ஹிஜாப் என்றால் என்ன???

வெறுமனே தலையை மட்டும் ஒரு ஸ்காப் போன்ற சிறு துணித்துண்டினால் சுற்றிக்கட்டுவது இஸ்லாம் சொன்ன ஹிஜாப் அல்ல என்பதை முதலில் அனைவரும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.அலங்கரன்களின்றி தளர்வாக, தடித்த துணியால் தன் அவ்ரத்தை முழுமையாக மறைத்துக்கொள்வதுதான் பெண்களுக்கான ஹிஜாப்.

அதோடு சேர்த்து பார்வைக்கும் ஹிஜாப் போட வேண்டும். பார்வையின் ஹிஜாப் என்பது பார்வையை தாழ்த்திக் கொள்ளல் ஆகும்.

அபாயா என்பது இஸ்லாமிய பெண்களுக்கான உடையா? இல்லை,அப்படி இஸ்லாமியர்களுக்காக வரையறுக்கப்பட்ட தனித்துவமான ஆடையல்ல அபாயா. நாமாக உருவாக்கிக்கொண்ட ஓர் ஆடையும், பெயரும் தான் அது.

ஏனெனில் சில இஸ்லாமிய பெண்கள் அணியும் உடலோடு ஒட்டிய அபாயாக்களை போன்ற ஆடைகளை கவர்ச்சி நடிகைகளும், மொடல்களும் கூட அணிகின்றனர்.அதே சமயம் அவற்றை விட, கவர்ச்சி குறைவான தளர்வான அதே வடிவத்தைக் கொண்ட கௌரவமான நீளமான அங்கிகளை மாற்று மதத்தினரும், வெளிநாட்டினரும் கூட அணிகின்றனர். அப்படியானால் அவர்களும் அபாயா என்ற இஸ்லாமிய ஆடை அணிகின்றார்களா? இல்லையே.

இதை யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அணியலாம்.இஸ்லாமிய ஆடை என்பது ஆடைகளின் பெயர்களில் தங்கியிருப்பதில்லை.

ஆடைகளை அணியும் விதத்தில்தான் முழுமையடைகின்றது. மார்க்கம் இதைத்தான் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இப்படித்தான் அணிய வேண்டும் என சில வரையறைகளை வகுத்துக்காட்டியுள்ளது.

இஸ்லாத்தில் பெண்கள் அந்நிய ஆண்கள் முன்னிலையில் தங்கள் முகம், மனிக்கட்டுடனான இரு கரங்கள் தவிர மிகுதி முழு உடலையும் மறைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான அவரத் இதுவே. பெண்கள் தம உடலை மறைப்பதென்பது பரிபூரண மறைத்தலாக அமைய வேண்டும்.மறைத்தலின் அர்த்தம் சரியான முறையில் உணரப்படவேண்டும்.

உள்ளேயுள்ளவை வெளித்தெரியும் அளவு மெல்லிய துணியினாலோ , உடலமைப்பை அச்சொட்டாக தோலுறித்து வெளிக்காட்டும் இறுக்கமான ஆடையினாலோ, தன்னை மறைத்தல் என்பது பூரணமாவதில்லை. அது அர்த்தமற்ற ஒரு செயல்.

ஆனால் எமது சமூகத்தினரில் அதிகமானோர் இவற்றை நன்கு தெரிந்துவைத்துக் கொண்டு, அலட்சியமாக நடந்து கொள்கின்ற நிலை எம் சமுதாயத்துக்கான பெரும் சாபமும், அபாயமும் ஆகும். என்பதை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நன்றாக புரிந்து நடக்க வேண்டும்.

ஆடையணிந்தும் நிர்வாணமாக இருக்கும் பெண்கள் மறுமைநாள் நெருங்குவதின் அடையாளம் என்ற நபிமொழியை என்ற நபிமொழியை உண்மைப்படுத்தும் ஒரு பெண்ணாக எம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக!

Izzath Binth Hasan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *