பெற்றோர்களே உங்கள் கையில்.!!

  • 84

“மனிதனுக்கு அல்லாஹ் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களை தந்திருக்கிறான்.” அப்படிப்பட்ட இன்பங்களில் மிக சிறந்த இன்பம் தான் நல்ல துனையை பெற்றுக்கொள்வது.

மற்ற உறவுகளை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், வாழ்க்கை துணை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு வாழும் உறவு ஆகும். அப்படிப்பட்ட உறவை சரியான முறையில் தேர்ந்தெடுக்காவிட்டால் சொல்லொண்ணா நஷ்டம்தான். ஏன் துணையை பற்றி கூறுகிறேன் என்றால் குழந்தை வளர்ப்பின் ஆரம்பமே நல்ல வாழ்க்கை துணையை பெற்றுக்கொள்வதில் தான் உள்ளது.

மார்க்கம் இல்லாத அல்லது அரைகுறை மார்க்கம் தெரிந்த வாழ்க்கைத்துணை உள்ளவர்கள் வீட்டிற்கு உள்ளே ஏகப்பட்ட பிரச்சினைகளோடு தான் வாழ்கிறார்கள். இவர்களிடம் வளரும் பிள்ளைகளும் அவர்கள் வழியேதான் வரும். வாழ்க்கைத்துணையிடம் ‘பணமோ,அழகோ இருந்தால் மட்டும் போதாது.’ தக்வா உடைய வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்தால் மட்டுமே சந்ததிகளிடம் கண்குளிர்ச்சியை பார்க்க முடியும். மார்க்கம் உள்ள தாய், தந்தையால் மட்டுமே சிறந்த குழந்தைகளை உருவாக்கமுடியும்.

குழந்தைகள் பற்றி இஸ்லாமிய பார்வை

‘உலக வாழ்க்கையில் நாம் பெற்றிருக்கின்ற செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த செல்வம் குழந்தைச் செல்வம். அல்லாஹுத் தஆலா அல்குர்ஆனில் குழந்தைகளை ஸீனத் என்று வர்ணிக்கின்றான்.

செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும். (ஸூரதுல் கஃப்: 46)

குழந்தைகள் இந்த உலகத்தில் அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கியிருக்கின்ற ஒரு ‘நிஃமத்’ (அருட்கொடை) என்றும் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. மேலும் ‘அல்குர்ஆன் குழந்தைகள் சோதனையுமாகும்.’ என்ற உண்மையையும் சொல்கிறது.

நிச்சயமாக உங்கள் செல்வமும் உங்கள் குழந்தைகளும் உங்களுக்கு சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (ஸூரதுல் அன்பால்: 28)

அருளாகக் கிடைக்கப்பெற்ற எமது குழந்தைகளுக்கு நாம் வழங்க வேண்டிய உரிமைகள், கடமைகளை சரியாக நிறைவேற்றத் தவறினால் இவர்கள் எமக்கு இம்மையிலும் மறுமையிலும் கண்குளிர்ச்சியாக இருப்பதற்குப் பகரமாக பித்னாவாக மாறுவார்கள்.

ஒரு தடவை நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் இப்படிச் சொன்னார்கள்:

“நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் உங்கள் பொறுப்பு பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளர் அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். ஆண்மகன் குடும்பத்தில் பொறுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். பெண் தனது கணவன் வீட்டில் பொறுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். வேலைக்காரர் தனது எஜமானனின் சொத்தில் பொறுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி விசாரிக் கப்படுவார்.” (ஆதாரம்: அல்புகாரி, முஸ்லிம், அபூதாவுத், அத்திர்மதி)

பிள்ளைகளைப் பெற்றெடுப்பது இலகு. ஆனால், அவர்களை வளர்த் தெடுப்பதுதான் எமக்கு முன்னாலுள்ள மிகப் பொறுப்பான ஒரு சவால் பல பெற்றோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் குழந்தையை வளர்க்கும் முறையில் அவர்கள் தவறு செய்துவிடுவதால் பிள்ளைகள் வழிகேட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள்.

இஸ்லாம் கூறும் பிள்ளை வளர்ப்பு வழிகாட்டிகள்.

01. பிள்ளை கர்ப்பம் தரித்த முதலிலிருந்தே நற்செயல்கள் ஆரம்பிக்கப்படல்.

அதிகமாக அல்குர்ஆன், துஆக்களை ஓதுதல், மார்க்க விடயங்களை கலந்துரையாடல், போன்ற நல்ல விடயங்களை செய்வதினூடாக கருவில் இருக்கும் பிள்ளைக்கு அது தாக்கம் செலுத்தும்.

02. பிறந்தவுடன் ஈமானிய உணர்வை விதைத்தல்

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் அவன் எம் அனைவரையும் பார்த்துக் கொண்டி ருக்கின்றான். என்பதனை எமது குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். குழந்தைகள் வளர்ந்து வரும்போது அவர்களுக்கு ஹலால் (அனுமதிக்கப்பட்டது), ஹராம் (அனுமதிக்கப்படாததது) பற்றியும் சரி எது, பிழை எது என்பதை முறையாக தெளிவுபடுத்த வேண்டும்.

03. தொழுகைக்குப் பயிற்றுவித்தல்.

சிறுவயதிலிருந்தே பள்ளிவாசலுக்குச் செல்வது, பள்ளிவாசலின் கண்ணியம், தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது போன்ற விடயங்களில் ஆர்வத்தை ஊட்டுவதுடன் குழந்தைகள் ஏழு வயதை எட்டிவிட்டால் அவர்களைத் தொழுமாறு பணிக்க வேண்டும். ஏழு வயதிலிருந்து ஐவேளை தொழுகைகளை முறையாகவும் சரியாகவும் நிறைவேற்றுவதற்கு அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும்.

பிள்ளையின் பாடசாலைப் பரீட்சைப் பெறுபேறு திருப்திகரமானதாக இல்லாவிட்டால், பிள்ளை பிரத்தியேக வகுப்புகளுக்கு உரிய நேரத்திற்குச் செல்லாவிட்டால். எமது பிள்ளைகளைக் கண்டிக்கின்றோம். தண்டிக்கின்றோம். ஆனால், எமது பிள்ளை பத்து வயதை அடைந்தும் தொழாதபோது, பன்னிரெண்டு வயதை அடைந்தும் தொழுகையைப் பேணித்தொழாத போது கண்டிக்கின்றோமா? தண்டிக்கின்றோமா? என்பது பற்றி ஒவ்வொரு பெற்றோ ரும் சிந்திக்கவேண்டும்.

04. பண்பாட்டுப் பயிற்சியை வழங்குதல்.

‘பிள்ளைகளுக்கு ஆரம்பம் முதல் நல்ல பண்புகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும். உண்மை, வாய்மையுடன் நடந்து கொள்வதற்கு அவர்களை வழிப்படுத்த வேண்டும். மூத்தோரை மதித்தல், சிறியோருக்கு இரக்கம் காட்டுதல், அநாகரிகமான வார்த்தைகள், தரக்குறைவான வார்த்தைகளை எச்சந் தர்ப்பத்திலும் பேசாத, துர்நடத்தைகளுக்கு அடிமைப்படாத மிகவும் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் குழந்தைகளை வளர்ப்பது பெற்றோரின் கடமை.

வங்கியில் பணத்தைச் சேமித்து, வகை வகையாய் நகை செய்து, ஊரில் தோட்டம், துறவு வாங்கி தமது பிள்ளைகளுக்கு பரிசாகக் கொடுக்கும் பலர், உயர்ந்த ஒழுக்கப் பண்புகளை, நற்குணங்களை தமது பிள்ளைகளுக்கு வழங் கத் தவறிவிடுகின்றனர்.

05. குர்ஆனியக் கல்வியை வழங்குதல்.

பிள்ளைகளுக்கு கொடுக்கப்படுகின்ற முதலாவது கல்வியாக குர்ஆனியக் கல்வி அமைதல் வேண்டும். அதனைத் தொடர்ந்து தான் ஏனைய கலைகள் போதிக்கப்பட வேண்டும்.

அல்லாஹ்வைத் தொழுதல், குர்ஆன் ஓதுதல், திக்ர் அவ்ராதுகளில் ஈடுபடல்,

இவற்றோடு குழந்தைகள் உளவியல் ரீதியாக நெறிப்படுத்தப்பட வேண்டும். சில குழந்தைகள் வெட்க, கூச்ச சுபாவமுடையோராய் இருப்பார்கள். இன்னும் சில பிள்ளைகள் இலகுவில் பயப்படுபவர்களாக அல்லது தாழ்வு மனப் பான்மையுடையவர்களாக இருப்பார்கள். மற்றும் சிலர் விரைவில் கோபப் படுபவர்களாக, பொறாமைப்படுபவர்களாக இருப்பார்கள்.

பிள்ளைகளைப் பீடித்திருக்கும் இத்தகைய உளநோய்கள் சரியாக அடையாளப்படுத்தப்பட்டு உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டும்.

எனவே அருள்களாக பெறும் குழந்தைகளை மிகச்சிறந்த முறையில் வளர்த்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறச்செய்வது உங்கள் கையிலே உள்ளது என்பதை மறந்து விடவேண்டாம்.

Faslan Hashim
Islahiyya Arabic collage ®
South Eastern University of Sri Lanka.
BA ®

“மனிதனுக்கு அல்லாஹ் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களை தந்திருக்கிறான்.” அப்படிப்பட்ட இன்பங்களில் மிக சிறந்த இன்பம் தான் நல்ல துனையை பெற்றுக்கொள்வது. மற்ற உறவுகளை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், வாழ்க்கை துணை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு…

“மனிதனுக்கு அல்லாஹ் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களை தந்திருக்கிறான்.” அப்படிப்பட்ட இன்பங்களில் மிக சிறந்த இன்பம் தான் நல்ல துனையை பெற்றுக்கொள்வது. மற்ற உறவுகளை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், வாழ்க்கை துணை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *