குழந்தைகளின் குறும்புகளில் கவலைகள் பறந்துவிடுகின்றன

  • 18

உலகில் கவலையற்றவர்கள் குழந்தைகளே. உள்ளத்தில் கசடு, கோபம், வஞ்சகம், பொறாமை, பெருமை, பொய், புறம் பேசுதல், ஏமாற்றுதல், துரோகமிழைத்தல், ஏசுதல், இரு முகத்துடன் நடத்தல், களவு, கொலை, கொள்ளை, குடும்பங்களைப் பிரித்தல், வறட்டு கௌரவம், இழிவான பார்வை போன்ற துற்குணங்கள் அறவே அற்றவர்கள் இந்த பச்சிளம் குழந்தைகள்.

இஸ்லாம் கூறுவது போன்று குழந்தைகள் இயற்கை குணத்தில் பிறப்பதால், உண்மையை மாத்திரம் உரைக்கும் தன்மை கொண்டதாகவே காணப்படுகின்றன. நற்பண்புகளின் அடிப்படையில் பிறக்கும் குழந்தைகளின் அழகிய குணங்கள் பெற்றோரின் வளர்ப்பிலும், அதனை சூழவுள்ளவர்களது நடத்தைகளினாலும், சக நண்பர்களது தோழமையினாலும் காலப்போக்கில் மாற்றமடைய ஆரம்பிக்கின்றன.

எவ்வித கவலையுமற்ற நிலையில் குழந்தைகள் இருப்பதால் அவற்றின் உள்ளம் எப்பொழுதும் அழுக்குகளற்று தூய்மையாகவே இருந்து கொண்டிருக்கும், ஆதலால் தான் இஸ்லாமிய அறிஞர்கள் சிறு வயதில் அல் குர்ஆனை மனனம் செய்யுமாறு வலியுறுத்துகின்றனர். அத்தோடு இமாம் ஷாபிஈ போன்ற பெரும் பெரும் அறிஞர்களும் சிறு வயதில் அல் குர்ஆனைக் கற்று அதனை மனனம் செய்து சாதனை புரிந்து முன்மாதிரியாக நடந்தும் காட்டியுள்ளனர்.

இறைவன் அல் குர்ஆனில் கூறுவது போன்று குழந்தைகள் அவனது கொடையாகும். அவன் யாருக்கு விரும்புகின்றானோ அவர்களுக்கு குழந்தைப் பாக்கியத்தை வழங்குகிறான், அவ்வாறே குழந்தைகள் என்பவர்கள் அமானிதங்கள், அவ்வமானிதங்களை சரிவர நிறைவேற்றுவது பெற்றோரது மற்றும் பாதுகாவலர்களது கடமையாகும். அமானிதங்கள் பாழ்படுத்தப்படுமானால் மறுமையில் அவை பற்றி நிச்சயம் விசாரிக்கப்படும்.

குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஆங்காங்கே சிரிப்பு சத்தங்களும் அழுகைக் குரல்களுமே ஒலித்த வண்ணம் இருக்கும், குறிப்பாக குழந்தைகளைப் பராமரிப்பதில் தாயினதும் தாய்வழி பெண் உறவுகளின் சேவைகள் அளப்பரியவை எனலாம். குழந்தைகளது புன்னகையிலும் அவற்றின் குறும்புகளிலும் வீட்டில் இருப்பவருக்கு ஓர் அலாதி சந்தோசம் இருக்கின்றது என்றால் மறுப்பதற்கில்லை. குடும்ப உறவுகளது கவலைகளை மறக்கடித்து அனைவருக்குள்ளும் ஓர் நிம்மதியை, பிரியத்தை, சந்தோசத்தை ஏற்படுத்துவதில் குழந்தைகளது குறும்பான செயற்பாடுகளுக்கு பாரிய பங்களிப்பு இருக்கின்றதென்றால் மிகையாகாது.

நடத்தைகள், பேச்சுக்கள், மார்க்க விடயங்கள், உணர்வுகள் மற்றும் சமூகவியல் தொடர்பாடல்கள் அனைத்திலும் குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களை பின்பற்ற ஆரம்பிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைத்து விடயங்களிலும் அக்குழந்தைக்கு முன்மாதிரியாகத் திகழ கற்றுக்கொள்வது மிக மிக அவசியமாகும். குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு முன் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர்களுக்குள் சாதக, பாதக பிரதிபலிப்பை ஏற்படுத்தவல்லது என்பதை பெரியவர்கள் மறந்துவிடக்கூடாது. சிறுவயது முதல் சரியான இஸ்லாமிய முறைப்படி வளரும் குழந்தை ஒருக்காலும் தடம் பிறழாமல் நேரான வழியில் செல்வதோடு அதில் நிலையாக இருந்து சாதனைகள் புரிந்து ஆளுமை நிறைந்த ஓர் பிரஜையாக மக்களுக்கு முன்னிலையில் வாழ்வதைக் காணமுடியும்.

எனவே நாமும் இக்குழந்தைகள் போன்று தூய உள்ளமுடையவர்களாகவும் நற்குணங்களில் மிளிரும் உன்னத மனிதர்களாகவும் திகழ முயற்சிப்போம்.

நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா

உலகில் கவலையற்றவர்கள் குழந்தைகளே. உள்ளத்தில் கசடு, கோபம், வஞ்சகம், பொறாமை, பெருமை, பொய், புறம் பேசுதல், ஏமாற்றுதல், துரோகமிழைத்தல், ஏசுதல், இரு முகத்துடன் நடத்தல், களவு, கொலை, கொள்ளை, குடும்பங்களைப் பிரித்தல், வறட்டு கௌரவம்,…

உலகில் கவலையற்றவர்கள் குழந்தைகளே. உள்ளத்தில் கசடு, கோபம், வஞ்சகம், பொறாமை, பெருமை, பொய், புறம் பேசுதல், ஏமாற்றுதல், துரோகமிழைத்தல், ஏசுதல், இரு முகத்துடன் நடத்தல், களவு, கொலை, கொள்ளை, குடும்பங்களைப் பிரித்தல், வறட்டு கௌரவம்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *