சிதைந்த கனவுகள் சிறுகதை

ரஹீமாவால் சகஜமாக இருக்கவே முடியவில்லை ”ஐயோ இந்தசெய்திய அவரு கேள்விப்பட்டால் என்ன செய்வாரு! யா ரஹ்மானே! இது பொய்யா இருக்கணும்” அவள் அழுதழுது துஆ இறைஞ்சினாள். சில சமயங்களில் நாம் கேள்விப்படும் அதிர்ச்சியான விடயங்கள் பொய்யாக இருக்க வேண்டும் என்று தானே நாடுவோம் அதே நிலைமையில் தான் இப்போது ரஹீமா இருந்தாள். சூரியன் சிறிது சிறிதாகமேற்குப் பக்கமாக இறங்கிக் கொண்டிருந்ததுஅந்தப் பொழுதினில் ரஹீமாவின் நெஞ்சத்திலும் இருள் படர்ந்து கொண்டிருந்தது.

”அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற குரலைக் கேட்டவள் சிறிது நடுங்கினாள். ”ரஹீமா நா இங்க ஸலாம் சொல்றன் என்ன பதிலையே காணம்” என்ற படி அறைப்பக்கமாக வந்தார் ரிழ்வான் நாநா. அவள் மருண்ட பார்வையொன்றை அவர் மேல் வீசிய படியே ”அது நான் தொழுது கொண்டிருந்த அதான்” அவளை உற்று நோக்கிவிட்டு ”நீ அழுதிருக்கே. சரி தானே” மீண்டும் பயம் கலந்த பார்வையுடன் ”என்ன நீங்க சொல்லிய இல்ல நான் துஆ கேட்ட” புன்முறுவல் பூத்தவாறே,

”இல்ல எனக்கு ஒன்ன பத்தி தெரியாவா? இந்த 25 வரிஷமாக ஒன்டா தானே இருக்கோம்” ரஹீமாவால் இப்போது ரிழ்வான் நாநாவைப் பார்க்கவே பயமாக இருந்தது. ”அது வந்து ஒன்டுமில்ல. ஆ….. நீங்க வாங்கோ சோறு ரெடி” என்றபடியே போகப் போனவளை கைகளால் அவளை இடை மறித்து புருவங்களைச் சுருக்கி ”இப்ப நீ ஏ கிட்ட செல்லியே ஆகணும். இல்ல நா சாப்பிட மாட்டன்.” ரஹீமாவின் நெஞ்சத்தில் பெரிய நாடகமே நடந்து கொண்டிருந்தது. அவள் ‘ஓ’ என அழுதே விட்டாள். அதைப் பார்த்த ரிழ்வான் நாநா ”என்னாச்சி சொல்லு புள்ள…” கண்களைத் துடைத்தபடியே ”ஐயோ…. அத ஏன்ட வாயால எப்டி சொல்லிய ரப்பே….” குரல் கம்மியது. மீண்டும் அழுதாள்.

சிறிது நேரத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ”மகள்……..” அவளுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வர மறுத்தன. ரிழ்வான் நாநா பதறினார். அவர் மகளின் மீது உயிரையே வைத்திருந்தார். ”ஐயோ…. மகளுக்கு என்னாச்சி. இதுக்கு தான் ஒனக்கு சொன்ன அவள கண்ணுகெட்டாத தூரத்துகு அனுப்ப வேணாம் என்டு. பாரு….. இப்ப என்னாச்சு…? அவளுக்கு சொகமில்லயா?” அவரின் வார்த்தைகளைக் கேட்டவள் மீண்டும் தேம்பி தேம்பித் தேம்பி அழுதாள். ரிழ்வான் நாநாவால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது அவருக்கு கோபம் பொத்திக்கொண்டு வந்தது. ”ஏ.. நீ அழுற… ஏதாவது பேசு…..” குரலில் கம்பீரம் தொனித்தது. சற்று நேரம் தயங்கியவள் தரையைப் பார்த்த படியே,

அது வந்து…. அது வந்து…… சிப்னா… மகள் ஒரு பொடியனோட ஓடி……

அவள் வார்த்தைகளை முடிக்குமுன்னே ”போதும்….” இடியெனவே ரிழ்வான் நாநாவின் குரல் ஒலித்தது. வீடே அதிர்ந்தது. கண்கள் இரத்தச் சிவப்பாக மாறியது. ரஹீமா தரையையே பார்த்தபடி இருந்தாள். என்ன நடக்குமோ? எனப் பயந்து நடுங்கியவளைப் பிடித்து ”அது பொய் தானே ரஹீமா?” கைப் பிடி இருகிப் போனது. அவரது மனதை அறிந்தவள் மௌனமாக நின்றாள். அந்த மௌனம் தாளாது ”சீ..” என்றபடியே கைகளை சுவரில் மோதிக் கொண்டார். மறு வினாடி ஒரு குழந்தை போல அழ ஆரம்பித்தார். ரஹீமாவால் நம்பவே முடியவில்லை. விழி விரியப் பார்த்தாள். ‘மற்றவர்களுக்கெல்லாம் தைரியம் கூறி, ‘தைரியவான்’ என்று பட்டப்பெயர் பெற்ற இவரா இப்படி?’ அந்தச் சோகம் இதயத்தைத் தாக்கவும் அவளால் எதையும் உணர முடியாமல் போனது. அடியற்ற மரம் போல சாய்ந்தாள்.

மீண்டும் கண் விழித்துப் பார்க்கும் போது கட்டிலில் இருந்தாள். ரிழ்வான் நாநா அவளை அக்கறையோடு கவனித்துக் கொண்டார். ”ஏ.. ரஹீமா நீ மயங்கி விழுந்த. சரி… அத விடு… அவள் இப்படிச் செய்வாளுனு யாருக்கு தெரியும். படச்சவன தவிர..” இப்படிப் பேசும் கணவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் ரஹீமா. அவளைப் பார்த்தவர் ” ஏ… நீ அப்டி பாக்ற…?” என்றதற்கு முகத்தில் எவ்வித பாவனையும் காட்டாதபடி ”இல்ல.. நான்…. நெனச்சவேயில்ல நீங்க இப்படி நடந்து கொள்வீகனு…” மீண்டும் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு ”நீ நெனச்சா எனக்கு அவள பத்தி எந்த கவலயும் இல்ல, அப்டீன்டு…” அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. குரல் கரகரத்தது. ரஹீமாவின் உள்ளத்திலும் போராட்டம். பெருமூச்சு விட்டபடியே ”ரஹீமா…. ஓகிட்ட இந்த விசயத்த யாரு சொன்ன?” ரிழ்வான் நாநா வினவவும், ”அது அவளோட படிச்ச புள்ளயொன்டு…” அவள் கண்களை மூடிக் கொண்டாள்.

💔 💔 💔

”உம்மா….. எனக்கு கெம்பஸ் கெடச்சிருச்சி…” துள்ளிக்குதித்தபடியே ஓடி வந்த சிப்னாவை ஆரத்தழுவிக் கொண்டாள் ரஹீமா. ”சரி புள்ள. நீ அங்க பெய்த்து சமூகத்துகு சேவ செய்யோணும் அப்டிங்கிறது தான் ஓன்ட வாப்பாட ஆச… ஆனா பாவம் மனிஷன் ஒன்ன பிரிஞ்சி கொஞ்ச நேரமும் இருச்ச விருப்பமில்ல…” அவளின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது அது சிப்னாவின் முதுகை நனைக்கவும் அவள் தனது பிடியிலிருந்து விடுவித்து ”உம்மா… நீங்களும் சின்ன புள்ள தனமா அழுவுற? நான் நெரந்தரமா போய்டுவனா? இல்லையே ‘ஸோ’ கவலய விடுங்க….” ரஹீமா சமாதானப் புன்னகையை உதிர்த்தாலும் உள்ளூர வலித்தது. அன்றிரவு ரிழ்வான் நாநாவும் மகளின் சந்தோசத்தில் பங்கு கொண்டார். ”மக… ஒங்கள அங்க அனுப்ப ஏன்ட மனசு விடுறல்ல. ஆனா ஒங்க உம்மா எப்டியோ பேசி வெத்தீட்டா…” சிரித்தார். ”அல்லா…. வாப்பா நா சின்ன புள்ளயா? நீங்க கவல பட வேணம்…” சிப்னா கூறியவுடன் ”இல்லடா. மனசு உடுறல்ல… ” கண்களை மூடிக்கொண்டார் ரிழ்வான் நாநா. ”ஆ… போதும்… போதும் வாப்பாடேம் புள்ளேடயும் கத… வாங்க சாப்பிட..” என்றபடியே ரஹீமா அவர்களை அழைத்துச் சென்றாள்.

⬇ ⬇ ⬇

”ரஹீம தாத்தா… ரஹீம தாத்தா…” கதவு தட்டப்படும் ஓசை இருவர் காதுகளிலும் விழுந்தது. ”ஐயோ! அல்லா… ஆயிஷும்மா… அவக்கு இந்த விஷயம் கேள்விப்பட்டால் ஊருக்கே ஊதீடுவா….” ரஹீமா கைகளால் முகத்தை மூடியபடியே விம்மினாள். ”சரி.. நீ படு நான் பேசீட்டு வாரன்..” என்றபடியே ரிழ்வான் நாநா சென்றார். ரஹீமாவோ மகள் தமக்குச் செய்த துரோகத்தை தாள முடியாமல் இரத்தக் கண்ணீர் வடித்தாள். ”அல்லா… அவ அன்டேகி எப்டியெல்லம் பேசீட்டு போனா. இப்டி நாதி தெரியாம சீரழிஞ்சு பெய்த்தாளே? நாங்க யாருக்கன் அநியாயம் செஞ்சதுக்கன் இந்தத் தண்டன..” கலங்கிய கண்களை துடைத்தபடியே கட்டிலில் சாய்ந்தாள். சிறிது நேரத்தில் ரிழ்வான் நாநா இருகிய முகத்துடன் வந்தார். கேள்விக் கணையுடன் நோக்கியவளைப் பார்த்து ” ஆயிஷும்மா ஒன்ன கேட்டுட்டு நீ தூக்கம் என்டு சொன்ன பொறகு ஒருமாய் சிரிச்சுட்டுப் போறா…..” ரஹீமா அவரை கண்களில் பயத்துடன் பார்த்து ”அப்போ… அவக்கும் விஷயம் தெரிஞ்சு போல…” நெஞ்சம் அடைப்பது போல் உணர்ந்தாள். ”நீ கவலைப்படாத… எல்லம் அவன்ட நாட்டம்…” மேலே பார்த்தபடி ரிழ்வான் நாநா கூறவும் ” ஆமா..அன்டேகி பீபீ எப்டி ‘பதுவா’ செஞ்சிட்டுப் போனா..” ரஹீமாவின் குரல் தழுதழுத்தது. ரிழ்வான் நாநா பேயரைந்தது போல நின்றார்.

⬇ ⬇ ⬇

‘ரிழ்வான் நாநா’ என்றழைக்கப்படும் ரிழ்வான் அந்த ஊரிலேயே பெரிய ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நடாத்தி வருகிறார். கொஞ்சம் முன் கோபக்காரர். அவரது கோபத்தால் பாதிக்கப்பட்டவர்களுள் பீபீயும் ஒருத்தி. அவள் தன் குடும்ப வறுமைக்காக தன் கல்வியை இடை நடுவே விட்டு விட்டு அந்த ‘கமென்ட்’ ற்குச் சென்றாள். அவளின் பின்னாலேயே ஒரு பையன் தினமும் தொந்தரவு கொடுத்தபடியே வருவான். ஒரு நாள் அவன் அவ்வாறு வந்து அவளுடைய கையைப் பற்றவும் அவள் கத்தியபடி ஓடிவிட்டாள். இதைத் தொலைவிலிருந்து பார்த்த ரிழ்வான் நாநாவுக்கு வேறுவிதமாகவே அர்த்தம் புரிந்தது. ‘கமென்ட்’ இற்குச் சென்ற முதல் வேலையாக பீபீயைக்கூப்பிட்டு நன்றாகத் திட்டி விட்டார். காரணம் கூட கேட்கவில்லை. ”ஒன்னய நான் காமன்ட்லிருந்து வெலக்குற. இந்த மாதிரி ஒழுக்கம் கெட்டதுகளுக்கு இங்க எடமில்ல… போ….” கறாராகக் கூறி விட்டார். அவள் கெஞ்சிப் பார்த்தாள். ”அவன் தான் தப்பா நடக்கப் பாத்தான் ஹாஜியார்….” எவ்வளவு கெஞ்சியும் அவரின் ஒரே பதில் ”ஐ ஸே கெட் அவுட்” என்பதாகவே இருந்தது. அவள் கண்களில் கண்ணீருடன் ”ஹாஜியார்… நீங்க என்ன கெட்டவளா அநியாயமாக பழியப் போட்டீங்க. போதாக்குற என்ட வேலயயும் பறிச்சீங்க. ஒங்களுக்கும் கொமரு புள்ள இருச்சி…. அல்லா பாத்துகொள்ளட்டும்.” ஆவேசத்துடன் கூறிவிட்டுப் போனாள்.

⬇ ⬇ ⬇

பழைய ஞாபகம் பாடாய் படுத்தியது. ரிழ்வான் நாநா குலுங்கிக் குலுங்கி அழுதார். ”அல்லா… அந்த ‘டய்ம்’ நான் ஷைத்தான் சொன்ன மாதி நடந்துட்ட. அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனயா?” குமுறினார். ”இது நாங்க செய்த சின்ன பாவத்துகெண்டாலும் தண்டனய அனுபவிச்சே தான் ஆகணும். இது தான் அவன்ட நாட்டம்..” என்றபடியே மயங்கிச் சரிந்தாள் ரஹீமா.

முற்றும்
F.RifdhaRifhan
SEUSL

Leave a Reply

Your email address will not be published.