இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் கலையும் பண்பாடும்

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் தொடர்பாக வரலாற்று ரீதியான பல்வேறு சான்றுகள், ஆராய்ச்சிகளின் முடிவுகளினால் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், இலங்கையுடன் புராதன காலந்தொட்டே வணிகத் தொடர்பு கொண்டு விளங்கியவர்கள் அரேபியர்கள் என்பது மிகப் பலமான உண்மையாகத் திகழ்கின்றது. ஏனெனில் இஸ்லாம் ஒர் மார்க்கமாக கி.பி. 610ம் ஆண்டு அரேபியாவில் அங்கீகாரம் பெறுவதற்கு முன்பிருந்தே இலங்கையினுடனான வணிகத் தொடர்பு இருந்துள்ளது.

அது மட்டுமன்றி அரேபியர்களின் இலங்கைத் தொடர்பாடல் கிறிஸ்துவுக்கும் முற்பட்டது என்பதை இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம், க்ளோடியஸ் தொலமியின் (கி.பி.150) இலங்கை (தப்ரபேன்) வரைபடம், சீன யாத்திரிகர் பாஹியன் (கி.பி.414), இப்னு பதூதா (கி.பி.1344) போன்றவர்களின் குறிப்புக்களிலிருந்து அறிய முடிகின்றது.

படிமம்:Ptolemy's Map of Taprobane.jpg

தொலமி வரைந்த இலங்கை வரைபடத்தில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட அரேபியரின் வரலாற்றுத் தரவுகளைக் குறித்துள்ளார். இது ஐரோப்பியர்களின் குறிப்புகளையும், வரைபடத்தையும் பார்க்க காலத்தால் முற்பட்டதும், தொன்மையானதுமாகும். தொலமி இலங்கையிலுள்ள ஐந்து புராதன நதிகளின் பெயர்களைக் குறித்துள்ளார்.

இதில் மூன்று நதிகளின் பெயர்களை பிறநாட்டவர் பெயர்களுடன் தொடர்புறுத்தியுள்ளார். மகாவலி கங்கைக்கு பாஸிஸ் பலூஸியஸ் (பாரசீக நதி), தெதுரு ஒயாவுக்கு சோனா பலூஸியஸ் (அரேபியர் நதி), ஜின் கங்கைக்கு அஸனாக் பலூஸியஸ் (எதியோப்பிய நதி) என்று குறிப்பிட்டருக்கின்றார்.

அதேவேளை மகாவலி கங்கையின் படுக்கைகளில் இயக்கர்கள் வாழ்ந்தது பற்றி மகாவம்சம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ” இலங்கையின் மத்தியில் மகாவலி நதிக்கரையோரத்தில் மூன்று ஜோயனா நீளமும் ஒரு ஜோயனா அகலமுமான மகாநாகா தோட்டம் அமைந்துள்ளது. (ஒரு ஜோயனா – ஏறத்தாள 10 மைல்கள்) இந்த மகாநாகா தோட்டத்தில் தீவு எங்கிலும் வாழ்கின்ற பிரதான இயக்கர்கள் குறித்த ஒரு நாளில் வந்து கூடுவது வழக்கம். அவர்கள் கூடியிருக்கும் வேளையில் மகாநாகா தோட்டத்திற்கு வருகை தர புத்தர் எண்ணினார்.”

தொலமியினது குறிப்புக்களிலிருந்தும், மகாவம்சத்தின் குறிப்புக்களிலிருந்தும் மகாவலி நதியின் கரைேயாரத்தில் பாரசீகர்கள் வாழ்ந்திருந்ததாகவும், இயக்கர்கள் வாழ்ந்திருந்ததாகவுமான இரண்டு விதமான முடிவுகளை நாம் எடுக்கலாம்.

கி்.மு.475-523 காலப்பகுதியில் அரசி ஷீபா சாலமோன் மன்னனுக்கு அனுப்பிய பரிசுப் பொருட்களில் இலங்கைக்குரிய விசேட தன்மைகொண்ட உயர்ரக கனிப்பொருட்கள் இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். கி.மு. 4 ம் நூற்றாண்டளவில் தென் மேற்கு ஆசியாவின் பெரும் நிலப்பரப்பை ஆட்சி புரிந்த மாமன்னர் சொலமனுடைய ஆட்சிக்காலத்தில் அரசி ஷீபாவுக்கு இலங்கையின் பெறுமதியான இரத்தினக் கற்களும், முத்துக்களும் அன்பளிப்பாகக் கிடைத்தன என்ற வரலாற்றுச் சம்பவங்கள் சில அரபு நூல்களில் காணக் கிடைக்கின்றன.

இது அக்காலப் பகுதியில் இலங்கை அரேபியரிடையே பிரபல்யம் பெற்றிருந்தமையைக் காட்டுகின்றது.

மாமன்னர் சாலமோனுடைய ஆட்சியின் போது எருசலத்திலுள்ள ‘பைத்துல் முகத்தஸ்’ என்னும் அல்அக்ஸா பள்ளிவாசலில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட சிவப்பு மாணிக்கக்கல் வைத்துக் கட்டப்படதாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன.

படிமம்:DomeOfTheRock.jpg

இலங்கை முஸ்லிம்கள் சனத்தொகை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் மற்றும் இனரீதியான கணிப்பீடுகள் ஆகியவற்றில் ஆங்கிலத்தில் மூர்ஸ் (Moors) என்றும், சிங்களத்தில் ‘யோன’ என்றும் தமிழில் ‘சோனகர்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சமயம் சார்ந்த தரவுகள் திரட்டப்படும் போது ‘இஸ்லாமியர்’ அல்லது ‘முஸ்லிம்கள்’ என்று குறிக்கப்படுவதைக் காணலாம்.

மூர்ஸ் என்னும் பெயர் போரத்துக்கேயரினால் வைக்கப்பட்ட பெயராகும். ஆனால் புராதன காலத்தில் அரேபியர் ‘யவனர்’ என்றே அழைக்கப்பட்டனர். யவனர் என்ற சொல் சமஸ்கிருத மொழி என்பதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். அரேபியர் என்பது பாளி மொழியில் ‘யொன்ன’ அல்லது ‘யோன’ என்றும் தமிழில் ‘சோனகர்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தசாப்தத்திற்கு முன்பிருந்தே சோனகர், சோனகம் என்னும் வார்த்தைப் பிரயோகம் வழக்கத்தில் வந்து விட்டது. தமிழ்நாடு திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பபர் கோவிலில், மூன்றாவது பிரகாரத் தெற்குச் சுவரின் வெளிப்புறத்தில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதில் கொசலம், துளுவம், குச்சரம், பொப்பளம், புண்டரம், கலிங்கம், ஈழம், கடாரம், தெலிங்கம், சோனகம் எனப் பல பிரதேசங்களை ஆட்சி புரிந்த குறுநில மன்னர்கள் தமிழ் நாட்டு சோழ, பாண்டிய மன்னர்களுக்குத் திறை செலுத்தினர் என்ற குறிப்புக் காணப்படுகின்றது.

தமிழ்நாட்டில் ‘சோனகம்’ என்ற பிரதேசத்தை விளக்கும் வரலாற்றாசிரியர்கள், தாமிரபரணி ஆற்றுக்கும், புத்தளம் பொன்பரப்பி ஆற்றுக்கும் இடைப்பட்ட கடல் கொண்ட பிரதேசம் எனக் குறிப்பிடுகி்ன்றனர்.

பண்டைய காலத்தில் பூமியின் தென்கோணத்தில் கோண்டுவானா கண்டம் இருந்தது என்றும், அக் கண்டத்தில் தென்னமெரிக்கா, ஆபிரிக்கா, அன்டார்ட்டிக், அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை போன்ற பகுதிகள் ஒரே நிலப்பரப்பாக இருந்ததென்றும் புவியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். பல இலட்சம் ஆண்டுகளாக சிதைவுற்ற அந்த பெரும் நிலப்பகுதி சிதைவுற்று லெமூரியா என்று அழைக்கப்பட்டதெனவும், பின்னர் அதுவும் கடல் கொண்ட பின்பு எஞ்சியிருந்த நிலப்பரப்புக்கு குமரிக் கண்டமெனப் பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேற்படி கடல்கோள் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இவ் வெள்ளப்பெருக்கு கி.மு.2384 ம் ஆண்டு நிகழ்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இது குறித்து வேதாகமம் பழைய ஏற்பாட்டிலும், அல்குர்ஆனிலும் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவ. புராண, இதிகாச, இலக்கிய, தமிழ் அகராதி, கிரேக்க காவியம், மச்ச புராணம், அசீரியர் கதை போன்ற நூல்களும் இதனை உண்மைப்படுத்துகின்றன.

சோவியத் புவியியலாளர் பேராசிரியர் ராவிச், பிரிட்டிஷ் விலங்கியல் நிபுணர் ஸ்கிலேட்டர், வரலாற்றாசிரியர் டாகடர் ஹால் போன்றோரும் இதைப்பற்றி அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.

குமரிக்கண்ட காலத்திலேதான் பிரிவுண்டதாகக் கூறப்படுகிறது. இந்திய வரலாற்றாசிரியர் சி.கந்தையாபிள்ளை, இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட பிராமி வட்டெழுத்துக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு, முதல் இரு தமிழ் சங்கங்களும் இலங்கையில் இருந்ததாகக் கூறுகிறார்.

எகிப்திய கணித வல்லுநர் க்ளோடியஸ் தொலமி (Claudius Ptolomy) கி.பி.140 ல் வரைந்த உலக வரைபடத்தில், இலங்கை இன்றிருப்பதை விட பதினான்கு மடங்கு பெரிதாக வரையப்பட்டு தப்ரபேன் (Taprobane) என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

பழைய கற்காலம் முழுவதும் இணைந்தே இருந்த இலங்கையும் இந்தியாவும் சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பிரிந்துள்ளன. இலங்கையில் முதல்முதலாகக் குடியேறிய மக்கள் யாராயினும் இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படுகின்ற நிலப்பகுதி வழியாக நடந்தே வந்துள்ளனர்.

தமிழ்நாட்டிலுள்ள காயல்பட்டினம் என்னும் ஊர் சோனகர் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. சி.கந்தையாபிள்ளை குறிப்பிடுவது போன்று காயல்பட்டினமும், பொன்பரப்பி ஆற்றுப் படுக்கையும் இணைந்த நிலப்பகுதியே சோனகம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். போத்துக்கேயர் வருகைக்கு முற்பட்ட காலத்தில் உருவான இந்திய தமிழ் இலக்கியங்களிலும், வட இந்திய இலக்கியங்களிலும் சோனகர் என்னும் வார்த்தைப் பிரயோகம் இடம் பெற்றிருக்கின்றது.

பண்டுகாபய மன்னன் (கி.மு.377 – 307) அனுராதபுரத்தில் மேற்கு வாசலுக்கருகில் சோனகர்களுக்கு என்று ஒரு நிலப்பகுதியை ஒதுக்கிக் கொடுத்திருந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. மகா அலக்சாந்தருடைய கட்டளைப்படி கிரேக்கத் தளபதி ஒனொஸ் கிறிட்டோஸ் (கி.மு.327) தயாரித்த பூகோளப் படத்தில் இலங்கை அரேபியரைக் குறிப்பிடுகையில் ‘சோனை'(sonai) என்னும் பெயரையும், அவர்கள் குடியிருந்த பிரதேசத்திற்கு (Sonai Potomas) என்ற பெயரையும் பிரயோகித்திருக்கிறார்.

மன்னன் பராக்கிரமபாகு (கி.மு.437 – 407) வின் ஆட்சிக் காலத்தில் யோனகர்களுக்கென தனியான ஒரு பிரதேசம் ஒதுக்கப்பட்டிருந்தது. தொலமியின் வரைபடத்திலும் தெதுரு ஓயாவின் வடக்குப் புறத்தில் அரேபியர்கள் வாழ்ந்தது பற்றிக் குறிப்பிடப்பட்டு்ள்ளது. இதனை அவர் சோனா பலுசியஸ் (அரேபிய நதி) எனக் குறித்திருக்கிறார். இது அரேபியரின் புராதன குடியிருப்பான புத்தளம் பொன்பரப்பியைக் குறிக்கிறது.

கி.பி.628 ம் ஆண்டில் முகம்மது நபியவர்கள், அவர்களது தோழர்களில் ஒருவரான வஹாப் இப்னு அபி ஹப்ஸா என்பவரிடம் இலங்கை மன்னனுக்கு இஸ்லாத்தின் அழைப்பாக ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்கள் என்றும், அதைப் படித்தறிந்த மன்னன் அந்த நபித்தோழருக்கு விருப்பமான மக்களை இஸ்லாமிய மார்க்கத்தின்பால் அழைப்பதற்கும், ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கும் அனுமதியளித்தான். அவர் இங்கிருந்த அரேபியக் குடிகளில் சிலரை தம் மார்க்கத்திலாக்கிய பின்னர் கி.பி.682 ல் தாயகம் திரும்பினார். இச் சம்பவம் முகம்மது நபியவர்களின் காலத்துக்கு முன்பே இலங்கையில் அரேபியர்கள் வாழ்ந்திருந்ததை தெளிவுபடுத்துகின்றது.

இலங்கையின் வரலாற்றாசிரியர்களில் மிகச் சிறந்தவர் என வர்ணிக்கப்பட்ட சேர் ஜேம்ஸ் எமர்சன் டெனன்ட் “பன்னெடுங் காலமாக (முகம்மது நபியவர்கள் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே) இலங்கையில் அரேபியர் வாழ்ந்தனர்” என்று தமது ‘இலங்கை’ என்ற நூலிலே குறிப்பிட்டிருக்கிறார்.

கிறிஸ்தவ உலகத்தின் முதலாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே இலங்கைத் துறைமுகங்களில் அரேபியர் காணப்பட்டதை The Periplus of the Erythraean Sea என்னும் கிரேக்கநூல் குறிப்பிடுகின்றது. உரோம வரலாற்றாசிரியரான பிளினி என்பவரின் குறிப்புக்களிலும் மேற்குறிப்பிட்டவாறு காணப்படுகின்றன.

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட சில கல்வெட்டுக்கள் மற்றும் சில நாணயங்கள் ஆகியவற்றில் அரபு மொழி காணப்படுவதும் நெடுங்காலமாக அரேபியர்கள் இலங்கையில் வாழ்ந்திருந்தமைக்கான ஆதாரங்களாகும். இவற்றையெல்லாம் நோக்குமிடத்து இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக தாய் தந்தையரில் அரேபியர்களும் உள்ளனர் என்பதை அறியலாம்.

Thanks For Ceylon Muslim

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *