அறிகுறிகளால் துன்பப்படுவர். இங்கு ஆழ்மன (unconscious) அல்லது நனவிலிச் செயற்பாட்டினால் நோயுற்றது போல் போலித் தோற்றங்கள் உடலில் காணப்படும். இதில் பலவகைகள் (types) காணப்படுகின்றன. இக்கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் உடலைப் பற்றி அளவுக்கதிகமான கரிசனை கொண்டு தாம் நோயால் பாதிக்கப்பட்டவரென வெவ்வேறு மருத்துவர்களை சந்திப்பார். பல வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வார். இருப்பினும் பெறுபேறுகள் அவர்களுக்கு எந்த நோய்களும் இல்லை என்பதைக் காட்டும். இதனால் வைத்தியரிடமோ, வைத்திய அறிக்கைகளிலோ திருப்தியுராது மீண்டும், மீண்டும் வேறு மருந்தை, வைத்தியரை நாடுவார்.

இதில் ஒருவகை தான் ஹைப்போகொன்றியாஸிஸ் கோளாறு (hypocondriasis) இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படியென்றால் பொதுவான தலைவலி வந்தாலும் தனக்கு மூளைக் கட்டி (brain tumor) உள்ளதோ என்றும் வயிற்று வலி வந்தால் கிட்னி செயலிழந்து (kidney failure) விட்டதோ என்றும் தனக்கு புற்று நோய் (cancer) , நெஞ்சடபை்பு (heart attack) என்று கொடிய நோயால் தாம் பாதிக்கப்பட்டிருப்பதாக கற்பனை செய்து சந்தேகப்பட்டு அதைத் தீர்ப்பதற்காக வைத்தியரை அடிக்கடி நாடுவார். இவ்வாறானவர்கள் பொய் சொல்லவில்லை. உணர்கிறார்கள். இவர்களும் நோயாளர்கள் தான். ஆனால் நோய் இருப்பது உடலில் அல்ல உள்ளத்தில்.

இதில் இன்னொரு வகையுமுண்டு. நனவிலிச் செயற்பாட்டின் மூலம் அல்லது தீவிர உள முரண்பாடுகள் (severe psychological conflicts) மூலம் திடீரென்று பேச முடியாமல் போதல், குருட்டுத்தன்மை, மயக்கம், பாரிசவாதம், கை மற்றும் கால்கள் திடீரென்று இயங்காமல் போதல் போன்றவையும் உருவாகலாம். இதனை மாற்றுக் கோளாறு என்று கூறுவோம். இதற்கு உளவளத்துணையை விட ஹிப்னோடிஸம் (hipnotism) எனப்படும் அறிதுயில் சிகிச்சை முறையே வெற்றியளிக்கும்.

உடல் போலித் தோற்றக் கோளாறு (somatoform disorder) நோயால் முதியவர்கள் மட்டுமல்ல வயது வந்தோர், இளைஞர் தொடக்கம் சிறுவர்கள் கூட பாதிக்கப்படலாம். இவ்வாறான நோய் அறிகுறிகள் (symptoms) உங்களை சார்ந்தோர்களிடம் தென்பட்டால் உடலில் எந்தப் பிரச்சினைகளுமில்லை என்பதை முறையான பரிசோதனைகளின் ஊடாக உறுதிப்படுத்திய பின் உளவளத்துணையாளர் ஒருவரிடம் தாமதிக்காது அழைத்துச் செல்லுங்கள்.

றிப்னா ஷாஹிப்
உளவளத்துணையாளர்

சில வருடங்களுக்கு முன்பு கடுமையான தலைவலி, மூட்டு வலி, முதுகு வலி, வயிற்று வலி, நெஞ்சடைப்பு போன்ற நோய்களிகளால் மிகவும் அவதியுற்றவாறு ஒரு சேவைநாடி என்னிடம் உளவளத்துணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தார். அவரின் பிரச்சினையை (case…

சில வருடங்களுக்கு முன்பு கடுமையான தலைவலி, மூட்டு வலி, முதுகு வலி, வயிற்று வலி, நெஞ்சடைப்பு போன்ற நோய்களிகளால் மிகவும் அவதியுற்றவாறு ஒரு சேவைநாடி என்னிடம் உளவளத்துணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தார். அவரின் பிரச்சினையை (case…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *