மறுசீரமைக்கப்பட வேண்டிய ஒற்றையடிப்பாதைகள்

  • 9

பொருளாதார அபிவிருத்தியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளே வணிகத் துணைச்சேவைகளாகும். அவ்வகையில் வணிகத் துணைச்சேவைகளாக வங்கிச் சேவை, காப்புறுதிச் சேவை, தொடர்பாடல் சேவை, களஞ்சியப்படுத்தல் சேவை, போக்குவரத்துச் சேவை என்பன காணப்படுகின்றன.

 

இலங்கையை பொருத்தவரையில் பொருளாதார அபிவிருத்தியை இலக்காக கொண்டு துணைச்சேவைகளுல் போக்குவரத்துச் சேவையை விருத்தி செய்த அரசாக மஹிந்த ராஜபக்ஷா அரசின் இரண்டாவது காலப்பகுதியை குறிப்பிடலாம். அதிவேகப்பாதை திறந்து வைப்பு, துறைமுகம், விமான நிலையம் அமைப்பு, பிரதான வீதிகள் சீரமைப்பு, கிராமிய உள்வீதிகள் கொங்றீட், தார் இட்டு செப்பனிடல் என்பன அன்று மேற்கொள்ளப்பட்ட சில சேவைகளாகும். ஆனால் இலங்கையில் நகரின் பிரதான வீதிகள் செப்பனிட்டு சீரமைத்தாலும் சேறிப்புற வீதிகளும், கிராமத்தின் பிரதான மற்றும் உள் வீதிகள் கவனிப்பாறற்று தேர்தல் காலங்களில் போலி வாக்குறுதிகளை வழங்கும் தளங்களாக காணப்படுகின்றது. இவ்வாறு தொடர்ந்தும் கிராமப்புற வறிய மக்களை ஏமாற்றாது தற்போதைய அரசு கிராமிய உள்வீதிகளை மீண்டும் மறு சீரமைக்க முன்வர வேண்டும்.

இன்றைய கிராமத்து கொங்றீட்டால் செப்பனிடப்பட்ட உள் வீதிகளை அவதானித்தால்   பெரும்பாலான இடங்களில் மழை காலங்களில் பிரயாணிக்க முடியாத வண்ணம் நீர் தேங்கியும் சகதியுமாக காணப்படுகின்றது. அபிவிருத்தியடைந்த இன்றைய யுகத்தில்  இன்னும் சில வீதிகள் துவிச்சக்கரவண்டி கூட செல்ல முடியாத வண்ணம் ஒடுங்கியதாக ஒற்றையடிப்பாதைகளாக காணப்படுகின்றன.

 

இதனால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர். மழை காலங்களில் கிராமத்து வீதிகளில் பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் நடைபயணமாகவும் செல்ல முடியாது சிரமப்படுகின்றனர். ஒற்றையடிப்பாதைகளில் இரு பக்கங்களில் இருந்தும் ஒரே சந்தர்ப்பத்தில்  துவிச்சக்கரவண்டிகள் வருகின்ற நிலையில் மோதிக் கொள்ளும் நிலை ஏற்படுகின்றது. அங்கவீனமான நடக்க முடியாதவர்களை தேவைகளுக்காக வைத்தியசாலை, சந்தை போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்கையில் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். இவ்வாறான இடங்களில் மரணச் சடங்குகள் நிகழ்ந்தால் பிரேதங்களை மயானத்திற்கு கொண்டு செல்வதில் கூட பல சிரமங்களை எதிர் நோக்கும் நிலை காணப்படுகின்றது. மேலும் இவ்வாறான ஒற்றையடிப்பாதைகளில் உள்ள சிறு கைத்தொழில், விவசாய உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை உரிய நேரத்தில்  சந்தைப்படுத்துவதில் கூட சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். மேலும் ஒற்றையடி பாதையோர வீட்டு மல சலக் குழிகள் நிறைந்தாலும் அவற்றை அப்புறப்படுத்த உரிய கொள்கலன் வாகனங்களை உரிய பிரதேசத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இது அப்பிரதேச சுகாதாரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாகும்.

இவ்வாறு மனித வாழ்வின் பிறப்பு முதல் இறப்பு வரை பல இன்னல்களுடன் கிராமிய ஒற்றையடிப்பாதைகளில் வசிக்கும் மக்கள் எதிர் நோக்குகின்றனர். இதற்கான பிரதான காரணம் பாதைகள் ஒடுக்கமானதாக உள்ளமையாகும். அவ்வகையில் கிராமிய வாழ்வில் ஒளியேற்றி அதனூடாக நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய நிச்சயமாக கிராமிய ஒற்றையடிப்பாதைகளை அகலமாக்கி, செப்பனிடப்பட்டு சீரமைக்க வேண்டும். என்றாலும்  நடைமுறையில் உள்ள சில குறைபாடுகள் காரணமாக மாற்றங்களை ஏற்படுத்த முடியாதுள்ளது.

இவ்வாறான குறுகிய வீதிகள் உள்ள இட மக்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் தமது பிரதேச வீதிகளை அகலப்படுத்த பிரதேச சபைகளின் உதவியை நாடினாலும் சில செல்வந்தர்களின் தலையீடுகள் காரணமாக அவை அப்பிரதேச குடும்ப பிரச்சினைகளாக சித்தரிக்கப்பட்டு தீர்வுகள் வழங்காது அதிகாரிகள் சென்று விடுகின்றனர். இங்கு கிராமிய ஒற்றையடிப்பாதைகளின் அகலங்கள் தொடர்பாக தெளிவான சட்டங்கள் இன்மை காரணமாக அதிகாரிகளும் சாக்குப்போக்குகளை கூறி தப்பிவிடுகின்றனர். என்றாலும் தற்போதைய அரசு நாட்டின் அபிவிருத்தியை இலக்காக கொண்டு சமூக ரீதியாகவும், சட்டங்களூடாகவும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. அவ்வகையில் கிராமத்து உள் வீதிகளுக்கான குறைந்த வீதி அகலத்தை அரசாங்கத்தினால் 16அடி அல்லது 20 அடி என தீர்மானித்து சட்டமியற்றி நாடாளாவிய ரீதியில் உள்ள குறுகிய ஒற்றையடி வீதிகளின் இருமருங்கிலும் உள்ள காணி உரிமையாளர்களின் கட்டிடங்கள், மதில்களை அகற்றி நஷ்டஈடுகளை வழங்கி சுவிகரீக்க வேண்டும்.

அடுத்த பிரச்சினைதான் நாடாளாவிய ரீதியில் பிரதான வீதிகள் முதல் ஒற்றையடிப்பாதைகள் வரை மழை காலங்களில் நீர் தேங்கி இருப்பதாகும். இதற்கான காரணம் வீதியின் இருமருங்கிலும் பொருத்தமான வடிகாலமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமை மற்றும் வடிகால்களை பிரதேச சபைகளால் பராமரிக்காமை என்பனவாகும். எனவே இதற்கான தீர்வாக தேவையான புதிய வடிகால்களை அமைத்து, உள்ள வடிகால்களை சீரமைத்து, பராமரிப்பதற்கான செயற்திட்டங்களை பிரதேச சபைகளினூடாக மத்திய அரசு செயற்படுத்த  முன்வர வேண்டும்.

Ibnuasad

பொருளாதார அபிவிருத்தியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளே வணிகத் துணைச்சேவைகளாகும். அவ்வகையில் வணிகத் துணைச்சேவைகளாக வங்கிச் சேவை, காப்புறுதிச் சேவை, தொடர்பாடல் சேவை, களஞ்சியப்படுத்தல் சேவை, போக்குவரத்துச் சேவை என்பன காணப்படுகின்றன.   இலங்கையை பொருத்தவரையில்…

பொருளாதார அபிவிருத்தியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளே வணிகத் துணைச்சேவைகளாகும். அவ்வகையில் வணிகத் துணைச்சேவைகளாக வங்கிச் சேவை, காப்புறுதிச் சேவை, தொடர்பாடல் சேவை, களஞ்சியப்படுத்தல் சேவை, போக்குவரத்துச் சேவை என்பன காணப்படுகின்றன.   இலங்கையை பொருத்தவரையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *