அன்னிய மதங்களை தூற்ற வேண்டாம்

  • 9

பிற மதங்களின் கடவுளர்களை ஏச வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகிறது. எனவே பிற நம்பிக்கைகளையும் நாம் ஏசவோ, தூற்றவோ கூடாது. ஆனால் இப்படி கூறிய அல் குர்ஆன் குறைஷிகளின் மற்றும் யூத, கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகளையும், சமூக நடைமுறைகளையும் விமர்சனம் செய்கிறது. உண்மையில் இவை ஒன்றுக்கொன்று முரணான விஷயங்கள் அல்ல. ஏசுவதும், விமர்சனம் செய்வதும் ஒன்றல்ல என்பது வெளிப்படையான ஒரு விஷயம். விமர்சனம், ஒரு உரையாடல். மாறாக தூற்றுதல் என்பது வெறுப்பில் இருந்து வருவது. வெறுப்பு தீய ஷைத்தானுக்கு உரியதேயன்றி அல்லாஹ்வுக்குரியதன்று.

குறைஷிகள் லாத், மனாத், உஸ்ஸா போன்ற பெண் தெய்வங்களை வணங்கி வந்தார்கள். அல்லாஹ் பற்றிய நம்பிக்கை குறைஷிகளுக்கு இருந்தது என்றாலும் லாத்தையும், மனாத்தையும், உஸ்ஸாவையும் அல்லாஹ்வின் பெண் மக்கள் என்று அவர்கள் கூறி வந்தார்கள். ஆனால் குறைஷிகளோ அப்பட்டமான பெண் ஒடுக்குமுறை சமூகத்தை கட்டிக் காத்து வந்தவர்கள். பெண் குழந்தைகளை பிறந்தவுடன் உயிருடன் புதைத்து வந்தவர்கள் அவர்கள். ஆனால் அவர்கள் ஏக இறைவனுக்கு இணையாக வழிப்பட்ட சிலைகளோ பெண் தெய்வங்கள்.

இந்த முரணை அல் குர்ஆன் கேள்வி கேட்டது. ‘உங்களுக்கு ஆண் மக்களும், அல்லாஹ்வுக்கு பெண் மக்களும் எனில் அது அநீதியான பங்கீடு’ என்று குறைஷிகளின் இந்த முரண்பட்ட அணுகுமுறையை அல் குர்ஆன் விமர்சனம் செய்கிறது. உண்மையில் இது சிந்திக்கச் செய்யும் ஒரு உரையாடல். மாறாக ‘உன் நம்பிக்கையை விட என் நம்பிக்கை உயர்ந்தது’ போன்ற முடிவுறாத தர்க்கம் அல்ல.

இது போலவே சமூகநீதிக்கு முரணான அம்சங்களை இஸ்லாம் நிச்சயமாக நம்பிக்கை, மத சுதந்திரம் என்று விட்டு விடாது. நிச்சயமாக அதனை கேள்வி கேட்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுத் தரும். இந்த வகையில் சாதியம் என்கிற அநீதியான சமூக கட்டமைப்பை அது பிற மதங்களுக்கு உரிய நம்பிக்கை என்று விட்டு விடாது. நிச்சயமாக இஸ்லாம் அதனை நோக்கி கேள்வி எழுப்பும். அந்த அநீதியை மாற்றப் போராடும். மனிதர்கள் பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் தான் உலகினுள் கால் பதிக்கிறார்கள் எனும் நம்பிக்கை பிழையானது என்பதை புரிந்து கொள்ள இறை வேதங்கள் அவசியம் இல்லை. மனிதப் பகுத்தறிவே அதற்கு போதுமானது.

இந்த வகையில் ஒரு முஸ்லிமுக்கு பெரியாரும், அம்பேத்கரும் மனதுக்கு நெருக்கமாக இருப்பது ஆச்சரியமான விஷயம் அல்ல. ஒரு முஸ்லிமின் நம்பிக்கை அடிப்படையில் அது இயல்பான ஒரு விஷயம். இஸ்லாத்தில் ஏகத்துவம் அளவுக்கே சமத்துவமும் முக்கியமானது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்கள் இந்த உண்மையை வரலாற்றில் தவற விட்டமையே இஸ்லாமிய அழைப்பு பின்னடைந்தமைக்கான காரணமாக இருந்தது. இந்தியாவில் முஸ்லிம் ஆத்மீக ஞானிகளின் அடக்கஸ்தலங்களுக்கு பெருமளவு தாழ்த்தப்பட்ட மக்கள் (முஸ்லிம் அல்லாதவர்கள்) வருகை புரிவதற்கான காரணமாக அவர்கள் மனிதர்கள் என்ற ரீதியில் சமமாக நடாத்தபடுவதை குறிப்பிடுகிறார் வில்லியம் டெல்ரிம்பல் (City of Jinn’s இல் என்று நினைக்கிறேன்). இஸ்லாம் என்று சொல்லுக்கு அடிபணிதல் மற்றும் சாந்தி, சமாதானம் என்று இரண்டு கருத்துக்கள் உள்ளது.

அடிபணிதல் இறைவனுக்கு உரியது. சமாதானம் என்பது மனிதர்களுடன் கொள்ளும் உறவுமுறையில் வெளிப்பட வேண்டிய அணுகுமுறை. மனிதர்களை சமமாக கருதாமல், நீதியுடன் நடந்து கொள்ளாமல் சமாதானம் ஏது?

நபிகளாரின் இளம் வயதுகளில் பிற பகுதிகளில் இருந்து மக்காவுக்கு வரும் வணிகர்களின் உரிமைகளை பாதுகாக்க ஹிஸ்புல் புளூல் எனும் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. தான் இறைதூதர் ஆகிய பிறகான ஒரு காலப்பகுதியில் அதனை நினைவுகூர்ந்த நபிகள் நாயகம் ‘இப்போது அப்படி ஒரு ஒப்பந்தத்துக்கு அழைக்கப்பட்டால் அதில் கலந்து கொள்வது நூறு சிவந்த ஒட்டகைகள் எனக்கு கிடைப்பதை விட விருப்பமானது’ என்றார். இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு நடைமுறை வடிவம் இறைத்தூதரின் வாழ்வு (ஸீரா) தான்.

எங்கெல்லாம் நீதிக்கான போராட்டம் இருக்குமே அங்கெல்லாம் முஸ்லிம்கள் இருக்க வேண்டும்! இங்கிருந்து அறிந்து பாதையை செப்பனிடுவோம்

Lafees

பிற மதங்களின் கடவுளர்களை ஏச வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகிறது. எனவே பிற நம்பிக்கைகளையும் நாம் ஏசவோ, தூற்றவோ கூடாது. ஆனால் இப்படி கூறிய அல் குர்ஆன் குறைஷிகளின் மற்றும் யூத, கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகளையும்,…

பிற மதங்களின் கடவுளர்களை ஏச வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகிறது. எனவே பிற நம்பிக்கைகளையும் நாம் ஏசவோ, தூற்றவோ கூடாது. ஆனால் இப்படி கூறிய அல் குர்ஆன் குறைஷிகளின் மற்றும் யூத, கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகளையும்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *