தந்தை – மகள் உறவு

  • 8

உலகில் தோன்றிடும் உறவுகளுள் இரத்தபந்தமானது உன்னதமானதே! அதிலே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதே தந்தை – மகள் உறவு. ஒரு பெண் திருமணமாவதற்கு முன் ஹலாலான முறையில் முதற்தடவையாக காதல் கொள்ளும் முதல் ஆணுடனான உறவு என்றால் அது தந்தை உறவே! இதில் காமம் கிடையாது. ஆனாலும் இவ்வுறவில் அன்புக்கு பஞ்சமில்லை இதுவே இவ்வுறவின் அற்புதம்.

தந்தையின் கடல் அளவு கோபமும் சுமையும் நொடிப்பொழுதில் மறைந்து விடும் தன் மகளின் சிறு புன்னகையில். எப்படிப்பட்ட திடமான தந்தையாக இருந்தாலும் மகளின் கண்ணீருக்கு முன்னால் ஆட்டம் காண்பார். ஏனெனில் அவளின் புன்னகையை மட்டும் விரும்புபவர் அவர். எனவே ஒரு பெண்ணிண் வாழ்வில் தந்தை என்னும் உறவு பொக்கிஷமானது. அவ் உறவானது பல பாத்திரமேற்று அவளை வழிநடத்துகின்றன.

  • முன்மாதிரி

ஒவ்வொருவரும் ஒரு நபரை எதோ ஒரு வகையில் முன்மாதிரியாக கொள்வர். ஆனால் எல்லோருமே ஒரே நபரை முன்மாதிரியாக கொள்கின்றனர் என்றால் அது எம் தந்தை என்னும் ஹீரோவே. பெண் பிள்ளைகளிடத்தில் கோபத்தை குறைத்து காட்டும் தந்தையர்களின் இயல்பான குணம் பெண் பிள்ளைகளின் முன்மாதிரியாக தந்தை இருக்க வழி செய்கின்றன.

பெண் பிள்ளைகளாக இருந்தாலும் சிறு வயதில் தந்தையை போல் உடையணிந்து அவரைப்போல் இருமி மீசையை முறுக்கி பேசி அவரை பிரதிபலித்து விளையாடி இருப்போம். இதுவே தந்தை மகள் உறவின் ஆரம்ப நிலையை படம்பிடித்துக் காட்டுகிறது.

தந்தையின் நடத்தைக் கோலங்கள் ஆண்பிள்ளைகளிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதை போல பெண் பிள்ளைகளிடத்திலும் ஏற்படுத்துகின்றன.
அவர்களின் நடைமுறைகளை பின்பற்றுகின்றனர். சொல்லப்போனால் அவர்ளைப் போன்ற நடத்தையுள்ள ஒருவரை தம் வாழ்க்கைத் துணையாக எதிர்பார்க்கினறனர்.

பெண் என்னும் பெயர்தாங்கி மகள் என்னும் பாத்திரம் ஏற்று விரும்பி ஏற்றுக் கொள்ளும் முன்மாதிரி தந்தையே!

  • தோல்வியின் போது தோழ் கொடுக்கும் தோழன்.

தோல்வியின் போது தன் மகளை ஆற்றுப்படுத்தி தோழ்கொடுக்கும் தோழனாய் பாத்திரம் ஏற்கிறார் தந்தை.

வாழ்வின் வெற்றிகளுக்கு தோல்விகள் படிகற்களாய் அமைந்தாலும் தோல்வியில் துவண்டு போனால் வெற்றி என்பது எட்டாக்கனியே .

ஒரு பெண் தாயைத்தாண்டி நண்பனாய் ஏற்றுக்கொள்ள முதன்மையான சிறந்த உறவு தந்தையே. ஆக தந்தை தோழனாய் தன் மகளுக்கு தோல்வியின் போது தோல் கொடுக்கின்றார்.

தன் மகள் தோல்வியால் வாடும் போது அவளின் தலையை தடவி நெற்றியில் முத்தமிட்டு சில உற்சாகமூட்டும் வார்த்தைகள் கூறுவதானது அவளை பல வெற்றிகளை சூடிக்கொள்ள வழிவகுக்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மக்களிலேயே மிகவும் தகுதியானவர் யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உன் தாய்” என்றார்கள். அவர் “பிறகு யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உன் தாய்” என்றார்கள். அவர் “பிறகு யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உன் தாய்” என்றார்கள். அவர் (நான்காவது முறையாக) “பிறகு யார்?” என்று கேட்டதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உன் தந்தை” என்றார்கள்.

வெற்றியின் போது பொறாமை பட்டு; தோல்வியின் போது மனதளவில் சிரித்து; தோல் கொடுப்பது போல் கொடுத்து- தட்டிவிட்டு; போலி உறவாடும் இன்றய நண்பர்கள் மத்தியில் உண்மையான நண்பன் தந்தையே. இது மகள் வரமாய் பெற்ற உறவாகும்.

  • சிறந்த பாதுகாவலன்.

பெண் எப்போதுமே பாதுகாக்கப்பட வேண்டியவள் அவள் மென்மையானவள் என்பதாலோ என்னவோ இயல்பிலே தனக்கான பாதுகாப்பான நபரை முதலில் தேடிக்கொள்கிறாள்.

இறைவனால் ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பான மஹ்ரமான உறவே தந்தையாகும்.

சிறுவயதில் பாதுகாப்பிற்காக தந்தையின் கையை இறுக்கமாக பிடித்தவள் அவர் தான் தன்னை பாதுகாக்கும் பாதுகாவலன் என மனதில் ஆழமாக பதித்துக் கொள்கிறாள்.

வெளியே சென்ற மகள் குறிப்பிட்ட நேரம் சென்றும் வீட்டிற்கு வரவில்லை என்றால் துடித்துப்போவது தாய் என்றால் பாதுகாப்பாய் வீட்டுக்கு கூட்டிவர பாடுபடுபவர் தந்தையாகத்தான் இருப்பார்.

நடு ராத்திரியிலும் பெண் வீதியில் பயணிப்பாள் தன்னுடன் அவளது தந்தை இருந்தால். தந்தை என்னும் சொல் அவளின் வலுவான பாதுகாப்பாளர் என்ற சொல்லின் மறுவடிவமாக கூட சித்தரிக்கக் கூடியதாக உள்ளது.

  • தேவை அறிந்து நிறைவேற்றும் சேவகன்.

தன் உதிரத்தையே உழைப்புக்காய் ஒதிக்கி, ஓடாய் தேய்ந்து பிள்ளைகளின் தேவைகளை நிவர்த்தி செய்பவர் தந்தையே!

மகள் எப்போதுமே தந்தைக்கு இளவரசியாகவே இருப்பாள். இளவரசியான தன் மகளுக்கு எவ்வித குறையும் வைக்காமல் அவளின் தேவைகளை பார்த்து பார்த்து கவனிப்பது தந்தையே.

தம் தேவைகளை சொல்லாமல் நிறைவேற்றும் ஜீவன் இவரே!

சுயம் உச்சத்தை தொட்டு பண ஆசை பேராசையாக தலைவிரித்தாடும் இன்றய காலத்தில் தனக்கென சொத்துக்களை சேர்க்காமல் தம் பிள்ளைக்கு சொத்து சேர்த்து தன் களைப்பை மகளின் புன்முறுவலில் தொலைத்து இன்பமுறும் உறவு தந்தையாகும்.

ஏழைத் தந்தையாக இருந்தாலும் தன் மகளின் தேவையை நிறைவேற்றுவதில் சற்றேனும் தான் தவறிவிடக்கூடாது என்பதில் குறியாக இருப்பது தந்தையின் குணமே. தன்னை வருத்தி தன் மகளின் தேவைகளை நிவர்த்தி செய்வார்.

  • சிறந்த ஆசான்

ஒரு பெண் பிள்ளைக்கு நல்லது கெட்டது அறிந்து முதலில் பாடம் புகட்டும் ஆசான் தந்தையாகும்.

ஒரு பெண்ணின் நடத்தையில் உள்ள பணிவும் அவளின் ஆடையின் ஒழுக்கமும் தந்தையின் வளர்ப்பை பிரதி பலிக்கின்றன.

சமூகத்தில் அவள் எப்படி பழக வேண்டும், நல்ல தொடர்பு எது என்று கற்றுக் கொடுப்பது தந்தையே!

தந்தையின் மகளுடனான ஒவ்வொரு பேச்சும் அவளுக்கு ஏதோ ஒரு பாடத்தை புகட்டுவதாகவே அமையும். தந்தையின் கண்டிப்பு அவளை புடம்போட்டு நற்பிரஜையாக வாழ வழி செய்வதாகவே அமைகின்றன .

மூன்றைத் தவிர, ஒரு மனிதன் இறந்தபின் அவனுடைய எல்லாச் செயல்பாடுகளும் (உலகத் தொடர்பைவிட்டு) நீங்கிவிடுகின்றன. 1. தொடர்படியான தர்மம், 2. பயனுள்ள வகையில் கற்பிற்கப்பட்ட கல்வி, 3. அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை-என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பிள்ளைக்குச் சிறந்த கல்வியைக் கொடுக்கப் பாடுபடுவதும், நன்னடத்தை உள்ளவளாக வளர்த்தெடுப்பதும் ஒரு தந்தையின் கடமையாகின்றது.

அக்கடமையை அவர் செவ்வனே செய்ததால், அவர் இறந்த பின்னரும் நன்மையைப் பெறுகிறார். அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்றுச் சொர்க்க வாழ்க்கையை அடைகிறார். இது தந்தையின முயற்சியாகும்.

ஒரு தந்தை ஆசானாகவே மாறி தன் மகளுக்கு வாழ்க்கைப் பாடத்தை புகட்ட. நல்ல விடையத்தை உள்வாங்கிய மகள் தனது தந்தை இறந்தாலும் அவருக்கான பிராத்தனையை பரிசளிக்கின்றாள்.

நம்மிடம் அடுத்தவர் காட்டும் நேசம் கண்டிப்பாக எதையோ எதிர்பார்த்தே நிற்கும் ஆனால் சற்றும் சுயநல நோக்கம் இல்லாமல் எப்போதும் நம் நலனை விரும்பும் நலன் விரும்பி நம் “தந்தை”

ஒரு பெண்ணின் மஹ்ரமான தந்தை தன் மகளின் நலனில் அக்கறை கொள்ளும் தியாகியே!

தந்தை மகள் உறவிற்கு சிறந்த எடுத்துக்காட்டு முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் அவர்களின் புதல்வியுமான பாத்திமா(ரழி) அவர்களாகும்.

நடத்தையில் தன் பிள்ளைக்கு முன்மாதியாய் திகழ்ந்து நல்லது கெட்டது கற்றுக்கொடுக்கும் ஆசானாய் இருந்து பக்குவமான மகளாய் வழர்த்தெடுத்தார்கள். தந்தையின் இளவரசியான பாத்திமா ( ரழி ) அவர்கள் பெண்களின் தலைவியாய் திகழ்கிறார்கள். தந்தைக்கு மகளாய் மாத்திரம் இன்றி சிறந்த தோழியாய் இருந்தார்கள்.

இஸ்லாமிய ஏகத்துவ பிரச்சாரத்திற்காய் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஒத்துழைப்பு வழங்கிய நபித்தோழியர்களில் குறிப்பிடத்தக்கவர் இவரே. இது தந்தை மகள் உறவின் உன்னதத்தை அழகாக படம் பிடித்து காட்டுகின்றன.

இது போன்ற தந்தை மகள் உறவு எமக்கும் அமையட்டும்.

மருதமுனை நிஜா
( ஹுதாயிய்யா)
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்

உலகில் தோன்றிடும் உறவுகளுள் இரத்தபந்தமானது உன்னதமானதே! அதிலே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதே தந்தை – மகள் உறவு. ஒரு பெண் திருமணமாவதற்கு முன் ஹலாலான முறையில் முதற்தடவையாக காதல் கொள்ளும் முதல் ஆணுடனான உறவு…

உலகில் தோன்றிடும் உறவுகளுள் இரத்தபந்தமானது உன்னதமானதே! அதிலே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதே தந்தை – மகள் உறவு. ஒரு பெண் திருமணமாவதற்கு முன் ஹலாலான முறையில் முதற்தடவையாக காதல் கொள்ளும் முதல் ஆணுடனான உறவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *