தென்னிலங்கையின் வனப்புக்கும்¸ வளத்திற்கும் அங்கு காணப்படும் மலைத்தொடர்களும் வலைந்து நெளிந்தோடும் நதிகளும் மேருகூட்டுகின்றன. அழகு நங்கையின் அதரங்களாக விளங்குகின்ற நதிகளின் படுக்கைகளில் இடையிடையே கிராமங்களும் பட்டினங்களும் அமைந்து சர்வ சாதாரனமாக அங்கு விளங்குகின்றன. அவற்றுள்ளே “ரக்குவானை குன்றுகளால்” வழிந்தோடும் மதுரமான நீரை தனக்கே சொந்தமாக்கி மேடு பள்ளங்களில் அன்னநடை பகிலுகிறது நீள வள கங்கை அதன் படுக்கையில் அமைந்து பெருமையோடு விளங்கும் போர்வைக் கிராமமோ….. அம்மம்மா… அனைத்து வளங்களையும் வழங்கி இயற்கை அன்னை அழகு பார்க்கிறாள் அங்கு. இதனது வரலாற்றை தருவது மிகவும் சிறமானது. ஏடுகளின் உதவியை பெருவது மிக அருமையாகவே உள்ளது. எனினும் ஒரு சில ஆதரங்களின் உதவியோடு; அதன் அடிச்சுவட்டை ஆராய முயல்கிறேன்.
இரத்தினக்கற்களும் வாசனைத்திரவியங்களும் நம் தாய் நாட்டின் பெருமைக்கும் மகிமைக்கும் அன்றும் இன்றும் காரணமாக விளங்கிவருவன. இந்தச் செல்வங்களை வியாபாரம் செய்து செல்வம் திரட்டும் நோக்கமாகமே கிரேக்கரும்¸ அரேபியரும் தொடர்ந்து ஐரோப்பியரும் நமது நாட்டுக்கு வருகை தந்தனர். இது சரித்திரம் காணும் உண்மை. இவ்வாறு இரத்தினக்கல் தேடும் முயற்சியில் முஸ்லிம்கள் முன்னின்றமையே போர்வை கிராமம் உருவாகவும்; முக்கிய காரணமாக அமைகின்றது. நீள வள கங்கை இரத்தினங்களை வாரி வழங்குகின்றது. 12ம் நூற்றாண்டளவில் பரவலாக இரத்தினக்கற்கள் அதன் கரை மருங்குகளில் மலிந்து கிடந்தன. எனவே ஆற்றுப்படுக்கையை அகழ்ந்து சுரங்கங்களாக்கி விலை பொருந்திய மாணிக்கங்களை பெற்றார்கள்;. இந்த முயற்சி 12ம்¸ 13ம் நூற்றாண்டு வரை “மாரம்ப” எனும் பகுதியில் முஸ்லிம்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம். இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்தமையை நிரூபிப்பதற்கு நிலப்பரப்புகளுக்கு முஸ்லிம் பெயர்கள் இடப்பட்டிருக்கின்றமை சான்றுகளாக உள்ளன. உதாரணமாக பள்ளிகே வத்த¸ மோதின்கே வத்த போன்ற தோட்டப் பெயர்கள் இன்றும் உறுதிகளில் (Deets) காணா முடிகிறது. எனவே மாரம்பைப் பகுதி முஸ்லிம்களின் ஆரம்ப குடியிருப்பாக இருந்திருக்க வேண்டும்.
15ம் நூற்றாண்டு வரை திரை கடலோடி திரவியம் தேடுவதில் ஐரோப்பியர் முஸ்லிம்களை முறியடித்து விட்டது எனலாம். எனவே கடற் செல்வங்களை நாடியிருந்த முஸ்லிம்கள் கடலோரங்களை விட்டு நாட்டின் உற்பகுதிகளுக்கு ஊடுறுவிச் செல்லலாயினர். அதேவேளை பிரதேச மக்களும் தாம் வாழும் பகுதிகளிலேயே செல்வம் தேட முயலலாயினர். இந்த வகையிலான முயற்சியே நீள வள கங்கையின் இரு படுக்கைகளிலும் “சுரங்கம் தோண்டி” வாழ்வதை ஊக்குவித்தது. இவ்வாறு பற்றை காடாக இருந்த ஆற்றுப் படுக்கைகளை கிண்டிக் கிளரித்தனம் தேடும் போதுதான் இரு மீஸான் கற்களைக் கண்டனர். அங்கு ஒரு முஸ்லிம் மையம் (மய்யத்) முன்பொருகால் அடக்கப்பட்டிருப்பதனை கணித்தனர். அந்த இடத்தை துப்பரவு செய்து விளக்கேற்றினர். சுரங்கம் அகழும் போதெல்லாம் அந்த கப்றடியில் (ஸியாரம்) “பாத்திஹா” ஒதுவது வழக்கமாயிற்று. பலவிதமான கராமத் (அதிசயம்) இந்த இடத்தில் நடாந்ததாக செவிவழிச் செய்திகள் நிறைய காணப்படுகின்றன. இந்த விபரங்களில் சில¸ ஹிஜ்ரி 1309ம் ஆண்டு அச்சு வாகனம் ஏறிய “ஆரண முகம்மதர் காரண கும்மி” எனும் நூலிலும் ஹிஜ்ரி 1388 ம் ஆண்டு வெளியான “போர்வைச் சிந்து” என்ற நூலிலும் தரப்பட்டிருப்பதை காண முடிகின்றது. “ஆரண முகம்மதர் காரண கும்மி” நூல் புலவர் சுல்த்தான் தம்பியின் அவர்களின் ஆக்கமாகும். அன்னவர் இளைய சகோதரர் முகையதீன் கண்டு மரைக்காயர் வாரிசுகள் இன்றும் “பொத்துமுல்லகே வத்தை”யில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த கப்ரினை மையமாக வைத்து தொழுகைக்கு பள்ளிவாசல் அமைக்கப்பட்டது. ஆற்றின் அடுத்த கரையில் வாழ்ந்த முஸ்லிம்கள் பள்ளிவாசலை நெருங்கி வாழ முயன்றனர். இங்கே இன்றைய போர்வையின் வளர்ச்சியின் ஆரம்பம் எனலாம். அங்கு காணப்பட்ட கப்ரடி “ஸெய்யித் ஸாதாத் பக்கீர் முஹியந்தீன் வலியுல்லாஹ்” அவர்களுடையது என்பதை கனவின் மூலம் காலப்போக்கில் அறிந்து கொண்டனர். போர்வை கிராமத்தின் வளர்ச்சி மிகவும் வேகமாகவே ஏற்பட்டது. அதற்கு இரத்தின வியாபாரிகள் விஜயங்கள் உதவியதோடு அவ்லியாக்களின் கல்லரையும் உதவியது எனலாம்.
பெயர்க்காரணம்
இன்று போர்வையேன அழைக்கப்படும் பகுதி அன்று கொடப்பிடிய எனும் சிங்கள பெயராலே அழைக்கப்பட்டது. “ஸெய்யித் ஸாதாத் பக்கீர் முஹியந்தீன் வலியுல்லாஹ்”வின் ஸியாரத்திற்கு வருபவர்கள் போர்வையை (பிடவை) காணிக்கையாக கொண்டு வந்தனர். எனவே காலப்போக்கில் “கொடப்பிடிய” பகுதியே “போர்வை” என அழைக்கப்படலாயிற்று என்று ஒருசாரர் கூறுவர். இன்னோறு சாரரோ சமூக கொந்தளிப்புக்களின் போதும் வெள்ளப் பெருக்கிகளின் போது இப்பகுதி மக்களை தங்கடங்கள் இன்றி “அவ்லியாக்கள்” அணைப்பதனால் காப்பாற்றப்பட்டார்கள் எனவே இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு நல்கும் போர்வையாக விளங்கும் பெரியார் வாழும் கிராமம் “போர்வை”யென அழைக்கப்பட்டது. என்று கிராமப் பெயருக்கு காரணம் காரணம் கற்பிக்கின்றனர்.
கல்விவளர்ச்சி
ஆரம்பத்திலிருந்தே குர்ஆன் மதுரஸாக்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் அரபு போதிக்கும் மதுரஸா 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே ஏற்பட்டது. காலியைச் சேர்ந்த மர்ஹூம் இஸ்மாயில் ஆலிம் அவர்கள் அரபு மத்ரஸா ஒன்றினை நடத்தி வந்தார்கள். அது கொஞ்ச காலத்தில் ஆதரவு போதாமையினால் நிறுத்தப்பட்டது. அதன் பின் 1945ம் ஆண்டளவில் போர்வையை சேர்ந்த முஹம்மது அபூபக்கர் ஆலிம் அவர்கள் அறபு மத்ரஸாவை குர்ஆன் மத்ரஸாவுடன் இணைத்து நடத்தினார்கள். ஆனால் கிராமத்து மக்களின் கல்வி ஆர்வம் உலகியல் கல்வியில் மேன்பட்டு காணப்பட்டமையால் 1951ம் ஆண்டளவில் அரபி மத்ரஸா வழக்கொழிந்தது.
20ம் நூற்றாண்டில் உலகியல் கல்வியில் ஆர்வம்¸ அகில இலங்கையிலும் ஏற்பட்டிருந்தது. அதன் தாக்கம் இலங்கையின் குக்கிராமங்களையும் விட்டுவிடவில்லை. அக்காலை¸ போர்வையில் மர்ஹூம் D.L.M காஸீம் அவர்கள் ஒரு திண்ணைப்பள்ளியை நடத்தி வந்தமைக்குப் போதிய ஆதரம் இருக்கிறது. அவர் தமிழ்¸ சிங்களம் வாசிப்பையும் எழுத்தையும் போதித்தார். தொடர்ந்து திண்ணை பள்ளி ஒன்றை மர்ஹூம் M.L.M. சுலைமான் அவர்கள் நடத்தி வந்தார்கள். ஒரு சில வசதி படைத்தவர்கள் பக்கத்து கிராமங்களில் இருந்த சிங்கள பாடசாலைகளிலும் (Temple) சிங்களம் கற்று வந்தனர்.
1933ம் ஆண்டு இலங்கையின் அரசியல் யாப்பு திருத்தியமைக்கப்பட்டது. “டொனமூர் அரசியல் திட்டம்” அமுலில் வந்தது. இந்த அரசியல் திட்டம் கல்வி வளர்ச்சிக்கு¸ முக்கியமாக முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டது எனலாம். தனியார் பாடசாலைகள் எல்லா சிறு கிராமங்களிலும் ஆரம்பிக்கப்பட்டன. இந்த வகையிரல் போர்வை கிராமத்திலும் 1932ம் ஆண்டு ஒரு தனியார் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இந்த பாடசாலையின் வளர்ச்சிக்கு மர்ஹூம் கதீப் N.L.M.A மஜீத் கலிபா அவர்கள் முன்னோடியாக அமைகின்றார்கள். அவருக்கு துணையாக அன்னவர் மூத்த சகோதரர் N.L.M. அப்துர் ரஹ்மான் (V.H) கிராம அதிகாரியும் அவரது நெருங்கிய உறவினரும் வெலிகாமத்தை சேர்ந்தவருமான மர்ஹூம் ஹூஸைன் J.P அவர்களும் இருந்து உழைத்தார்கள். அரசியல் ஆதரவு சோனகத் தலைவர் “ஸேர் ராஸிக் பரீத்” அவர்கள் மூலம் கிடைத்தது. 1935ம் ஆண்டு இந்தப் பாடசாலை அரசாங்கப் பாடசாலையாக தரம் பெற்றது. இது இந்தக்கிராமத்தின் வளர்ச்சியின் ஒரு திருப்புமுனையாகும். இந்தப் பாடசாலை சிறந்த பல ஆசிரிய பெருமக்களைப் பெற்றது. அதன் காரணமாக சிறந்த பல பிரஜைகளையும் சமூக சேவையாளர்களையும் ஆசிரியர்களையும்¸ அதிபர்களையும்¸ இலிகிதர்களையும்¸ கணக்காளர்களையும் உருவாக்கியுள்ளது. இன்று ஸதாத் மகா வித்தியாலயம் என்னும் பெயரோடும் பெருமையோடும் மிளிருகின்றது.
பெரியார்கள் தொடர்பு
போர்வைக் கிராம வளர்ச்சிக்கு பெரியார்கள் பலரது விஜயங்களும் உதவியுள்ளன. அவர்கள் வரவினால் இஸ்லாமிய ஞானத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர்களுல் முக்கியமானவர்கள் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களே¸ அவர்கள் முதன் முதலாக அன்னவர்களின் நெருங்கிய நண்பன் மர்ஹூம் முஹியந்தீன் கண்டு மரைக்காயர் அவர்களின் விவாகத்தின் போர்வைக்கு வருகை தந்தார்கள். இது 19ம் நூற்றாண்டின் பாதியில் ஏற்பட்டதும் இதன் பின்பு பலமுறையும் விஜயம் செய்தமைக்கு ஆதரம் இருந்து வருகின்றது. அவர்களுடைய கைப்படவே எழுதி ஒரு மஸூனியை மர்ஹூம் செய்கு அப்துல் மரிக்கார் அவர்களுக்கு கொடுத்துள்ளார்கள். அது இன்றும் அன்னவர் புதல்வரிடம் இருந்து வருகின்றது.
அடுத்தபடியாக திருத்தாலீம் ஸாஹிப் அப்பா அவர்கள் போர்வைக்கு வருகை தந்து மார்க்கப்போதனை புரிந்துள்ளார்கள்¸ இதன் பின்பு 1910ம் ஆண்டளவில் “தெங்காசி”யைச் சேர்ந்த அப்துல் காதிர் ரிபாயி மௌலான அவர்கள் வருகை தந்தார்கள். போர்வை மக்களுடன் இணைந்து வாழ்ந்து போர்வை வாழ்ந்த யாழ்ப்பாண அப்பாவின் இளைய மகள் “அலுமனாச்சியர்” என்னும் பெண்மணியை மணந்து கொண்டார்கள். இவர்களால் ஆரம்பிக்கப்பட்ட போர்வை ரிபாய் ராத்திப் இன்று பெரும் புகழுடன் விளங்குகின்றது. இதே காலகட்டத்தில் போர்வைக்கு அருகாமையில் உள்ள “இம்புல்கொடை” என்னும் இடத்தில் ஒரு தோட்டத்தை சொந்தமாக வாங்கி வந்தார்கள் “மாங்குட்டி மஸ்த்தான்” என அழைக்கப்படும் ஒரு ஞானி. அவர் பள்ளிவாசலுக்கு வக்பாக அளித்த பள்ளிக்கு முன்பக்கமாக காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அலவிய்யாத் தரீக்காவின் ஜிப்ரி மௌலானா சகோதரர்கள் அடிக்கடி வருகைதந்தார்கள். இவர்களின் தரீக்காவை ஏற்றவர்கள் இன்று பரவலாக வாழ்ந்து வருகின்றனர். புர்தாக் கந்தூரியை ஆரம்பித்து வைத்த பெரிய மௌலானா அவர்கள் வரவும் இஸ்லாமிய புத்துணர்ச்சிக்கு வழி செய்தது. செய்கு நாயகம் அப்துல் காதிர் அப்பா அவர்களின் புதல்வர் ஸூஹைப் ஆலிம் அவர்களும் 1916ம் ஆண்டு தந்து பெருமை சேர்த்தார்கள்.
1920- 1925 காலகட்டத்துக்கு இடையில் காலகட்டத்துக்கு இடையில் மாலைத்தீவின் அரச தம்பதிகள் போர்வைக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் இரத்தினக்கல் வியாபாரி முகம்மது யூஸூப் அவர்கள் வீட்டில் தங்கி விருந்துண்டு சென்றமைக்கு ஆதாரம் இருந்து வருகின்றது.
பள்ளிவாசல்
இலங்கைத்தீவில் உள்ள பள்ளிவாசல்களுல் போர்வை பள்ளிவாசல் முக்கிய இடம் வகிக்கின்றது. இது ஆரம்பத்தில் சிறியதாக இருந்து 1915ம் ஆண்டு அரசின் உதவியுடன் பெரியதாக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிவாசலில் “ஸியாரத்” விளங்கும் “ஸெய்யித் ஸாதாத் பக்கீர் முஹியந்தீன் வொலியுல்லாஹ்” அவர்களின் பரகத்தை நாடியவர்களின் பேருதவியினால் பள்ளிவாசல்ளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ரபியுல் ஆகிர் 11ம் தினம் நிகழும் பாரிய கந்தூரி வைபவம் பள்ளிவாசலின் பெருமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இந்தப் பள்ளிவாசலின் முக்கியம் இக்கிராமத்தில் வாழும் முஸ்லிம்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தியுள்ளது என்பதில் தப்பிருக்காது. வேறு எத்தனையோ சிறிய முஸ்லிம் கிராமங்கள் தென்னிலங்கையில் இருந்து வருகின்றன. ஆனால் அவற்றுக்கும் போர்வைக் கிராமத்திற்கும் முக்கியத்துவத்தில் ஏற்றதாழ்வுகள் அதிகம் உண்டு. போர்வையின் வளர்ச்சி வேகம் ஏனைய கிராமங்களின் வளர்ச்சி வேகத்தை விஞ்சி விட்டது. அதற்கு போர்வையின் முக்கியத்துவமும் காரணமாவதோடு நிளவள கங்கை அள்ளித்தரும் நீர் வளங்களையும் காரணமாக கொள்ளலாம்.